Announcement

Collapse
No announcement yet.

keidiliyappar temple Keezhvelur

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • keidiliyappar temple Keezhvelur

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.


    பிரபஞ்ச நாதனே போற்றி! பிறவாவரமருளு நாயகா போற்றி
    *102.*
    *பாடல் பெற்ற சிவ தல தொடர்.*


    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
    *கேடிலியப்பர் திருக்கோவில். கீழ்வேளூர்.*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல...........)


    *கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்.*


    தேவாரப் பாடல்கள் பெற்ற சிவத்தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எண்பத்து நான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *இறைவன்:* கேடிலியப்பர், அட்சயலிங்கேசுவரர்.


    *இறைவி:* வனமுலையம்மன், சுந்நரகுஜாம்பாள்.


    *தல விருட்சம்:* பத்ரி, இலந்தை.


    *தல தீர்த்தம்:* சரவண தீர்த்தம், அக்னி தீர்த்தம், சேஷ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், குபேர தீர்த்தம் ஆக மொத்தம் ஏழு தீர்த்தங்கள்.


    *திருமேனி:* சுயம்புவானவர்.


    *புராணப் பெயர்கள்:*
    இலந்தைவனம் (பதரிகாரண்யம்), கீவளூர், திருக்கீவளூர்.


    *ஆலயத் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *தொடர்புக்கு:*
    91- 4366- 276 733


    *ஊர்:*திருக்கீழ்வேளூர் கேடிலியப்பர்.


    *தேவாரம்பாடியவர்கள்:*
    திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்


    மானிடர்களின் கேடுகளைப் போக்கி, வினைகளை நீக்கி, துன்பமில்லா வாழ்வு தருபவர் இத்தல இறைவன் கேடிலியப்பர.


    *இருப்பிடம்:*
    திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் கீழ்வேளூர் தலம் உள்ளது.


    திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன.


    நாகப்படினத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் அமைந்து உள்ளது.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோவில்,
    கீவளூர் அஞ்சல்,
    நாகப்பட்டினம் வட்டம்,
    நாகப்பட்டினம் மாவட்டம் – 611 104.


    *ஆலயத் திறப்பு காலம்:* தினமும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்


    *கோவில் அமைப்பு:*
    சிலந்திச் சோழன் என்று பெயர் பெற்ற கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக்கோயில்களில் கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும்.


    நாம் இத்தலத்திற்கு வந்து ஆலயத்தெருவுக்குள் நுழைந்தோம்.


    ஊருக்கு நடுவாக கிழக்கு நோக்கியுள்ள வண்ணம் இவ்வாலயம் ஒரு பெரிய கோயிலாக காட்சி தந்தன.


    நமக்கு எதிரே ராஜகோபுரக் காட்சியைக் காணப்பெற்றதும் சிரம் மேல் கைகளை உயர்த்திக் குவித்து *சிவ, சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.


    கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி பிரமாண்டமாய் காட்சியளித்தது.


    கோபுரத்துக்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாகக் கூறப்படும் சரவண தீர்த்தத்தைப் பார்க்கவும், நம் பாதங்கள் அத்தீர்த்தத்தை நோக்கி நடையைத் துவக்கியது.


    கரையிலினில் நின்று தீர்த்த்தை அள்ளி சிரசிற்கு விட்டு ஈசனை நினைந்து கொண்டோம்.


    கோவிலின் உள்ளே நுழைய, வசந்த மண்டபம் காணப்படுகிறது.


    இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர், சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் மாடக் கோவிலில் காட்சி தந்து கொண்டிருந்தார்.


    மனமுருக பிரார்த்தனை செய்து அர்ச்சகர் தந்த வெள்ளிய விபூதியுடன் வெளி வந்தோம்.


    அடுத்து, அருகாகயிருந்த தூணருகில் சிறிது அமர்ந்தெழுந்தோம்.


    ஆலயத்தின் கருவறையைப் பார்த்தோம். அந்த கருவறை விமானத்தில் தென்புறம் சோமாஸ்கந்த விமானமும், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானமும், தலவிநாயகர் பத்ரி விநாயகரும், அத்துடன் சுந்தர விநாயகரும் இருந்ததைக் கண்டோம். நோக்கிய இடத்தினை வணங்கினோம்.


