Announcement

Collapse
No announcement yet.

Mukkodal temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Mukkodal temple

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    பிரபஞ்ச நாதனே போற்றி!
    பிறவாவரமருளு நாயகா போற்றி!

    *தலம்.104.*
    *பாடல் பெற்ற சிவ தலங்கள் தொடர்.*

    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
    ☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
    *திருப்பள்ளியின் முக்கூடல், முக்கோணநாதர்.*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல.............)

    *திருப்பள்ளியின் முக்கூடல் திருப்பள்ளிமுக்கூடல்.*
    (குருவிராமேஸ்வரம்.)



    *இறைவன்:* திருநேத்ரசுவாமி, முக்கூடல்நாதர், முக்கோண நாதர்.


    *இறைவி:* அஞ்சனாட்சி, மைமேவு கண்ணியம்மை.


    *திருமேனி:* சுயம்புவான திருமேனியாவார்.


    *தல விருட்சம்:* வில்வம்.


    *தல தீர்த்தம்:* முக்கூடல் தீர்த்தம். (கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இங்கு ஒன்றாகக் கூடுவதாக ஐதீகம்.)


    *ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *திருவிழாக்கள்:*
    தை, ஆடி மகாளய அமாவாசை, மற்றும் சிவனுக்குரிய அனைத்து விசேஷ திருவிழாக்கள்.


    *தொடர்புக்கு:*
    91 -4366 - 244 714
    98658 44677


    *பதிகம்:*
    திருநாவுக்கரசர்.


    *அஞ்சல்முகவரி:* அருள்மிகு முக்கோண நாதேசுவரர் திருக்கோயில்,
    திருப்பள்ளி முக்கூடல்,
    கேக்கரை அஞ்சல்,
    வழி திருவாரூர்.
    திருவாரூர் வட்டம்.
    திருவாரூர் மாவட்டம்.
    PIN - 610 002.


    *ஆலயத் திறப்பு காலம்:*
    தினந்தோறும் காலை 11.00 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *சிறப்பு:*
    மூர்க்கரிஷி பூஜித்த தலம், நகரத்தார் திருப்பணியுடன் கோயில் நன்கு பொலிவுடன் காட்சி தருகிறது


    கிழக்கு நோக்கிய சந்நிதி. திருவாரூர்க் கோயிலோடு இணைந்தது.


    (முக்கூடல் தீர்த்தம் கோயில் எதிரில் உள்ளது. இத்தீர்த்தம் திரிவேணி சங்கமத்திற்கு ஒப்பாகச் சொல்லப் படுகிறது) .


    இத்தல இறைவனின் பெயரை சம்ஸ்கிருதப் பெயராகனதை, அதைத் தமிழில் நோக்க *'முக்கண்நாதர்'* என்றிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் சிதைவுற்று தொடர்பே இல்லாமல் *'முக்கோணநாதர்'* என்று வழங்குகிறது.


    *பெயர் புலர்வு:*
    மக்கள் வழக்கில் *'திருப்பள்ளி முக்கூடல்'* என்று இன்று வழங்குகிறார்கள்..


    பழைய சிவத்தல மஞ்சரி நூலில் இத்தலத்தின் பெயர் *'அரியான்பள்ளி*' என்று குறிக்கப்பட்டுள்ளது.


    *(அரிக்கரியான் பள்ளி என்றும் அரியான்பள்ளி என்றும் அக்கால மக்கள் வழங்கி வந்தனராதலின் அரியான்பள்ளி என்று அந்நூலில் குறித்துள்ளனர்.)*


    ஆனால் இன்று அப்பெயர் மாறி, *'திருப்பள்ளி முக்கூடல்*என்றே வழங்குகிறார்கள்.


    இப்பெயர் சொல்லிக் கேட்டால் இன்றுள்ள மக்களுக்குத் தெரிகிறது.


    மேலும், இத்தல வரலாறு ஜடாயுவுடன் தொடர்புடையதாதலால் இத்தலத்தை இங்குள்ள மக்கள் *"குருவிராமேஸ்வரம்"* என்றும் கூறுகின்றனர்.


    *இருப்பிடம்:*
    திருவாரூரிலிருந்து கடைத் தெரு வழியாகக் *'கேக்கரை'* ரோட்டில் வந்து, ரயில்வே லெவல் கிராசிங்கைத் தாண்டி, *'கேக்கரை'* யை அடைந்து, அங்கிருந்து அதே சாலையில் 1 AE பேருந்தில் சென்று சிறிய பாலத்தைத் தாண்டி, சிறிது தூரம் சென்றதும், அங்கு இரண்டாகப் பிரியும் பாதையில் இடப்பக்கமாகச் செல்லும் பாதையில் 1 AE சென்றால் ஊரையடையலாம்.


