Announcement

Collapse
No announcement yet.

Valivalam temple Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Valivalam temple Continues

    Valivalam temple
    Continues
    *முதல் திருமுறை தேவாரம்:*
    ஒல்லையாறி யுள்ளமொன்றிக்
    கள்ளமொழிந் துவெய்ய
    சொல்லையாறித் தூய்மைசெய்து
    காமவினை யகற்றி
    நல்லவாறே யுன்றனாமம்
    நாவில்நவின் றேத்த
    வல்லவாறே வந்துநல்காய்
    வலிவலமே யவனே.


    🏾திருவலிவலம் மேவிய இறைவனே! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, வஞ்சம் வெஞ்சொல் தவிர்ந்து தூய்மையோடு, காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உன் நாமமாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன், வந்து அருள்புரிவாயாக.


    இயங்குகின்ற விரவிதிங்கண்
    மற்றுநற் றேவரெல்லாம்
    பயங்களாலே பற்றிநின்பாற்
    சித்தந்தௌ கின்றிலர்
    தயங்குசோதீ சாமவேதா
    காமனைக்காய்ந் தவனே
    மயங்குகின்றேன் வந்துநல்காய்
    வலிவலமே யவனே.


    🏾வானவெளியில் இயங்குகின்ற ஞாயிறு, திங்கள் மற்றும் நல்ல தேவர்கள் எல்லோரும் அச்ச மேலீட்டினால் உன்னைப் பரம் பொருள் என்று தம் சித்தம் தௌயாதவராயுள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே, சாம வேதம் பாடி மகிழ்பவனே, காமனைக் காய்ந்தவனே, எவ்வாறு உன்னைத் தௌவது என்று யானும் மயங்குகின்றேன். வந்து அருள்புரிவாயாக.


    பெண்டிர்மக்கள் சுற்றமென்னும்
    பேதைப்பெருங் கடலை
    விண்டுபண்டே வாழமாட்டேன்
    வேதனைநோய் நலியக்
    கண்டுகண்டே யுன்றனாமங்
    காதலிக்கின்ற துள்ளம்
    வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை
    வலிவலமே யவனே.


    🏾வண்டுகள் தேனுண்ணற் பொருட்டு மலர்களைக் கிண்டி இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருவலிவலத்துள் மேவிய இறைவனே, மனைவி மக்கள் சுற்றம் முதலான பாசப் பெருங்கடலை இளைய காலத்திலேயே கடந்து வாழ்ந்தேன் அல்லேன். வேதனை. நோய் ஆகியன நலிய உலகியற் பாசங்கள் துன்பம் தருவன என்பதைக் கண்டு உன் திருநாமம் சொல்வதொன்றே இன்பமாவது என்பதைக் கண்டு அதனை ஓத உள்ளம் விரும்புகிறது. அருள் புரிவாயாக.


    மெய்யராகிப் பொய்யைநீக்கி
    வேதனையைத் துறந்து
    செய்யரானார் சிந்தையானே
    தேவர்குலக் கொழுந்தே
    நைவனாயே னுன்றனாமம்
    நாளும்நவிற் றுகின்றேன்
    வையமுன்னே வந்துநல்காய்
    வலிவலமே யவனே.


    🏾பொய்மையை விலக்கி, உண்மையை மேற்கொண்டு பந்த பாசங்களாகிய வேதனைகளைத் துறந்து செம்மையான மனமுடையோராய் வாழும் அன்பர்களின் சிந்தையுள் இருப்பவனே, தேவர்களின் குலக்கொழுந்தே! நான் வருந்தி நிற்கிறேன். உன்றன் திருநாமத்தை நாள்தோறும் ஓதி வருகிறேன். வலிவலம் மேவிய இறைவனே. வையகத்தே பலரும் காண வந்து அருள்புரிவாயாக.


    துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ்
    சொல்லுவனுன் றிறமே
    தஞ்சமில்லாத் தேவர்வந்துன்
    றாளிணைக்கரழ்ப் பணிய
    நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ
    நாளும்நினைந் தடியேன்
    வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன்
    வலிவலமே யவனே.