    கட்டுமலை எனப்படும் இவ்விடத்திற்கு நாம் வந்து சேர,.......அங்கே"


    சந்நிதியில் வலது பாத நடராஜர் தரிசனத்தைத் தந்தார். அவன் தூக்கிய திருவடியை பார்த்துக் கொண்டேயிருக்கனும் போலிருந்தது.


    "எல்லா சபையிலும் நடராஜர் பாதம் தூக்கிய நிலையைத்தான் பார்க்கிறோமே?.. பிறகு...ஏன் இங்கிருக்கும் நடராஜரின் தூக்கிய திருவடியை நோக்கிக் கொண்டே இருந்தேன் என்று கேட்கிறீர்களா?.........


    அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனத்தை இந்தத் தலத்தில்தான் தந்தார்.


    அவன் கண்களில் தெரிந்த அருட்பிரவாகங்களை அள்ளி அள்ளிப் பருகிக் கொண்டோம்.


    நகர்ந்து செல்ல மனமில்லாது திரும்பிப் பார்த்த வண்ணம் நடையிட்டோம்.


    ஆகவே அத்தகைய உடையதான இவர் வலது பாதத்தை தரிசனத்தை நாம் நோக்கக் காரணம்.


    அடுத்து சோமஸ்கந்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி, பதரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்கள் ஆகியோரையும் தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் நெஞ்சில் வணக்கத்திற்கு கூப்பிய கைகளை விலக்காது வணங்கிக் கொண்டே சென்றோம்.


    அடுத்து மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், மகாலட்சுமியும், சிவ ஆஞ்சநேயர் ஆகியோரையும் கண்டு தரிசித்துக் கொண்டோம்.


    அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சந்நிதிக்குள் புகுந்தோம்.


    அம்மை தெற்கு நோக்கியபடி அருளை வழங்கியபடி அருள் காட்சியை தந்து கொண்டிருந்தாள்.


    ஆனந்தமாக அமைந்தது அம்மையின் தீபாராதனை ஆரத்தி. தொட்டு வணங்கக் கொண்டு, அர்ச்சகர் தந்த குங்குமத்தை அடியேன், என் மனைவிக்கு நெற்றிக்கிட்டு வைத்தேன்.


    குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி இருக்கு என ஒருவர் கூறுகையில், அவ்விடம் போய் அவரையும் வணங்கிக் கொண்டோம்.


    குபேரனிடம், அவன் வைத்திருப்பதில் கொஞ்சம் வேண்டும் என, வணக்கத்தின்போது நாங்கள் கேட்கவில்லை. அனைவரும் சுபீட்சத்துடன் இருக்க அமைப்பு வேண்டும் என தொழுது கொண்டோம்.


    முருகப்பெருமானின் பூசைக்கும் தவத்துக்கும் கெடுதி உண்டாகாதவாறு இறைவி சுந்தர குசாம்பிகை, துர்க்கையின் அம்சம் கொண்டு காவல் புரிந்த அஞ்சுவட்டத்து அம்மையின் சந்நிதி முதல் பிராகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால், தனியே வட பக்கத்தில் இருக்க வணங்கிக் கொண்டோம்.


    மேலும் பஞ்சபூத லிங்கங்கள் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்க வணங்கி நகர்ந்தோம்.


    இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் *(ஸ்ரீ சுந்தர விநாயகர்)* மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை பணிந்து வணங்கிக் கொண்டோம்.


    தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு வந்தோம்.இவர் மிகப் பழமையான திருமேனியாகத் தெரிந்தார்.


    இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது.


    காளி உருவம் இருந்தது. இச்சிலை சுதையால் ஆனது. இருப்பினும் இத்திருமேனிக்குப் புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்பட்டு இருநாதன. ஆனால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை என அர்ச்சகர் கூறினார்.


    இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இப்பெயர் திருநாவுக்கரசரின் *"ஆளான அடியவர்க்கு அன்பன் தன்னை"*என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டக பதிகத்துள் எடுத்தாளப்பட்டுள்ளது.


    பாடல்தோறும், கீழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார்.


    வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது *"மின் உலாவிய சடையினர்"* என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில், *"வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க"* என்று குறிப்பிட்டிருக்கிறார்.


    மேலும் இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார்.


    எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவை எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையவை என்பது தெளிவு.

    கீழ்வேளூர் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்குள்ள முருகப்பெருமான், பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.


    திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும்.


    தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்துக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசியுங்கள் என அடியேனின் ஆவா.


    *தல அருமை:*
    முன்பு தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழக் காரணமாக இருந்தது.


    அவற்றில் ஒரு துளி இந்தியாவின் வடக்கே விழுந்து *வட பத்ரிகாரண்யம்* என தோன்றிற்று.


    மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து, இலந்தைவனமாகி *தென் பத்ரிகாரண்யம்* என தோன்றிற்று.


    பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். ஆகவேதான், இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத்தலம் தென் பத்ரிகாரண்யம் என்று அழைக்கப்பட்டது.


    இலந்தை மரமும் இத்தல விருட்சமாயிற்று.


    ஸ்ரீ முருகப் பெருமான், தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார்.


    அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார்.


    அதற்கு ஈசன், *'பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம்* என போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில், சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, தவமிருந்து வழிபட்டால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார்.


    அவரது அருளாணைப்படியே இத்தலத்துக்கு வந்த முருகப்பெருமான், தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார்.


    பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில் கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்லமங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.


    பின்னர், சரவணப் பொய்கையில் நீராடி, கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார்.


    அப்போது வீரஹத்திகளான மாயைகள் முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர்.


    அச்சமயம் சாந்த ஸ்வரூபியான ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருஉருவம் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன், நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு எந்தவிதமான கேடும் நேராமல் வராமல் காத்து நின்றார்.


    எனவே ஸ்ரீஅஞ்சுவட்டத்தம்மன் என்ற திருநாமமும் இந்த அம்பிகைக்கு உண்டு.


    குமரன் தவக்கோலத்திலேயே இங்கு காட்சி தருகிறார்


    *தல பெருமை:*
    கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள அஞ்சுவட்டத்தம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அகத்தியர் பூஜித்த லிங்கமும் உள்ளது.


    இங்குள்ள நடராஜர் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கிய நிலையில் பத்து திருக்கரங்களுடன் அகத்தியருக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.


    *நோய் தீரும் பிரார்த்தனை:* படைப்பாற்றல் குறைந்ததால், கோயில் வடக்கு கோபுர வாசலின் எதிரில் பிரம்மதீர்த்தம் ஏற்படுத்தி, அதில் மூழ்கி அட்சயலிங்க சுவாமியை வழிபட்டார் பிரம்மா.


    அவருக்கு மீண்டும் படைக்கும் ஆற்றல் கிடைத்தது. இங்குள்ள திருமஞ்சனக்குளம் தோஷ நிவர்த்தியை அளிக்கிறது.


    நிருதி மூலையிலுள்ள இந்திர தீர்த்தத் தடாகத்தில் இந்திரன் முழ்கி தன் சாபம் நீங்கப் பெற்றான்.


    தென்மேற்கு மூலையிலுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடினால் தோல் நோய் குணமடைவதாக நம்பிக்கையுள்ளது.


    *சிற்ப வேலைப்பாடு:* அம்பிகை பிம்பம் சுதையால் ஆனதால் அபிஷேகம் கிடையாது. சாம்பிராணித்தைலம் மட்டும் சாத்தப்படுகிறது.


    முருகன் வடக்குப்பார்த்து பாலரூபமாய் புன்சிரிப்புடன் நின்று தவம் புரிகிறார்.


    தவநாயகர் என்று அழைக்கப்படும் தியாகராஜர் திருவுருவம் சிறப்பானதாகும்.


    கோயிலிலுள்ள சிங்க உருவங்களும், யாளி வரிசைகளும், வளைந்து தொங்கும் சட்டங்களும், அவற்றின் நுனியில் வாழைப்பூத் தொங்கல்களும், அதைத் தம் மூக்கால் கொத்தும் கிளிகளும் சிற்ப வேவலைப்பாடுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.


    *விசேஷ அம்பாள்:* மூலவர் அட்சயலிங்க சுவாமி என்ற கேடிலியப்பர் என்றும், அம்பாள் சுந்தரகுஜாம்பாள் என்றும், வனமுலை நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். பத்ரகாளியின் அம்சமான "அஞ்சுவட்டத்தம்மன்' என்ற தெய்வமும் இங்கு குடியிருக்கிறாள்.


