Announcement

Collapse
No announcement yet.

Thiruvirkudi temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruvirkudi temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.


    *பாடல் பெற்றசிவ தல தொடர்.92.*


    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*


    (நேரில் சென்று தரிசித்ததைப் போல.......... )


    *இறைவன்:* வீரட்டானேசுவரர்.


    *இறைவி:* ஏலவார்குழலம்மை, பரிமளநாயகி.


    *உற்சவர்:* ஜலந்த்ரவத மூர்த்தி. (சங்கு சக்கரத்துடன் மாளைஸ்வரர்.)


    *தல விருட்சம்:* துளசி.


    *தல தீர்த்தம்:* சக்கரத் தீர்த்தம், (கோயிலின் முன் புறம் உள்ளது.)
    சங்கு தீர்த்தம். (கோயிலின் பின்புறம் உள்ளது.)


    *புராணப்பெயர்:* தனுஷாபுரம்.


    *ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *பூஜை:* நான்கு காலம்.


    *முன்னைய ஊர்பெயர்:* கோதிட்டை.


    *கோயில் சிற்பங்களில்:*
    அஷ்ட வீரட்டானங்கள்.


    பாடல் பெற்ற தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்து நான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *திருத்தல இருப்பிடம்:*
    திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்திலிருந்து தென்கிழக்கே பத்து கி.மீ. தொலைவில் உள்ளது.


    மயிலாடுதுறை - பேரளம் ரயில் பாதையில் விற்குடி ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து வடக்கே ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.


    *தேவாரம் பாடியவர்கள்:* திருஞானசம்பந்தர்.


    *முக்கிய நினைவுக்கு:*
    அட்ட வீரட்டானங்களில் மூலவராக சிவலிங்க வடிவத்தில் இருப்பவர் ஸ்ரீகால பைரவப் பெருமானே என்பதை நினைவிற்கொள்க.


    *திருத்தலச் சிறப்புகள்:* சிவபெருமான் புரிந்த எட்டு வீரட்டத் தலங்களுள் சலந்தராசுரனை அழித்த தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. ஜலந்திரன் சம்ஹாரம் நடந்த இடமும் இதுவே.


    *பெயர்காரணம் :* இத்தலத்திற்கு வழங்கும் திருப்பெயர்களில் *'திட்டை'* என்பதும் ஒன்று. இதனையே சுந்தரர் *"கோத்திட்டையும் கோவலும் கோயில் கொண்டீர்"* என்றும், அப்பர் *'கோத்திட்டைக்குடி வீராட்டானம்'* என்றும் கூறியிருக்கின்றனர்.


    திட்டு என்ற சொல் மேடான இடம் என்றும் ஆற்றின் இடையே உள்ள சிறுநிலப்பகுதி என்றும் உணர முடிகிறது.


    ஊரின் தென் எல்லையில் பில்லாலி என்ற ஆறும் ஓடுகின்றன. இவ்விரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியே திட்டு என்று முதலில் வழங்கப்பெற்றுப் பின்னர் திட்டை என்று வழங்கப் பெறுவதாயிற்று.


    இரு ஆறுகளுக்கும் இடையே உள்ள சிறந்த முதன்மையான நிலப்பகுதி என்ற பொருளைத் தருவதே கோத்திட்டை என்பதாகும்.


    ஊரின் நாற்புறமும் பசுமை நிரம்பிய நெல் வயல்கள் பரவி, தென்னை, மா, பலா முதலிய மரங்கள் வளர்ந்து ஊருக்கு வனப்பூட்டுகின்றன. மல்லிகை, முல்லை போன்ற கொடிகள் மலிந்த பூஞ்சோலைகள் எப்பொழுதும் நறுமணத்தைத் தந்து கொண்டிருக்கின்றன.


    இயற்கை அன்னையின் எழிற்பூங்கோயில் திருவிற்குடி என்றால் அது மிகையில்லை.


    *கோயில் அமைப்பு:* இத்தலத்திற்கு நாம் செல்கையில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டு மேற்கு நோக்கி அமைந்திருப்பதைக் கண்டு *சிவ சிவ,*என மொழிந்து கோபுரத்தை தன் தரிசனம் செய்து வணங்கிக் கொண்டோம்.


