Announcement

Collapse
No announcement yet.

பத்மநிதி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பத்மநிதி

    பத்மநிதி
    5. நரசிங்காவதாரம் (ஓர் ஆள் அரி உருவம் ஆகி)
    உலப்பில் மிகுபெருவரத்த திரண்டதோள் இரணியன், அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்தம் பெருமான், வெய்யன்ஆய் உலகு ஏழும் நலிந்தவன், ஆயிரக்கண் மன்னவன் வானமும் வானவர்தம் பொன்னுலகும் தன்னுடைய தோள் கைக்கொண்டான் தானவன், எல்லை இல்லாது பெருந்தவத்தால் பல்செய்பிறை அல்லல் அமரரைச் செய்ய, மாயனே என்று வானோர்புக்கு அரண்தந்தருளாய் என்ன, வாழ்த்தியவாயராய், வானோர் மணிமகுடம் தாழ்த்தி வணங்கி தளர்ந்திட்டு இமையோர்சரண் தா என, தான் சரண் ஆய், வலம்புரி ஆழியன், வரைஆர் திரள் தோளன், எம் பரம் சுடர், எம் மாயோன், அவுணர் முக்கியத்தை முடிப்பான் அவன் குலமகற்கு இன்அருள் செய்தான்.
    பிரகலாதன் பள்ளியில் தோழர்களுக்கு உபதேசிப்பது

    உருவிலே திருவிலாதீர்! அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் எந்தைதிறம், நலம்தரு சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம், என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம். நல்துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா என்னும்நாமம். வம்மின் ! தொழுமின்! நல்பொருள் காண்மின்! பாடிநீர் உய்மின் நாராயணா என்னும் நாமம். நள்இருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும்நாமம். துஞ்சும்போது அழைமின், துயர்வரின் நினைமின், துயர்இலீர் சொல்லினும் நன்றாம்! நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம். நால்வகையால் நமோ நாராயணா என்னும் நாமம் தேனும் பாலும் அமுதும் ஆய் திருமால் நாமம். நமோ நாராயணமே!நானும்சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே! நன்று காண்மின் நல்லானுடைய நாமம் சொல்லில், தொண்டீர் எல்லீரும் வாரீர்!தொழுதுதொழுது நின்று ஆர்த்தும், நன்று இசை பாடியும், துள்ளி ஆடியும், தொழுது உய்மின்! தொண்டீர் விந்தையைச் செந்நிறுத்தியே பொங்குபுணரிக்கடல் சூழ் ஆடை, நிலமாமகள், மலர் மாமங்கை, பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய, எங்கள் அடிகள், இமையோர் தலைவருடைய நாமம், நங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நாராயணமே. நெடுமாலை நாவில்பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை மேவிச் சொல்லுமின்.
    உளைந்த அரியும் மானிடமும் உடனாய் தோன்ற ஒன்று வித்து ஆள் அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடல் பிளந்தது.
    பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம் ஒன்றிய ஆகிப்போத, ஆங்கே அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பும் இலை ஆகி, பிள்ளையைச் சீறி வெகுண்டு, “எங்கும் உளன் கண்ணன்” என்ற மகனைக் காய்ந்து, இங்கு இல்லையால் என்று தூண் புடைப்ப, அளந்திட்ட தூணை அவன் தட்ட, அவன் மகனை மெய்ம்மை கொள்ளக் கருதி அங்கே தூண் ஆய் அதனூடு தளை அவிழ் கோதை மாலை இருபால் தயங்க எரிகான்று இரண்டு தறுகண் அளவுஎழ பிறைஎயிற்று அனல்விழிப் பேழ்வாய் தெள்ளிய நரம் கலந்த சிங்கமாகி வென்றி கொள்வான். அங்கு அப்பொழுதே அவன் வீய, வணங்காமுடியன் வயிறு அழல, வாள் உருவி எதிர்க்க, வெம்சமத்துள் வந்து தோன்றி வளர்ந்தான். திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர் திசைப்ப, திருவோணத்திருவிழாவில் அந்தியம்போதில் அரியுருவாகியவனைக் கண்டு ஏனோர் அஞ்ச, அம்கண் ஞாலம் அஞ்ச, இது எவ்வுரு இன்று இரிந்து வானோர் கலங்கி ஓட, நாத்தழும்ப நான்முகனும் ஈசனும் முறையால் ஏத்த, பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும் சொலி நின்று தூயோன் துதிக்க, திரிபுரம் எரித்தோனும் மற்றை மலர்மிசைமேல் அயனும் வியப்ப, எங்ஙனே உய்வர் தானவர் நினைத்தால் என்று ஏங்க, மூவுலகும் முறையால் வணங்க, முரிதிரை மாகடல் போல் முழங்கினான். தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் பொன்பெயரோன், மாறுஆயதானவனை மன்று மணிக்குஞ்சி பற்றிவர ஈர்த்து, கண்பிதுங்க, வாய்அலற, தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, அவனுடைய பொன் அகலம் மார்வம் கூர் ஆர்ந்த வள் உகிரால் போழ்ந்து இரண்டு கூறாக்கி, உகிரால் கீண்டுகுடல் மாலை சீர்திரு மார்பின் மேல்கட்டி, செங்குருதி சோர உதிரம் அளைந்த கையொடு, உரத்தினில் கரத்தைவைத்து உகிர்த்தலத்தே ஊன்றி, பெருவரைத்தோள் நெரித்து, இலங்கு பூண் அகலம் பொங்கு வெம்குருதி பொன்மலைபிளந்து பொழிதரும் அருவிஒத்து இழிய, வென்று, அவனை விண் உலகில் செல உய்த்தான். அமரர்க்கு அருள் செய்து உகந்தான்.
    பிரகலாதன் துதிப்பது

