Announcement

Collapse
No announcement yet.

Paambaati sidhar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Paambaati sidhar

    சித்தர்கள் ஒரு பார்வை-பாம்பாட்டி சித்தர்.*


    மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் அந்த இளைஞன். நம் தோழர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அவனைக் கடிக்க மறைந்திருந்து தாக்கினாலும், எப்படியோ நாம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, நம்மைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறான். புற்றுகளையெல்லாம் இடித்து தள்ளுகிறான். அதனுள் இருக்கும் குஞ்சுகளை நசுக்கி விடுகிறான். நம்மிலுள்ள விஷப்பைகளை எடுத்து மருந்து தயாரிப்பதாகச் சொல்கிறான். இப்போது, நம் பாம்பினத்திற்கே பெருமை தரும் வகையில் ஒளிவீசும் நவரத்தினங்களை உள்ளடக்கிய ரத்தினப் பாம்பைப் பிடிக்க வருகிறான். அது மட்டும் அவனிடம் சிக்கி விட்டால், அவன் இந்த உலகத்திலேயே பெரிய செல்வந்தனாகி விடுவான். மன்னாதி மன்னரெல்லாம் கூட அவனிடம் சரணடைந்து விடுவார்கள், என்றது. எல்லாப்பாம்புகளும் வருத்தப் பட்டதே ஒழிய, அந்த இளைஞனுக்கு எதிராக கருத்துச் சொல்லக்கூடத் தயங்கின. இவை இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, காலடி ஓசை கேட்டது. தங்கள் உணர்வலைகளால், வருபவன் அந்த இளைஞனே என்பதை உணர்ந்து கொண்ட பாம்புகள் திசைக்கு ஒன்றாக ஓடின. பாம்புகளின் தலைவனும் உயிருக்கு அஞ்சி எங்கோ சென்று மறைந்து கொண்டது. இப்படி பாம்புகளையே கலங்கடித்த அந்த இளைஞனுக்கென பெயர் ஏதும் இல்லை. பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி ஆடச்செய்பவன் என்பதால், பாம்பாட்டி என்றே அவனை மருதமலை பகுதி மக்கள் அழைத்தனர். அந்த இளைஞனே பாம்பாட்டி சித்தர் என்ற பெயரில் பிற்காலத்தில் மக்களால் வணங்கப்பட்டார்.


    அவர் திருக்கோகர்ணம் என்னும் புண்ணிய தலத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத்தலம் கர்நாடக மாநிலத்தின் உட்பகுதியில் இருப்பதாகவும், ஒரு சாரார், அவர் அங்கே பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தமிழகத்தில் புதுக்கோட்டை நகர எல்லையிலுள்ள திருக்கோகர்ணத்தில் பிறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவர் பிறந்த ஊர் பற்றிய ஆதாரம் சரியாக இல்லை.இவர் இளைஞராக இருந்த காலத்தில் தான் பாம்புகளைப் பிடித்து அவற்றின் நாக ரத்தினங்களை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டு மருந்து தயாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது, நவரத்தின பாம்பு பற்றிக் கேள்விப் பட்டு, அதைப் பிடித்து அதனுள் இருக்கும் ரத்தினங்களை எடுத்து விற்றால், உலகத்தின் முதல் பணக் காரராகி விடலாம் என்ற எண்ணம் கொண்டார்.அவர் தான் இப்போது காட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்.பாம்புகள் மறைந்து ஓடின. அப்போது ஓரிடத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. ஆஹா....நவரத்தின பாம்பு தான் அவ்விடத்தில் மறைந்திருக்கிறது. அது தன் உடலை முழுமையாக மறைக்க முடியாததால், அதன் உடல் ஒளிவீசுகிறது என பாம்பாட்டி சித்தர் நினைத்துக் கொண்டார். ஆனால், ஒளி வெள்ளம் சற்று மங்கி, அவர் முன்னால் ஒரு மனிதர் நின்றார். அவரிடம், மகானே! தாங்கள் யார்? தங்கள் உடல் பொன் போல் பிரகாசிக்கிறதே. ஒருவேளை நான் தேடி வந்த பாம்பாக இருந்த நீங்கள், என்னிடம் சிக்காமல் இருக்க மனித உருவம் கொண்டீர்களோ! என்றவர், அவரது தேஜஸைப் பார்த்து, தன்னையும் அறியாமல் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார். அந்த மகான் பாம்பாட்டி சித்தரை ஆசிர்வதித்தார். இளைஞனே! நீ இந்த சாதாரண பாம்புகளைப் பிடிப்பதற்காகவா இந்த உலகத்தில் பிறந்தாய். உன் பிறப்பின் ரகசியமே வேறு. நீ தேடி வந்த செல்வத்தின் அளவு பெரியது தான்.


