Announcement

Collapse
No announcement yet.

Thirupunkur temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirupunkur temple

    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை கு கருப்பசாமி.*
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• ••


    *தல எண் 165:*


    *தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*


    *சிவ தல அருமைகள் பெருமைகள்.*


    * சிவலோகநாதர் திருக்கோவில், திருப்புன்கூர்.*
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• •••
    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் இருபதாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *இறைவன்:* சிவலோகநாதர்.


    *இறைவி:*
    செளந்தர நாயகி, சொக்கநாயகி.


    *தல விருட்சம்:* புங்கமரம்.


    *தல தீர்த்தம்:* கணபதி தீர்த்தம்.


    *ஆகம பூஜை:* சிவாகம முறைப்படி.


    *பதிகம்:* திருநாவுக்கரசர்- ஆறாம் திருமுறையில் ஒரு பதிகம்.
    திருஞானசம்பந்தர்- முதலாம் திருமுறையில் ஒரு பதிகம்.
    சுந்தரர்- ஏழாம் திருமுறையில் ஒரு பதிகம்.


    *பெயர்க்காரணம்:* புங்கு + ஊர் =புங்கூர். புங்கமரம் நிறைய சூழ்ந்த தலமாக இருந்ததால் புங்கூர்-புன்கூர் ஆயிற்று.


    சமஸ்கிருதத்தில் இத்தலத்தை *கஞ்சாரண்யம்* என்பர்.


    *இருப்பிடம்:*
    வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே மூன்றுகி.மி. சென்றால் ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டி காணலாம்.


    மறுபுற கைகாட்டியில் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவையும் காணலாம்..


    கைகாட்டி இடத்திலிருந்து அச்சாலையில் ஒன்றரை கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.


    சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.


    வாகனங்களில் திருக்கோயில் வரை செல்ல முடியும்.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்,
    திருப்புன்கூர்,
    திருப்புன்கூர் அஞ்சல்,
    சீர்காழி வட்டம்,
    நாகப்பட்டினம் மாவட்டம்.
    PIN - 609 112


    *ஆலயப் பூஜை காலம்:*
    நாள்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது


    *கோவில் அமைப்பு:*
    மூவர் பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் ஒன்றான இதுவும் ஒன்று.


    ஐந்து நிலைகளைத் தாங்கி இராஜகோபுரம் காட்சியளிக்க, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை தரிசித்துக் கொண்டோம்.


    வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியிலிருக்க, விடுவோமா?... சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிக் கொண்டோம்.


    அடுத்திருந்த சுப்பிரமணியர் சந்நிதிக்கு முன் வந்து நின்று வணங்கி நகர்ந்தோம்.


    தலமரமுத்துடன் பிரம்மலிங்கமும் சேர்ந்து இருந்ததைக் கண்டு கைதொழுது கொண்டோம்.


    அடுத்து, கவசமிட்ட கொடிமரத்தருகே வந்து விழுந்தெழுந்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.


    பெரிய நந்தியை (நந்தனாருக்காக சற்று விலகியுள்ள) வணங்கி கடந்து உள் வாயிலுக்குள் சென்றோம்.


    உள்வாயிலின் மேற்புறத்தில் வண்ணச்சுதையாலான பஞ்சமூர்த்திகள் காட்சி அமைத்திருந்தார்கள்.


    மேலும் தொடர....துவார விநாயகரைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.


    உள்வாயிலைக் கடந்தால் உள்பிராகாரத்தில் இடப்புறத்தில் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி. சுந்தரவிநாயகர் சந்நிதி முதலியவை இருக்க ஒருசேர ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.


    அடுத்துள்ள சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியாக அருளில் தெரிந்தார்.


    இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு கொண்ட இவ்வமைப்பை தரிசிக்க வேண்டிய ஒன்று.


    அடுத்து சூரியன் அக்கினி வழிபட்ட லிங்கங்கள் இருக்குமிடம் சென்று வணங்கிக் கொண்டோம்.


    ஆறுமுகர்சந்நிதி, தத்புருஷ், அகோர, வாமதேவ, சத்யோஜாத முகங்களின் பெயரில் அமைந்துள்ள லிங்கபாணங்கள், கஜலட்சுமி முதலிய சந்நிதிகள் வரிசையாக இருக்க, தொடர்ச்சியாக தொடர்ந்து வணங்கிக் கொண்டோம்.


    இதனின் இடதுபுறமாக அம்பாள் சந்நிதி தனியாக வலம் வரும் அமைப்புடன் அமைந்திருந்தன.


    நவக்கிரகம், பைரவர், சந்திரன் சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்ததும்,
    நேராக சுவாமி சந்நிதியைக் காணக் கிடைத்தோம்.


