Announcement

Collapse
No announcement yet.

Triplicane Periyvaa - HH Govinda Damodara Swamigal

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Triplicane Periyvaa - HH Govinda Damodara Swamigal

    Triplicane Periyvaa - HH Govinda Damodara Swamigal
    ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்


    நம்மிடையே நூறு வருடங்கள் உண்மையான துறவியாக வாழ்ந்து, நமக்கு வழிகாட்டிய காஞ்சி மஹாஸ்வாமிகளை நாம் தெய்வமாகப் போற்றி வணங்குகிறோம். அவர் காட்டிய வழியில், நம் தெய்வமத புராணங்களை கற்று, தெளிந்து, கற்பித்து, அந்த ராமாயண பாகவத தர்மங்களையே தம் வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய ஒரு மஹான், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆவார்.


    பூர்வாச்ரமத்தில், ஆங்கரை கல்யாணராம பாகவதர் என்ற பெயரால் அறியப்பட்ட அவர், கல்வியிலும், ஆசாரத்திலும் சிறந்த ப்ராஹ்மண குடும்பத்தில், ஸ்ரீவேங்கடராம சாஸ்த்ரிகள், ஸ்ரீமதி பாலாம்பாள் என்ற தம்பதிகளுக்கு குமாரராய், 1930 ஆம் ஆண்டு அவதரித்தார். போலகம் ராமா சாஸ்த்ரிகள் போன்ற பெரியோர்களிடத்தில் நமது வேத சாஸ்த்ர புராணங்களின் உண்மைப் பொருளை கேட்டுத் தெளிந்த அவர், சென்னை வந்து சிறிது காலம் தபால் துறையில் வேலை செய்தார். முப்பதாறு வயதில் ஸ்ரீ காஞ்சி பெரியவரிடம் உத்தரவு பெற்று, வேலையை விடுத்து, பின்னர் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும், பகல் முழுவதும் ராமாயண பாகவத மூல பாராயணம் செய்து வந்தார். மாலையில் அந்த புராணக் கதைகளை, அவற்றில் ஒன்றி, உலகையும் தன்னையும் மறந்து, பக்தியோடு தம் தேனனைய வாக்கால் ப்ரவசனம் செய்து வந்தார்.


    ராமாயண பாகவதக் கதைகளை படிப்பதும், கேட்கச் செய்வதும், தம் கடமையாக, பெரும் பேறாக எண்ணிய அவர், அதற்கு எந்த கட்டணமும் குறிப்பிட மாட்டார். மேடையில் வெறும் மனிதர்களை புகழ்ந்து பேச மாட்டார். 'பார்த்தஸாரதி பெருமாளின் திருவடி வாரத்திலேயே இருக்க விரும்புகிறேன்' என்று சொல்லி திருவல்லிக்கேணியிலேயே ஏழைகளுக்கு எளியவராய் வாழ்ந்து, அவர்கள் அன்போடு அளித்ததை ஏற்று, குடும்பம் நடத்தி வந்தார்.


    ஒரு முறை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஸ்வாமிகள் உபந்நியாஸம் முடியும் நேரத்தில், ஒரு அன்பர் முன் வந்து 'இப்போ நாமெல்லாம் ஆனந்தப் படும்படி ஆயிரக்கணக்கான ச்லோகங்களைச் சொல்லி உபந்யாஸம் செய்த கல்யாணராம பாகவதருக்கு மிகுந்த கடன் தொல்லை இருக்கிறது. நீங்கள் எல்லாம் தாராளமாக தட்டில் பணம் போட வேண்டும்' என்று சொல்கிறார். ஸ்வாமிகள் அவரைத் தடுத்து


