Announcement

Collapse
No announcement yet.

Thirupambaram temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirupambaram temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    *சிவ தல தொடர். 77.*

    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்*



    *திருப்பாம்புரம்*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல.......)

    *அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில்.திருபாம்புரம்*


    *இறைவன்:* சேஷபுரீஸ்வரர், பாம்புரேசுவரர், பாம்பீசர், பாம்புரநாதர்.


    *இறைவி:* பிரபராம்பிகை, வண்டார் குழலி.


    *தீர்த்தம்:* ஆதிசேஷ தீர்த்தம்.


    *தலவிருட்சம்:* வன்னி மரம்.


    *ஆலயப்பழமை:*
    ஆயிரத்திலிருந்து, இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னதானது.


    *புராணப் பெயர்:*
    சேஷபுரி, திருப்பாம்புரம்.


    சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் இத்தலம் ஐம்பத்து ஒன்பதாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *இருப்பிடம்:*
    கும்பகோணம் காரைக்கால் பேருந்து வழித் தடத்தில், கற்கத்தி என்ற ஊரின் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.


    கும்பகோணத்திலிருந்து இருபத்தைந்து கி.மீ. தூரத்திலும், பேரளத்திலிருந்து எட்டு கி.மீ. தூரத்திலும் இத்தலம் உள்ளது.


    *கோவில் அமைப்பு:*
    இவ்வாலயத்திற்கு செல்லும்போது, மூன்று நிலைகளுடான இராஜகோபுரத்தைப் பார்த்ததும் *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.


    இராஜ கோபுரம் கிழக்கு நோக்கி அழகுடன் அமைந்திருந்தது.


    இராஜகோபுரத்தின் எதிரே *ஆதிசேஷ தீர்த்தம்* இருக்கக் கண்டு, சிரசில் தீர்த்தத்தை தெளித்து, வானினை நோக்கி ஈசனை நினைந்து கைதொழுது கொண்டோம்.


    கோவிலினுள் உள் புகுந்து மூலவர் பாம்புரேஸ்வரரை தரிசிக்க சந்நிதி முன் வந்து நின்றோம்.


    மூலவர் கிழக்கு நோக்கி காட்சியருளி நாககவசம் சாற்றப்பட்டு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.


    அவரிடம், தனத்தினையென எதுவும் நினையாது மனத்தூய்மை நிலைத்து நலமருள வேண்டுவாயென மனமுருகப் பிரார்த்தனை செய்து அவரருட் கருணையையும், அர்ச்சகர் தந்த வெள்ளிய விபூதியையும் பெற்று, அவ்விபூதியை அவ்விடத்திலேயே மூவிரலால் திரித்து, திரித்த விபூதியை நெற்றியிணில் அணியும் போது, விபூதியை கீழ்சிதறாதிருக்க நெற்றியை மேல் நோக்கிய வண்ணம் விபூதியைத் தரித்து அணிந்தோம்.


    (குனிந்து விபூதி அணிந்து விபூதியை கீழே சிதறச் செய்யின், அவ்வெள்ளிய விபூதியை, மிதிவார் வேறு யாரேயாயினும், மிதிபட சிதறிய காரணமான பாவம் நம்மை நாடும். *சிவ சிவ, கவணம்!*)


    அடுத்ததாக அம்பாள் சந்நிதிக்கு வந்தோம். இவளும் கிழக்கு நோக்கிய வண்ணம் அருளோச்சிக் கொண்டிருந்தாள்.


    அம்பாளின் ஒரு கையில் தாமரை மலரைத் தாங்கியிருந்தார்.


    மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையை தாங்கியவாறும், அபய முத்திரையையும் காட்டியவாறும் காட்சி தந்தாள்.


    தீப ஆராதனையில் அம்பாளின் அருள் பிரவாகங்களை ஆனந்தித்து வணங்கித் துதித்து வெளிவந்தோம்.


    இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானவர்கள் ஆகையால் மறவாது இவரைத் தரிசியுங்கள் என ஆலயத்துக்கு வந்திருந்தோர் ஒருவர் கூற........"விடுவோமா?.. விரைந்தோம்
    மலையீசுவர் சந்நிதிக்கு.


