Announcement

Collapse
No announcement yet.

Karpaganathar temple, Thirukadikulam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Karpaganathar temple, Thirukadikulam

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை. கு.கருப்பசாமி.*
    ________________________________________
    *127*
    *பாடல் பெற்ற சிவ தல தொடர்.*


    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
    ________________________________________
    *கற்பகநாதர் கோவில், திருக்கடிக்குளம்.*


    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நூற்றி ஒன்பதாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    (தற்போது கற்பகநாதர் குளம் என்றும் கற்பகனார் கோவில் என்றும் வழங்கப்படுகிறது)


    *இறைவன்:* கற்பகநாதர்.


    *இறைவி:* மங்களநாயகி, சௌந்தரநாயகி.


    *தல விருட்சம்:* பலா.


    *விநாயகத் தீர்த்தம்.தல தீர்த்தம்:*


    *ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *பதிகம்:*
    திருஞானசம்பந்தர்.


    *இருப்பிடம்:*
    திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் சுமார் பதினைந்து கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.


    திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி இத்தலத்திற்கு உள்ளது.


    திருஇடும்பாவனம்இத்தலத்திலிருந்து மேற்காக ஒருகி.மி. தொலைவில் உள்ளது.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில்,
    கற்பகநாதர்குளம்,
    கற்பகநாதர்குளம் அஞ்சல்,
    குன்னலூர். S.O.
    திருத்துறைப்பூண்டி வட்டம்,
    திருவாரூர் மாவட்டம்.
    PIN - 614 70


    *ஆலயத் திறப்பு காலம்:*
    தினந்தோறும் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *தொடர்புக்கு:* சண்முகசுந்தரம்,
    ஆலய அர்ச்சகர்,
    கைபேசி: 99438 52180


    *கோவில் அமைப்பு:*
    கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காட்சி தர, *சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை தரிசித்து வணங்கினோம்.


    கோபுரத்திற்கு வெளியே நந்தி மண்டபத்தை முதலில் பார்க்க நேர்ந்தது. இவருகில் சென்று வணங்கி நகர்ந்தோம்.


    அடுத்து, கோவிலுக்கு வடபுறமாக விநாயக தீர்த்தம் இருக்க அங்கு சென்று தீர்த்தத்தை அள்ளி சிரசிற்கு வார்த்து வணங்கிக் கொண்டோம்.


    கோபுர வாயில் மாடங்களில் விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோர்கள் காட்சி அருள வணங்கிக் கொண்டோம்..


    உள்பிராகாரத்தில் நால்வரையும், தலவிநாயகரையும் மற்றும் முருகப்பெருமான், கஜலட்சுமி ஆகியோர்களை ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கி நகர்ந்தோம்.


    சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகளுக்கும் சென்று கைதொழுது கொண்டோம்.


    இத்தல இறைவனைக் காணக் கருவறை முன் வந்து நின்றோம்.


    இவர் சுயம்பு லிங்கமாக எட்டுப் பட்டை உருவங்களுடன் எழிலாகக் காட்சி தந்துகொண்டிருந்தார்.


    இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று அருகிருந்தோர் கூறினர்.


    நாம் இவ்வாலயம் சென்ற சமயம் அஷ்டமி திதியில்.


    அந்தச் நாளான சனிக்கிழமை புத ஹோரையில் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து கலந்து காப்பிட்டு வணங்கிக் கொண்டிருந்தார்கள்.


    இப்படிச் செய்வதாயின், வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்றும் கூறினார்கள்.


    பின், ஈசனை மனமுருக பிரார்த்தனை செய்து,அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு நகர்ந்தோம்.


    அடுத்திருந்த அம்பாள் சந்நிதிக்கு விரைந்தோம். அம்மை தெற்கு நோக்கி அருளிய வண்ணம் இருந்தார்கள்.


    நன்றாக பிரார்த்தித்து குங்குமப் பிரசாதம் பெற்றுக் வெளிவந்தோம்.


    *தல பெருமை:*
    ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக தலபுராணம் கூறுகிறது.


    இத்தலத்தின் கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார்.


    இவரின் சந்நிதி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது.


    கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான்.


    தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான்.


    இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார்.


    திருஇடும்பாவனம் தலத்தைப் போன்றே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய திருக்கடிக்குளமும் ஏற்ற தலம்.


    *அதிசய சிறப்பு:*
    ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்று தலபுரானம் கூறுகிறது.


    *வழிபட்டோர்:*
    இராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம்.


    *ஒளவையார்:*
    இத்தலத்தில் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு விளையாடிய தலம்.


    இத்தலத்தில் விநாயகர் இறைவனை வழிபட்டு மாங்கனி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.


    இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் உள்ளது.


    தற்போது இக்கோயில் திருப்பணிசெய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ளது.


    கரையங்காடு என்பது இவ்வூரைச் சார்ந்ததாகும். இங்கிருந்து மேற்கே ஒருகல்லில் இடும்பாவனம் என்ற கோயில் இருக்கிறது.


    இக்கோயிலின் பரப்பு 11.52 ஏக்கராகும். இதில் சிவாலயம், மற்றைய மூர்த்திகள், கற்பக விநாயகர் கோயில், திருக்குளம் முதலியன அமைந்துள்ளன.


    ஐதீகப்படி கார்த்திகார்ச்சுனன் என்ற அசுரன் கற்பகலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தானாம்.


    தீர்த்தத்தின் பெயரே கடிக்குளம் என்பது.


    இக்கோயிலுக்குக் கரையங்காடு என்ற ஊர் தஞ்சை மன்னரால் தரப்பட்டது.


    திருச்சிற்றம்பலம்.


    *தொடர்புக்கு:*
    91 4369 240 187
    91 4369 240 632
    99428 12437


    திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள
    பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


    பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடை கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு குரைகழல் சிலம்பார்க்கக் கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம் முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.


    விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா விகிர்தனை விழவாரும் மண்க ளார்துதித் தன்பராய் இன்புறும் வள்ளலை மருவித்தங் கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைப் பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.


    பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது புலியதள் அழல்நாகந் தங்க மங்கையைப் பாகம துடையவர் தழல்புரை திருமேனிக் கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் துறைதரு கற்பகத்தை எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை இடும்பைவந் தடையாவே.


    நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப் பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பாருங் கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகந்தன்னைச் சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.


    சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு துன்னிய தழல்நாகம் அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல கொண்டடி யவர்போற்றக் கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் துறைதரு கற்பகத்தை விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர் விதியுடை யவர்தாமே.


    மாதி லங்கிய பாகத்தன் மதியமொ டலைபுனல் அழல்நாகம் போதி லங்கிய கொன்றையும் மத்தமும் புரிசடைக் கழகாகக் காதி லங்கிய குழையினன் கடிக்குளத் துறைதரு கற்பகத்தின் பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை பற்றறக் கெடுமன்றே.


    குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கை உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் பூவைசே ருங்கூந்தல் கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் துறையுங்கற் பகத்தைச்சீர் நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை நிற்ககில் லாதானே.


    மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல் மதியிலா மையிலோடி எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற இறையவன் விரலூன்றக் கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் கடிக்குளந் தனில்மேவிக் கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் குணமுடை யவர்தாமே.


    நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு நிகழடி முடிகாணார் பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் பவளத்தின் படியாகிக் காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தின்றன் சீரி னார்கழ லேத்தவல் லார்களைத் தீவினை யடையாவே.


    குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் குறியினில் நெறிநில்லா மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் கொள்ளன்மின் விடமுண்ட கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் துறைதரும் எம்மீசர் தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி எளிதாமே.


    தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர் மன்னன்நற் சம்பந்தன் மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடுங் கனம லிகட லோதம்வந் துலவிய கடிக்குளத் தமர்வானை இனம லிந்திசை பாடவல் லார்கள்போய் இறைவனோ டுறைவாரே.



    திருச்சிற்றம்பலம்.


    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களின் நாளைய தலப்பதிவு *நீள்நெறிநாதர், திருத்தண்டலைநீள்நெறி.*
    _______________________________________
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X