    செல்வமே உலகத்தை ஆட்டிவைக்கும் கருவி என நீ நினைக்கிறாய். எல்லா மக்களுமே இப்படி நினைப்பதால், நீயும் நினைப்பது இயற்கையே. எனவே, சாதாரண செல்வத்தை தேடி இங்கு வந்திருக்கிறாய், என்றவரை இடைமறித்த பாம்பாட்டி சித்தர், சுவாமி! தாங்கள் யார்? தங்கள் உடலே பொன்போல் மின்னுகிறதே, என்றார்.மகனே! உடலைக்கூட பொன்னாகக் கருதி பார்க்கும் அளவுக்கு, உன் மூளையில் செல்வம் தேடுவதின் தாக்கம் தெரிகிறது. சரி...இந்த உடல் என்றாவது அழியத்தானே போகிறது. அப்போது அது தீயில் கருகியோ, மண்ணில் நைந்தோ உருத்தெரியாமல் போய்விடுமே. அப்போது பொன்னை எங்கே தேடுவாய், என்றார்.அவரது அந்த வார்த்தைகள் இளைஞனின் மனதைத் தொட்டன.சுவாமி! இந்த அரிய உபதேசத்தை செய்த தாங்கள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளும் தகுதியுடையவனா? என பாம்பாட்டியார் பணிவுடன் கேட்டதும், அவனது மனம் செல்வத்தில் இருந்து விடுபட்டுவிட்டது என்பதை வந்தவர் உணர்ந்து கொண்டார்.மகனே! நான் தான் சட்டைமுனி சித்தர். இந்தக் காடுகளில் வசிக்கிறேன். நீ நவரத்தின பாம்பைத் தேடி வந்துள்ளதை நான் அறிவேன். அந்தப்பாம்பு உனக்கு பல லட்சம் கோடி தங்கம் வாங்குமளவு செல்வத்தைத் தரும். அதனால் அதை ஆட்டி வைக்க வந்துள்ளாய். ஆனால், அதையும் விட உயர்ந்த பாம்பு ஒன்று இருக்கிறது தெரியுமா? என்றதும், பாம்பாட்டியாரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.அப்படியா? அப்படியும் ஒரு பாம்பினம் இருக்கிறதா? அப்படியானால், எனக்கு இந்த சாதாரண நவரத்தின பாம்பு வேண்டாம். தாங்கள் சொல்லும், அந்த உயரிய இனமே வேண்டும், என்ற பாம்பாட்டியாரிடம், அப்படியா! அந்தப் பாம்பு உன் உடலுக்குள்ளேயே இருக்கிறது, என்றார் சட்டைமுனி.இதைக் கேட்டு ஆ...வென மலைத்து விட்டார் பாம்பாட்டியார்.


