-
(ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17)
--------------------
திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க மன்னவன். 1
.
சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து
சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.
தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து
சாதனை செய்த புரட்சியாளன்.
திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த
தெய்வம் அருளிய தமிழ் முனி.
வடமொழியில் கரைகண்ட வேதவித்து.
ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2
.
உலகில் பிறந்த அனைவரும் அடியார்.
உடையவன் முன்னால் அனைவரும் சமமே.
மானுட வேற்றுமை மாதவன் அறியான்.
மாய இருளை நீக்கும் கதிரோன்
அனைவருக்கும் பொது உடைமையென
திண்ணமாய் உரைத்த மனிதன்.
திருக்குலத்தோரை அரவணைத்து
சமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3
.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,
தீண்டாமைக்கு கொள்ளி வைத்தவன்.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்
பக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.
திருக்கோயில்கள் திறம்பட இயங்க
வழிமுறைகளைச் சொல்லி வைத்தவன்.
அகங்காரம் என்னும் மாயப்பேயை
தன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4
.
இல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்
துறவு பூண்ட தூயவன்.
இல்லறத்தாரை மடாதிபதியாக்கி
இயக்கம் வளர்த்த மாயவன்.
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை
விளக்க வந்த வேதியன்.
ஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற
திருவருள் பெற்ற சோதியன். 5
.
திருவாய்மொழியைப் பரவலாக்கிய
நம்மாழ்வாரின் ஓதுவன்.
பாவை பாடிய கோதையின் ஆசையை
நிறைவேற்றிய சோதரன்.
அருகில் வருவோர் அனைவரும் உயர
நல்வழி காட்டும் சாதகன்.
சரணாகதியை முதன்மைப்படுத்தி
துறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6
.
பலரிடம் கற்ற அந்தப் பரமன்,
குருவை விஞ்சிய சிஷ்யன்.
குருநாதர்களையே சீடனாகப் பெற்ற
அரிதினும் அரிய அவதார புருஷன்.
ஆளவந்தாரின் ஆசைகளை
பூர்த்தி செய்த புன்ணியன்.
ஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி
ஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7
.
அந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது
வைணவம் திருப்புமுனை கண்டது.
இறைவனை அடையும் ரகசிய வழியை
உணர்ந்தவுடனே உத்வேகம் பிறந்தது.
குருநாதர் சொல்லை மீறி அவன்
எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தபோது
அங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.
இறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8
.
தானொருவன் நரகம் புக்கினும்
மானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக
தன்னை அளித்த தயாபரனை
அப்போது உலகம் கண்டது.
எம்பெருமானாரின் கருணை மழை
எல்லோரையும் நனைத்தது.
சௌமிய நாராயணர் திருத்தலம்
ராமானுஜனால் பேறு பெற்றது! 9
.
ராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.
ராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.
ராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.
ராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10
--------------
குறிப்பு:
கவிஞர் குழலேந்தி
தேசிய சிந்தனைக் கழகத்தின்
மாநில பொதுச்செயலாளர்.