Announcement

Collapse
No announcement yet.

Paarijatavaneswarar temple, Thirukalar, thiruvaroor dt

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Paarijatavaneswarar temple, Thirukalar, thiruvaroor dt

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு. கருப்பசாமி.*
    *பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*


    *திருக்களர், பாரிஜாதவனேசுவரர்.*
    *இறைவன்:* பாரிஜாதவனேஸ்வரர், களர்முளைநாதர்.


    *இறைவி:* அமுதவல்லி, இளங்கொம்பன்னாள், அழகேஸ்வரி.


    *திருமேனி:* சுயம்புவானவர்.


    *ஆலயப் பழமை:* ஆயிரத்திவிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *தலமரம்:*பாரிஜாதம்


    *தீர்த்தம்:* துர்வாச தீர்த்தம்.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    சம்பந்தர்.


    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்றி ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    இத்திருக்கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலுக்குள் மூன்று பிராகாரங்கள் உள்ளன.


    கோவிலின் முன்னே இருப்பது துர்வாச தீர்த்தம்.


    கல்வெட்டில் சுவாமியின் பெயரை *களர் முளைத்த நாயனார்*, *அடைந்தார்க்கு அருள் செய்த நாயனார்* என்று குறிக்கப்பட்டிருகின்றது.


    ஞான சம்பந்தர் தம் பதிகத்தில் *'அடைந்தார்க்கு அருளாயே'* என்று பாடுவது இங்கு நினைவுறத்தக்கது.


    வலம்புரி விநாயகர் சந்நிதியில் கோபுரத்திற்கு உள்புறத்தில் இருக்கிறார்.


    அகோரவீரபத்ரர் மேற்கு நோக்கி வீரமுடன் காட்சி தருகின்றார்.


    *'விடங்கர் லிங்கம்'* நடராஜருக்குப் பக்கத்தில் பேழையில் இருக்கிறார்.


    நடராஜர் (பிரபையுடன்) அழகாகத் தரிசனம் தருகின்றார் இது அற்புதத் தரிசனம்.


    ஆண்டுக்கொருமுறை ஆதிரையில் மட்டும் புறப்பாடு நடைபெறுகிறது.


    இங்குள்ள தீர்த்தங்களுள் துர்வாச தீர்த்தமே சிறப்புடையதன. மற்றையவை
    1) பிரமதீர்த்தம் (சிந்தாமணிதீர்த்தம்) (தெற்கு வீதியில் உள்ளது)


    2) ருத்ரதீர்த்தம் (மேல வீதியில் உள்ளது)


    3) ஞானதீர்த்தம் (வடக்கு வீதியில் உள்ளது)


    சுவாமிக்குச் செய்துள்ள திருப்பணிகளுள், திருக்களர் ஆண்டவர் செய்துள்ள திருப்பணிகளே சிறப்பானவை.


    மாசி மகத்தில் சிந்தாமணி தீர்த்தத்திலும் பங்குனி உத்திரத்தில் ருத்ர தீர்த்தத்திலும் நடைபெறும் தீர்த்தவாரி சிறப்பு.


    அம்பாளுக்கு முழு உருவத்திற்குமாக ஓர் அன்பரின் உபயமாகத் தங்கக்கவசங்கள் செய்யப்பட்டு, விசேஷ காலங்களில் மட்டும் சார்த்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


    தங்கக்கவசக் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். அதிஅற்புதமான ஆனந்தக் காடசி அது. மேலும் மனதிற்குப் பெரும் நிறைவைத் தரும்.


    மன்னார்குடி திருத்துறைப்பூண்டி
    சாலையில், மன்னார்குடியில் இருந்து தெற்கே இருபத்தொன்று கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே பத்து கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,
    திருக்களர்,
    திருக்களர் அஞ்சல்,
    திருவாரூர் மாவட்டம்.
    PIN - 614 720


    *ஆலயத் திறப்பு காலம்:*
    இவ்வாலயம் தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *கோவில் அமைப்பு:*
    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் நூற்றி ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


    ஆலயத்தின் எதிரே நான்கு பக்கங்களிலும் நான்கு படித்துறைகளுடன் அமையப்பெற்ற பெரிய திருக்குளம் உள்ளது.


