Announcement

Collapse
No announcement yet.

Thiruchengaatankudi temple Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruchengaatankudi temple Continues

    Thiruchengaatankudi temple
    Continues
    போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்
    புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
    நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
    நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்
    பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்
    பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற
    சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.


    *தேவார பதிகம்:*
    சம்பந்தர்.
    பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள்
    பயப்பூரச்
    சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்
    தந்தானே
    செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்
    பணிசெய்ய
    வெங்காட்டு ளனலேந்தி விளையாடும்
    பெருமானே.


    பசுமையான கிளைகளில் மலர்களையுடைய புன்னைமரத்தில் வீற்றிருக்கும் பறவைகளே! தலைவனான சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் உடம்பு பசலைநிறம் பெற, ஆடி ஆடி உல்லாசமாக இயங்கிய என் மகிழ்ச்சியை நீக்கி எனக்குத் தாங்காத துன்பம் தந்தான். அவன் திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் சிறுத்தொண்டர் பணி செய்ய சுடுகாட்டுள், கையில் அனல் ஏந்தி திருநடனம் புரியும் பெருமானாவான்.


    பொன்னம்பூங் கழிக்கானற் புணர் துணையோ
    டுடன்வாழும்
    அன்னங்கா ளன்றில்கா ளகன் றும்போய்
    வருவீர்காள்
    கன்னவிறோட் சிறுத்தொண்டன்
    கணபதீச் சரமேய
    இன்னமுத னிணையடிக்கீ ழெனதல்ல
    லுரையீரே.


    பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும் புன்னைப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தம் துணையோடு சேர்ந்து வாழும் அன்னப் பறவைகளே! அன்றில் பறவைகளே! நீங்கள் இச்சோலையிலிருந்து வெளி இடங்கட்கும் சென்று வரும் இயல்புடையவர்கள். கல் போன்று திண்மையான அழகிய தோள்களையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யக் கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற இனிய அமுது போன்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் இருந்து என்னுடைய துன்பத்தைச் சொல்லமாட்டீர்களா?


    குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத்
    தடத்தகத்தும்
    இட்டத்தா லிரைதேரு மிருஞ்சிறகின்
    மடநாராய்
    சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்
    குடிமேய
    வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென்
    றுரையாயே.


    குட்டை, குழி, குளிர்ந்த பொய்கை ஆகிய இடங்களில் விருப்பத்துடன் இரையைத் தேர்கின்ற பெரிய இரு சிறகுகளை உடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் நியமத்தோடு வழிபடத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந் தருளுகின்ற நீண்ட அடர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைக்க மாட்டாயோ?


    கானருகும் வயலருகுங் கழியருகுங்
    கடலருகும்
    மீனிரிய வருபுனலி லிரைதேர்வெண்
    மடநாராய்
    தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்
    குடிமேய
    வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென்
    றுரையாயே.


    கடற்கரைச் சோலையின் அருகிலும், வயல், கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் ஓடுகின்ற மீன்களை இரையாகத் தேரும் வெண்ணிறமான மட நாரையே! தேன் துளிக்கும் மாலைகளையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, மாலை வானம் போன்ற சிவந்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைப்பாயாக.


    ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச்
    சிறகுலர்த்தும்
    பாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி
    மடநாராய்
    சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங்
    குடிமேய
    நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென்
    றுரையீரே.


    ஆரல், சுறவம் ஆகியன பாய்கின்ற அகன்ற கழனிகளில் சிறகுகளை உலர்த்துகின்ற நெடிய மூக்கையுடைய சிறிய உள்ளான் பறவையே!. அடர்ந்த சிறகுடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் பணி செய்ய திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந் தருளுகின்ற கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என்னுடைய நிலையினை உரைப்பீர்களாக.


    குறைக்கொண்டா ரிடர்தீர்த்தல் கடனன்றே
    குளிர்பொய்கைத்
    துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா
    மடநாராய்
    கறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச்
    சரமேய
    சிறுத்தொண்டன் பெருமான்சீ ரருளொருநாட்
    பெறலாமே.