    🏾திருவலிவலம் மேவிய இறைவனே, உறங்கும்போதும் உண்ணும்போதும் உன்றன் புகழையே சொல்லுவேன். தேவர்கள் வேறு புகலிடம் இல்லாது உன்பால் வந்து உன் தாளிணைகளின் கீழ்ப் பணிய அவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சை உண்ட உன் கருணையை நாளும் நினைதலையன்றி வேறு என் செய வல்லேன்? உன் அருள் பெறுதற்குத் தடையாக என்பால் வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன். அதனைப் போக்கி எனக்கு அருள்.


    புரிசடையாய் புண்ணியனே
    நண்ணலார்மூ வெயிலும்
    எரியவெய்தா யெம்பெருமா
    னென்றிமையோர் பரவும்
    கரியுரியாய் காலகாலா
    நீலமணி மிடற்று
    வரியரவா வந்துநல்காய்
    வலிவலமே யவனே.


    🏾திருவலிவலம் மேவிய இறைவனே, முறுகிய சடையை உடையவனே, புண்ணிய வடிவினனே! பகைவர் தம் முப்புரங்களும் எரியுமாறு அம்பெய்தவனே என்று தேவர்கள்பரவும், யானையின் தோலை அணிந்தவனே, காலனுக்குக் காலனே! நீலமணி போலும் கண்டத்தையும் வரிந்து கட்டப் பெற்ற பாம்பினையும் உடையவனே! என்பால் வந்து அருள்புரிவாயாக.


    தாயும்நீயே தந்தைநரயே
    சங்கரனே யடியேன்
    ஆயும்நின்பா லன்புசெய்வா
    னாதரிக்கின் றதுள்ளம்
    ஆயமாய காயந்தன்னு
    ளைவர்நின்றொன் றலொட்டார்
    மாயமேயென் றஞ்சுகின்றேன்
    வலிவலமே யவனே.


    🏾திருவலிவலம் மேவிய இறைவனே! சங்கரனே எனக்குத் தாயும் தந்தையும் நீயேயாவாய். அடியேன் உள்ளம் சிவஞானிகளால் ஆய்ந்துணரப்படும் நின்பால் அன்பு செய்ய விரும்புகின்றது. எனக்குப் படைத்தளிக்கப்பட்ட இவ்வுடலிடைப் பொருந்திய ஐம்பொறிகள் உன்னைப் பொருந்தவொட்டாமல் தடுக்கின்றன. இம்மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன். அருள்புரிவாயாக.


    நீரொடுங்குஞ் செஞ்சடையாய்
    நின்னுடையபொன் மலையை
    வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற
    வேந்தனிரா வணனைத்
    தேரொடும்போய் வீழ்ந்தலறத்
    திருவிரலா லடர்த்த
    வாரொடுங்குங் கொங்கைபங்கா
    வலிவலமே யவனே.


    🏾திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத்தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன் கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்த தனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய்.


    ஆதியாய நான்முகனும்
    மாலுமறி வரிய
    சோதியானே நீதியில்லேன்
    சொல்லுவனின் றிறமே
    ஓதிநாளு முன்னையேத்து
    மென்னைவினை யவலம்
    வாதியாமே வந்துநல்காய்
    வலிவலமே யவனே.


    🏾திருவலிவலம் மேவிய இறைவனே! உலகங்களைப் படைத்துக் காத்தலில் ஆதியானவர்களாகிய நான்முகனும், திருமாலும் அறிதற்கரிய சோதிப் பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன் புகழையே சொல்லுகின்றேன். நாள்தோறும் உன்புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாய துன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக.


    பொதியிலானே பூவணத்தாய்
    பொன்றிகழுங் கயிலைப்
    பதியிலானே பத்தர்சித்தம்
    பற்றுவிடா தவனே
    விதியிலாதார் வெஞ்சமணர்
    சாக்கியரென் றிவர்கள்
    மதியிலாதா ரென்செய்வாரோ
    வலிவலமே யவனே.


    🏾திருவலிவலம் மேவிய இறைவனே, பொதிய மலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே, திருப்பூவணம் என்னும் தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ?.


