Announcement

Collapse
No announcement yet.

Pathaaleswarar temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Pathaaleswarar temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    -------------------------------------------------------------
    *117*
    *பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
    -----------------------------------------------------------
    *பாடல் பெற்ற சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
    --------------------------------------------------------------
    *திருஅரதைப் பெரும்பாழி பாதாளேசுவரர்.*
    ------------------------------------------------------------
    *இறைவர்:* பாதாளேசுவரர், பாதாள வரதர்


    *இறைவி:* அலங்கார நாயகி,


    *தல மரம்:* வன்னி மரம்.


    *தீர்த்தம்:* பிரம தீர்த்தம்,


    *தேவாரப் பாடல்கள்:*
    திருஞானசம்பந்தர்


    *இருப்பிடம்:*
    தமிழ் நாடு கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை வழியில் வெட்டாறு பாலம் தாண்டியவுடன் வலதுபுறம் திரும்பிச் செல்லும் பாதையில் சென்று அரித்துவார மங்கலம் தலத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன.


    கும்பகோணத்திலிருந்து சுமார் இருபத்திரண்டு கி.மி. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அரித்துவார மங்கலம் செல்லலாம்.


    திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து மூன்றரை கி.மீ. தொலைவில் இருக்கிறது.


    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் தொன்னூற்று ஒன்பதாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *ஆலயத் திறப்பு காலம்:*
    இவ்வாலயம் தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *கோவில் அமைப்பு:*
    பேருந்தை விட்டிறங்கி ஆலயத்திற்குள் செல்லும்போது, மூன்று நிலை ராஜகோபுரத்தைக் காணவும், *சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தைக் வணங்கிக் கொண்டோம்.


    ஆலயத் துள்ளல் புகவும், அங்கே வெளிப்பிரகாரத்தில், முதலில் விநாயகரைக் கண்டோம். விடுவோமா? கையுர்த்தி தொழுது வணங்கிக் கொணாடோம்.


    அடுத்து பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜரைக் காணவும், நம்மையுமறியாமல் நமக்கு அவன் ஆடற்கலையுடன் தூக்கிய திருவடிகளை நினைந்து நினைந்து உருகி வணங்கிக் கொண்டோம்.


    தொடர்ந்து,காசி விஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் ஆகியோர்களைக் கண்டு, ஒவ்வொருத்தரையும் தனித்தனியே வணங்கித் துதித்துக் கொண்டோம்.


    வெளிப்பிரகாரம் முடித்து, அடுத்ததாக இருந்த மூலவர் சுயம்பு லிங்க மூர்த்தி வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் பாதாளேசுவரர் சந்நிதிக்குள் நுழைந்தோம்.


    மனமுருகப் பிரார்த்தி அர்ச்சகர் தந்த வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வணங்கி வெளிவந்தோம.


    சிவனுக்கு வலது பக்கமாக அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருந்தது. அம்மையைக் காணும் அழகே அழகு. அழகும் அருளும் பொருந்தி வருவோர்க்கு அருளும், அம்மையின் அருட்கடாச்சங்களை அள்ளி அள்ளி பருகி வெளிவந்தோம்.


    சுவாமி, அம்மை சந்நிதிகள் அடுத்தடுத்து அருகருகே இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள்.


    அம்மன் துர்க்கை அம்சமாக இருந்து அருளுவதால், துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.


    அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயிலும் உள்ளது.


    சிவனே, நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி இங்கு கிடையாது. ஈசனைத் தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும்.


    *தல அருமை:*
    'ஹரித்துவார்' சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும் இத்தலத்தை வணங்கினால்.


    சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது.


    பூமியில் அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் கடவுளான நாராயணனுக்கு திடீரென்று சிவனின் பாதத்தைத் தரிசிக்க வேண்டும் என்று ஓர் ஆசை எழுந்தது.


    பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டியும் ஏற்படலாயிற்று.


    இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி அவர்களுக்கூள் ஆரம்பமாகிறது.


    சிவபெருமானும் அதற்கு இசைவு தெரிவித்தார். பூமிக்கடியில் இருக்கும் அவரது பாதத்தைக் காண வராக அவதாரம் எடுத்தார் மாலன்.


    தனது முகத்தால் பூமியில் துவாரம் ஏற்படுத்தி, அவ்வழியே உள்ளே சென்றார். ஆனால் அவரால் பாதத்தைத்தான் காண முடியவில்லை.