    சுவாமி! தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. மனிதர்களின் உடலுக்குள் எப்படி பாம்பு இருக்கும்? பாம்பாட்டியார் சந்தேகம் எழுப்பினார். சட்டைமுனி அவரிடம், மகனே! உன்னுள் மட்டுமல்ல. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனிடமும் இந்தப்பாம்பு இருக்கிறது. அதன் பெயர் குண்டலினி. அந்த பாம்பை நீ ஆட்டுவித்தால் போதும். உன்னிலும் உயர்ந்தவர் யாரும் இருக்க முடியாது. அதை மட்டும் நீ அடக்கிவிட்டால், மாபெரும் சித்தனாகி விடுவாய். சித்தர்களுக்கு உலகப்பொருள்கள் மீது ஆசை வருவதில்லை. அவர்களால் தங்கத்தையே உருவாக்க முடியும். ஆனால், அதைத் தாங்கள் பயன்படுத்தாமல், உலக நன்மைக்காக பயன் படுத்துவர். அப்படிப்பட்ட மனப் பக்குவத்தை தருவதே குண்டலினி. உலகத்தில் உள்ள எல்லாருமே பணத்தைத் தேடி ஓடுகிறார்கள். ஆனால், நிஜமான செல்வம் உன் உடலுக்குள் இருக்கிறது. அதைத் தேடு, என்றார். பாம்பாட்டியார் அவரது உபதேசத்தை ஏற்றார். சுவாமி! தாங்கள் சொல்வது இப்போது எனக்கு விளங்குகிறது. செல்வத்தை அடைந்து தனியொரு மனிதனாக ஆட்சிசெய்வதில் இல்லாத சந்தோஷம், தாங்கள் சொல்லும் குண்டலினியை எழுப்புவதன் மூலம் கிடைக்குமென நம்புகிறேன். தங்கள் உபதேசப்படி நடப்பேன், என்று சொல்லி அவர் காலில் விழுந்தார். செல்வமே பெரிதெனக் கருதிய ஒருவன், தன் கருத்தை ஏற்று, உடனடியாக தன்னைச் சரணடைந்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்த சட்டைமுனி, மகனே! உடலுக்குள் குண்டலினி என்னும் சக்தி பாம்பு போல தொங்கிக் கொண்டிருக்கும். இந்தப் பாம்பு எப்போதுமே தூங்கிக் கொண்டிருக்கும். இது தூங்குவதால் தான் மனிதன் உலக வாழ்க்கை நிரந்தரமென எண்ணி, அறியாமையில் மூழ்கித்தவிக்கிறான். இதை தட்டி எழுப்ப வேண்டுமானால், தெய்வசிந்தனை எந்நேரமும் இருக்க வேண்டும். அப்போது அந்தப் பாம்பு விழிக்கும். நமது ஜீவனுக்குள் அது அடைக்கலமாகும். அப்போது, உனக்குள் இருக்கும் ஆத்மா இது தான் உலகம், இது தான் வாழ்க்கை என்பதைப் புரிந்துகொள்ளும். அப்போது, நீ தேடியலையும் பொருள் தரும் ஆனந்தத்தை விட பேரானந்தம் உனக்கு கிடைக்கும், என்றார்.


