Announcement

Collapse
No announcement yet.

*திருக்கடவூர் தொடர்.*

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • *திருக்கடவூர் தொடர்.*

    *திருக்கடவூர் தொடர்.*
    **சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    *(19)*
    *திருக்கடவூர் தொடர்.*
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    பெருமானின் பல்வேறு பெற்றிமைகளைப் பட்டியலிட்டு, *"அவனல்லவா கடவூரில் வீற்றிருந்து அருள் செய்பவன்"* என்று பெருமிதம் பொங்கப் பதிகத்தைப் பாடிப் பரவினார் ஆளுடைய பிள்ளையார்.
    திருக்கடவூர் தலத்தில் நுழைந்த மாத்திரத்தில் அத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதனை உணர்ந்து, *விரிதரு தொல்புகழ் வீரட்டானம்* என்று சம்பந்தர் அருளிச் செய்ய கலயனாரின் கண்கள் நிறைந்தன.
    திருக்கடவூரிலிருந்து வீசிய குளிர்ந்த காற்று திரைகடலில் இருந்து வருவதென்றே எல்லோரும் எண்ணியிருந்தனர். அவர்களுக்கெல்லாம் திருஞானசம்பந்தர் வேறொரு காரணத்தைச் சொன்னார்.
    இங்கிருக்கும் பெருமான், உயிர்களுக்கெல்லாம் தலைவன். நள்ளிருளில் நடமாடுபவன். அடியவர்களின் இதயமாகிய தாமரையில் பாதங்களை வைத்திருப்பவன்.
    புலித்தோல் அணிந்து விடையேறி வருமந்த விமலனிபால் அடியவர்கள் கொண்டிருக்கும் அன்பின் குளிர்ச்சியே திருக் கடவூரைக் குளிர்விக்கின்றது.
    *நாதனும் நள்ளிரு ளாடினா னும்நளிர் போதின்கண்*
    *பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங்*
    *காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே*
    *வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே!"*
    கனல்வடிவாகிய கண்ணுதற் கடவுள் காலனை சங்கரித்தபோது பூபாரம் பெருக பூமாதேவி வந்து வழிபட்டாள். அட்ட வீரட்டானங்களில் பூமித் தத்துவம் பொருந்தப் பெற்றது திருக்கடவூர்.
    இதனைக் குறிக்கும் விதமாக, "செங்கனல் வடிவாகிய சிவபெருமான், நில வடிவாகவும் நிற்கிறார். ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி எனும் மூவகை நெருப்பாகவும் திகழ்கிறார்.
    நான்கு வேதங்களும் அவரே. ஞான நூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என்ற ஞான வேள்வி என ஐந்தை இயற்றும் முனிவர்களின் துணையாக நிற்பவரும் அவரே". என்று பாடினார் பிள்ளைப் பெருமான்.
    *செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்*
    *முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங்*
    *கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள்*
    *செவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே!"*
    திருக்கடவூர் அமுதகடேசனை திருஞானசம்பந்தர் தமிழால் பாடுபவர்கள் பாவங்கள் நீங்கியொழியும் என்று பதிகப் பலனும் அருளினார் காழிப்பிள்ளையார்.
    *திருச்சிற்றம்பலம்.*
    *திருக்கடவூர் தொடர் நாளையும் பதிகம்பாடி வ(ள)ரும்.*
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    (20)
    🔴 திருக்கடவூர் தொடர். 🔴
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    திருக்கடவூர் அமுதகடேசனை திருஞானசம்பந்தர், தமிழால் பாடுபவர்கள் பாவங்கள் நீங்கும் என்று பதிகப் பலனும் அருளினார் காழிப்பிள்ளையார்.


    தன்னுடைய பதிகம் நிறைவு பெற்றதைக் குறிப்பால் உணர்த்துவதுபோல் திருநாவுக்கரசரை நோக்கி திருஞானசம்பந்தர் கைகுவிக்க, ஆளுடைய அரசர் பதிகங்கள் அருளத் தொடங்கினார்.


    திருநேரிசை அருளிய அப்பர் பெருந்தகை, "புலர் காலைப் பொழுதில் நீராடி,
    இறைவன்பால் பெருங்காதல் கொண்டு முறைப்படி தூப தீபம் இடுபவர்களின் திருவுள்ளங்களில் இறைவன் கரும்புக் கட்டிபோல் இனிப்பான் என்ற பொருள் பட,,,,,


    "பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்த ராகி


    அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து


    விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்


    கரும்பினிற் கட்டி போல்வார் கடவீர்வீ ரட்ட னாரே!"