    (கேக்கரை ரோட்டினை மக்கள் ராமகே ரோடு என்றும் கூறுகின்றனர்) . பேருந்து ஊர் வரை செல்லும்.


    சரளைக்கல் பாதைதான். மிக அதிக அகலமான பேருந்தாக இருப்பினும் செல்வதற்குச் சிரமப்படும்.
    ஊர்த் தொடக்கத்திலேயே கோயில் உள்ளது.


    *கோவில் அமைப்பு:*
    இத்தலத்திற்கு சென்றிருந்தபோது கோபுரத்தைக் காணாது அங்கு விசாரிக்க இக்கோயிலுக்கு இராஜகோபுரமில்லை" என்று சொன்னார்கள்.


    மனநெருடலுடன் ஆலயத்தை நோக்கி நடந்தோம். கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் தெரிந்தது.


    முகப்பு வாயிலிருக்கும் மதிற்சுவர் மாடங்களில் இரண்டு புறமும் விநாயகரும், முருகரும் இருந்தனர்.


    விநாயகனுக்கு தோப்புக்கரணமிட்டு, முருகனுக்கு கைகள் உயர்த்திக் கைதொழுது வணங்கிக் கொண்டோம்.


    முகப்பு வாயிலின் மேற்புறத்தை நாம் நோக்கவும் அங்கே, இறைவன், இராமர், ஜடாயு, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோர்களின் சுதையானால உருவங்களைக் கண்டோம்.


    அச்சுதையமைப்புகள் அழகுடன் அருளும் சேர்ந்து கோர்த்தது போல பாவனைகளைக் கண்டு லயித்துப் போனோம்.


    உள்ளே நுழைந்ததும் வலதுபுறமாக சூரியனும் சந்திரனும் திருமேனிகள் இருக்க வணங்கிக் கொண்டோம்.


    இதைத் தொடர்ந்து செல்ல உள் மண்டபத்தைக் காண்கிறோம்.


    அம்மண்டபத்தினுள் நுழைந்து சென்றால் நேராக மூலவர் சந்நிதி தெரிந்தது. அவர்முன் வந்து வணங்க நின்றோம்.


    இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து நம்மை நோக்கி அருளைத் தரும் வண்ணமிருந்தார்.


    இவர், ருத்ராட்ச பந்தலிருக்க அதன் கீழ் பிரகாச மூர்த்தியாக அமர்ந்திருந்தார்.


    அழகு அருளுடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து காட்சி தந்து கொண்டிருந்தார். அருமையான தரிசனம். மனமுருக தியானித்தோம். அர்ச்சகர் தீபாராதனையும் வெள்ளிய விபூதியையும் நுள்ளித்தர பெற்றுக் கொண்டோம்.


    திரும்ப எத்தனிக்கையில், மீண்டும் ஒருமுறை இறைவனைப் பார்த்து,...... மறுமுறையும் ஒரு முறை உன்னைத் தரிசிக்க வரும் பலனை எமக்கருள வேண்டுமென்றும், பொருளாதாரமில்லாது உன்னை நினைந்து ஏங்குவோர்க்கு உன்னாலயம் வர...... *(நாவுக்கரசரை,.."நீ எம் ஆலயம் வா"...எனக் கூறினாரே!. அது போல)*
    அவ்வடியாரையும் உன்னை நாடி வர ஏதுவாக்குவாயாக என நாம் விண்ணப்பம் செய்தோம். அதை நீ அருள்வாயாக! என்று சொல்லி திரும்பினோம்.


    அடியார்கள் எண்ணத்தை இறைவனிடம் கொண்டு சேர்த்தால், அதற்கு இறைவன் உடனடியாக அருள் விழைவான் என்பது என் நம்பிக்கை. ஏனென்றால் நானும் பொருளாதாரத்தில் குறுகியவன்தான்.


    யார் வேண்டுதலோ" எண்ணமோ" அடியேன் இங்கு வருவதற்கு யாரோருவரின் வேண்டுதலே காரணம். அதனாலேயே அடியேனுக்கு இங்கு தரிசனம் வாய்த்தது.


    வணங்குவதற்கும், அவன் அருள் இல்லாமல் நாம் செல்ல முடியாது!.


