Announcement

Collapse
No announcement yet.

Thirukadavur temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirukadavur temple

    Thirukadavur temple
    ( 25 )
    திருக்கடவூர் தொடர்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    அமுதகடேசர் சந்நிதியில் அன்று பெருங்கூட்டம்.


    முழுநீறு பூசி உருத்திராக்கம் அணிந்து சிவச்சிந்தையராய்த் திரண்டிருந்தார்கள் சிவனடியார்கள்.


    இல்லற நெறியில் இருந்தபடியே இறைநெறியில் இதயம் தோய்ந்த சிவநெறிச் செல்வர்களும் நிறைந்து இருந்தார்கள்.


    இவர்களின் நடுவில் கனிந்த சிவப்பழமாய், கனலும் அருட்தவமாய் அமர்ந்திருந்தார் ஒருவர்.


    அப்படி சிவப்பழமாய் அமர்ந்திருந்தவரின் தீட்சாநாமம் ஆளுடைய தேவநாயனார் ஆகும்.


    திருவியலூர் என்ற சிவத்தலத்தில் வாழ்ந்து வரும் வேளாளர் அவராவார்.


    ஒவ்வொரு திருத்தலமாய் சஞ்சரித்து வந்த சிவயோகியாம் உய்யவந்த தேவநாயனார், திருவியலூர் வந்திருந்த போது இவரின் பரிவக்குவத்தைக் கண்டு தன்னுடைய சீடராக ஆட்கொண்டார்.


    சீடனின் தலத்திலேயே நெடுங்காலம் தங்கியிருந்து, தன்னுடைய சீடனின் வழியாகவே உலகுக்கு சிவஞானம் புகட்டத் திருவுள்ளம் கொண்டு திருவுந்தியார் என்ற ஞானநூலை அருளினார் அவர்.


    சிவத்தலங்கள் தோறும் திருவுந்தியாரை விரிவுரை வழங்குமாறு சீடனுக்கு ஆணையிட்டார் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்.


    குருவின் ஆணைக்கிணங்க திருக்கடவூரில், திருவுந்தியார் விரிவுரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஆளுடைய தேவர்.


    "ஊஞ்சலில் ஆடும் பெண்கள் பூமியில் பாதத்தை ஊன்றி உந்த ஊஞ்சல் பறக்கும். அவர்கள் பாதத்தை பூமியில் பதிப்பது மேலே பறப்பதற்காக. அதுபோல் இக வாழ்வை, பரவாழ்வு நோக்கிப் பறக்கும் பக்குவத்திற்குப் பயன்படுத்தவே அருளாளா்கள் இத்தகைய ஞான நூல்களை அருளினர்


    ஒவ்வொரு பாடலிலும் உந்திப்பறக்குமாறு உயிர்களை இறை நெறியில் ஆற்றுப்படுத்துவது திருவுந்தியார்.


    சிவப்பரம்பொருளுக்குத் தனி வடிவமில்லை. எனவே பலரும் சிவத்தை உணர்வதில்லை. அதனாலேயே குருநாதர் வடிவில் சிவம் தன்னை வெளிப்படுத்துகிறது.


    நல்ல குருவை உணர்ந்தவர்கள் சிவத்தை உணர்ந்தவர் ஆவார்கள் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன் குருநாதரை நினைந்து மலர்விழிகளில் மஞ்சனநீர் பெருக்கினார் ஆளுடைய தேவர்.


    மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பரவிய அவருடைய பார்வை ஓரிடத்தில் குத்திட்டு நின்றது. அங்கிருந்த மனிதவொருவரின் விழிகளில் வெள்ளம் பெருக, குவிந்த கரங்களுடன் உள்ளுருகி அமர்ந்திருந்தார்.


    நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்த அவரின் தாகமும், சரியான சீடனை இனங்கண்ட ஆளுடைய தேவநாயனாரின் ஞானமும் அமுதகடேசர் சந்நிதியில் சங்கமித்தன.


    விரிவுரை நிறைவுபெற்று மற்ற அன்பர்கள் விடைபெற்ற பிறகும் வைத்த கண் வாங்காது நின்று கொண்டிருந்த அந்த அன்பரை அருகே அழைத்து ஆட்கொண்டார் ஆளுடைய தேவநாயனார்.


    எந்நேரமும் தன்னுடைய குருநாதரின் பொன்னார் திருவடிகளையே எண்ணிக் கிடந்த ஆளுடைய தேவநாயனாருக்கு தன் சீடனுக்கு வேறு தீட்சா நாமம் சூட்ட விருப்பமில்லை. எனவே தன்னுடைய குருநாதரின் பெயரையே சூட்டினார். தன் பழைய நாமமும் பழ வினையும் கழிந்து திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் எனும் திருப்பொலிவு பெற்றார் அவர்.


    அடுத்தநாள் திருக்கடவூரில் ஒரே பரபரப்பு. "நம்முடைய ஆட்டு வணிகர் இருக்கிறாரே! அவர் இனிமேல் சிவனடியாராம்! என்ன விந்தை பார்த்தீர்களா?" என்றார் ஒருவர்.


    "ஆண்டவன் நினைத்தால் ஆகாதென்ன? ஈசன்பால் இதயத்தைச் செலுத்தினால் மாடு தின்பவர்கூட நாம் வணங்கக்கூடிய கடவுள் என்று திருநாவுக்கரசர் பாடவில்லையா? என்றார் மற்றொருவர்.


    "எல்லாம் சரிதான்! நாமறிய ஆடு விற்றுக் கொண்டிருந்தவர். சிவபக்தி உள்ளவரென்று தெரியும். அதற்காக அவரை அருளாளராக ஏற்றுக் கொள்ளமுடியுமா?என்று தான்......."மெல்ல இழுத்த ஒருவரை முதுகில் தட்டி அடக்கினார் இன்னொருவர்.


    "மாணிக்கவாசகரின் இடர் தீர்க்க, சிவபெருமானே குதிரை விற்பவராய் வரவில்லையா என்ன? பக்குவமில்லாதவரை பரமாச்சாரியரான ஆளுடைய தேவநாயனார் ஆட்கொள்வாரா? உருவு கண்டும் தொழில் கண்டும் உள்ளொளியை நிர்ணயிக்க நாம் யார்?" என்ற அவரின் சொற்களில் இருந்த நியாயத்தை உணர்ந்தவர்கள் மெல்லக் கலைந்து சென்றனர்.


    தன் குருநாதரின் திருநாமம் தரிக்கப் பெற்ற சீடருக்கு திருவுந்தியாரின் நுட்பங்களை விரித்துரைத்த ஆளுடைய தேவநாயனார், அவருடைய தகுதியில் முழுநிறைவு பெற்ற பின், திருவுந்தியாரை ஒவ்வொரு சிவத்தலமாகப் பரப்ப ஆணையிட்டருளி அனுப்பினார்.
Working...
X