    இக்குளத்தின் தீர்த்த்தை வாரி சிரசிலிட்டு வணங்கிக் கொண்டோம்.


    என்புது அடி உயரத்துடடான இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியாக நம் கண்கள் காணவும் *சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை தரிசனம் செய்து கொண்டோம்.


    கோபுரத்தில் அழகு அழகான சுதைச் சிற்பங்கள் நம் மனதைக் கவர்ந்தன.


    இவ்வாலத்துக்கு மூன்று பிரகாரங்கள் இருக்கின்றன. முதல் பிரகாரத்தில் இருந்து உள்ளே செல்ல சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு தனித்தனியே கோபுர வாயில்கள் அமைந்திருந்தன.


    சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கியே தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.


    சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு நடுவில் பாரிஜாத விருட்சம் (பவள மல்லிகை) தலவிருட்சமாக உள்ளது.


    அம்மன் சந்நிதி கருவறைச் சுற்றில் சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ள அஷ்டபுஜ துர்க்கை சந்நிதி உள்ளது.


    வலம்புரி விநாயகர் சந்நிதியும், துர்வாசர் சந்நிதியும், விஸ்வநாதர், கஜலட்சுமி, அறுபத்து மூவர் நாயன்மார்கள் சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன.


    துர்வாச தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ருத்ர தீர்த்தம் ஆகியவை இவ்வாலயத்திலுள்ள தீர்த்தங்கள் ஆகும்.


    இத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் மிக்க அழகுடன் காட்சி தருகிறார்.


    ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானை உடன் இல்லாமல் தனியே குரு மூர்த்தமாக அருள் புரிகிறார்.


    முருகப் பெருமான் அறுபதாயிரம் முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான் என்பது ஐதீகம்.


    கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பாம்.


    இத்தலம் முருகப் பெருமானின் திருப்புகழ் வைப்புத் தலமாக உள்ளது.


    *தல அருமை:*
    பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தானும் அந்த பாக்கியத்தைப் பெற ஆசை கொண்டார்.


    துர்வாச முனிவர் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை இங்கு கொண்டு வந்து வைத்து வளர்த்து வரலானார்.


    அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக இக்கோவிலை எடுப்பித்தார் என்று தல அருமை கூறுகிறது.


    இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரமதாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரமதாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.


    இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது.


    நடராஜ பெருமானின் எட்டு தாண்டவ தலங்களுள் இரண்டாவது தாண்டவத் தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது.


    இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும்.


    கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.


    *சிறப்பு:*
    பொன்னியாறு வளம் பொழியும் புண்ணியத்தைப் பெற்றவர்கள் சோழ நாட்டைச் சார்ந்தவர்கள்.


    துர்வாச முனிவருக்கு நடராஜ பிரான் தன் பிரம்ம தாண்டவ தரிசனத்தைக் காட்டியருளிய பெருமையால் *திருக்களர்* என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.


    திருக்களர் கோயிலின் ராஜகோபுரம் சுமார் என்பது அடி உயரத்துடன் ஐந்து தளங்கள் கொண்டு மூன்று பிரகாரங்களுடன், நகருக்கு நடுவில் கிழக்கு நோக்கிய வாயிலுடன் அமைந்துள்ளது.


    கோயிலுக்கு எதிரே நான்கு படித்துறைகள் கொண்ட அழகிய பெரிய திருக்குளம் இவ்வூருக்கு அணிகலனாக விளங்குவதைக் காணலாம்.


    துர்வாச முனிவரே இந்த ஸ்தலத்தை உருவாக்கி பாரிஜாத வனம் மத்தியில், ஒரு பாரிஜாத விருட்சத்தின் அடியில் லிங்கமூர்த்தம் ஒன்றை அவ்வனமண்ணாலேயே செய்து அதை அங்கு பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.


