Announcement

Collapse
No announcement yet.

Seshadri Swamigal

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Seshadri Swamigal

    ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
    சேஷாத்திரி ஸ்வாமிகள்


    ஸ்வாமியின் அனுக்கிரஹம்


    சிரபுஞ்சி என்ற இடத்திலும் கர்நாடகாவில் சிருங்கேரி அருகிலும் மழை கொட்டி தீர்க்கும். சில இடங்கள் வறட்சியானவை. மழையை அதிகம் பார்க்காத மானம்பார்த்த சீமைகள். திருவண்ணாமலை அக்னி க்ஷேத்ரம். பெயருக்கேற்றாற்போல் அங்கே மழை அதிகம் கிடையாது. கோடையில் குளம் குட்டை எல்லாம் வறண்டுபோய் இருக்கும். காற்றில் வெப்பம். வியர்க்கும். குடி நீருக்கு தட்டுப்பாடு. கோடையில் கேட்கவே வேண்டாம்.


    ''சுவாமி பொறுக்கவே முடியல்லியே. வெக்கை தாங்க முடியவில்லையே . கொஞ்சமாவது மழை வந்தால் தான் இங்கே பூமியிலே காலை வைக்க முடியும் போல இருக்கே'' என்று சேஷாத்திரி ஸ்வாமிகளிடம் இந்த மாதிரி கோடையில் ஒரு சிலர் கேட்டார்கள். ஸ்வாமிகள் திண்ணையில் காலாட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.


    ''ஓ நீ அப்படி சொல்றியா?'' என்று தாடையைச் சொறிந்து கொண்டே வானத்தைப் பார்த்தார். கண் கூசும் வானம். மேகத்துக்கு எங்கே போவது? ஆகாயம் துடைத்து விட்டால் போல் இருந்தது. மழை என்ற நினைப்புக்கே இடமில்லை.


    ''அதோ பார் மழை வருதே '' என்கிறார் சேஷாத்திரி ஸ்வாமிகள்..


    ஐந்து நிமிஷம் கூட ஆகவில்லை. தடதடவென்று வானம் பொத்துக் கொண்டது போல் ஜோ என்று மழை. எங்கிருந்து வந்தது இவ்வளவு கருமேகங்கள், மழை.


    இப்படித்தான் ஒரு சமயம் ஐயன் குளத் தெருவில் இருந்த ஆர்.வி. அர்த்தநாரி ஐயர் ஸ்வாமிகளிடம் மழை வேண்டினார்.


    மேலே பார்த்துக் கொண்டே ஸ்வாமிகள் கொளுத்தும் வெய்யில். ''உடம்பெல்லாம் நனைஞ்சு போச்சே. துணியை எங்கே காய வைக்கிறது?'' என்கிறார் சேஷாத்திரி ஸ்வாமிகள். கேட்பவர்களுக்கு வெறும் பேத்தலாக தோன்றும்.


    பத்து நிமிஷம் கூட ஆகவில்லை. அர்த்தநாரி வீட்டுக்குப் போய் சேருவதற்குள் தொப்பலாக நனைந்து விட்டார். மத்தியானம் உச்சி வேளை 12 மணிக்கு பிடிச்ச மழை மூணு மணி நேரம் விடாது பெய்தது. எங்கும் இடுப்பளவு ஜலம் .
    இப்படிப்பட்ட அதீத சக்தி ஸ்வாமிகளிடம் இருந்ததை பலர் அறிவார்கள்.


    காய வியூகம் என்பது ஒரு சித்தி. ஒருவரே ஒரே சமயத்தில் பலராக மாறுவது. கிருஷ்ணன் ராஸக்ரீடையின் போது இப்படித்தானே எல்லா கோபியருடனும் கலந்து ஆடினார்.


    ஸ்வாமிகளுக்கு இது சாத்தியமாக இருந்தது. ஒரே சமயத்தில் நாலு ஐந்து இடங்களில் பலர் அவரைப் பார்த்து இருக்கிறார்கள்.


    இதை டி .கே. சுந்தரேச அய்யர், ராமராவ், வெங்கடராம ஐயர் ஆகியோர் கண்ணால் கண்டு சொல்லி இருக்கிறார்கள்.


    குழுமணி நாராயண சாஸ்திரி 1921ல் திருச்சியிலிருந்து புறப்பட்டு ஸ்வாமிகளை தரிசிக்க திருவண்ணாமலை வந்தார். அவர் கையிலிருந்த பாகவத புத்தகத்தை வாங்கி ஏதோ ஒரு பக்கம் புரட்டி ''இந்த வரியை வாசி'' என்று சுவாமி சொன்னதால் அந்த வரியை பார்த்தார், படித்தார். -- ''நந்தஸ் த்வாத்மஜ உத்பன்னே'' -- 10 ஸ்கந்தம் 5 அத். 1வது ஸ்லோகம்..--- அதன் சாராம்சம்:
    ''உலகில் பெரியோர்கள் சம்பிரதாயமாக உபதேசிக்கும் வாசகம் ஸ்லோகமாக அமைந்தது. இது ஸ்வாமிகளின் உபதேசமாக தோன்றியது. படித்து முடித்தஉடன் ஸ்வாமிகள் எழுந்து விடுவிடுவென்று அவர் இருந்த அன்ன சத்திரத்திற்குள் சென்று எங்கிருந்தோ ஒரு தேங்காயை கொண்டு வந்தார். அதை ரெண்டு மூன்று முறை தனது மார்பிலும் தலையிலும் வைத்து விட்டு சாஸ்திரிகளின் கையைப் பிடித்து கொடுத்தார்.


