Announcement

Collapse
No announcement yet.

Agastiar, saneeswar Temple Ilandur

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Agastiar, saneeswar Temple Ilandur

    Agastiar, saneeswar Temple Ilandur
    சனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூர் மது நாதீஸ்வரர் !!!


    அகத்திய முனிவர் வழிபட்ட- ஸ்தாபித்த சிவாலயங்கள் மிகப்பழமையும் சிறப்பும் வாய்ந்தவை. சிவ- பார்வதி திருமணத்தின்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அதை சமன் செய்ய அகத்தியர் தென்திசை வந்த நிகழ்ச்சியோடு இந்த ஆலயங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவ்வகையில் அமைந்த ஒரு ஆலயம்தான் இலத்தூர் மதுநாதீஸ்வரர் ஆலயம்.


    இறைவனின் ஆணைப்படி தென்னகம் வந்த அகத்தியர் தென்பொதிகைச் சாரலை அடைந்தார்.


    அப்பகுதிக்கு வடக்கே அடர்ந்த மூங்கில் காடு விரவியிருந்தது. சந்தியா வேளையில் அங்கே வந்த அகத்தியர், நீராடி நித்திய பூஜை செய்ய நீர்நிலையைத் தேடினார். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த புனித நதியைக் கண்டார்.


    ராம- லட்சுமணர் வானர சேனையுடன் இலங்கையை நோக்கி இப்பகுதி வழியாக வந்தபோது, நீர் வேட்கையால் மிகவும் களைப்புற்றனர். அப்போது அனுமன் அங்கிருந்த ஒரு பாறையை ஓங்கி அடித்தான். அதிலிருந்து ஆகாய கங்கை பொங்கியெழுந்து பிரவகித்து, அவர்களின் தாகத்தைத் தீர்த்தது. இதன் காரணமாக அனுமன் நதி என்னும் பெயர் பெற்ற நதியையே அகத்தியர் கண்டார்.


    அந்த நதியில் நீராடி, சிவபூஜை செய்ய எண்ணிய அகத்தியர் ஆற்றங்கரையிலிருந்த புளியமரத்தின் கீழ் அமர்ந்து மணலால் சிவலிங்கம் ஒன்றை அமைத்தார். அப்போது அவருக்கு ஏழரைச் சனி தொடங்கி இருந்த சமயம். புளியமரத்தின்மீது ஒரு தேனடை இருந்தது. அதிலிருந்த தேன் பெருகி வழிந்து மணல் லிங்கத்தின்மேல் தாரையாகக் கொட்டியது. கைகளை எடுத்தால் மணல் லிங்கம் கரைந்துவிடும் என்கிற நிலையில், என்ன செய்வ தென்று புரியாமல் திகைத்தார் அகத்தியர்.


    இந்தச் செயலை நிகழ்த்திக் கொண்டிருந்தவர் சனி பகவான். இதையறிந்த சிவபெருமான், "ஏழரைச் சனியின் முதல் பாகம் முடிந்துவிட்டது. வீரிய காலம் கழிந்துவிட்டதால் அகத்தியரின் வழிபாட்டுக்குத் தடையாக இருக்காதே. யாம் வாக்களித்தபடி அகத்தியருக்கு என் திருமணக் கோலத்தைக் காட்டியருள வேண்டிய தருணமிது' என்று சனி பகவானுக்கு கட்டளையிட்டார்.


    அதன்பின் சனி பகவான் தன் வீரியத்தைக் குறைத்துக்கொள்ள, தேனடையிலிருந்து பொழிந்த தேன்தாரை நின்றது. அகத்தியர் தம் கைகளை விலக்க, தேனில் ஊறிய மணல் லிங்கம் கெட்டிப்பட்டு நின்றது. அவருக்கு தேனீஸ்வரர் (மதுநாதீஸ்வரர்) என்று பெயரிட்டு வணங்கினார் அகத்தியர். ஈசனும் தான் அருளியபடி அகத்தியருக்கு திருக்காட்சி தந்து மறைந்தார்.


    பின்னர் அகத்தியர் வடதிசை நோக்கி அமர்ந்து, சனியின் தாக்கம் விலக சனீஸ்வரர் தோத்திரம் பாடினார். அவருக்கு சனி பகவான் காட்சி தந்தருளினார்.


    இத்தகைய புராணச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட இலத்தூர் சிவாலயத்தில், அகத்தியரால் அமைக்கப்பட்ட மணல் லிங்கம் தேனீஸ்வரர், மதுநாதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் மூலவராக விளங்குகிறது. ஆலயத்துக்கு அருகே அனுமன் நதி பாய்கிறது. அன்னை அறம் வளர்த்த நாயகி என்னும் பெயரோடு திருவருள் புரிகிறாள். வலம்புரி விநாயகர், சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, வள்ளி- தெய்வானையோடு முருகப் பெருமான், சுவாமி ஐயப்பன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களும் சந்நிதி கொண்டுள்ளனர்.


    அகத்தியருக்கு தெற்கு நோக்கி காட்சி தந்த சனி பகவான், அவ்வண்ணமே தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் அருள்புரிகிறார். அவரை வலம் வரும் நிலையில் சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்தது.


    ""பொங்கு சனியாய் பொலிவைத் தருபவர் இவர். கடந்த சனிப் பெயர்ச்சியின்போது மட்டும் பல்லாயிரங்கணக்கான மக்கள் இவரை வழிபட்டுச் சென்றனர். தன்னை வணங்குபவர்களின் துன்பங்களை நீக்குவதில் நிகரற்று விளங்குகிறார் இந்த சனி பகவான்!'' என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார் கள் ஆலய அர்ச்சகர்கள் சிவா, தட்சிணாமூர்த்தி ஆகியோர்.


    முழு முதல்வனான ஈசனுக்கே சனி பகவான் தனது காலத்தில் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறார். கண்டச் சனி காலத்தில்தான் சிவன் ஆலகால விஷத்தை அருந்த நேர்ந்ததென்றும்; அஷ்டமச் சனியின்போதுதான் தட்சனால் அவமானப்படுத்தப் பட்டார் என்றும்; ஈசன் பிரம்ம கபாலத்தில் பிச்சையெடுக்க நேர்ந்ததும் சனியின் ஆதிக்கத்தின் போதுதான் என்றும் சொல்வார்கள். அதுபோல ஒரு குளத்திலுள்ள கருங்குவளை மலரின் கீழும் சிவபெருமான் ஏழரை நாழிகை மறைந்திருக்கும்படி நேரிட்டது. அந்தக் குளமே இவ்வாலயத்தின் அருகே அமைந்துள்ள அகத்திய தீர்த்தம். அகத்தியர் ஏழரைச் சனி விலகும்போது இந்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார்.


    எனவே, ஏழரைச் சனி விலகுபவர்கள் இந்தக் குளத்தில் நீராடி இறைவனையும் சனி பகவானையும் வணங்கினால், அல்லல்கள் அனைத்தும் அகன்று இன்பங்கள் பெருக வாழ்வர். "சனி பகவானைப்போல கொடுப்பாரில்லை' என்னும் வழங்கு நிதர்சனமாவதை உணரலாம்.


    நெல்லை மாவட்டம், தென்காசியிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இலத்தூர் கிராமம். இங்குதான் அற்புதமான இந்த மதுநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது
Working...
X