    இக்கோயிலுக்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. கோயில் எதிரில் சங்கு தீர்த்தம் அமைந்திருக்க, அவ்விடம் சென்று தீர்த்தத்தை அள்ளி சிரசிலிட்டு வணங்கிக் கொண்டோம்.


    சக்கரதீர்த்தம் என்ற மற்றொரு தீர்த்தம் கோயிலுக்கு பின்புறமாக அமைந்துள்ளது.


    சங்கு தீர்த்தத்தை வணங்கியது மற்றும் கீழ்க்கரையில் தென்புறமாக கோயிலை நோக்கி தனி விநாயகர் ஆலயம் ஒன்று இருந்தது. அவர் முன் வந்து நின்று விநாயகனை வணங்கிக் கொண்டோம்.


    பின், கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தபோது, எதிரில் வலப்புறம் உள்ள முதல் தூணில் அழகான நாகலிங்கச் சிற்பம் உள்ளதைக் கண்டு வணங்கி நகர்ந்தோம்.


    வெளிப் பிரகாரத்தில் விருந்தையைத் திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும் திருமால் வழிபட்ட சிவாலயமும் இருக்க கைதொழுது கொணாடோம்.


    உள் திருச்சுற்றில் வலம் வரும்போது, திருமகள் துணைவியருடனும், சுப்பிரமணியர், பைரவர், சனி பகவான், ஒன்பான் கோள்கள் மற்றும் சூரியன் இருக்கக் கண்டு தொடர்ச்சியாக அனைவரையும் வணங்கிக் கொண்டோம்.


    திருமுன்களும், பள்ளியறையும், ஞானத்தீர்த்தம் என்னும் கிணறும் உள்ளதைக் கண்டு களிப்புற்றோம்.


    கருவறையில் லிங்கத்திருவுருவில் வீரட்டநாதர் எழுந்தருளியுள்ளதை மனமுருகப் பிர்த்தனை செய்து வணங்கிக் வெளிவந்தோம்.


    கோட்டத்திற்குள் வரும்போது, துர்க்கை, பிரம்மன், திருமால், ஆலமரச்செல்வன், பிள்ளையார் ஆகியோரின் திருவுருவங்களைக் காணப்பெற்று கைதொழுது கொண்டோம்.


    அன்னையின் சந்நிதிக்கு வந்தோம். திருமுன் தெற்கு நோக்கி இருந்தது. அவளருனினை வணங்கிப் பெற்றுக் கொண்டோம்.


    அன்னையின் திருமுன்னிற்கு எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு இராசிகளும் உரிய கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டமைப்பைப் பார்க்கும்போது மிக பிரமிப்பாக இருந்தது.


    திருமுழுக்கு நீர் வெளிவரும் கோமுகத்தைப் பார்த்தபோது, ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில் இருத்தியிருந்தனர்.


    மண்டபத்தின் இடப்பால் வந்தோம், அங்கே ஆடல்வல்லானின் அரங்கம் அமைந்திருந்தது.


    அவன் தூக்கிய திருவடிகளைக் கண்டு கைதொழுதேத்த வண்ணம் நின்று, எங்களையே மறந்து நின்றோம். சிறிது நிமிடங்களுக்குப் பிறகு தன்னிலை மாறி மீண்டும், அவனருளைப் பெற்று வெளிவந்தோம்.


    இதனின் எதிரில் வாயிலும், சாளரமும் உள்ளன. இதன் பக்கத்தில் திருவுலாத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதைக் காணப் பெற்றோம்.


    கருவறையின் முன் உள்ள முகமண்டபத்தில் தெற்கு நோக்கி சலந்தரனைத் கடிந்த பெம்மானின் அழகான ஐம்பொன் திருமேனி இருப்பதைக் கண்டோம்.


    சிக்கலுக்கு சிங்காரவேலர் ஏற்றமளிப்பது போலவும், வைத்தீசுவரன் கோயிலுக்கு முத்துக்குமாரர் உயர்வு அளிப்பது போலவும் இத்தலத்தில் திருவுலாத் திருமேனியாகச் சலந்தரனைத் கடிந்த பெம்மான் விளங்குகிறார்.