    வன்னிகொன்றை மத்தஞ்சூடும்
    வலிவலமே யவனைப்
    பொன்னிநாடன் புகலிவேந்தன்
    ஞானசம்பந்தன் சொன்ன
    பன்னுபாடல் பத்தும்வல்லார்
    மெய்த்தவத்தோர் விரும்பும்
    மன்னுசோதி யீசனோடே
    மன்னியிருப் பாரே.


    🏾வன்னி கொன்றை மலர், ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடும் திருவலிவலம் மேவிய இறைவனைக் காவிரி நாட்டிலுள்ள புகலி என்னும் சரகாழிப் பதிக்கு வேந்தனாய ஞானசம்பந்தண் புகழ்ந்து ஓதியனவும் எக்காலத்தும் ஓதத்தக்கனவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர், உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலை பெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்.


    திருச்சிற்றம்பலம்.


    *ஏழாம் திருமுறை தேவாரம்:*
    ஊனங் கத்துயிர்ப் பாய்உல கெல்லாம்
    ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
    வானங் கைத்தவர்க் கும்அளப் பரிய
    வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத்
    தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந்
    தேச னைத்திளைத் தற்கினி யானை
    மானங் கைத்தலத் தேந்தவல் லானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.


    🏾புலால் வடிவாகிய உடம்பில் இருந்து உயிர்ப்பனவாகிய உயிர்களாய் நின்று அவைகட்கு உணர்வை உண்டாக்கி நிற்பவனும், விண்ணுலக இன்பத்தையும் வெறுத்துத் தவம் செய்வார்கட்கும் அளத்தற்கரிய வள்ளலாய் உள்ளவனும், தன் அடியவர்களது உள்ளத்தினுள்ளே, தேனும் கைப்ப, அமுதம் ஊற்றெழுவதுபோல எழுகின்ற ஒளிவடிவினனும், அழுந்துந்தோறும் இனிமை பயக்கின்றவனும், மானை அகங்கையிடத்து ஏந்த வல்லவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்தமையாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனம் காண்பேன்!


    பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
    பாடிஆ டும்பத்தர்க் கன்புடை யானைச்
    செல்லடி யேநெருங் கித்திறம் பாது
    சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை
    நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை
    நான்உறு குறைஅறிந் தருள்புரி வானை
    வல்லடி யார்மனத் திச்சையு ளானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.


    🏾பலதிறப்பட்ட அடியவரது தொண்டுகட்கும் இரங்குபவனும், இசையோடு பாடி, அதனோடு ஆடலையும் செய்கின்ற சீரடியார்களைத் தன் தமர்களாகக் கொண்டு தொடர்புடையவனாகின்றவனும், தன்னை நோக்கிச் செல்லுகின்ற வழியிலே மாறுபடாது சென்று அணுகித் தன்னைப் பெற்றவர்கட்கே சித்தியையும் முத்தியையும் தருபவனும், நல்ல அடியார்களது மனத்தில், எய்ப்பிற்கு என்று வைத்துள்ள நிதியின் நினைவு போல நின்று அமைதியைத் தருபவனும், நான் அடைந்தனவும் அடையற்பாலனவுமாகிய குறைகளைத் தானே அறிந்து, அவற்றைக் களைந்தும், வாராது தடுத்தும் அருள்புரிபவனும், கற்றுவல்ல அடியார்களது உள்ளத்தில் தங்குவதற்கு விருப்பம் உடையவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!


    ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை
    ஆதிஅந் தம்பணி வார்க்கணி யானைக்
    கூழைய ராகிப்பொய் யேகுடி யோம்பிக்
    குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்
    வாழியர்க் கேவழு வாநெறி காட்டி
    மறுபிறப் பென்னை மாசறுத் தானை
    மாழையொண் கண்உமை யைமகிழ்ந் தானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.


