Announcement

Collapse
No announcement yet.

Devaamrutham - Yogi Ram surat Kumar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Devaamrutham - Yogi Ram surat Kumar

    Courtesy: http://www.nermai-endrum.com/%E0%AE%...1%E0%AF%8D-13/
    தேவாமிர்தம்; தேவாமிர்தம்!
    பல வருடங்களுக்கு முன்பு, ஒரு வெள்ளிக்கிழமை. மாலை வேளை. சத்குரு ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளை தரிசிக்க திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீஞானானந்த தபோவனத்துக்குச் சென்றேன். மன
    சஞ்சலம் ஏற்படும்போதெல்லாம் சுவாமிகளை தரிசித்தால், துன்பங்கள் விலகும்!
    இரவில் சுவாமிகளை தரிசித்து, பிரசாதம் பெற்றுக் கொண்டு, விடியற் காலையில் சென்னைக்குப்
    புறப்படலாம் என்று நினைத்தேன். சனிக்கிழமை காலை சுமார் 7:30 மணி. சுவாமிகளை
    தரிசிக்க நீண்ட வரிசை. நான் ராமநாமா ஜபித்தபடி வரிசையில் நின்றிருந்தேன்.
    சுவாமிகளுக்கு அருகில் வந்ததும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்து, பிரசாதத்துக்காகக்
    கையை நீட்டினேன். சிரித்துக் கொண்டே தீர்த்தம் கொடுத்த சுவாமிகள், ''இப்பவே நாம
    பொறப்டுடறதா உத்தேசமோ?'' என்று கேட்டார்.
    தயங்கியபடி, ''ஆமாம் குருநாதா. உத்தரவு கொடுத்துட்டா, பொறப்படலாம்னு உத்தேசம்!'' என்றேன்.
    சுவாமிகள் விடவில்லை. ''இன்னிக்கு தங்கிட்டு நாளைக்குத்தான் பொறப்படுவோமே. இப்ப சம்மர்
    வெகேஷன்தானே? ஸ்கூலெல்லாம் லீவா இருக்குமே! இன்னிக்கு சனிக்கிழமை. சாயந்திரம் ஹனுமன்
    சந்நிதியில் விசேஷ பூஜை நடக்கும். தரிசிச்சிட்டு நாளக்கிக் காலம்பற பொறப்படலாம்… என்ன
    சரிதானே?'' என்றார். வாஸ்தவம்தான். அப்போது, நான் சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றினேன்.
    சுவாமிகளின் கட்டளையை மீற முடியாது. காரண காரியத்துடன்தான் நம்மை தங்கிப் போகச்
    சொல்கிறார் என்று புரிந்தது. ''உத்தரவுப்படியே நடக்கிறேன்'' என்று பணிவுடன் கூறிவிட்டு
    நகர்ந்தேன்.
    மாலை வேளை. ஸ்ரீஹனுமன் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம். ஹனுமனுக்கு புஷ்ப அலங்காரத்துடன்
    வடை மாலையும் சார்த்தியிருந்தார் அர்ச்சகர். ஸ்வாமியை தரிசித்தபடி அங்கு நின்றிருந்தேன்.
    என்னிடம் வந்த அர்ச்சகர், ''இன்னிக்கு ஸ்திர வாரமா (சனிக்கிழமை) இருக்கறதால, ஸ்வாமிக்கு
    சஹஸ்ர நாமார்ச்சனை பண்ணலாம்னு இருக்கேன். புஸ்தகம் தர்றேன். அதைப் பாத்து நீங்க நாமாவளி
    வாசிங்கோ… நான் அர்ச்சனை பண்றேன்'' என்றார். ஒப்புக் கொண்டேன்.
    முக்கால் மணி நேரத்தில் அர்ச்சனை முடிந்தது. சந்நிதியில் கூட்டமில்லை. ஐந்து அல்லது ஆறு
    பேர் இருந்தனர். அவர்களுடன் நீண்ட ஜடையும், தொளதொளவென்று பழுப்பேறிய பெரிய ஜிப்பா-
    பைஜாமா அணிந்த பெரியவர் ஒருவரும் நின்றிருந்தார். அவர் கண்களில் ஞான ஒளி ஒன்று
    தென்பட்டது. வெளியே வந்த அர்ச்சகர், பெரியவரைக் கை கூப்பி நமஸ்கரித்தார். அவரும்
    புன்னகைத்தபடி ஆசீர்வதித்தார். 'அவர் யார்?' என்று அர்ச்சகரிடம் கேட்கத் தோன்றவில்லை.
    ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணி கற்பூர ஆரத்தி காட்டினார் அர்ச்சகர். அனைவரும் கண்ணில் ஒற்றிக்
    கொண்டோம். பிரசாதப் பாத்திரத்துடன் வெளியே வந்த அர்ச்சகரிடம், ''ஸ்வாமிக்கு என்ன
    நிவேதனம்?'' என்று கேட்டேன்.
    ''வெண் பொங்கல்'' என்றார்.
    ''எப்பவும் ஸ்வாமிக்கு சக்கர பொங்கல், புளியோதரை எல்லாம் நிவேதனம் பண்ணுவேளே. இன்னிக்கு
    வெண் பொங்கலோடு நிறுத்திப்டேளே!'' என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.
    அவர், ''கஷ்டமாத்தான் இருக்குது. 'திருக்கோவிலூர் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன்'னு
    சொல்லிட்டுப் போன பரிசாரகர் இன்னும் வந்து சேரலே. அதனால என்னால முடிஞ்ச அளவுக்கு
    வடையத் தட்டி, ஒரு படி வெண் பொங்கலயும் பண்ணிப்டேன். ஆனா, நிவேதனம் பண்றச்சே சக்கரைப்
    பொங்கல், புளியோ தரை, எள்ளோரைனு எல்லா பேரையும் சொல்லி அர்ப்பணிச்சுட்டேன். ஸ்வாமி
    நிச்சயம் சாப்ட்ருப்பாரோன்னோ!'' என்றபடி என் கையில் வெண் பொங்கலைக் கொடுத்தார்.
    எனக்குப் பொறுக்கவில்லை. ''இதென்ன ஸ்வாமி தர்ம நியாயம்! பதார்த்தங்களின் பேரை மாத்திரம்
    சொன்னா… ஸ்வாமி எப்படி ஏற்றுக் கொள்வார்?'' என அவரிடம் வாதிட்டேன். அர்ச்சகர் சிரித்துக்
    கொண்டார்.
    சற்றுத் தூரத்தில் இருந்து எங்களை கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர், நாங்கள் 'என்ன
    பேசிக் கொண்டோம்' என்பதை அருகில் நின்றிருந்தவரிடம் ஆங்கிலத்தில் கேட்டுத் தெரிந்து
    கொண்டார். வட நாட்டுக்காரர் போலிருந்த அவருக்கு தமிழ் தெரியவில்லை. புன்முறுவலுடன்
    என்னை ஊன்றிப் பார்த்தார் அவர்.
    பிரசாதம் கொடுக்க பவ்வியமாக பெரியவர் முன்போய் நின்றார் அர்ச்சகர். அவர் சற்றுக் குனிந்து,
    தன் இரு உள்ளங்கைகளையும் சேர்த்து, குழித்து நீட்டினார். அந்தக் கை நிறைய பொங்கலை எடுத்து
    வைத்தார் அர்ச்சகர். பெரியவர், 'கோகர வ்ருத்தி'யாக (பசுமாடு உண்பது போன்று) அதை அப்படியே சாப்பிட ஆரம்பித்தார். அனைவருக்கும் பிரசாதத்தை விநியோகித்த அர்ச்சகர்
    பெரியவரிடம் வந்து, அவர் கையில் மேலும் பொங்கலை அள்ளிப் போட்டார்.
    பிறகு, ''குருவின் 'உச்சிஷ்ட'மா (உண்டதில் மீதி) எனக்கு கொஞ்சம் பிரசாதம் அனுக்கிரகிக்கணும்!'' என்று ஜாடையால் புரிய வைத்தார். சந்தோஷத்தோடு இரு கைகளையும் அர்ச்சகரிடம் நீட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார் பெரியவர். அதிலிருந்து ஒரு கொட்டைப்
    பாக்கு அளவு பொங்கலை எடுத்து வாயில் போட்டுக் கொண்ட அர்ச்சகருக்கு ஆனந்தம் பிடிபடவில்லை.