    முருகப்பெருமான் அறுபதினாயிரம் முனிவர்களுக்கு பஞ்சாட்சர உபதேசம் இந்த ஸ்தலத்தில் செய்தருளியதால் இக்கோயிலில் காணப்படும் முருகப்பிரானின் திரு உருவம் மிக வசீகரமாக அமைந்துள்ளதென பக்தர்கள் கூறுவது வழக்கம்.


    இவ்வாலயத்தில் பஞ்சமூர்த்திகளுக்கென சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஐந்து தேர்கள் உண்டு.


    இதுபோலவே கும்பகோணத்தில் ஸ்ரீகும்பேசுவரர் ஆலயத்திலும் பஞ்சமூர்த்திக்கு ஐந்து தேர்கள் இன்றும் உள்ளதை காணலாம்.


    துர்வாச முனிவர் பூஜித்து வந்த இத்திவ்ய ஸ்தலத்தை அடைந்து, இங்கு சிலகாலம் தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால், நம்மிடம் உள்ள முன்கோபம், குரோதம் முதலியன நீங்கும் என பக்தர்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.


    *கல்வெட்டு:*
    இவ்வூர்க் கல்வெட்டில், *"நம் தேவாரத்துக்குத் திருப்பதியம் பாடும் பெரியான்"*என வந்துள்ள தொடரில், தேவாரத்துக்கு என்ற பொருளை நுணுகி ஆய்வது கற்றறிந்தார் கடமையாகும்.


    இக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டிருக்கின்றன.


    மேலும் ஐந்து செப்பேடுகள் கிடைத்திருக்கின்றன.


    அவைகளுள் சோழர்களது எட்டும், பாண்டியர்களது இரண்டும், விஜயநகரத்தாரது மூன்றுமாக உள்ளன.


    விளக்கு எரிப்பதற்கு பொன் தானம், வரிதானம், நிலதானம் ஆகியவைபற்றி அக்கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.


    இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் முளைத்த நாயனார், திருக்களர் உடையார், அடைந்தார்க்கு அருள்செய்த நாயனார் என்னும் திருப்பெயர்களால் கல்வெட்டுக்களில் கூறப்படுகின்றனர்.


    இத்திருக்கோயில் திருமடைவிளாகத்துத் தெற்குத் திருவீதியில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் இடங்கைவிநாயகர் என்னும் பெயர் பெற்றிருந்தனர்.


    இக்கோயில் கருப்பகிரகத்துக்கு முன்புறத்துள்ள மண்டபத்தைச் செய்வித்தவர் சீறூருடையான் மறைதேடும் பொருள் பெரிய அம்பலக்கூத்தர்.


    இச்செய்தி மாறவர்மன் குலசேகரதேவன் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது.


    இக்கோயிலில் திருவாலவாயுடையாரை எழுந்தருளுவித்துப் பூசைக்கும் திருவமுது படிக்கும் உடலாகத் திருபுவனச் சக்கரவர்த்தியின் ஏழாம் ஆண்டில் நிவந்தம் அளித்தவர் நாகங்குடையார் மண்டை ஆழ்வார் ஆவர்.


    இக்கோயிலில் கருணாகரன் திருமண்டபம் என்னும் பெயருடைய ஒரு மண்டபம் கூறப்பெற்றுள்ளது.


    ஊர்ச்சபையார் அதில் கூட்டம் கூடும் வழக்கம் குறிக்கப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் கீழைத்திருவாசல் தென்பக்கம் எழுந்தருளியிருக்கும் விநாயகர் மூவாயிர விநாயகப் பிள்ளையார் என்னும் பெயரால் அழைக்கப்பெற்றுள்ளனர்.


    சுந்தரத்தோளுடையான் திருமண்டபம் என்னும் ஒரு மண்டபம் இருந்தது.


    அதிலும் ஊர்ச்சபையார் கூட்டம் கூடி நிர்வாகத்தை நடத்தியதாக ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது.


    வீரபூபதி உடையார் கல்வெட்டில் வைகாசித் திருவிழாவைப் பற்றிக் கூறப் பெற்றுள்ளது.