    🏾ஆழ்ந்தவனாகியும், அகன்றவனாகியும், உயர்ந்தவனாகியும் உள்ளவனும், பிறந்தது முதற் சாங்காறும் வழிபடுவார்க்கு அணியனாகின்றவனும், பணிவுடையவராய், குடியை, உள்ளத்தில் பற்றின்றிப் புரந்து, மனம் உருகிநின்று, தம்மை மெய்யடியார் கூட்டத்துள் வைத்தெண்ணும் வாழ்க்கையையுடையவர்க்கு அடிமை செய்தலில் தவறாத நெறியை உணர்த்து மாற்றால், என்னை மறுபிறப் பெடுத்தலாகிய குற்றத்தை அறுத்துத் தூயனாக்கியவனும், மாவடுப் போலும் கண்களையுடைய உமாதேவியை விரும்பி ஒருபாகத்தில் வைத்தவனும் ஆகிய பெருமானை, அடியேன், திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!


    நாத்தான் தன்திற மேதிறம் பாது
    நண்ணிஅண் ணித்தமு தம்பொதிந் தூறும்
    ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும்
    அளவிறந் தபஃறேவர்கள் போற்றும்
    சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்
    துருவி மால்பிர மன்னறி யாத
    மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.


    🏾அடியேற்கு, எனது நா, தனது புகழைச் சொல்லுதலில் என்றும் மாறுபடாதவாறு என்னிடத்துப் பொருந்தி, உள்ளே அமுதம் நிறைந்தாற்போல இனித்து ஊற்றெழுகின்ற துணைவனாய் உள்ளவனும், எண்ணில்லாத பல தேவர்களும் துதித்து வணங்குகின்ற வணக்கத்திற்கு உரியவனும். 'ஞாயிறு, திங்கள், தீ' என்னும் முச்சுடர்களிலும் வேறற நிற்பவனும், திருமாலும் பிரமனும் தேடி அறியப்படாத பெருமையை உடையவனும், எனக்குப் பெருமையை அளித்தவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!


    நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
    கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
    சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
    தொண்ட னேன்அறி யாமை யறிந்து
    கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
    கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
    வல்லியல் வானவர் வணங்கநின் றானைவலிவ
    லந்தனில் வந்துகண் டேனே


    🏾சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த, தமிழ்ச் சொல்லால் அமைந்த மெய்யுணர்வு மாலையாகிய, முன்பு அவர்களால் சொல்லப்பட்டனவற்றையே பின்னும் பிறர் சொல்லிப் போற்றுதலை விரும்புபவனும், அடியேனது அறியாமையை அறிந்து, கல்லின் இயல்பைக் கொண்ட எனது மனத்தை உருகப்பண்ணி, கழல்


    பாடுமா பாடிப்ப ணியுமா றறியேன்
    பனுவுமாப னுவிப்ப ரவுமா றறியேன்
    தேடுமா தேடித்தி ருத்துமா றறியேன்
    செல்லுமா செல்லச்செ லுத்துமா றறியேன்
    கூடுமோ றெங்ஙன மோஎன்று கூறக்
    குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
    வாடிநீ வாளா வருந்தல்என் பானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.


    🏾யான், முன் உள்ள பாடல்களை, அவைகளைப் பாடும் நெறியாற் பாடி இறைவனை வழிபடுமாற்றை அறிந்திலேன்; புதிய பாடல்களை யாக்கும் நெறியால் யாத்துத் துதிக்கு மாற்றினையும் அறிந்திலேன்; மனத்தில் உள்ள குற்றங்களை ஆராயும் நெறியால் ஆராய்ந்து கண்டு அதனைத் திருத்தும் வகையை அறிந்திலேன்; அதனால், அதனை நன்னெறியிற் செல்லுமாறு செலுத்தும் வழிய அறிந்திலேன்; இவற்றால் 'இவன் நன்னிலையைப் பெறுதல் எவ்வாறோ!' என்று நல்லோர்கள் இரங்கிக்கூற இருக்கின்ற காலத்து, என்னையே சிறப்பாக யாவர்க்கும் காட்டி, 'இவன் எனக்கு அடிமை' என்று சொல்லி வெளிக்கொணர்ந்து, தனக்கு ஆளாகக் கொண்டு, 'இனி, நீ, பயனின்றி வாடி வருந்தலை' என்று தேற்றிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!