    ''தேவாமிர்தம்… தேவாமிர்தம்!'' என்றவாறே என்னிடம் வந்து, ''சாதுக்கள் உண்ட உச்சிஷ்டம் ஜன்மாந்திர புண்ணியம் இருந்தாத்தான் கிடைக்கும். போங்கோ… நீங்களும் வாங்கிச் சாப்டுங்கோ!'' என்று அவசரப்படுத்தினார் அர்ச்சகர். பெரியவர் முன் போய் நின்ற நான், அவர் பாதங்களைத் தொட்டு
    வணங்கி விட்டுப் பிரசாதத்துக்காக கையேந்தி நின்றேன். அவரோ, 'நீயே எடுத்துக் கொள்!' என்று
    கண் ஜாடை காட்டினார்.
    நானும் ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். சிரித்தவாறு சைகையால்
    இன்னும் கொஞ்சம் எடுத்துச் சாப்பிடச் சொன்னார் பெரியவர். எடுத்தேன், சாப்பிட்டேன். என்ன ஆச்சரியம்! அது, சர்க்கரைப் பொங்கலாக இனித்தது. மீண்டும் எடுக்கச் சொல்லி, ஜாடை காட்டினார். எடுத்து வாயில் போட்டேன். பிரமித்தேன். இப்போது அது புளியோதரையாக ருசித்தது.
    மீண்டும் கொஞ்சம் எடுத்து உண்டேன். அது, எள்ளோரையாக நாவில் படர்ந்தது. நான், உணர்ச்சி
    வசப்பட்டு, அந்தப் பெரியவரின் பாதங்களில் விழுந்து அழ ஆரம்பித்தேன். அவர், என் முதுகில்
    தட்டி எழுந்திருக்கச் சொன்னார். தன் உள்ளங்கைகளை பைஜாமாவில் துடைத்துக் கொண்டார். பிறகு,
    என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார்.
    என்னருகில் வந்த அர்ச்சகரிடம், ''சுவாமி! என்னை நீங்க மன்னிக்கணும். நான் ஏதோ தெரியாத்தனமா ஒங்ககிட்ட, 'ஸ்வாமிக்கு முன்னாடி பிரத்தியட்சமா வைக்காத பதார்த்தங்களின்
    பேரை மாத்திரம் சொல்லி நிவேதிச்சா ஸ்வாமி எப்படி ஏத்துப்பார்'னு வீம்புல கேட்டுட்டேன்.
    அது தப்புங்கறத இந்த மகான் மூலமா தெரிஞ்சுண்டுட்டேன். நீங்க வாயால சொல்லி நிவேதிச்ச அவ்வளவு பதார்த்தங்களையும், அந்தந்த ருசியோட பெரியவரோட உச்சிஷ்ட பிரசாதம் மூலமா
    தெரிஞ்சுண்டுட்டேன். ஆத்மார்த்தமான அர்ப்பணம்தான் முக்கியம்கறத புரிஞ்சுண்டேன்!'' என்று அர்ச்சகரின் கைகளை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டேன்!
    ஹனுமனை நோக்கி கை கூப்பினார் அர்ச்சகர். திரும்பிப் பார்த்தேன். எங்கோ வெறித்துப்
    பார்த்தபடி அந்தப் பெரியவர் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.
    அர்ச்சகரிடம், ''அவர் யார்னு ஒங்களுக்குத் தெரியுமா?'' என்றேன் நான்.
    ''தெரியும். வடக்கேருந்து வந்துள்ள சாது அவர். நம்ம குருநாதரிடம் அவருக்கு ரொம்ப ஈடுபாடு. அடிக்கடி தபோவனம் வருவார். யோகி ராம்சுரத் குமார் சுவாமிகள்ங்கறது அவர் பேரு. 'விசிறி சாமி'னும் கூப்பிடுவா. ஏன்னா… எப்பவுமே அவர் கைல ஒரு விசிறி
    இருந்துண்டிருக்கும்!'' என்றார் அர்ச்சகர். மீண்டும் திரும்பிப் பார்த்தேன். மெதுவாக விசிறியபடி நடந்து கொண்டு இருந்தார் விசிறிச் சாமி. குருநாதர் தங்கிப் போகச் சொன்னதன் காரணம் இப்போது புரிந்தது!
Working...
X