    அங்கு அச்சட்டநாதரையும், மலையீசுவரரையும் எந்த நெருக்கடியும் இலாது ஆனந்தத்துடன் தரிசித்தோம்.


    நல்ல வேளை, ஆலயத்துக்கு வந்திருந்தோர் கூறினார். வீடு வந்த பின், மலையீசுவரரை வணங்காது விட்டு வந்த சந்நிதி, நம் நினைவுக்கு வருமாயின், அன்றைக்கு தூக்கம் கெட்டது. மன நிம்மதியையும் இழப்பேன்.


    ஆகையினால் எப்போதும் ஆலயம் செல்கையில், உள்ளும், புறமும், அருகிலும் உள்ளதனை, அருகில்லோரிடம் கேட்டுத் தெரிவது தெளிவு.


    பின் தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகிய சந்நிதிகளுக்கும் சென்று கைதொழுது கொண்டோம்.


    திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகாமையில் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டதனால், பயணத்திற்கு ஏற்கனவே காரில் வந்திருந்தனால், மதிய சாப்பாட்டுக்குப் பின்பு திருவீழிமிழலை ஆலயம் செல்ல முடிவெடுத்துக் கொண்டோம்.


    திருப்பாம்புரம் கோவிலின் பிராகாரம் வலம் செல்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தோம்..... இத்தலப் பிராகாரத்திலிருந்தவாறு திருவீழிமிழலை கோவிலின் விமானம் நமக்கு நன்கு தெரிந்தன.


    திருப்பாம்புர ஆலயத்தை ஆதிசேஷன் வழிபட்டதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.


    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுமாம். அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று அர்த்தம் என செவிவழிச் செய்தியாக நம் செவியில் விழுந்தது.


    இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை எனவும். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உள்ளது என்றும் இத்தல பதியில் வசிப்போர் கூறினர்.


    ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும், வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், *"பாம்புரம்"* எனப் பெயர் கொண்டது.


    திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் *"பாம்புர நன்னகர்"* என்று குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகத்திலும்,
    சுந்தரர் தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அருணகிரிநாதரும்திருப்புகழில் இந்த தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.


    இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் இன்றளவும் நம்பப்படுகிறது.


    *சிவராத்திரி தொடர்புள்ளவை:*
    நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில்
    *கும்பகோணம் நாகேஸ்வரர்* கோயிலிலும், இரண்டாம் காலத்தில் *திருநாகேஸ்வரத்திலும்,* மூன்றாம் காலத்தில் *திருப்பாம்புரத்திலும்,* நான்காம் காலத்தில்
    *நாகூரிலும்* வழிபட்டு
    பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.


    *வழிபட்டோர்:*
    அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன்.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    *அப்பர், சம்பந்தர், சுந்தரர்* ஆகிய மூவரும் பதிகப் பாடல்களைத் தந்துள்ளனர்.


    *திருஞானசம்பந்தர்* இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.


    1. சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் திரிபுர மெரிசெய்த செல்வர் வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் மான்மறி யேந்திய மைந்தர் காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல் கண்ணுதல் விண்ணவ ரேத்தும் பாரணி திகழ்தரு நான்மறை யாளர் பாம்புர நன்னக ராரே.


    2. கொக்கிற கோடு கூவிள மத்தங் கொன்றையொ டெருக்கணி சடையர் அக்கினொ டாமை பூண்டழ காக அனலது ஆடுமெம் மடிகள் மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் விண்ணவர் விரைமலர் தூவப் பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே.


    3. துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர் சூறைநல் லரவது சுற்றிப் பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப் பித்தராய்த் திரியுமெம் பெருமான் மன்னுமா மலர்கள் தூவிட நாளும் மாமலை யாட்டியுந் தாமும் பன்னுநான் மறைகள் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே.


    4. துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான் நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர் நள்ளிருள் நடஞ்செயும் நம்பர் மஞ்சுதோய் சோலை மாமயி லாட மாடமா ளிகைதன்மே லேறி பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னக ராரே.


    5. நதியத னயலே நகுதலை மாலை நாண்மதி சடைமிசை யணிந்து கதியது வாகக் காளிமுன் காணக் கானிடை நடஞ்செய்த கருத்தர் விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி ஓவாப் பதியது வாகப் பாவையுந் தாமும் பாம்புர நன்னக ராரே.