    धनॆन न रमामहॆ खल जनान् न सॆवामहॆ


    न चापलं अयामहॆ भवभयान्न दूयामहॆ ।


    स्थिरां तनुमहॆतरां मनसि किंच काञ्चीरत-


    स्मरान्त्क-कुटुम्बिनी चरण पल्लवॊपासनाम् ॥


    (பணத்தில் ரமிக்க மாட்டோம். துஷ்டர்களுக்கு சேவை செய்ய மாட்டோம். உலக விஷயங்களில் நப்பாசை பட மாட்டோம். பவ பயத்தினால் துவள மாட்டோம். ஏனெனில் காஞ்சிபுரத்தில் குடிகொண்டுள்ள ஏகம்ரநாதரின் மனைவியாம் காமாக்ஷி தேவியின் திருவடிகளை இடையறாது தொழுவதை எங்கள் மனத்தில் உறுதியாக பற்றிக் கொண்டு இருக்கிறோம்.)


    என்ற மூகபஞ்சசதீ ச்லோகத்தை சொல்லி 'ராமாயண பாகவதம் சொல்லுவதும், கேட்பதும் ஜன்ம லாபத்திற்காகத் தானே தவிர பணம் சம்பாதிக்க இல்லை. நான் கூடாது என்று சொல்லி இருந்தும் இவர் சிலது பேசிவிட்டார். அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.' என்று கூறினார்.


    பின்னர் அன்று இரவில் அந்த அன்பரும் மற்ற நண்பர்களும் ஸ்வாமிகளைப் பார்த்து 'நீ என்ன த்யாகராஜ ஸ்வாமிகள் என்ற எண்ணமோ?' என்று கேட்க ஸ்வாமிகள் 'நான் த்யாகராஜ ஸ்வாமிகள் இல்லை. ஆனா அவரைப் போல ஆகவேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.' என்று பணிவாக கூறினார். அப்போது ஒரு புது மனிதர் அங்கு வந்து ஸ்வாமிகளை வணங்கி, 'நான் காஞ்சீபுரத்து ஆசாமி. இன்று காமாக்ஷி அம்பாள் மீது மூக பஞ்சசதீ ச்லோகம் சொல்லி என் மனத்தை குளிர வைத்து விட்டீர்கள்' என்று சொல்லிவிட்டுச் செல்ல, ஸ்வாமிகளின் நண்பர்களும் அவரை வணங்கி, 'காமாக்ஷி தேவியின் அநுக்ரஹம் உங்களுக்கு இருக்கிறது. நீங்களும் த்யாகராஜ ஸ்வாமிகளைப் போல விளங்குவீர்கள்' என்று வாழ்த்தி விட்டுச் செல்கிறார்கள்.


    அது போலவே ஸ்வாமிகள் ராமாயணத்தின் ஸாரமாகவே வாழ்ந்தார். ஸ்ரீமத்பாகவத பக்தியினால் ஞான வைராக்யத்தோடு விளங்கினார். உடல் சுகத்தையும், குடும்ப நலத்தையும், பணத்தையும், புகழையும் துச்சமாக மதித்து, பகவானின் புகழ் பாடுவதையே தம் புனிதப் பணியாக வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டார்.


    இத்தகைய ஸ்வாமிகளின் தர்மப் பற்றைக் கண்டு காஞ்சி பெரியவர் மிக மகிழ்ந்து, 19 வருடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும், கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்வாமிகளை தாம் இருந்த இடத்திற்கு அழைத்து வரச் செய்து, ஏழு நாட்கள் பாகவதத்தை பகலில் படிக்கச் செய்து, இரவில் பிரவசனம் செய்யச் சொல்லி, தானே அருகில் அமர்ந்து கேட்டு ரசித்தார். ஸ்ரீராமர் தன் கதையை தானே கேட்டது போல, க்ருஷ்ண பகவான், தானே தன் கதையை கேட்க விரும்பினார் போலும்! 'பாகவத ஸப்தாஹம் மலை போன்ற கார்யம். பாகவதருக்கு தான் ச்ரமம். நமக்கெல்லாம் ஆனந்தம். படனம் மதுரம். ப்ரவசனம் மதுரதரம்'என்று மஹாபெரியவா ஸ்வாமிகளை வாயார வாழ்த்தியுள்ளார்.