    “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
    அருக்கண்அணி நிறமும்கண்டேன் அரிஉருவம்கண்டேன்
    புரிசங்கம் கைக்கண்டேன் என்ஆழிவண்ணன் பால்இன்று
    இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யான்அறுத்தேன்”
    “அவன்கண்டாய் நல்நெஞ்சே!ஆர் அருளும்கேடும்
    அவன்கண்டாய் ஐம்புலனாய்நின்றான் அவன்கண்டாய்
    காற்று,தீ,நீர்,வான், கருவரை, கார்ஓதச்
    சீற்றத்தீ ஆவானும் சென்று”
    “உளன்கண்டாய் நல்நெஞ்சே உத்தமன்என்றும்
    உளன்கண்டாய் உள்ளுவார்உள்ளத்து உளன்கண்டாய்
    தன்ஒப்பான் தான்ஆய்உளன்காண் –தமியேற்கும்
    என்ஒப்பார்க்கு ஈசன் இமை”

    கதியே இல்லை நின்அருள் அல்லது எனக்கு, நிதியே பதியே கதியே, அத்தா அரியே உன்னை எங்ஙனம் நான்விடுகனே!
    எம்மானும் எம் அனையும் என்னைப்பெற்று ஒழிந்ததற்பின், அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற நலமான ஒண் சுடரே! நம்பீ ஓடாஆள்அரியின் உருஆய் மருவி என்தன் மாடே வந்தாய்! பெற்றோரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான். மற்று ஆரும் பற்றிலேன் சினம் மேவும் அடல்அரியின் உருவமாகி வேற்றோன் அகலம் வெம் சமத்துப்பிளந்துகந்த ஆடல் பறவையன், தேடற்கு அரியவன் வலம்புரி ஆழியன், வரைஆர்திரள் தோளன் எம் பரம்சுடர்! உணர்வார் ஆர் உன் உருவம்தன்னை; உணர்வார் ஆர் உன் பெருமை! ஊழிதோறு ஊழிஉணர்வார் ஆர் உன்னை! விண்ணகத்தாய்! மண்ணகத்தாய், நால்வேதப் பண்ணகத்தாய் உணர்வார் ஆர் உன்னை! பெருமை பிறர் ஆர் அறிவார்?

    “வேதநூற் பிராயம்நூறு மனிசர்தாம் புகுவரேலும்
    பாதியும் உறங்கிப்போகும் நின்றதில் பதினையாண்டு
    பேதைபாலகன் அதுஆகும் பிணி பசி மூப்புத்துன்பம்
    ஆதலால் பிறவி வேண்டேன்”
    “நின்னைசிந்தையுள் திகழ வைத்துமருவிய மனத்தர்ஆயில்
    மாநிலத்து உயிர்கள் எல்லாம் வெருவுஉறக் கொன்று
    சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும் ஊனம் ஆயின
    கள்செய்யும் ஊனகாரகர்களேனும் அருவினைப்பயன்
    துய்யார் போனகம் செய்தசேடம் தருவரேல் புனிதமன்றே”
    “அமர்ஓர்அங்கம்ஆறும் வேதம்ஓர் நான்கும்ஓதித்தமர்
    களிற்தலைவராய சாதி அந்தணர்களேனும் நுமர்களை
    பழிப்பராகில் நொடிப்பதுஓர்அளவில் ஆங்கே அவர்கள்
    தான் புலையர்போலும்”
    “நோற்றேன் பலபிறவி நுன்னைக்காண்பது ஓர்ஆசையி
    னால் ஏற்றேன் இப்பிறப்பே! இடர் உற்றனன் எம்பெரு
    மான் ஆற்றேன்வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்
    டருளே”
    “வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னிநின்றாய்!
    நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ
    சிந்தாமணியே எந்தாய் இனியான் உனை என்றும் விடேனே”