    தங்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுபவர்களின் துன்பத்தைப் போக்குதல் தலைவரானவரின் கடமை அன்றோ? குளிர்ந்த குளத்தின் கரையில் கெண்டை மீனைக் கவர்ந்து இரையாகக் கொள்ளும் பறவையே! துணையைப் பிரியாதிருக்கும் மடநாரையே! நீலகண்டரும், பிறைச்சந்திரனைத் தலையிலே சூடியுள்ளவரும், கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் சிறுத்தொண்டரால் வழி படப்படுபவரும் ஆகிய சிவபெருமானது சீராகிய எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது சென்றுரைப்பீர்களாக!


    கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண்
    கழிநாராய்
    ஒருவடியா ளிரந்தாளென் றொருநாட்சென்
    றுரையீரே
    செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங்
    குடிமேய
    திருவடிதன் திருவருளே பெறலாமோ
    திறத்தவர்க்கே.


    கரிய சேற்றில் அளைந்த பசுங்காலையுடைய வெண்குருகே! அழகிய கழியிலுள்ள நாரையே! போர் செய்வதால் வலிமை பெற்ற அழகிய வடிவுடைய தோள்களையுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியிலுள்ள திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திரு வடிகளை வழிபடும் திறத்தவர்களே அவன் திருவருளைப் பெறலாமோ? ஓர் அடியாள் அவருடைய திருவருளைக் கெஞ்சி வேண்டினாள் என்று ஒரு நாளாவது சென்று அவரிடம் உரைப்பீராக!


    கூரார லிரைதேர்ந்து குளமுலவி
    வயல்வாழும்
    தாராவே மடநாராய் தமியேற்கொன்
    றுரையீரே
    சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்
    குடிமேய
    பேராளன் பெருமான்ற னருளொருநாட்
    பெறலாமே.


    கூர்மையான அலகால் இரையைக் கொத்திக் குளங்களிலும், வயல்களிலும் வாழ்கின்ற தாரா என்ற பறவையே! மட நாரையே! என் பொருட்டுச் சிவபெருமானிடம் சென்று ஒரு செய்தியை சொல்வீரோ? சிறந்த புகழுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கீர்த்தியுடைய சிவபெருமான் திருவருளை ஒருநாள் அடியேன் பெறுதல் இயலுமா?


    நறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே
    யுலகெல்லாம்
    அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட
    லழகியதே
    சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்
    குடிமேய
    பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம்
    பெருநலமே.


    தேனுடைய பூக்கள் நிறைந்த கழியின் கரையிலுள்ள சோலையில் வாழ்கின்ற பறவையே! உலக மக்களெல்லாம் அறத்தைக் கருதி இடுகின்ற பிச்சையை ஏற்று உழல்கின்ற சிவபெருமானுக்குப் பிறர் என்னைத் தூற்றுமாறு செய்வது அழகாகுமா? சிறப்புடைய சிறுத்தொண்டன் வழிபடும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற பிறப்பிலியாகிய சிவபெருமானுடைய திருநாமத்தைப் போற்றித் துதிசெய்யும் நான் எல்லாவிதப் பெருமைக்குரிய நலங்களை இழப்பது முறைமையா?


    செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங்
    குடிமேய
    வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட
    னவன்வேண்ட
    அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே
    யடிபரவும்
    சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர்
    தக்கோரே.


    சிறந்த, குளிர்ந்த, அழகிய ஆறுபாயும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு அணிந்த மார்புடைய சிவனை, சிறுத்தொண்டர் வழிபட்டபடி, அழகிய, குளிர்ந்த ஒலிமிக்க காழியிலுள்ள இறைவனின் திருவடிகளை வணங்கும் ஞானசம்பந்தன் சந்தம் மிகுந்த திருத் தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் மனிதப் பிறவி எடுத்ததன் தகுதியைப் பெற்றவராவர்.


    திருச்சிற்றம்பலம்.


    *இத்துடன் திருசெங்காட்டங்குடி தல அருமைகள் பெருமைகள் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.*


    *நாளைய தலம் திருமருகல் *வ(ள)ரும்*



    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X