    நான்கு திசைகள் மற்றும் ஆகாயம் ஆக ஐந்து புறங்களிலும் இருந்து பிரச்னை ஏற்பட்டாலும், பாதுகாப்பு தருபவளாக விளங்குவதால் இந்தப்பெயர் சூட்டப்பட்டது.


    இவள் ஒரு சமயம் ஐந்துமுறை ஆகாயத்தில் வட்டமடித்து நடனமாடியதாகவும், அதனால் இந்தப் பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.


    எப்படியாயினும், இவள் ஆகாய தெய்வம் என்பதால், அடிக்கடி விமானபயணம் மேற்கொள்வார்,


    இந்த அம்பாளை வணங்கி விபத்தின்றி பயணம் செய்ய வேண்டிக் கொள்ளலாம்.


    மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உற்சவரான கல்யாணசுந்தரரும், நர்த்தன கணேசரும் அருள்பாலிக்கின்றனர்.


    *தேவாரம்:*
    திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் "இத்தல இறைவனை வழிபடுவர்களின் பிணிகளும் வினைகளும் போகும், வழிபடுவோர் நிலைத்த பேரின்ப வாழ்வு மிகப் பெறுவர், ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும், இத்தல இறைவனை வழிபட்டால் நம்மை துன்பங்கள் அடையாது, ஞானசம்பந்தன் அருளிய இத்தல பதிகப் பாடல்களை ஓதுபவர் சிவகதி பெறுதல் உறுதி" என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.


    அப்பர் பெருமான் இத்தல இறைவனை வழிபடுவர்களின் கேடுகள் எல்லாம் அழிந்து விடும் என்று தனது பதிகப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

    கீழே இருப்பது திருநாவுக்கரசரின் கீழ்வேளூர் பதிகம்.


    ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை
    ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
    தாளானைத் தன் ஒப்பார் இல்லாதானைச்
    சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
    தோளானைத் தோளாத முத்து ஒப்பானைத்
    தூவெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
    கீளானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடு இலாரே.


    சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
    தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
    நற்பான்மை அறியாத நாயினேனை
    நன்னெறிக்கே செலும் வண்ணம் நல்கினானைப்
    பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
    பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
    கிற்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..


    அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை
    ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
    விளைவானை மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை
    வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
    குளைவானை அல்லாதார்க் குளையா தானை
    உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
    கிளைவானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..


    தாட்பாவு கமலமலர்த் தயங்குவானைத்
    தலையறுத்து மாவிரதம் தரித்தான் தன்னைக்
    கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னைக்
    கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
    மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை
    வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
    கேட்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..


    நல்லானை நரைவிடை ஒன்றூ ஊர்தியானை
    நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
    சொல்லானைச் சுடர்மூன்றும் ஆனான் தன்னைத்
    தொண்டாகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை
    வில்லானை மெல்லியல் ஓர் பங்கன் தன்னை
    மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
    கில்லானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..


    சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
    தூமத்தம் வாளரவஞ் சூடினானை
    அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
    ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
    விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
    மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை
    கிழித்தானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..


    உளரொளியை உள்ளத்தின் உனுள்ளே நின்ற
    ஓங்காரத்துட் பொருள்தான் ஆயினானை
    விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
    விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை
    வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை
    வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்
    கிளரொளியைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..


    தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
    தன்னடைந்த மாணிக்கு அன்று அருள்செய்தானை
    உடுத்தானைப் புலி அதளோடு அக்கும் பாம்பும்
    உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை
    மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
    வானவர்கள் கூடிய அத் தக்கன் வேள்வி
    கெடுத்தானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..


    மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை
    மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு
    பூண்டானைப் புறங்காட்டில் ஆடலானைப்
    போகாது என் உள் புகுந்து இடங்கொண்டான் என்னை
    ஆண்டானை அறிவரிய சிந்தையானை
    அசங்கையனை அமரர்கள் தம் சங்கை எல்லாம்
    கீண்டானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..


    முறிப்பான பேசிமலை யெடுத்தான் தானும்
    முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
    பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டினானைப்
    பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
    பொறித்தானைப் புரமூன்றும் எரிசெய்தானைப்
    பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
    கிறிப்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடு இலாரே ...
    திருச்சிற்றம்பலம்.


    *நாளைய தலம் தேவூர் வேதபுரீஸ்வரர்.*




    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X