    சலந்திரனைத் கடிந்த பெம்மானின் வடிவம் பன்னிரு கைகளில் மானும், மழுவும் கொண்டு முன் வலக்கையில் சக்கரம் ஏந்தி, முன் இடக்கை மேல் நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இந்த வடிவைச் சுற்றி திருவாசி அமைக்கப்பட்டுள்ளது.


    இக்கோயிலுக்குப் பின்புறம் கிழக்கு நோக்கி மற்றொரு கோயில் இருப்பதைக் கண்டு அங்கு சென்றோம்.


    அங்கிருந்தோரிடம் இக்கோயில் பற்றி விளக்கம் கேட்க, இது *'திருமயானேசுவரர் கோயில்'* என்றார்கள்.


    சலந்தரனின் மனைவி விருந்தை உயிர் நீத்த இடமாக இது கருதப்படுவதால் இங்குள்ள இறைவன் திருமயானேசுவரர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் கூறினார்கள்.


    இது விருந்தை மயானம் என்றும் அழைக்கப்படுகிறது. விருந்தையின் சாம்பலில் துளசி முளைத்ததாக புராணத்தில் கூறப்படுவது போலவே, இங்கு துளசி மாடம் இருந்தன.


    துளசி தான் இக்கோயிலின் தலமரமாக விளங்குகிறது.


    இத்தலத்தில் உள்ள முருகன் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு, மயில் மீது அமர்ந்து, தன்னுடைய இரு தேவியருடன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறதை வணங்கி அவனருளை பெற்றுக் கொண்டோம்.


    இங்கு ஜலந்தரவத மூர்த்தி சிறப்பு மூர்த்தியாவார். இங்கு விநாயகர், முருகர், பைரவர், சனிபகவான், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், பிடாரி, நடராஜர்சபை, பிரமன், திருமால், தட்சிணாமூர்த்தி, சண்டேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.


    அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம் பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாகும்.


    சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது.


    இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.


    *திருக்கண்டியூர்:*
    சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்


    *திருக்கோவலூர்:* அந்தகாகரனைக் கொன்ற இடம்


    *திருவதிகை:* திரிபுரத்தை எரித்த இடம்


    *திருப்பறியலூர்:* தக்கன் தலையைத் தடிந்த தலம்


    *திருவிற்குடி:* சலந்தராசுரனை வதைத்த தலம்


    *திருவழுவூர்:* கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்


    *திருக்குறுக்கை:* மன்மதனை எரித்த தலம்


    *திருக்கடவூர்:* மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்-எனவாகும்.


    *தல பெருமை:*
    சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அட்ட வீரட்டத்தலங்களில் திருவிற்குடியும் ஒன்றாகும்.


    சலந்தாசுரன் என்பவன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்து சாகாவரம் கேட்டான்.


    பிரம்மா அவ்வாறு சாகாவரம் தர இயலாது என்று கூற, சலந்தாசுரன் "தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்" என வரம் வாங்கி விட்டான்.


    தனது வரத்தின் பலத்தாலும், உடல் வலிமையாலும் செருக்குற்று தேவர்களுக்கு தொல்லைகள் பல கொடுத்தான்.


    தேவர்கள் கயிலை மலையை அடைந்து சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சலந்தாசுரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான்.


    சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் சலந்தாசுரன் முன்பு தோன்றினார். அதற்கு முனபு திருமாலை சலந்தாசுரன் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார்.


    கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை.


    ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.


    இத்தருணத்தில் சலந்தாசுரனிடம் தான் கூறும் ஒரு சிறிய செயலை அவனால் செய்ய முடியுமா என்று சிவபெருமான் கேட்டார்.


    தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று செருக்குடன் சலந்தாசுரன் கூறினான். சிவபெருமன் தனது காற் பெருவிரல்லால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தைப் பெயர்த்து உன் தலை மேல் தாங்கி நில் என்று சலந்தாசுரனிடம் கூறினார். அவனும் பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான்.


    மனைவி பிருந்தையின் மனம் சிறிது நேரம் களங்கப்பட்டதால், அந்த வட்டச் சக்கரம் சலந்தாசுரன் உடலை இருகூறாகப் பிளந்துவிட்டு இறைவனின் கரத்தில் அமர்கிறது.


