காஞ்சிப்பெரியவர், தன் சீடர்களுடன் ஆந்திராவிற்கு புனித யாத்திரை சென்றார். காஞ்சிபுரத்திலிருந்து, வேலூர் வழியாக சித்தூர் செல்வதாக திட்டம். குதிரைகளும், ஒரு யானையும் அவர்களுடன் சென்றன. வேலூரை அடுத்துள்ள சேம்பாக்கம் கிராமத்தை அடைந்த போது, யானை நகர மறுத்தது. பயங்கரமாக பிளிறியது.
இந்த விபரம் மகாபெரியவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சிறிதும் சலனமின்றி ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, ""அந்த இடத்தைச் சுத்தப்படுத்துங்கள்,'' என்று சீடர்களுக்கு உத்தரவு போட்டார். சீடர்களும் அவ்விடத்தைச் சுத்தப்படுத்தினர். புதருக்குள் ஒரு ஸ்ரீசக்ரம் (சுவாமியின் சக்தியை உள்ளடக்கிய யந்திரம்) இருந்தது. அதை எடுத்து சுத்தம் செய்து பிரார்த்தித்தார். அவ்வூரிலுள்ள விநாயகர், மேற்கூரை இல்லாமல் இருப்பவர். அவரது பார்வை வானத்தைப் பார்த்து, மேல்நோக்கி இருந்தது.
அந்த விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கப்பட்டது. பூஜை முடிந்ததும், தகராறு செய்த யானை எழுந்து நின்று பயணத்தைத் தொடர்ந்தது. மறைந்து கிடக்கும் ஸ்ரீசக்ரத்தை வெளிக்கொண்டு வரவும், விக்னேஸ்வர பூஜை முடித்து, எவ்வித விக்னமும் (தடையும்) இல்லாமல், பயணம் முடியவுமே இந்த அதிசயம் நிகழ்ந்ததை ஊரார் புரிந்து கொண்டனர்.