    மூலவர் சற்று உயரக்குறைவுடனான பாணத்துடன் காட்சி அருளிக் கொண்டிருந்தார்.


    இந்த சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியானவரென அர்ச்சகர் கூறினார்.


    அதனால் சுயம்பு லிங்கத்தின் மீது குவளை சார்த்தியபடி காணப்படுகிறார் என்றும் கூறினார்.


    மேலும் அர்ச்சகர்,....புணுகு சட்டம் சார்த்தும் நாளில் மட்டும் கவசமின்றி மூலவரை தரிசிக்கலாம் என்றும் கூறினார்.


    மனமுருக குனியக்கூனி வணங்கிப் பணிந்து தொழுது கொண்டோம். தீபாரதனைக்குப் பின், அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.


    இறைவன் கருவறை கோஷ்டங்களில் வலம் வந்தபோது, நர்த்தனவிநாயகர், பிட்சாடனர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் ஆகியோர் இருக்க, தொடர்ந்து அனைவரையும் வணங்கிக் கொண்டோம்.


    பிரம்மா, இந்திரன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் மற்றும் ஏயர்கோன் கலிக்காம நாயனார், விறல் மீண்டர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றிருக்கின்றனர்.


    இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அம்பாள் சொக்கநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக இருந்தது.


    ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்திருக்க, வலம் வந்து அம்மையின் தரிசனம் காண உள் புகுந்தோம்.


    மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.


    *தல பெருமை:*
    திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து வணங்கும் பொருட்டு இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு செய்தருளிய தலம் திருப்புன்கூர்.


    நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவராதலால் ஆலயத்திற்குள் செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார்.


    அப்போது இறைவன் முன் இருக்கும் நந்தி நன்றாக இறைவனைப் பார்க்க முடியாமல் மறைக்கும்.


    அதற்காக கவலைப்பட்டு ஆதங்கப்பட்ட அவருக்கு தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி நந்தனாரின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டிய தலம்.


    எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும்.


    ஆனால் நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை.


    இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும்.


    மேலும் இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம் நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் வெட்டிய குளம் என்ற பெருமை உடையதாகும்.


    *சுந்தரர் பதிகம்: *
    ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு வருகை புரிந்தனர்.


    அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.


    இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் பன்னிரண்டு வேலி நிலம் ஆலயத்திற்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான்.


    அதன்படி சுந்தரர் பதிகம் பாட மழை பெய்தது. கூறியபடி மன்னனும் பன்னிரண்டு வேலி நிலத்தை ஆலயத்துக்கு அளித்தான்.


    ஆனால், பெய்த மழை பெய்ததுதான். நில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது. இடைவெளிவிட்டுக்கூட நிற்கவில்லை.


    பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த மேலும் பன்னிரண்டு வேலி நிலம் ஆலயத்துக்கு அளித்தால், பதிகம் பாடி மழையை நிறுத்தலாம் என்று மன்னனிடம் கூற....மன்னனும் ஒப்புக் கொள்ள...


    பதிகம் பாடி மழை நிற்க, அடுத்து பன்னிரண்டு வேலி நிலத்தை மன்னனிடமிருந்து பெறப்பட்டு இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார் சுந்தரர்.


    இந்த வரலாற்றை சுந்தரர் *"அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த"*என்று தொடங்கும் தனது பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.


    *வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீர்இலை மாநிலம் தருவோம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே.*


    சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை தனது திருக் கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை தான் தடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்தார்.


    சுந்தரர் தனது பதிகத்தின் எட்டாவது பாடலில் இதைக் குறிப்பிடுகிறார்.


    *"திரிபுர அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன், என்னை ஏற்றுக் கொண்டருள்* என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார்.


    மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில் இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல் காவ லாளர்என் றேவிய பின்னை ஒருவன் நீகரி காடரங் காக மானை நோக்கியோர் மாநடம் மகிழ மணிமு ழாமுழக் கவருள் செய்த தேவ தேவநின் திருவடி யடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே. என்று...


    இத்தலத்திலுள்ள நடராச சபையில் உள்ள நடராச வடிவம் மிக மிக கலையழகு வாய்ந்து காணப்படுகிறார்.


    இத்தல சுந்தரர் பதிகத்தில் கூறியபடி நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணிமுழா முழக்குவதை நாம் காணலாம்.


    இங்குள்ள தீர்த்தம் விநாயகருடைய துணையால் நந்தனார் வெட்டியதாகும்.

    *தல அருமை:*
    தன் நாட்டில் பஞ்சம் நிலவியதால் இராசேந்திரசோழன் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான்.


    அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் சிவலோக நாதரை வழிபடின் மழையுண்டாகும் என்றருள, அவ்வாறே மன்னனும் அங்கு வந்து சுவாமியை வழிபட்டான்.


    அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி, சந்நிதியில் பாடி மழை செய்விக்குமாறு வேண்டினான்.


    சுந்தரரும் மழைசெய்வித்தால் சுவாமிக்குப் பன்னிருவேலி நிலமளிக்குமாறு மன்னனுக்கு கட்டளையிட்டுவிட்டுப் பாடினார்.


    மழைசெய்தது.


    ஆனால், மழை நில்லாமல் பெய்தமையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


    மழைமிகுதியைக் கண்ட மன்னன், அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து, மழையை நிறுத்துமாறு பாடியருள வேண்டும் என்று கேட்டார்.


    சுந்தரரும் மேலும் பன்னிருவேலி, நிலம் கேட்க, மன்னனும் தர சம்மதிக்க, சுந்தரர் மீண்டும் பாடியருள மழையும் நின்றது.


    கூறியபடி பன்னிரண்டு வேலி நிலத்தை ஆலயத்துக்கு மன்னன் அளித்தான்.


    *தல சிறப்பு:*
    திருப்புன்கூருக்கு வந்து சிவலோக நாதரைத் தரிசிக்க முயன்ற திருநாளைப்போவார் (நந்தனார்), தன் குலநிலையை எண்ணி வெளியிலிருந்து பார்க்க, நந்தி மறைத்திருப்பது கண்டு வருந்தினார்.


    இறைவன் இவருடைய உள்ளப் பக்தியைக் கண்டு மகிழ்ந்து நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு பணித்தார்.


    இன்றும் நந்தி, இத்தலத்தில் விலகியிருப்பதை ஆலயத்துக்குச் சென்றோர் காணப் பெற்றிருப்பர்.


    நந்தி விலகத் தரிசித்த நாளைப்போவார் நாயனார், கோயிலின் மேற்புறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணித் தனக்குத் துணை யாருமில்லாததால் இறைவனை வேண்டினார்.


    இறைவன் அவருக்குத் துணையாகுமாறு கணபதியை அனுப்பினார்.


    கணபதி துணையால் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார்.


    இதுவே கணபதிதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் *'குளம் வெட்டிய விநாயகர்'* என்று அழைக்கப்படுகிறார்.


    *சம்பந்தர் தேவாரம்:*
    1. முந்தி நின்ற வினைக ளவைபோகச்
    சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
    அந்த மில்லா வடிக ளவர்போலும்
    கந்த மல்கு கமழ்புன் சடையாரே.


    🏾நெஞ்சே! பல பிறவிகளிலும் செய்தனவாய சஞ்சித, ஆகாமிய வினைகளுள் பக்குவப்பட்டுப் பிராரத்த வினையாய்ப் புசிப்பிற்கு முற்பட்டு நின்ற வினைகள் பலவும் நீங்க, திருப்புன்கூரில் ஆதி அந்தம் இல்லாத தலைவராய், மணம் நிறைந்து கமழும் செந்நிறச் சடைமுடி உடையவராய் எழுந்தருளிய சிவ பிரானாரைச் சிந்தனை செய்வாயாக.


    2. மூவ ராய முதல்வர் முறையாலே
    தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
    ஆவ ரென்னு மடிக ளவர்போலும்
    ஏவி னல்லா ரெயின்மூன் றெரித்தாரே.


    🏾பகைமை பூண்டவராய அசுரர்களின் மூன்று அரண்களைக் கணையொன்றால் எரித்தழித்த இறைவர், பிரமன் மால் உருத்திரன் ஆகிய மூவராயும், அவர்களுக்கு முதல்வராயும், தேவர்கள் எல்லோரும் முறையாக வந்து வணங்குபவராயும் விளங்கும் திருப்புன்கூரில் எழுந்தருளிய அடிகள் ஆவர்.


    3. பங்க யங்கண் மலரும் பழனத்துச்
    செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
    கங்கை தங்கு சடையா ரவர்போலும்
    எங்க ளுச்சி யுறையும் மிறையாரே.


    🏾எங்கள் தலைகளின் மேல் தங்கி விளங்கும் இறைவர், தாமரை மலர்கள் மலரும் வயல்களில் சிவந்த கயல் மீன்கள் திளைத்து மகிழும் திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள கங்கை தங்கிய சடை முடியினராகிய சிவபெருமானாராவர்.


    4. கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
    திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
    உரையி னல்ல பெருமா னவர்போலும்
    விரையி னல்ல மலர்ச்சே வடியாரே.


    🏾மணத்தால் மேம்பட்ட தாமரைமலர் போலும் சிவந்த திருவடிகளை உடைய இறைவர், ஒளி பொருந்திய சிறந்த மாணிக்கங்கள் கரைகளில் திகழ்வதும், முத்துக்கள் நீர்த்திரைகளில் உலாவுவதும் ஆகிய வளம்மிக்க வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளிய புகழ்மிக்க நல்ல பெருமானாராவார்.