    அக்காலத்தில் இக்கோயில் மாகேஸ்வரக் கண்காணியும் திருப்பதியக்காணியும் உடையவனாய் இருந்தவன் மறைதேடும் பொருளான் அகளப்பிரியன் ஆவான். இக்கல்வெட்டுக்களில் இவ்வூர் இராசேந்திரசோழவளநாட்டுப் புறங்கரம்பை நாட்டைச்சேர்ந்ததென்று குறிக்கப்பெற்றுள்ளது.


    களரி என்பதற்குக் கூட்டம், சபை, அரங்கம் எனப் பல பொருள்கள் உண்டு.


    துர்வாசருக்குச் சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனம் தந்தருளியமையால் *'களரி'* என்னும் இத்தலப்பெயர். பின்பு, *'களர்'* என்றாயிற்று.


    *பாரிஜாதம்:*
    சுவாமி, அம்பாள் இரு சன்னிதிகளுக்கும் இடையில், தலவிருட்சமாக பாரிஜாதம் என்னும் பவளமல்லி மரம் இருக்கிறது. மணம் வீசும் மலர்களுடன் பூத்துக் குலுங்கி பெரும் விருட்சமாகத் தழைத்து நிற்கிறது.


    இலக்கியத்தில் பவளமல்லிக்கு, *'சேடல்'* என்றொரு பெயரும் உள்ளது.


    பாரிஜாத மலரை தல விருட்சமாக கொண்டதால்தான், இத்தல இறைவனும் *'பாரிஜாத வனேசுவரர்'* என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.


    *நடனக்காட்சி:*
    முனிவர்களில் கோபக்காரர் என்று பெயரெடுத்தவர் துர்வாசர் என்பது நமக்குத் தெரியும்.


    அவர் தேவ தருவான பாரிஜாதத்தை இத்தலம் இருக்கும் பகுதிக்கு கொண்டு வந்து வைத்து, நறுமணம் மிக்க வனமாக மாற்றினார்.


    மேலும் அவ்விடத்தில் ஒரு தீர்த்தக்குளத்தையும் உருவாக்கினார். பிறகு பாரிஜாத மரத்தின் அடியில் மண்ணால் லிங்கம் பிடித்து வைத்து வழிபாடு நடத்தி வந்தார்.


    பதஞ்சலி, வியாக்கிர பாதர் என்னும் முனிவர்களுக்கு, தில்லை அம்பலத்தில் ஆனந்த தாண்டவக்காட்சி அருளியதைப் போல, தனக்கும் இத்தலத்தில் இறைவன் தாண்டவக்காட்சி அருள வேண்டும் எனத் தவம் இருந்தார் துர்வாச முனிவர்.


    முனிவரின் தவத்தால் மகிழ்ந்த இறைவன், இங்கே பிரம்ம தாண்டவ தரிசனம் தந்து முனிவரை மகிழ்வித்தார்.


    அந்த நாள் மாசி மாத பவுர்ணமி தினமாகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் இங்கே விழா நடத்தப்படுகிறது.


    இந்த தலத்தில் நடராச சபைக்கு எதிரே, கூப்பிய கரங்களுடன் துர்வாசர் அத்திருக்காட்சியை தினமும் தரிசித்துக் கொண்டிருப்பதை நாம் இன்றும் காணமுடிகிறது.


    துர்வாச முனிவர் உருவாக்கிய தீர்த்தக்குளம், அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.


    இத்திருக்கோவிலின் திருச்சுற்றில் விஸ்வகர்மா, பிரம்மன், பராசர முனிவர், காலவ முனிவர் முதலியோர் பூஜித்தலிங்கங்கள், விசுவநாதர், கஜலெட்சமி, அகத்தியர், நாயன்மார்கள், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், துர்க்கை, சண்டிகேஸ்சுவர் திரு உருவங்கள் உள்ளன.