    நீங்கள் வேண்டுமானால் நினைத்துக் கொண்டிருக்கலாம். பணத்தை எடுத்துக் கொண்டு ஆலயத் தரிசனத்திற்குச் சென்றோமென்று! நிதர்சனமா அது அப்படியல்ல! அது அவன் விழைவித்தது!...................
    இதை உணரப்படுவதற்கு கொஞ்சம் பக்குவ நிலை வரவேண்டும்.


    மாசி மாதத்தில் சிவராத்திரி நாளுக்கு இரண்டு நாள் முன்னதாகவே இத்தலத்திற்கு நாம் சென்றுவிட்டிருந்தோம்.


    சிவராத்திரி அன்று சென்றிருந்தோமானால், சூரியக்கதிர்கள் சிவன் திருமேனியைத் தழுவியதைக் கண்டிருக்க முடியும். இச்சூரியத் தழுவல் தரிசனம் இத்தலத்தின் சிறப்பம்சம் என அருகிருந்தோர் கூறினர்.


    நமக்கு வாய்க்காத அந்த வாய்ப்பினை எண்ணி மனம் வருந்தாது, மனக்கோயில் கட்டிய நாயனார் போல, சூரியன் சுவாமியைத் தழுவி அபிஷேகித்தத் தருண நிகழ்வுகளை நம் மனத்தில் நினைந்து கொண்டு.. ஆ..ன..ந்..தி..த்..து..க் கொண்டோம்.


    இத்தலத்திலுள்ள மற்றுமோரு இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால்............


    சுவாமி சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் ஒரே அடித்தளத்தில் ஒரே மண்டபத்தில் அதுவும் அருகாமையில் இருந்தன.


    ஒரே மண்டபத்துடன் ஈசன் சந்நிதி, அர்த்த மண்டபத்துடனும் கருவறை கொண்டு கிழக்குப் பார்த்த வண்ணம் இருந்தன.


    அதே மண்டபத்தில் அம்பாள் சந்நிதி, அந்த்ராளம் மூலஸ்தான அமைப்பில் தெற்கு பார்த்த வண்ணம் இருந்தன.


    இந்த அமைப்பின் காரணமாய்..... *(தில்லையில் அந்த மாலனின் முன் மேடையில் நின்றால் நம் தில்லை ஆடல்வல்லானை பார்க்கும் நிலையில்)* சுவாமியை வணங்கியபடியே தெற்காக நோக்க, அம்பாளையும் தரிசிக்க முடியும்.


    அம்பாள் நின்ற கோலத்துடன் புண்ணகைகள் அரும்பியவாறு புத்தொளி வீசக் காட்சியருள் தந்து கொண்டிருந்தாள்.


    நாமும் அதுபோலவே நின்று வணங்கி ஆனந்தித்தோம். பின் அம்பாள் சந்நிதிக்கும் வந்து வணங்கி அவளருளையும், அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு நகர்ந்தோம்.


    சுற்றுப் பிராகாரத்தில் நாகர், பைரவர், சனீஸ்வரர், வள்ளி, சூரியன், சந்திரன் ஆகியோரின் திருமேனிகளைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.


    சுற்று வலத்தில் வரும்போது, வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகர் சந்நிதியும், தனியே சுப்பிரமணியர் சந்நிதியும், கஜலட்சுமி ஆகியோர் சந்நிதிகளுக்குச் சென்று வணங்கிக் கொண்டோம்.


    வடமொழியில் *திரிநேத்ர சுவாமி* என்று கூறப்பட்டிருக்கிறார்கள். இத்தல இறைவன் பெயரை அதற்கு இணையாக தமிழில் *முக்கண்நாதர்* என்றுதான் அழைத்திருக்க வேண்டும்.


    ஆனால், வாய்க்குமைந்த பேச்சு வழக்கால் பெயரைச் சிதைவுறச்செய்து தொடர்பே இல்லாமல் *முக்கோணநாதர்* என்று கூறத் தொடங்கிவிட்டார்கள் போலும்...........


    *தல அருமை:*
    "ஜடாயு இறைவனை நோக்கித் தவம் செய்து, தனக்கு இறுதி எப்போது என்று கேட்க, இறைவன் அவரைப் பார்த்து, "இராவணன் சீதையை எடுத்து வரும் நேரத்தில் நீ தடுப்பாய். அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய்" என்றாராம்.


    அது கேட்ட ஜடாயு "பெருமானே! அப்படியானால் நான் *காசி, கங்கை, இராமேஸ்வரம், சேது* முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடைய முடியாமற்போகுமே என் செய்வேன்" என வேண்டினான்.