    6. ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர் ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர் மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல் மான்மறி யேந்திய மைந்தர் ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய அலைகடல் கடையவன் றெழுந்த பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர் பாம்புர நன்னக ராரே.


    7. மாலினுக் கன்று சக்கர மீந்து மலரவற் கொருமுக மொழித்து ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி அனலது ஆடுமெம் மடிகள் காலனைக் காய்ந்து தங்கழ லடியாற் காமனைப் பொடிபட நோக்கிப் பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள் பாம்புர நன்னக ராரே.


    8. விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க மெல்லிய திருவிர லூன்றி அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள் அனலது ஆடுமெம் மண்ணல் மடக்கொடி யவர்கள் வருபுன லாட வந்திழி அரிசிலின் கரைமேற் படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும் பாம்புர நன்னக ராரே.


    9. கடிபடு கமலத் தயனொடு மாலுங் காதலோ டடிமுடி தேடச் செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந் தீவணர் எம்முடைச் செல்வர் முடியுடையமரர் முனிகணத் தவர்கள் முறைமுறை யடிபணிந் தேத்தப் படியது வாகப் பாவையுந் தாமும் பாம்புர நன்னக ராரே.


    10. குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங் குற்றுவிட் டுடுக்கையர் தாமுங் கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங் கையர்தாம் உள்ளவா றறியார் வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்னக ராரே.


    11. பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த பாம்புர நன்னக ராரைக் கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக் கழுமல முதுபதிக் கவுணி நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான சம்பந்தன் செந்தமிழ் வல்லார் சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச் சிவனடி நண்ணுவர் தாமே.


    *இத்தலத்திற்கு மற்றொரு தல வரலாறும் உண்டு, அதுவாவன:*
    முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது.


    இதனால் வாயு பகவான் தன் வலிமையால், பெரிய பெரிய மலைகளை எல்லாம் புரட்டிப் போட்டான்.


    ஆதிசேஷனோ அந்த மலைகளை தன் வலிமையால் தடுத்து நிறுத்தினான்.


    இருவரும் சமபலத்துடன் இருந்த காரணத்தால், வெற்றித் தோல்வி யாருக்கு என்பதை கணிக்க முடியவில்லை.


    இதனால் கோபம் கொண்ட வாயு பகவான், ஏனைய உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை நிறுத்தினார். இதனால் உயிரினங்கள் சோர்ந்து, மடியும் நிலை ஏற்பட்டது.


    இதையடுத்து தேவர்களின் வேண்டுகோள் படி, ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கிக் கொண்டான். மேலும் உலக உயிர்கள் துன்பப்பட தானும் ஒரு காரணமாக இருந்ததால், திருப்பாம்புரம் சென்ற ஆதிசேஷன், அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து தன்னுடைய தவறை பொறுத்தருளும் படி
    இறைவனை வேண்டினான்.


    *சிறப்பு:* திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். நாகராசன் (ஆதிசேஷன்) வழிபட்ட இத்தலம் பாம்பு+புரம் = "பாம்புரம்" திருப்பாம்புரம், எனப் பெயர் கொண்டது.


    திருநாகேஸ்வரம், காளஹஷ்தி, கீழ்பெரும்பள்ளம் போன்ற நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் முழுமையும் இந்தத் திருப்பாம்பரம் சென்று தரிசித்தால் கிடைக்கும்.


    இங்கு ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக காட்சியளிக்கின்றனர். இந்ததலத்தில் பாம்புகள் வடிவில் இறையடியார்கள் வாழ்வதாக ஐதீகம்.


    இத்தலத்தில் பாம்பு தீண்டுவதில்லை, அகத்தி பூப்பதில்லை, ஆலின் (ஆலமரம்) விழுது தரை தொடுவதில்லை என்பது உண்மை.


    அன்னையின் மீதும் அப்பனின் மீதும் நாகம் சட்டை உரித்து மாலையாகச் சூட்டுவது இயல்பாக அடிக்கடி நிகழ்கிறதாம்.


    ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், பதினெட்டு வருட ராகு திசை நடந்தால், ஏழு வருட கேது திசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைப்படுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் இருந்தால், நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க தோஷம் நிவர்த்தியாகும்.


    மகா சிவராத்திரியில் ஆதிசேஷன் இறைவனை வழிபட சிற்றம்பல விநாயகர் துணையுடன் ஏற்படுத்திய குளம், வடக்கு வீதியில் *சிற்றம்பலக் குட்டை* என்னும் பெயரில் உள்ளது.


    இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் பதினைந்து உள்ளன. அவை இராஜராஜன், இராஜேந்திரன், திரிபுவனவீரதேவன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்தியவை.


    இத்தலம் உய்யக்கொண்டார் வளநாட்டுத் திருப்பாம்புரம் எனவும் வழங்கப்படுகிறது. இறைவன் திரும்பாம்புரமுடையார் எனவும், இறைவி மாமலையாட்டியாள் எனவும், விநாயகப் பெருமான் இராஜராஜப் பிள்ளையார் எனவும் கல்வெட்டில் வழங்கப்படுகிறது.


    இராஜராஜதேவன் காலத்தில் சோழிய தரைய வேளான் தாமோதரையனால் கோயில் இரண்டாம் பிராகாரத்தில் மண்டபங்கள் கட்டவும் இதனைப் பராமரிக்கவும் நிலமளிக்கப்பட்டது உள்ளது.


    வசந்த மண்டபத்தை சரபோஜி மன்னனுடைய பிரதிநிதியான சுபேதார் ரகுபண்டிதராயன் கட்டினான் என உள்ளது.


    கல்வெட்டுக்களில் இறைவனை, பாம்புரம் உடையார் எனவும், பிள்ளையாரை ராஜராஜப் பிள்ளையார் எனவும், அம்பாளை மாமலையாட்டி எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.


    *தல அருமை:* கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது, இறைவன் கழுத்திலிருந்த பாம்பு, விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டது.


    அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தையும் இழந்து அல்லல் பட்டன.


    சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதித்தன. இறைவனும் மனம் இரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் அடையலாம் என அருளினார்.


    அதன்படி ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் *கும்பகோணம் நாகேஸ்வரரையும்,* இரண்டாம் சாமத்தில் *திருநாகேஸ்வரம் நாகநாதரையும்,* மூன்றாம் சாமத்தில் *திருபாம்புரம் பாம்புர நாதரரையும்,* நான்காம் சாமத்தில் *நாகூர் நாகநாதரையும்* வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.


    *பூஜை நேரம்:*
    காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை,


    ஞாயிறு மற்றும் செவ்வாய் மாலை 2.45 மணி முதல் இரவு 8.00 மணி வரை,


    புதன்கிழமை ராகு, கேது பூஜை பகல் 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை,


    வியாழகிழமை ராகு, கேது பூஜை பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை.


    *பூஜை விவரம் :*
    நான்கு கால பூஜைகள்.
    காலசந்தி காலை 9.00 மணி,
    உச்சிகாலம் பகல் 12.15 மணி ,
    சாயரட்சை மாலை 5.15 மணி ,
    அர்த்தசாமம் இரவு 8.00 மணி.


    *திருவிழாக்கள் :*
    மாசிமகம்- தீர்த்தவாரி - பஞ்சமூர்த்தி வழிபாடு,
    ராகு-கேது பெயர்ச்சியன்று விசேஷம்,
    மாசிவராத்திரி அன்று இரவு நான்குகால சிறப்பு பூஜைகள்.


    *அருகிலுள்ள நகரம்:* கும்பகோணம்.


    *அஞ்சல் முகவரி:* அருள்மிகு பாம்பு புரேஸ்வரர் திருக்கோயில்,
    திருபாம்புரம், சுரைக்காயூர் அஞ்சல் - 612 203,
    குடவாசல் வட்டம்,
    திருவாரூர் மாவட்டம்.


    *தொடர்புக்கு:* 0435-2469555,. 94439 43665,. 94430 47302


    திருச்சிற்றம்பலம்.


    *நாளைய தலம், திருச் சிறுகுடி.....வ(ள)ரு ம்.*



    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X