    பந்தித்தவ் வல்வினைப் பற்றறப் பிறவிப்
    படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
    சந்தித் ததிற லாற்பணி பூட்டித்
    தவத்தை ஈட்டிய தன்னடி யார்க்குச்
    சிந்தித் தற்கௌ தாய்த்திருப் பாதஞ்
    சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
    வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.


    🏾பிணித்துள்ள வினைத் தொடர்பு அறுதலால் பிறவியாகிய கடலினது பரப்புச் சுருங்குமாறு செய்பவனும், தன்னை உணர்ந்த உணர்வின் வலிமையால், தம் செயல்களைத் தன்னிடத்தே சேர்த்து, அதனால், செய்யும் செயலெல்லாம் தவமேயாகக் குவித்த தன் அடியவர்கட்குத் தனது திருவடிகள், நினைத்தற்கு எளியவாய்க் கிடைத்தலானே, தனது சிவலோகத்தின் வாயிலைத் திறந்து, அதன்கண் அவர்களைப் புகச்செய்ய வல்லவனும், தன்னையே வணங்குகின்றவர்களது மனத்தில் விளங்குபவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!


    எவ்வெவர் தேவர்இ ருடிகள் மன்னர்
    எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
    அவ்வவர் வேண்டிய தேயருள் செய்து
    அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை
    இவ்விவ கருணைஎங் கற்பகக் கடலை
    எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
    வவ்விஎன் ஆவிம னங்கலந் தானை
    வவிவ லந்தனில் வந்துகண் டேனே.


    🏾தேவர்கள், இருடிகள், அரசர்கள் முதலாக எண்ணிறந்தவர்களாகிய எவரெவரும், எவ்விடத்திலும் இருந்து வழிபட, அவ்வெல்லா இடங்களிலும் நின்று அவர்களது வழி பாட்டினை ஏற்று, அவரவர் விரும்பியதை அவர்கட்கு அளித்து, இவ்வாற்றால், தன்னை அடைந்தவர்க்குப் புகலிடமாய் நிற்பவனும், இவ்வாறு உள்ள இவை இவையாகிய அருளைத் தருகின்ற எங்கள் கற்பகத் தருவும் கடலும் போல்பவனும், யான், 'எம் பெருமானே, எனக்கு அருள்செய்' என்று வேண்டிக்கொண்ட பின்பு, என் உயிரைத் தன்னுடையதாகக் கொண்டு, என் உள்ளத்திலே எஞ்ஞான்றும் நீங்காது இருப்பவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!


    திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத்
    திறல்அ ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்
    பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும்
    பின்னையாய் முன்ன மேமுளைத் தானை
    அரிய நான்மறை அந்தணர் ஓவா
    தடிப ணிந்தறி தற்கரி யானை
    வரையின் பாவைம ணாளன்எம் மானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.


    🏾வானத்தில் திரிகின்ற முப்புரங்களை அழித்ததும், குற்றம் செய்த, வலிமையுடைய அரக்கனாகிய இராவணனை ஒறுத்ததும், ஏனை, பெரிய ஆலகால விடத்தை அமுதமாக உண்டதும் முடிதற்குக் காரணனான பின்னோனாய், எப்பொருட்கும் முன்னே தோன்றினவனும், அரிய நான்கு வேதங்களை ஓதுகின்ற அந்தணர்கள், மனம் மாறுபடாது நின்று அடிபணிந்தும், அவர்களால் அறிதற்கு அரியவனும், மலைமகட்குக் கணவனும் ஆகிய எம் பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்!


    ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
    நிறைக்க மால்உதி ரத்தினை ஏற்றுத்
    தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச்
    சுமந்த மாவிர தத்தகங் காளன்
    சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
    றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
    மான்று சென்றணை யாதவன் றன்னை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.


    🏾தன்னொடு மாறுபடுதலை ஏற்ற பிரமனது தலைகளில் ஒன்றை அறுத்து, அதனை நிரப்ப, மாயோனது உதிரத்தை ஏற்றவனும், யாவருக்கும் காணப்படுகின்ற தோளின் மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தையுடையவனும், தன்னைக் காண்பதற்குரிய வழியைக் காட்டுதற்கு அரியவனும், தன்னிடத்திற் பொருந்திய மனத்தையுடையவர்கட்கு எளியவனும், அறியாமை வழிச் சென்று அணுக இயலாதவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!


    கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்
    கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
    வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்
    மன்னு நாவல்ஆ ரூரன்வன் றொண்டன்
    ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
    உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்போய்
    மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
    விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே.


    🏾வறுமையின் வலிமை கெடும்படி அரிய வேள்வித் தீயை வளர்த்தற்கு ஏதுவான, பெரியோர் பலரும் போற்றிக் கற்ற நான்கு வேதங்களின் முடிந்த பொருளாகிய தீப்போலும் உருவினனாகிய சிவபெருமானை, அவனை எஞ்ஞான்றும் தன்னிடத்து நீங்காது கொண்டு நிற்கும், 'திருவலிவலம்' என்னும் தலத்தில் வந்து கண்டு, அவன் அடியவனும், நிலை பெற்ற திருநாவலூரில் தோன்றியவனும், 'வன்றொண்டன்' எனப் பெயர்பெற்றவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய, இனிய இசையையுடைய, செவ்விய தமிழால் ஆகிய பத்துப் பாடல்களையும், மனத்தால் விரும்பிப் பாடவல்லவர்கள், தேவர்கள் விரும்பிப் போற்ற, துன்பம் இல்லாத வானுலகத்தைப் போய் அடைவர்; இது திண்ணம்.


    திருச்சிற்றம்பலம.


    *கல்வெட்டு:*
    இத்தலத்திற்கான கல்வெட்டுக்கள் ஒன்பது படியெடுக்கப்பட்டுள்ளன.


    இராஜேந்திரன் காலத்தியவை மூன்று.


    குலோத்துங்கன் காலத்தியவை இரண்டு.


    இராஜராஜன் காலத்தியவை இரண்டு.


    சுந்தரபாண்டியன் காலத்தியவை இரண்டு.


    இத்தலம் அருமொழித் தேவ வளநாட்டு வலிவலக் கூற்றத்து உபயகுல சுத்த சதுர்வேதி மங்கலமான வலிவலம் என்று வழங்கப்பட்டது.


    இறைவன் மனத்துள் தேவர் என்றே கல்வெட்டுகளில் கூறப்பப்பட்டிருக்கிறது.


    உடையார் மனத்துள் நாயனாரது கோயில் காரியம் பார்ப்பார் சிலரால் தேவப்பெருமான் திருமடத்து எதிர் ஒப்பிலாதார் சோமநாத தேவ முதலியாருக்கு நிலம் மாற்றிக் கொடுக்கப்பட்டது.


    இந்தத் திருமடம் மனத்துள் நாயனார் கோயிலுக்குத் தெற்குப் பக்கத்தில் இருக்கிறது.


    தென் விடங்கலூர், குலோத்துங்க சோழ நல்லூர் திரிசூலம், பொன் வேய்ந்த பெருமாள் நல்லூர் முதலிய கிராமங்கள் பல வேறு காரியங் களுக்குத் தானமாக அளிக்கப்பெற்றமை அறியப் பெறுகின்றன.


    திருமூல தேவர் திருமடத்தில் இருந்த கோயில் அர்ச்சகர் ஒருவருக்கு நிலம் விற்கப்பெற்றது என்பதால் திருமூலதேவர் மடம் என்பது ஒன்று இருந்தமை புலனாகிறது.


    திருச்சிற்றம்பலம்.


    *திருவிழாக்கள்:*
    சித்திரையில் பிரமோற்சவம்.
    தைப்பூசம்.
    மகாசிவராத்திரி.
    பங்குனி உத்திரம்.
    வைகாசி விசாகம்.
    ஆவணி ஞாயிறு.
    புரட்டாசி நவராத்திரி.
    ஐப்பசி அன்னாபிஷேகம்.
    திருக்கார்த்திகை.
    மார்கழி திருவாதிரை.


    *தொடர்புக்கு:*
    91 4366 205636.
Working...
X