    *அஷ்டபுஜ துர்க்கை:*
    அம்பாள் சன்னிதிக்கு எதிரே வடக்கு நோக்கி நின்ற நிலையில் உள்ள அஷ்டபுஜ துர்க்கை அம்மன் சிம்ம வாகினியாக இருக்கிறார். மகிடன் என்னும் எருமைத் தலை கிடையாது.


    இவரை ராகுகாலத்தில் வழிபடுவது திருமணத்தடைகளை நீக்கி நற்பலன்களைத் தருவதாகச் சொல்கிறார்கள்.


    அதே போல கோபுரத்தில் உட்புறமாக மேற்கு நோக்கி தனிச் சன்னிதியில் நின்றருளும் அகோர வீரபத்திரரும் வழிபாட்டுக்குரியவர்.


    திருக்களர் சென்று வந்தாலே மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.


    இத்திருக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்து, ஜீவ சமாதியான கோவிலூர் மடாதிபதியின் சமாதிக் கோவிலும் அருகில் உள்ளது. இவரை 'திருக்களர் ஆண்டவன்' என்று மக்கள் அழைக்கின்றனர்.


    *குருவடிவான குமரன்:*
    சுவாமியின் சன்னிதியின் உள் சுற்றில் உள்ள விநாயகர் வலம்புரி விநாயகராக விளங்குகிறார்.


    அவரை அடுத்து இருக்கும் சன்னிதியில் முருகப்பெருமான் இருந்து அருள்பாலிக்கிறார்.


    இங்கு வேறு எங்கும் இல்லாத திருக்கோலத்தில் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.


    அதாவது வள்ளி தெய்வானை இல்லாமல், பன்னிரு கரங்களுடனும், ஆறு திருமுகங்களுடனும் மயில் வாகனம் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார் கந்தன். மேலும் அவரைச் சுற்றியுள்ள அறுபதினாயிரம் முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் 'நமசிவய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும், குரு வடிவமாக முருகப்பெருமான் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணக் கிடைக்காத அற்புத காட்சியாகும்.


    *பந்தாடும் நாயகி:*
    கும்பகோணம் அருகே உள்ள கொடம்பையூரில் அமைந்திருக்கும் கோவிலில், அம்பாள் வித்தியாசமான கோலத்தில் காட்சியளிக்கிறாள். இந்த அம்மன் பந்து விளையாடுவது போல், ஒரு காலை முன்னேயும், மற்றொரு காலை பின் நோக்கியும் அமைந்தபடி அருள்பாலிக்கிறாள்.


    இந்த அம்மனை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும் *'பந்தாடும் நாயகி'* என்று அழைக்கிறார்கள்.


    *தேவாரம்:*
    நீரு ளார்கயல் வாவி சூழ்பொழில்
    நீண்ட மாவய லீண்டு மாமதில்
    தேரினார் மறுகில்
    விழாமல்கு திருக்களருள்
    ஊரு ளாரிடு பிச்சை பேணும்
    ஒருவ னேயொளிர் செஞ்ச டைம்மதி
    ஆரநின் றவனே
    அடைந்தார்க் கருளாயே.


    நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களரில் ஊரவர் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவனாய் விளங்கும் இறைவனே! ஒளிபொருந்திய பிறைமதியைச் செஞ்சடை மீது பொருந்த அணிந்து நிற்பானே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.


    தோளின் மேலொளி நீறு தாங்கிய
    தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
    தாளினார் வளருந்
    தவமல்கு திருக்களருள்
    வேளி னேர்விச யற்க ருள்புரி
    வித்த காவிரும் பும்ம டியாரை
    ஆளுகந் தவனே
    அடைந்தார்க் கருளாயே.


    தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள் அடிபோற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த் திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக் கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.


    பாட வல்லநன் மைந்த ரோடு
    பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
    சேடர்வாழ் பொழில்சூழ்
    செழுமாடத் திருக்களருள்
    நீட வல்ல நிமல னேயடி
    நிரைக ழல்சிலம் பார்க்க மாநடம்
    ஆடவல் லவனே
    அடைந்தார்க் கருளாயே.


    பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும் உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாட வீடுகளைக்கொண்டுள்ள திருக்களருள் பலகாலமாக எழுந்தருளியுள்ள நிமலனே! கழலும் சிலம்பும் ஆரவாரிக்க நடம் புரியவல்ல பெருமானே! உன்னைச் சரணாக அடைந்தவர்க்கு அருள்புரிவாயாக.


    அம்பி னேர்தடங் கண்ணி னாருடன்
    ஆட வர்பயில் மாட மாளிகை
    செம்பொ னார் பொழில்
    சூழ்ந்தழகாய திருக்களருள்
    என்பு பூண்டதோர் மேனி யெம்மிறைவா
    விணையடி போற்றி நின்றவர்க்
    கன்பு செய்தவனே
    அடைந்தார்க் கருளாயே.


    வாள் போன்று கூரிய விசாலமான கண்களை உடைய மகளிரோடு ஆடவர் மகிழும் செம்பொன் நிறைந்த மாட மாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களருள் என்புமாலை பூண்ட மேனியை உடைய எம் இறைவனே! உன் திருவடிகளைப் போற்றி நிற்பாரிடம் அன்பு செய்பவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.


    கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங்
    கெண்டி மாமது வுண்டி சைசெயத்
    தெங்கு பைங்கமுகம்
    புடைசூழ்ந்த திருக்களருள்
    மங்கை தன்னொடுங் கூடிய மண
    வாள னேபிணை கொண்டொர் கைத்தலத்
    தங்கை யிற்படையாய்
    அடைந்தார்க் கருளாயே.


    தேன்நிறைந்த மலர்ச்சோலைகளில் வண்டினங்கள் மகரந்தங்களைக் கெண்டி மது உண்டு இசை பாட, தென்னை பசிய கமுகுகள் புடைசூழ்ந்து விளங்கும் திருக்களருள் எழுந்தருளிய மங்கையொடும் கூடிய மணவாளனே! மானையும் மழுவையும் அழகிய கைகளில் கொண்டுள்ளவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.
    கோல மாமயில் ஆலக் கொண்டல்கள்
    சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
    சேலிளங் கயலார்
    புனல்சூழ்ந்த திருக்களருள்
    நீலம் மேவிய கண்ட னேநிமிர்
    புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
    ஆல நீழலுளார்
    அடைந்தார்க் கருளாயே.


    அழகிய மயில்கள் ஆட மேகங்கள் தங்கிய பொழில் சூழ்ந்து விளங்குவதும் வயல்களில் சேலும் கயலும் சேர்ந்த நீர் சூழ்ந்ததும் ஆன திருக்களருள் எழுந்தருளிய நீலகண்டனே! நிமிர்ந்த சடையை உடைய பெருமானே! என்று அடியவர் போற்ற ஆல நீழலில் எழுந்தருளியவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.


    தம்ப லம்மறி யாத வர்மதில்
    தாங்கு மால்வரை யாலழ லெழத்
    திண்பலங் கெடுத்தாய்
    திகழ்கின்ற திருக்களருள்
    வம்ப லர்மலர் தூவி நின்னடி
    வானவர் தொழக் கூத்து கந்துபேர்
    அம்பலத் துறைவாய்
    அடைந்தார்க் கருளாயே.


    தங்கள் பலத்தை அறியாத அசுரர்களின் முப்புரங்களை, உலகைத் தாங்கும் மேருமலையாகிய வில்லால் அழல் எழுமாறு செய்து அப்புரங்களின் திண்ணிய பலத்தைக் கெடுத்தவனே! திகழ்கின்ற திருக்களருள் புதிய மலர்களைத் தூவி வானவர் நின் திருவடிகளைப் போற்றப்பேரம்பலத்தில் உறையும் பெருமானாய் விளங்குபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.


    குன்ற டுத்தநன் மாளி கைக்கொடி
    மாட நீடுயர் கோபு ரங்கண் மேல்
    சென்ற டுத்துயர்வான்
    மதிதோயுந் திருக்களருள்
    நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள்
    தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
    அன்றடர்த் துகந்தாய்
    அடைந்தார்க் கருளாயே.