    ஏழெட்டு நாள் ஸ்வாமிகளோடு இருந்து விட்டு சாஸ்திரிகள் ஊருக்கு ரயிலில் புறப்பட்டார். அப்போதெல்லாம் நிறைய பேர் டிக்கேட் வாங்க மாட்டார்கள். வெள்ளைக்கார அதிகாரி அப்பப்போது வண்டிக்குள் ஏறி டிக்கெட் இல்லாதவர்களை அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிடுவான். சாஸ்திரிகளிடம் பணம் இல்லை. ஸ்வாமிகள் கொடுத்த தேங்காயை ஒரு வஸ்திரத்தில் மூட்டை கட்டி மேலே பலகையில் வைத்து விட்டு அமர்ந்தார். ''ரயிலைப் பார்த்ததும் டிக்கெட் கூட வாங்காமல் கையிலும் காசில்லாமல் வண்டிக்குள் ஏறிவிட்டேனே. என்ன ஆகுமோ பகவானே நீங்களே கதி'' என்று சேஷாத்திரி ஸ்வாமிகளை நினைத்துக் கொண்டார் குழுமணி நாராயண சாஸ்திரிகள்.


    அடுத்த ரயில் நிலையம் வந்து வண்டி நின்றது. அடுத்த கணமே சேஷாத்திரி ஸ்வாமிகளின் இன்னொரு பக்தர், அனந்தபுரம் ஸ்ரோத்ரியம் கே. ராஜமய்யர் வண்டிக்குள் ஏறினவர். தான் 13 அணா கொடுத்து வாங்கிய ஒரு டிக்கெட்டை சாஸ்திரிகளிடம் கொடுத்தார். விழுப்புரம் வண்டி நின்றபோது கொஞ்சம் இட்டலி வடை காப்பி வாங்கி கொடுத்தார். அவர் இறங்கிக்கொண்டார். சாஸ்திரி பயணம் தொடர்ந்தது. திருப்பாதிரிப்புலியூர் வண்டி வந்தபோது சாஸ்திரி தூங்கியதால், மேலே மூட்டை கட்டி வைத்திருந்த வேஷ்டி, பாகவத புத்தகம், சுவாமி கொடுத்த தேங்காயை எல்லாம் எவனோ எடுத்துக் கொண்டு போய்விட்டான்.


    சிதம்பரத்துக்கு ரெண்டு ஸ்டேஷன் முன்னால் தான் தனது மூட்டை காணாமல் போனதை தெரிந்து சாஸ்திரிகள் திடுக்கிட்டார். என்ன அபசகுனம். வேஷ்டி போனால் போகிறது. பாகவத புஸ்தகம், ஸ்வாமிகள் கொடுத்த பிரசாதம் போய்விட்டதே'' கடலூரில் வண்டி நின்றது ஒரு தாடிக்கார விபூதி ருத்ராக்ஷ காவி வஸ்திரதாரி அங்கே வண்டிக்குள் ஏறினார். வண்டி காலி. இருந்தபோதும் சாஸ்திரி அருகே வந்து உட்கார்ந்தார்.


    ''ஏன் வருத்தமா இருக்கே?'' தாடிக்காரர் சாஸ்திரியை கேட்கிறார்.


    சாஸ்திரி விஷயம் சொன்னதும் முதுகில் தட்டி கொடுத்தார். ''கவலை விடு. சிதம்பரத்தில் நடராஜாவைப் போய் பார். தரிசனம் பண்ணு. துக்கம் எல்லாம் போயிடும்'' சாமியார் சொன்ன தோரணை சேஷாத்திரி ஸ்வாமிகள் வந்து நேரில் சொன்னதைப் போல் பட்டது சாஸ்திரிக்கு.


    ''பைத்தியமே, தேங்காய்க்குள்ளேயா அனுக்கிரஹம் இருக்கு?. புஸ்தகத்திலேயா குரு அனுக்கிரஹம் இருக்கு ? அது கண்ணுக்கு தெரியாதது. உனக்கு ஒரு தடவை கிடைச்சால் கிடைத்தது தான். எங்கும் போகாது. உனக்கு டிக்கெட் கொடுத்து சிதம்பரம் வரைக்கும் அனுப்பியது யார் ?? அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்தது. சாமியார் இறங்கினார். அது சேஷாத்திரி ஸ்வாமிகள் தான் என்று சாஸ்திரிக்கு புரிந்தது. சிதம்பரம் வந்தது நடராஜனை தரிசிக்க ஓடினார்.
    ''ஒரு அற்புத ஞானி '' புத்தகம் வேண்டுபவர்கள் தொடர்புள்ள கொள்ள: ஜே.கே. சிவன் 9840279080
Working...
X