Announcement

Collapse
No announcement yet.

Gyanaparameswarar temple - Thirunaaloor

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Gyanaparameswarar temple - Thirunaaloor

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை. கு.கருப்பசாமி*
    *சிவ தல தொடர். 114.*
    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*


    *ஞானபரமேஸ்வரர் கோவில், திருநாலூர் மயானம்.*

    *இறைவன்:* ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர்.


    *இறைவி:* ஞானாம்பிகை, பெரியநாயகி.


    *தல விருட்சம்:* பலாசு மரம், வில்வம்.


    *தல தீர்த்தம்:* ஞானதீர்த்தம், சந்திர தீர்த்தம்.


    *பதிகங்கள்:* திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.


    *புராண பெயர்:* திருஞானம், திருநாலூர் மயானம், நாத்தூர்.


    *ஊர் பெயர்:* மெய்ஞானம்.


    *ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *இருப்பிடம்:*
    கும்பகோணம் - குடவாசல் சாலை வழியில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர்.


    இவ்வூர் ஒரு தேவார வைப்புத் தலமாகும். நாலூர் தாண்டி குடவாசல் செல்லும் வழியில் உள்ள அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது.


    இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது.


    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம், தொன்னூற்று ஆறாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *அஞ்சல் முகவரி:* அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்,
    நாலூர் மயானம்
    திருமெய்ஞானம்,
    திருச்சேறை அஞ்சல்,
    கும்பகோணம் வட்டம்.
    தஞ்சாவூர் மாவட்டம்.
    PIN - 612 605


    *ஆலயத் திறப்பு காலம்:* தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையில் மட்டும் ஆலயம் திறந்திருக்கும்.


    மற்ற நேரங்களில் கோவில் அருகில் வசிக்கும் திரு கலியமூர்த்தி (கோவில் அறங்காவலர் குழுத் தலைவர்) குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தரிசிக்கலாம்.
    கைபேசி: 9486767962, 7502056284


    *தொடர்புக்கு:*
    91- 94439 59839.


    தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நான்கு தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன.


    அவையாவன;
    1) நாலூர் மயானம்,
    2) திருக்கடவூர் மயானம்,
    3) காழி மயானம்,
    4) கச்சி மயானம். இவற்றில் முதல் மூன்றும் பாடல் பெற்ற தலங்கள். நான்காவது கச்சி மயானம் ஒரு தேவார வைப்புத் தலம்.


    இக்காலத்தில் இவ்விடத்தை திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த திருமெய்ஞானம் கிராமத்தில் அமைந்துள்ள ஞானபரமேஸ்வரர் திருக்கோவிலே திருநாலூர் மயானம் என்று திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாடல் பெற்ற தலம்.


    நான்கு வேதங்களாலும் வழிபடப்பட்ட இத்தலம் சோழர் காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்று வழங்கப்பட்டு வந்தது.


    சோழர் காலத்து கட்டிடக் கலைப்பாணியில் அமைந்த இக்கோவில் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்திருக்க உள் நுழைந்தோம்.


    முகப்பு வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபம் இருந்தன. இவரை வணங்கி உள்ளுக்குள்ளே அனுமதி பெற்றுக் கொண்டோம்.


    அடுத்திருந்த பலிபீடத்தின் முன்பு நின்று நம் ஆணவமலத்தை பலியிட்டுக் கொண்டோம்.


    கோவிலுக்கு வெளியே ஞானதீர்த்தத்தைக் காணவும், அத்தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து வணங்கிக் கொண்டோம்.


    வாயில் வழியாக உள் நுழைந்ததும், வெளிப் பிரகாரத்தைக் கண்டோம்.


    பிரகாரம் சுற்றி வரும்போது மேற்குச் சுற்றில் அமிர்தகடேஸ்வரர், சட்டநாதர், ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீவீழிஅழகர் ஆகிய சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக இருக்க, தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் வணங்கி நகர்ந்தோம்.


    அடுத்து நாகாராஜா, சண்டிகேஸ்வரி, புதிய தட்சிணாமூர்த்தி, ஆத்மலிங்கம் ஆகியவற்றைக் கண்டு வணங்கிக் கைதொழுது கொண்டோம்.


    வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதியும் இப்பிரகாரத்தில் இருக்க விழுந்தெழுந்து வணங்கி நகர்ந்தோம்.


    வடக்குப் பிரகாரத்தில் இருந்த கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கையைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.


    பிரகாரச் சுற்று முடிந்து கருவறை மண்டப வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். அங்கு மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.


    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர், நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பைப் பெற்ற தலம் இது. இறைவன் கருவறை விமானம் உருண்டை வடிவத்தில் அமைந்துள்ளது.
    ஈசனிடம் மனமுருகப் பிரார்த்தித்து அவனருள் பிரவாகங்களை அள்ளியெடுத்துக் கொண்டு, அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு நகர்ந்தோம்.


    அடுத்து, அம்பாளைத் தரிசிக்கச் சென்றோம். அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணம் தரிசனத்தை தந்து கொண்டிருந்தாள்.


    மனநிம்மதியொன்றை மட்டும் நீயருள்வாயாக!"...இதை மட்டும் அருளினால்? அனைத்து செயல்களும் நலமாக அமையுமே!" என வேண்டி விரும்பி விண்ணப்பித்து வணங்கி, அர்ச்சகரிடம் குங்குமத்தைப் பெற்று வெளி வந்தோம்.


    திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


    இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இத்தல இறைவனின் திருமேனி மேல் பாம்பு ஊர்வதாகக் கூறி, அதற்கு ஞானசம்பந்தரின் பதிகத்தின் முதல் பாடலில் வரும் *"பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேலூரும் செஞ்சடையான்"* என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியைக் காட்டுவர்.


    *தேவாரப் பதிகம்:*
    பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான் நாலூர் மயானத்து நம்பான் தன் அடிநினைந்து மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா மறுபிறப்பே.


    சூடும் பிறைச்சென்னி சூழ்காடு இடமாக ஆடும் பறைசங்கு ஒலியோடு அழகாக நாடும் சிறப்பு ஓவா நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்போர் பால் பற்றாவாம் பாவமே.


    கல்லால் நிழல்மேவிக் காமுறு சீர் நால்வர்க்கு அன்று எல்லா அறன் உரையும் இன் அருளால் சொல்லினான் நல்லார் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்தைச் சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொன்னெறிக்கே.


    கோலத்து ஆர் கொன்றையான் கொல் புலித்தோல் ஆடையான் நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான் ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர் மயானத்தில் சூலத்தான் என்பார்பால் சூழாவாம் தொல்வினையே.


    கறை ஆர் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன் பிறை ஆர் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர் மயானத்து எம் இறையான் என்று ஏத்துவார்க்கு எய்துமாம் இன்பமே.


    கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடமாகப் பண் ஆர் மறைபாடி ஆடும் பரஞ்சோதி நண்ணார் புரம் எய்தான் நாலூர் மயானத்தை நண்ணாதவல் எல்லாம் நண்ணாதார் நன்னெறியே.


    கண்பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான் பெண்பாவு பாகத்தான் நாகத்தோல் ஆகத்தான் நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை எண்பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே.


    பத்துத் தலையோனைப் பாதத்து ஒருவிரலால் வைத்து மலையடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் நத்தின் ஒலி ஒவா நாலூர் மயானத்து என் அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.


    மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய் மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் நாலோடும் ஆறு அங்கம் நாலூர் மயானத்து எம் பாலோடு நெய்ஆடி பாதம் பணிவோமே.


    துன்பாய மாசார் துவராய போர்வையார் புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள் நண்பால் சிவாயவெனா நாலூர் மயானத்தே இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே.


    ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான் நாலு மறை ஓது நாலூர் மயானத்தைச் சீலம் புகழாற் சிறந்து ஏத்த வல்லாருக்கு ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே.


    திருச்சிற்றம்பலம்.


    பாடல் பெற்ற தலங்களில் நாளைய அடுத்த பதிவு *திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான் கோவில், சொராணபுரீசுவரர்.)*



    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X