    மலைபோன்றுயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டுயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேற்சென்றுயர்ந்து வானிலுள்ள மதியைப் பொருந்தும் திருக்களருள்,நிலையாக நின்று பொருந்தி உயர்ந்த பெரிய கயிலை மலையைத் திரண்ட தோள் வலியால் எடுத்த இராவணனின் நீண்ட முடிகளை அன்று அடர்த்துப் பின் அவனை உகந்து விளங்கும் பெருமானே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.


    பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்
    பாட லாடலொ டார வாழ்பதி
    தெண்ணி லாமதியம்
    பொழில்சேருந் திருக்களருள்
    உண்ணி லாவிய வொருவ னேயிரு
    வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
    அண்ண லாயவெம்மான்
    அடைந்தார்க் கருளாயே.


    யாழில் இசைகூட்டிப் பயில்கின்ற மங்கையர் பாடியும் ஆடியும் மகிழ்கின்ற பதியாய்த், தௌந்த நிலவைத் தரும் மதியைத் தோயுமாறு உயர்ந்த பொழில் சூழ்ந்த திருக்களருள் விளங்கும் ஆலயத்துள் எழுந்தருளிய ஒப்பற்றவனே! திருமால், பிரமர் நீண்ட திருவடி,திருமுடி தேடுமாறு அரிய அழலாய் நின்ற எம்மானே! அடைந்தவர்க்கு நின் திருவடித் தொண்டினை அருள் புரிவாயாக.


    பாக்கி யம்பல செய்த பத்தர்கள்
    பாட்டொ டும்பல பணிகள் பேணிய
    தீக்கியல் குணத்தார்
    சிறந்தாருந் திருக்களருள்
    வாக்கின் நான்மறை யோதி னாயமண்
    தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
    ஆக்கி நின்றவனே
    யடைந்தார்க் கருளாயே.


    நல்வினைகள் பல செய்த பத்தர்கள் பாடல்கள் பலபாடுவதோடு பணிகள் பலவற்றை விரும்பிச் செய்யவும், எரியோம்பும் இயல்பினரான அந்தணருட் சிறந்தார் வாழவும் விளங்கும் திருக்களருள் வாக்கினால் வேதங்களை அருளியவனே! சமணர் புத்தர் சொல்லும் உரைகளைப் பொய்யாக்கி எழுந்தருளி விளங்கு பவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.


    இந்து வந்தெழு மாட வீதியெ
    ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
    செந்து நேர்மொழியார்
    அவர்சேருந் திருக்களருள்
    அந்தி யன்னதொர் மேனி யானை
    அமரர் தம்பெரு மானை ஞானசம்
    பந்தன் சொல்லிவை
    பத்தும்பாடத் தவமாமே.


    திங்களைத் தோய்ந்தெழும் மாடங்களைக் கொண்ட வீதியினை உடைய அழகிய காழி நகரில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன், செந்து என்ற பண்ணை ஒத்த மொழி பேசும் மகளிர் பலர் வாழும் திருக்களருள் அந்தி வானம் போன்ற செம்மேனியனை, அமரர் தலைவனைப்பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடத் தவம் சித்திக்கும்.


    திருச்சிற்றம்பலம்

  • #2
    Re: Paarijatavaneswarar temple, Thirukalar, thiruvaroor dt

    An exhaustive writeup on the Parijathavaneswarar Temple. Makes one wish to see it. Thanks.
    Here are some photos of the Lord Parijathavaneswarar ,Ambal, Murugan and Durvaasar

    Click image for larger version

Name:	G_T1_341.jpeg
Views:	1
Size:	6.1 KB
ID:	34045

    Click image for larger version

Name:	G_T8_341.jpeg
Views:	1
Size:	5.0 KB
ID:	34046Click image for larger version

Name:	G_T4_341.jpeg
Views:	1
Size:	3.4 KB
ID:	34047

    Have darshan of the deities and the Durvasa Muni.
    Varadarajan
    Last edited by R.Varadarajan; 20-11-17, 10:02.

    Comment

    Working...
    X