    சலந்தாசுரன் என்பவனை சக்கரத்தால் சிவபெருமான் அழித்த இத்தலம் அஷ்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.


    சலந்தாசுரன் மனைவி தன் கணவர் இறக்கக் காரணமாக இருந்த மகாவிஷ்ணுவைப் பார்த்து *"நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்"* என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள்.


    இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்து, மனைவியைப் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார்.


    இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலை தொடுத்து திருமாலுக்கு சாற்ற அவரின் பித்து விலகுகிறது. துளசி தான் இங்கு தல விருட்சம் என்பது குறிப்பிடத் தக்கது.


    இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.


    இத்தலத்தில் உள்ள முருகன் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து தன்னுடைய இரு தேவியருடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    *திருஞானசம்பந்தர்.* இவர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


    பதினோரு பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தின் ஏழாவது பாடல் சிதைந்து போயிற்று.


    1. வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர் விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம் அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே.


    2. களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் கடிகமழ் சடைக்கேற்றி உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் பொருகரி யுரிபோர்த்து விளங்கு மேனியர் எம்பெரு மானுறை விற்குடி வீரட்டம் வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் வருத்தம தறியாரே.


    3. கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில் எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் தாடிய வேடத்தர் விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம் பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் பேணுவ ருலகத்தே.


    4. பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் பொலிதர நலமார்ந்த பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு கடலெழு விடமுண்டார் வேத மோதிய நாவுடை யானிடம் விற்குடி வீரட்டஞ் சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி தீவினை கெடுமாறே.


    5. கடிய ஏற்றினர் கனலன மேனியர் அனலெழ வூர்மூன்றும் இடிய மால்வரை கால்வளைத் தான்றன தடியவர் மேலுள்ள வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை விற்குடி வீரட்டம் படிய தாகவே பரவுமின் பரவினாற் பற்றறும் அருநோயே.


    6. பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் கையினர் மெய்யார்ந்த அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர் அரியவர் அல்லார்க்கு விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி விற்குடி வீரட்டம் எண்ணி லாவிய சிந்தையி னார்தமக் கிடர்கள்வந் தடையாவே.


    இப்பதிகத்தின் 7-ம் பாடல் சிதைந்து போயிற்று.


    8. இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை யிகலழி தரவூன்று திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு பொருளினன் இருளார்ந்த விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி விற்குடி வீரட்டந் தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத் துன்பநோ யடையாவே.


    9. செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் திருவடி யறியாமை எங்கு மாரெரி யாகிய இறைவனை யறைபுனல் முடியார்ந்த வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் விற்குடி வீரட்டந் தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர் தவமல்கு குணத்தாரே.


    10. பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ ராடைய ரவர்வார்த்தை பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் பரிவுறு வீர்கேண்மின் விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில் விற்குடி வீரட்டங் கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் கருத்துறுங் குணத்தாரே.


    11. விலங்க லேசிலை யிடமென வுடையவன் விற்குடி வீரட்டத் திலங்கு சோதியை எம்பெரு மான்றனை யெழில்திகழ் கழல்பேணி நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம் பந்தனற் றமிழ்மாலை வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் மற்றது வரமாமே.


    திருஞானசம்பந்தர் இத்தலத்திற்குரிய தனது இப்பதிகத்தை தினந்தோறும் ஓதுபவர்களை வினைகள் அடையாது என்றும், அவர்கள் வாழ்க்கையில் வருத்தம் இல்லாமல் இருப்பார்கள் என்றும், தீவினைகள், இடர்கள் அணுகாது என்றும், துன்பம் என்ற நோய் அணுகாது இருப்பார்கள் என்றும் பலவாறு குறிப்பிடுகிறார்.


    திருச்சிற்றம்பலம்.


    *தொடர்புக்கு:*
    91- 94439 21146
    சண்முகசுந்தரேச குருக்கள்.
    88708 87717.


    *திருவிழாக்கள்:*
    மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம்.
Working...
X