    தேவர்கள் துதிப்பது
    மாறுகொண்டு உடன்று எதிர்த்த வல்அவுணன் பொன்பெயரோன் ஆகம் இரண்டு கூறாக புண்படப் போழ்ந்த பிரான்! இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிளவு ஆக கீண்டாய்! அவன்தன் குலமகற்கு இன்அருள் செய்தாய்! வான்ஆகி தீஆய் மறிகடல்ஆய் மாருதம் ஆய் தேன்ஆகி பால்ஆம் திருமாலே! வரத்தால் வலிநினைந்து மாதவ! நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால் ஈர்அரியாய் நேர்வலியோன்ஆய், இரணியனை அந்தி போழ்தத்து அரியாய் நீ இடந்தந்தாய்! “சொல்லினால் தொடர்ச்சிநீ சொலப்படும் பொருளும்நீ, சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார், சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்ல வல்லவரே”. “நெற்றி பெற்றக்கண்ணன், விண்ணின் நாதனோடு போதின்மேல்” “ நற்றவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர் கற்ற” பெற்றியால் வணங்கு பாத, நாத, வேத நின், “பற்று அலால் ஓர் பற்றுமற்று உற்றிலேன் உரைக்கிலே”

  • #2
    Re: பத்மநிதி

    7.பரசுராமாவதாரம்
    (முன்னும் இராமனாய் முனிந்த முனிஆய் வந்து மழுவின் படை ஆண்ட தார்ஆர் தோளன்)

    வையகம் முழுதும் முறைகெடச் செய்த குலமன்னர் அங்கம் மழுவினில் துணிய, கோமங்க, வங்கக்கடல் வையம் உய்ய, இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும் ஒருநாலும் ஒன்றும் உடனே செருது, மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவன்.

    ஆழி அம் திண்தோள் அரசர் வந்து இறைஞ்ச அலைகடல் உலகம் முன்ஆண்ட பாழி அம்தோள் ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய அடல்புரை எழில்திகழ் திரள்தோள் ஆயிரம் துணித்த மைந்தன்.

    மன்னர்முடி பொடிப்படுத்து, அரசுகளை கட்டு, அவர்தம் குருதிப் புனல் குளித்து, திருக்குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து, வையம் உய்வித்த திறலோன்.

    என் வில்வலி கண்டு போ என்று எதிர்ந்தான் மழுவாளி, தன் வில்லினோடும் அவன் தவத்தை முற்றும் செற்று வென்றி கொண்டு தனதாக்கினான் தசரதன் பெற்ற மரகத மணித்தடம் தாசரதி.

    கோல்தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால்தேடி ஓடும் மனம்.

    அமரர்க்கு அரியானை
    தமர்கட்கு எளியானை
    அமரத் தொழுவார்கட்கு
    அமரா வினைகளே.

    8. பலராமாவதாரம் (பின்னும் இராமனாய்)

    வெற்றித்தொழிலார் வேல்வேந்தர் விண்பால் செல்ல வெம்சமத்துச் செற்றக் கொற்றத்தொழிலான் பலதேவன், பிலம்பன் தன்னைப் பண் அழிய பாண்டி வடத்தே வென்றான் வெண்சங்கின் மாமேனியான்; உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடர் ஆழியும் சங்கும் மழலோடுவாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன்.

    சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனம் ஆம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் புணைஆம் மணிவிளக்காம் பூம்பட்டுஆம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு.

    கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு அருளு நின் தாள்களை எனக்கே.

    9. புத்தாவதாரம்

    கள்ள வேடத்தைக்கொண்டு போய்புரம் புக்கவாறும் கலந்து அசுரரை உள்ளபேதம் செய்திட்டு, உயிர் உண்ட உபாயங்களும், பிணக்கி யாவையும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்கதிர் ஞானமூர்த்தியாய் நின்ற தனி உடம்பன்.

    அவரவர் தமதமது அறிவுஅறி வகைவகை
    அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
    அவரவர் இறையவர் குறைவுஇலர் இறையவர்
    அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

    10. கற்கி அவதாரம்

    தவநெறிக்கு ஓர் பெருநெறி ஆய் வையம் காக்கும் கரும்பரிமேல் கற்கியும் ஆனான்,

    சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
    செல்லும் தனையும் திருமாலை நல்இதழ் தாமத்தால்
    வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் நாமத்தால்
    ஏத்துதி ரேல் நன்று.

    எந்தையேஎன்றும் எம்பெருமான் என்றும்
    சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
    எந்தை எம்பெருமான் என்று வானவர்
    சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே.

    Comment

    Working...
    X