மோக்ஷத்துக்குக் குறுக்கு வழி :
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)
ஒருவன் ஜீவியகாலம் முழுவதும் ஈஸ்வர பக்தி பண்ணிக்கொண்டேயிருந்தால், கடைசியில் இவன் படுக்கையில் விழும்போதும் தானே, ‘ஆடோமாடிக்’-ஆக அதே ஸ்மரணந்தான் இருக்கப்போகிறது. ஆனதால் ”ஸர்வகாலத்திலும் என்னை நினை” என்று சொன்ன க்ருஷ்ண பரமாத்மா ”அந்திமத்திலும் என்னை நினை” என்று ஒன்றைச் சேர்த்திருக்க வேண்டாமே? ஸர்வகால ஸ்மரணை தானாக அந்திமத்திலும் வந்துவிட்டுப் போகிறது!
இங்கேதான் மோக்ஷத்துக்குக் கொஞ்சம் குறுக்கு வழி (short-cut) சொன்னமாதிரி இருக்கிறது. ‘ஒருத்தன் அந்திமத்தில் எதை எதை நினைத்துக்கொண்டு உடம்பை விட்டாலும் அதையே போய் அடைகிறான்’ என்று கீதையில் ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்.
யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்யந்தே களேவரம் |
தம் தம் ஏவைதி கௌந்தேய ஸதா தத்பாவ பாவித: ||
இப்படிச் சொல்கிறபோது, வாழ்நாள் முழுக்க நினைக்காத ஒன்றை ஒருத்தன் அந்திமத்தில் நினைத்துவிட்டாலும் ஸரி, அந்திமத்தில் நினைத்த அதையே மரணத்துக்குப்பின் அடைந்து விடுவான் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள இடம் இருக்கிறது.
வாழ்நாள் முழுதும் நினைப்பதுதான் அந்திமத்தில் நினைவுவரும் என்பது பொதுவாக வாஸ்தவம். ஆனால் இப்படியில்லாமல், அஸாதாரணமாக, வாழ்நாள் பூரா நினைக்காத ஒன்று ப்ராணன் போகிறபோது நினைப்புக்கு வந்துவிட்டால்? இப்படியானாலும் அந்தக் கடைசி நேரத்தில் எதை நினைத்தானோ அதை இவனுக்கு ஸ்வாமி கொடுத்துவிடுகிறார். ‘இதற்கு முன்னாடி நீ அதை நினைக்கவில்லையே!’ என்று இவனைக் கேட்பதில்லை. கீதா வாக்யத்திலிருந்து இப்படித்தான் அர்த்தமாகிறது.
வாழ்க்கையில் அவ்வளவாக பக்தி பண்ணாவிட்டாலும் கூட, சாகிற ஸமயத்திலே ஈஸ்வர ஸ்மரணத்தோடு மூச்சை விட்டால்போதும்; அவனை அடைந்துவிடலாம் என்று கீதை சொல்வதாக ஏற்படுகிறது. இது ரொம்ப ‘ஷார்ட்-கட்’ தானே?
ஆனால் வாழ்நாள் முழுக்க நினைத்ததுதானே அந்திமத்தில் வரும்? அதெப்படி வேறு ஒரு நினைப்பு அப்போது வரும்? இது எப்படி ‘ஷார்ட்-கட்’? சும்மாவுக்காக ‘ஷார்ட்-கட்’ மாதிரி பகவான் ஏமாற்றுகிறாரா?
Source: kamakoti
This post is for sharing knowledge only, no intention to violate any copy rights