    என்று பாட திருஞானசம்பந்தர் பொருள்பொதிந்த பார்வையை கலயர் மேல் பதித்துப் புன்னகை புரிந்தார். திருக்கடவூர் தேவதேவனை, திருநேரிசை,
    திருவிருத்தம்,
    திருக்குறுந்தொகை, ஆகிய மூவகைப் பதிகங்களால் பாடிப் பரவினார் வாகீசப் பெருந்தகை.


    வாழ்வின் வினைகளால் தடுமாறி, வெய்ய சோதியில் விழுந்த விட்டிலாய்த் தவிக்கும் மனிதர்கள், தகிக்கும் துன்பத்தைத் தணிக்கும் திருப்பாடல்கள் அவை.


    "தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி


    விலக்குவா ரிலாமை யாலே விளக்கதிற் கோழி போன்றேன்


    மலக்குவார் மனத்தி னுள்ள் காலனார் தமர்கள் வந்து


    கலக்கநான் கலங்கு கின்றேன் கடவீர்வீ ரட்ட னாரே!"


    பெருமானை யானையாகவே உருவகித்து ஆளுடைய அரசர் பாடிய திருநேரிசைப் பதிகம் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. தல விநாயகராகிய கள்ளவாரணப் பிள்ளையாராகவும் இறைவனை உருவகித்தார் திருநாவுக்கரசர்.


    "வெள்ளி மால்வரை போல்வதொர் ஆனையார்


    உள்ள வாறெனை யுள்புகும் ஆனையார்


    கொள்ள மாகிய கோயிலுள் ஆனையார்


    கள்ள ஆனைகண் டீர்கட வூரரே!"


    சிவபெருமான், பாலுக்கழுத உபமன்யு முனிவருக்காக பாற்கடல் ஈந்ததையும், ஆலமரத்தின் கீழமர்ந்து அரும் பொருள் உபதேசம் செய்ததையும், மார்க்கண்டேயருக்காக காலனைக் காய்ந்ததையும் ஒப்பிட்டு, திருவிருத்தம் பாடினார்.


    "பாலனுக் காயன்று பாற்கடல் ஈந்து பணைத்தெழுந்த


    ஆலினிற் கீழிருந் தாரணமோதி அருமுனிக்காய்ச்


    சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த


    காலனைக் காய்ந்த பிரான்கடவூருறை உத்தமனே!"


    வழிபாடு நிறைவுபெற்றதும் இருபெரும் குரவர்களும் குங்கிலியக் கலயர் இல்லத்திற்கு எழுந்தருளினர். சற்று முன்னதாகவே மனை திரும்பி சைவத்தின் கண்களாய்த் திகழ்ந்த இருவரையும் எதிர்கொண்டழைத்த கலயர் திருப்புகலூரில் இவர்கள் இருவருடன் முருக நாயனார், நீலநக்கர், சிறுத்தொண்டர், ஆகியோர் ஓரிருநாட்கள் முன் தங்கியிருந்து உடனுறைவின் பயன் பெற்ற விதம் குறித்துப் பேரார்வத்துடன் கேட்டறிந்தார்.


    அறுவகை உணவு பரிமாறி, அருளாளர்கள் அருளையும் சிவனருளையும் அள்ளிப் பருகினார் கலயர்தம் குடும்பத்தினர்.


    இருவரும் விடைபெற அந்த அபூர்வ நிகழ்வின் நினைவுகளிலேயே நெடுங்காலம் லயித்திருந்து, அமுதகடேசப் பெருமானுக்கு குங்கிலியம் இட்டு குங்கிலியக் கலயர் என்னும் திருநாமம் பெற்று நிறைவாழ்வு வாழ்ந்து சிவனடி சேர்ந்தார் கலயர்.


    குங்கிலிய நறுமணத்தில் கலயரின் தொண்டுச் சிறப்பையும் சேர்த்துச் சுமந்து திசையெங்கும் சேர்த்தது கடவூர்ப் பதியின் கொண்டல் காற்று.


    திருச்சிற்றம்பலம்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Working...
X