    'எத்தனை கஷ்டம் இருந்தாலும் பொருட்படுத்தாமல், என் பேச்சைக் கேட்டு நடப்பவர்' 'ராமாயண பாகவதத்தை விலை பேசாத ஒரு மஹான்' 'தம் வாழ்க்கையை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டவர். அவருக்கு மீண்டும் பிறவி கிடையாது' என்று இப்படி பல முறை பல விதங்களில் மஹாபெரியவாள், நம் ஸ்வாமிகளைப் பற்றி அநுக்ரஹித்துள்ளார். மஹாபெரியவாளுடைய பூர்வாச்ரம தம்பியாக சதாசிவம் என்ற பெயரோடு அவதரித்து, முற்றும் துறந்த துறவியாக விளங்கிய ஸ்ரீசிவன் சார் 'திருவல்லிக்கேணி ஸ்வாமிகள் ஒரு உண்மையான (genuine) ஸந்நியாஸி. அவரை தியானம் பண்ணிக் கொண்டிருந்தாலே மேலே போகலாம்.' என்று அநுக்ரஹித்துள்ளார்.


    இத்தகைய தூய்மையான தவ வாழ்க்கையாலும், மஹனீயர்களின் ஆசியாலும், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பல ஸித்திகளை அடைந்து, நிக்ரஹானுக்ரஹ மஹானாய் விளங்கினார். அவர் சொன்ன வார்த்தைகள், ஈச்வர வாக்காய் பலித்தது. ஆனால், அந்த ஸித்திகளை மறைத்துக் கொண்டு, அதனால் கூட்டம், பணம் எதுவும் வந்து விடாமல் இருக்க, மஹா பெரியவாளிடம் ஒவ்வொரு நாளும் 'க்யாதி லாப பூஜையிலிருந்து என்னைக் காப்பாற்றி, உங்கள் பாத பக்தியை தரவேண்டும்.' என்று வேண்டி வந்தார். அப்படி உத்தம பக்தியால் ஞான வைரக்யத்தை பெற்று ஜீவன் முக்தராய் ப்ரகாசித்த அந்த மஹான், முடிவில் ஸந்நியாஸ ஆச்ரமத்தை ஏற்றார். படித்தவர், பாமரர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி தம்மிடம் வந்த அனைவருக்கும் இறைவன் பேரால் ஆறுதல் அளித்தார்.


    'சரவணபவ, சிவ, ராம, கோவிந்த, நாராயண, மஹாதேவ' என்ற பகவானின் நாமங்களை தனிமையில் மனமுருகி ஜபித்து வந்தாலே, பகவத் பக்தி ஏற்பட்டு, இடையறாத பஜனத்தினாலேயே பக்தியின் வளர்ச்சியும், உலக விஷயங்களில் இருந்து விரக்தியும், பகவானுடைய ஞானத்தையும் அடையலாம்' என்று தன் உன்னதமான வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டி உபதேசித்த, நம் ஸத்குரு, ஸ்ரீகோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் நினைவைப் போற்றுவோம்.


    அந்த மகானின் கருணைக்கு பாத்திரமாகி, ஸ்வாமிகளிடம் வால்மீகி ராமாயணத்தை பாடம் கேட்டு, அப்போது எடுத்த குறிப்புகளை கொண்டு வால்மீகி ராமாயணம் என்னும் தேனை துளித் துளியாக (இந்த இணையதளத்தில் ஒலிப் பேழைகளாக) பகிர்ந்து வருகிறேன்
    https://www.youtube.com/attribution_link?a=LLbLu4oNKY0&u=%2Fwatch%3Fv%3DOoMeuzmdC-k%26feature%3Dshare&fbclid=IwAR2AYtOTKM-Molw2MZ1agp1OcmoW0mw_L0lNHTJo0cG4mn5kqmw0MI91_s4
Working...
X