    அதற்கு இறைவன் முக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க அவரும் அவ்வாறே மூழ்கிப் பலனைப் பெற்றாராம்.


    இவ்வரலாற்றையொட்டித்தான் மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதிய *'குருவி ராமேஸ்வரம்'* என்று கூறுகின்றனர்.


    இதனால் இத்தீர்த்தமும் திரிவேணி சங்கமத்திற்கு நிகராகவும், இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு (கங்கை, சேது) தீர்த்த விசேஷப் பலனைத் தருவதால் இத்தீர்த்தம் *"ஷோடசசேது"*என்றும் சொல்லப்படுகிறது."


    கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன


    இத்தலப் பெருமானை வணங்காது, நாட்களை பாழாக்கியதாக வருந்துகிறார், ஆளுடைய அரசரான அப்பரடிகள்.


    சிறிய கிராமம். அதன் நடுவே சிறிய அளவிலான ஆலயம், கிழக்குமுக ஆலயத்தின் எதிரே தடாகம் அமைந்துள்ளது.


    பன்னிரண்டு அமாவாசைகள் இத்தல தீர்த்தத்தில் நீராடி, ஈஸ்வரனுக்கம், அம்பிகைக்கும் வில்வம் மற்றும் கொன்றை பூவினால் அர்ச்சனை செய்து வழிபட புத்திரபேறு, திருமண பிராப்தம், சகல தோஷ நிவர்த்தி மற்றும் இஷ்ட சித்திகள் என யாவையும் பெறலாம் என்பது நம்பிக்கை.


    *தல பெருமை:*
    தபோவதனி என்னும் அரசி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அஞ்சனாட்சி அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள்.


    அப்பெண் மணப்பருவம் வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறுப்படுகிறது.


    இத்தலத்திலுள்ள முக்கூடல் தீரத்தக் குளத்தின் உள்ளே (கும்பகோணம் மகாமகம் குளத்தினினுள்ளே அனைத்துத் தீர்த்தங்களும் அமைந்திருப்பதைக் போல....) பதினாறு தீர்த்தக் கிணறுகள் உள்ளன.


    இத்தீர்த்தங்களில் நீராடினால் மகாமக தீர்த்த்தில் நீராடிய பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.


    வரிசையாக பன்னிரண்டு அமாவாசைக்கு, இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால், புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.


    ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று.


    முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலம் *"கேக்கரை"* என்றும் அழைக்கப்படுகிறது


    *பதிகம்:*
    திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த இத்தலத்திற்கான இப்பதிகம் ஆறாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


    பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் தான் தடுமாறித் திரிந்து உழன்ற செயல் இரங்கத்தக்கது என்று தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் நெகிழ்ச்சியுடன் அப்பர் பெருமான் குறிப்பிடுகிறார்.


    1 . ஆராத இன்னமுதை அம்மான் றன்னை அயனொடுமா லறியாத ஆதி யானைத் தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச் சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை நீரானைக் காற்றானைத் தீயா னானை நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த பாரானைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே.


    2. விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச் சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத் தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப் படையானைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே.


    3. பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப் புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை வேதியனை வெண்காடு மேயான் றன்னை வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம் ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர் பாதியனைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே.


    4. போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும் பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந் தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச் சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே பார்த்தானைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே.


    5. அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங் கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக் கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற் படிந்தானைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே.


    6. கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங் கனலாடு திருமேனி கமலத் தோன்றன் சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத் திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார் வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய் மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப் பரந்தானைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே.


    7. நதியாருஞ் சடையானை நல்லூ ரானை நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை நிதியாளன் றோழனை நீடு ரானை நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும் பதியானைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே.


    8. நற்றவனை நான்மறைக ளாயி னானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ் செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந் திருவாரூர்த் திருமூலத் தான மேய கொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக் குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும் பற்றவனைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே.


    9. ஊனவனை உடலவனை உயிரா னானை உலகேழு மானானை உம்பர் கோவை வானவனை மதிசூடும் வளவி யானை மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற கானவனைக் கயிலாய மலையு ளானைக் கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே பானவனைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே.


    10. தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித் தடவரையை இருபதுதோள் தலையி னாலும் எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக் கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக் குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று படுத்தானைப் பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே.


    திருச்சிற்றம்பலம்.


    *நாளைய தலம் திருவாரூர். வ(ள)ரும்.*



    *கோவை.கு.கருப்பசாமி.*

    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X