சிறுமுகிலின் சுருள்முடியில் சிறியதொரு மயிலிறகும்
பிறைவடிவ சிறு நுதலில் செந்தூரப் பொட்டுமிட்டு
கருணைமிகு கருவிழிகள் காந்தமெனக் கவர்ந்திடவே
வெண்சங்குக் கழுத்தினிலே சிறுமணிகள் ஒலியெழுப்ப
இடையினிலே பட்டாடை இங்கிதமாய் அசைந்திடவே
கையினிலே குழலெடுத்து கண்ணனுமே வருகின்றான்!
மண்ணையுண்ட தன் வாயில் ஞாலத்தைக் காட்டியவன்
வெண்ணெயையும் தான் தின்று வெகுளியாய் நிற்கின்றான்
அன்னையவள் துரத்திடவும் தளிர் நடை நடந்து வந்தே
திண்ணையதின் ஓரத்தில் ஒளிந்திருந்து ரசிக்கின்றான்!
ஆநிரைகள் அருகினிலே தோழர்களின் நடுவினிலே
கோபியரை ரசித்தபடி குறும்புகளும் புரிகின்றான்
குறு நகையை காட்டி குழலினையும் தான் இசைத்தே
மறுபடியும் மக்களையே மயக்கிடவும் செய்கின்றான்!
இக்கலியில் வருகின்ற துயர் தாமே நீங்கிடவே
என்னாளும் கண்ணன் திருவடிகள் பணிந்திடுவோம்!!
ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்!
அரங்க.கண்ணன்
திருக்கண்ணபுரம்