    சற்றே விரக்தி தோன்றியதால், பூமியின் மேலே வந்தார். அங்கே நாராயணன் சிவனை வேண்டித் தவம் புரிந்தார். நாராயணன் அன்று ஏற்படுத்திய துவாரம் தென்தமிழகத்தில் உள்ள அரித்துவாரமங்கலத்தில் உள்ளதாகத் தல புராணம் சொல்கிறது.


    பிரம்மா அன்னப்பறவை முதுகில் அமர்ந்து ஈசன் திருமுடியை தரிசிக்க கிளம்பினார். ஆனால் அவராலும்,ஈசன் திருமுடி தரிசனம் கிடைக்கப் பெறவில்லை.


    அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது.


    தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக பொய் கூறும்படி சொல்லச் சொன்னார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.


    இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார்.


    விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். முடியவில்லை. போக விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.


    விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்று தலபுராணம் கூறுகிறது.


    எனவே தான் இத்தலம் *அரித்துவாரமங்கலம்* ஆனது.


    இன்றளவும் மூலஸ்தானத்தில் சிவபெருமானின் அருகில் இந்தத் துவாரம் உள்ளது. இக் கோயிலில் நவக் கிரகங்கள் கிடையாது.


    இங்கு மூலவர் பாதேளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாதாளம் வரை லிங்கம் நீண்டிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று பெயர் வந்தது. இத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. அனைத்தும் ஈசன்தான்.


    இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


    அம்பாள் ஸ்ரீ அலங்கார வள்ளி என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


    இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் வடக்கே உள்ள 'ஹரித்துவார்' சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும், பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.


    இத்தலம் பஞ்சாரண்ய ஷேத்திரங்களில் ஒன்று. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும்.


    இந்த ஐந்து தலங்களை வரிசையாக.......


    1. *திருக்கருகாவூர்* (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது.
    2. *அவளிவநல்லூர்* (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது.
    3. *அரதைப் பெரும்பாழி* (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
    4. *ஆலங்குடி* (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
    5. *திருக்கொள்ளம்புதூர்* (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.


    சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது


    *தேவாரம்:*
    திருஞானசம்பந்தர் பாடியருளிய மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது


    பைத்தபாம் போடுஅரைக் கோவணம் பாய்புலி
    மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
    நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
    பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.


    🏾பாம்பும் கோவணமும் புலித்தோலும் கட்டிய ஈசன், பேய்கள் சூழ்ந்து முழங்க மயானத்தில் நடனம் ஆடி விளங்குபவர். அப்பெருமான், திருவெண்ணீறு அணிந்தவராய் மேவும் பித்தர் ஆவர். அவர் கோயில் கொண்டு விளங்குபவது அரதைப் பெரும்பாழியே.


    கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும்
    பயலை கொள்ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்
    இயலைவா னோர் நினைந் தோர்களுக்கு எண்ணரும்
    பெயரர் கோயில்அர தைப்பெரும் பாழியே.


    🏾கயல் போன்றும் சேல் போன்றும் அழகிய கருமை வண்ணக் கண்ணுடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய் கொள்ளுமாறு கவரும் தோற்றம் உடையவராய்ப் பலி ஏற்று உழலும் பாங்கு உடையவர் ஈசன். அப்பெருமான், வானவர்களும் அடியவர்களும் எண்ணுதற்கு அரிய பல திருப் பெயர்களை உடையவராய் விளங்குபவர். அவர், கோயில் கொண்டு இருப்பது அரதைப்பெரும்பாழியே.


    கோடல் சாலவ் உடையார் கொலை யானையின்
    மூடல் சாலவ் உடையார் முனிகானிடை
    ஆடல் சாலவ் உடையார் அழகாகிய
    பீடர் கோயில் அரதைப் பெரும் பாழியே.


    🏾ஈசன், அடியவர்களின் மனத்தை ஏற்றுக் கொண்டு ஆங்கு உறைபவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; வெறுப்புக்கு உரியதாகும் சுடுகாட்டில் நடனம் புரிபவர். அப்பெருமான், அழகு எனச் சொல்லப்படும் பெருமை உடையவராய்க் கோயில் கொண்டு விளங்குவது, அரதைப்பெரும்பாழியே.


    மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்
    விண்ணர்வே தம்விரித்து ஓதுவார் மெய்ப்பொருள்
    பண்ணர்பா டல்உடை யார்ஒரு பாகமும்
    பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.


    🏾நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களாக விளங்கும் ஈசன், வேதங்களை விரித்து ஓதி அருள்பவர்; மெய்ப் பொருளாகியவர்; பண்ணில் அமரும் பாடலில் விளங்குபவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; அவர் எழுந்தருளியுள்ள கோயில் அரதைப்பெரும் பாழியே ஆகும்.


    மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்
    கறைகொள்சூ லம்உடைக் கையர்கா ரார்தரும்
    நறைகொல் கொன் றைநயந் தார்தரும் சென்னிமேல்
    பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.


    🏾வேதங்களை ஓதும் சிவபெருமான், மானும் மழுவும் கொண்டு சூலப்படை உடையவராய்த் தேன் துளிர்க்கும் கொன்றை மாலையை விருமபித் தரித்துப் பிறைச் சந்திரனைச் சூடிக் கோயில் கொண்டு விளங்குவது அரதைப்பெரும்பாழியே.


    புற்றரவம்புலித் தோலரைக் கோவணம்
    தற்றிர வில்நடம் ஆடுவர் தாழ்தரு
    சுற்றமர் பாரிடம் தொல்கொடி யின்மிசைப்
    பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.


    🏾அரவம், புலித்தோல், கோவணம் ஆகியவற்றினை இடையில் கட்டி, இரவில் நடம் புரியும் சிவபெருமான், பூத கணங்கள் சூழ விளங்கி இடபக் கொடியை உடையவர். அவர், கோயில் கொண்டு இருப்பது அரதைப்பெரும்பாழி ஆகும்.


    துணையிறுத்து அம்சுரி சங்குஅமர் வெண்பொடி
    இணையிலேற் றையுகந்து ஏறுவ ரும்எரி
    கணையினால் முப்புரம் செற்றவர் கையினில்
    பிணையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.


    🏾சங்கினால் ஆகிய வெண்குழை அணிந்து, திருவெண்ணீறு தரித்து மேவும் ஈசன், இடப அக்கினிக் கணையைச் செலுத்தி முப்புரத்தை எரியுமாறு செற்றவர்; அப்பெருமான், மானைக் கையில் ஏந்தி, அரதைப்பெரும்பாழியில் கோயில் கொண்டு விளங்குபவர்.


    சரிவிலா வல்லரக் கன்தடம் தோள்தலை
    நெரிவிலார் அவ்வடர்த் தார்நெறி மென்குழல்
    அரிவைபா கம்அமர்ந் தார்அடி யாரொடும்
    பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே.


    🏾தளர்ச்சியே இல்லாத அரக்கனாகிய இராவணனின் வலிமையான பெரிய தோளும் தலையும் நெரியுமாறு அடர்த்த ஈசன், உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்து அடியவர்களோடு பிரியாது வீற்றிருக்கும் கோயிலானது, அரதைப்பெரும்பாழியே.


    வரியரா என்புஅணி மார்பினர் நீர்மல்கும்
    எரியரா வும்சடை மேற்பிறை யேற்றவர்
    கரியமா லோடுஅயன் காண்பரி தாகிய
    பெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.


    🏾வரிகளையுடைய அரவம், எலும்பு ஆகியவற்றை மார்பில் அணியாகக் கொண்டு, கங்கை திகழும் சிவந்த சடையின் மீது, பிறைச் சந்திரனைச் சூடிய ஈசன், திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியதாக ஓங்கிய பெருமை உடையவர். அவர் மேவி விளங்குகின்ற கோயில், அரதைப்பெரும்பாழியே.


    நாணிலாத சமண்சாக் கியர் நாள்தொறும்
    ஏணிலா தம்மொழியவ் எழிலா யவர்
    சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
    பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே.


    🏾சமணரும் சாக்கியரும் நாள்தோறும் உயர்வற்ற சொற்களை மொழிதலுற்றலும், எழில் மிகுந்தவராய், முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செற்றவராய் மேவும் ஈசன் பேணும் கோயில், அரதைப் பெரும்பாழியே.


    நீரினார் புன்சடை நிமலனுக்கு இடம்எனப்
    பாரினார் பரவுஅர தைப்பெரும் பாழியைச்
    சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
    ஏரினார் தமிழ்வல்லார்க்கு இல்லையாம் பாவமே.


    🏾கங்கையை மெல்லிய சடையில் தாங்கும் நின்மலனாகிய ஈசனுக்க இடமாவது எனப் பூவுலகில் நன்கு பரவப்பெறும் அரதைப்பெரும்பாழியைச் சீர்மிகுந்து பொலியும் காழிப் பதியின் ஞானசம்பந்தன் இசைத்த சிறப்புமிக்க இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுக்குப் பாவம் என்பது இல்லை.




    திருச்சிற்றம்பலம்.


    பாடல் பெற்ற தலங்களில் நாளைய அடுத்த பதிவு *திருஅவளிவநல்லூர், சாட்சிநாதர் திருக்கோவில்*
    வ(ள)ரும்.
    -------------------------------------------------------------
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X