    5. பவள வண்ணப் பரிசார் திருமேனி
    திகழும் வண்ண முறையுந் திருப்புன்கூர்
    அழக ரென்னு மடிக ளவர்போலும்
    புகழ நின்ற புரிபுன் சடையாரே.


    🏾உலகோர் புகழ நிலை பெற்ற, முறுக்கிய சிவந்த சடை முடியை உடைய இறைவர், பவளம் போலும் தமது திருமேனியின் செவ்வண்ணம் திகழுமாறு திருப்புன்கூரில் உறையும் அழகர் என்னும் அடிகளாவார்.


    6. தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
    திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
    பொருந்தி நின்ற வடிக ளவர்போலும்
    விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.


    🏾விரிந்து விளங்கும் சடைமுடியில் வெண்பிறை அணிந்த இறைவர், கண்களுக்குப் புலனாய் அழகோடு திகழும் செங்கழுநீர் மலர்ந்த வயல்களாலும், செந்நெற் கதிர்கள் அழகோடு நிறைந்து நிற்கும் வயல்களாலும் சூழப்பெற்ற திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள அடிகள் ஆவார்.


    7. பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
    தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
    ஆர நின்ற வடிக ளவர்போலும்
    கூர நின்ற வெயின்மூன் றெரித்தாரே.


    🏾கொடியனவாய்த் தோன்றி இடர் விளைத்து நின்ற முப்புரங்களையும் எரித்தழித்த இறைவர், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் பரவித் தொழுதேத்துமாறு தேரோடும் திருவீதிகளை உடையதும், எந்நாளும் திருவிழாக்களால் சிறந்து திகழ்வதுமான திருப்புன்கூரில் பொருந்தி நின்ற அடிகளாவார்.


    8. மலைய தனா ருடைய மதின்மூன்றும்
    சிலைய தனா லெரித்தார் திருப்புன்கூர்த்
    தலைவர் வல்ல வரக்கன் றருக்கினை
    மலைய தனா லடர்த்து மகிழ்ந்தாரே.


    🏾வலிமை பொருந்திய இராவணன் செருக்கைப் போக்க, அவனைக் கயிலை மலையாலே அடர்த்துப்பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள் வழங்கிய இறைவர், தேவர்களோடு சண்டையிட்டு அவர்களை அழிக்கும் குணம் உடையவராய அசுரர்களின் முப்புரங்களை வில்லால் எரித்தழித்தவராகிய திருப்புன்கூர்த் தலைவர் ஆவார்.


    9. நாட வல்ல மலரான் மாலுமாய்த்
    தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்
    ஆட வல்ல வடிக ளவர்போலும்
    பாட லாடல் பயிலும் பரமரே.


    🏾பாடல் ஆடல் ஆகிய இரண்டிலும் வல்லவராய் அவற்றைப் பழகும் மேலான இறைவர், எதனையும் ஆராய்ந்தறிதலில் வல்ல நான்முகனும், திருமாலும் தேடி அறிய இயலாதவராய் ஓங்கி நின்றவர். அப்பெருமான் திருப்புன்கூரில் உறையும் ஆடல்வல்ல அடிகள் ஆவார்.


    10. குண்டு முற்றிக் கூறை யின்றியே
    பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
    வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
    கண்டு தொழுமின் கபாலி வேடமே.


    🏾கீழாந்தன்மை மிகுந்து ஆடையின்றி வீதிகளில் வந்து பிச்சை கேட்டுப் பெற்று, அவ்வுணவை விழுங்கி வாழும் மயக்க அறிவினராகிய சமணர்கள் கூறும் சொற்களைக் கேளாதீர். தேனுண்ண வந்த வண்டுகள் பாடுமாறு மலர்கள் நிறைந்து விளங்கும் திருப்புன்கூர் சென்று அங்கு விளங்கும் கபாலியாகிய சிவபிரானின் வடிவத்தைக் கண்டு தொழுவீர்களாக.


    11. மாட மல்கு மதில்சூழ் காழிமன்
    சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
    நாட வல்ல ஞான சம்பந்தன்
    பாடல் பத்தும் பரவி வாழ்மினே.


    🏾மாடவீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாய், எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன், பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவர்மீது பாடிய பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக.


    திருச்சிற்றம்பலம்.


    *திருவிழாக்கள்:*
    வைகாசி மாதத்தில் பிரமோற்சவம். மற்றும் பட்ச, மாதாந்திர நிகழ்வுகள்.


    *தொடர்புக்கு:*
    04364 -279784
Working...
X