    பாம்பாட்டியார் சட்டைமுனிவரின் பேச்சைக் கேட்டு பரவசமடைந்தார்.சித்தரே! இப்படி ஒரு அரிய உபதேசத்தை வழங்கி, என்னை அறிவீனத்தில் இருந்து மீட்ட தாங்களே எனது குருநாதர். தாங்கள் சொன்ன சொல்படி நடப்பேன். இது உறுதி, என்றார் பாம்பாட்டியார். அவரது மனஉறுதி கண்டு மகிழ்ந்த சட்டை முனிவர் பாம்பாட்டியாருக்கு அருள்வழங்கி, மகனே! நீ பாம்பாட்டியே பிழைத்ததால், அந்த பெயரே உனக்கு நிலைத்து விட்டது. இனி உலகமக்கள் உன்னை பாம்பாட்டி சித்தர் என வழங்குவர் எனச்சொல்லி விட்டு மறைந்து விட்டார். இதன்பிறகு, அஷ்டமாசித்திகள் எனப்படும் கூடுவிட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட அனைத்து சித்து வேலைகளும் பாம்பாட்டி சித்தருக்கு கைவந்த கலையாயின. குண்டலினியை தட்டி எழுப்பும் வகையில் கடும் தியானங்களிலும் அவர் ஈடுபட்டார். பின்னர், தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் ரசவாதம் எனப்படும் வித்தை அவருக்கு தெரிந்தது. நவரத்தினக் கற்களைத் தேடி ஓடிய காலம் போய், அவர் வெறும் கற்களைத் தொட்டாலும் அவை நவரத்தினங்களாக மாறின. அதனால் தனக்கு என்ன பயன் என்று, அவற்றை வீசிவிட்டார். வானத்தில் நடந்து செல்லும் பயிற்சியும் அவருக்கு கிடைத்து விட்டது. ஒருமுறை அவர் வானத்தில் நடந்து சென்ற போது, ஒரு அரண்மனையைக் கண்டார். அந்நாட்டு அரசன் இறந்து விட்டதால், மகாராணி தன் கணவனின் உடலில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருந்தாள். ஊரே சோகமயமாக இருந்தது. அப்போது வானத்தில் இருந்தபடியே இறந்துபோன ஒரு பாம்பை மன்னனை சுற்றிநின்ற மக்களின் கூட்டத்தில் வீசினார் பாம்பாட்டி சித்தர். கூட்டத்தினர் அலறி அடித்து ஓடினர். ஆனால், ராணி மட்டும் மிரளவில்லை. அவள் அங்கேயே நின்றாள். அப்போது, பாம்பாட்டி சித்தர் தன்னை மறையச்செய்து, மன்னனின் உடலுக்குள் புகுந்தார். இறந்து கிடந்த மன்னன் உருவில் சித்தர் எழுந்து நின்றார். ராணிக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. அவரை அணைத்துக் கொள்வதற்காக வேகமாக அவரருகில் சென்றாள். மன்னன், வடிவிலுள்ள சித்தரோ, அவளைத் தடுத்து விட்டார். அவர் இறந்து கிடந்த பாம்பின் அருகில் சென்று, பாம்பே எழுந்திரு, என்றார். அது உயிர் பெற்றது. மகிழ்ச்சியுடன் தனது கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தது. அதை தடுத்து நிறுத்திய மன்னர், பாம்பே! நீ வாழும் காலத்தில் உன் கூட்டம் எந்தளவுக்கு உன்னை அவமானம் செய்தது? ஆனாலும், உயிர் பெற்றதும் உன் கூட்டத்தை தேடி ஓடுகிறாயே! இந்த உலக வாழ்வில் அப்படி என்ன சுகத்தைக் கண்டுவிட்டாய்? என்றார்.


    இதைக் கண்ட ராணியும், அமைச்சர்களும் இறந்தவர் உயிர் பிழைத்து எழுந்ததால் இவருக்கு சித்தசுவாதீனம் இல்லாமல் போய்விட்டதோ! அதே நேரம், இறந்த பாம்பை இவர் உயிர் பிழைக்க வைத்தது எப்படி? என்று குழம்பிப் போனார்கள். அரசிக்கு ஒரு சந்தேகம்.மன்னர் சாகும் முன்பு, நான் ஒருத்தி போதாதென்று, ஏராளமான பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சிற்றின்பத்திலேயே மூழ்கிக்கிடப்பார். பணம் வரி கிஸ்தி என எந்நேரமும் செல்வத்தின் நினைப்பிலேயே கிடப்பார். இப்போதோ, ஓடுகிற பாம்பை நிறுத்தி, உலக வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என தத்துவம் பேசுகிறார். இதென்ன குழப்பம், என அதிர்ந்து நின்றாள். இதற்கு பதிலளிக்கும் வகையில் சித்தர் பாட ஆரம்பித்தார். நாடும், வீடும், மனைவியும், உறவும் உயிர் போன பிறகு கூட வராது என்ற பொருளில் அவரது பாடல் அமைந்தது. நான் மனதில் நினைத்தது இவருக்கு எப்படி தெரிந்தது? நம் எண்ணத்திற்கு தக்க பதில் போல் இந்தப் பாடல் இருக்கிறதே என அவள் மேலும் அதிர்ச்சியடைந்தாள். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு, மன்னரே! தாங்கள் எப்படி உயிர் பெற்றீர்கள்? இங்கு நான் காண்பது கனவா, நிஜமா? எனக்கேட்டாள். அதற்கு மேலும் அங்குள்ள மக்களை குழப்ப விரும்பாத சித்தர், மகாராணி! உன் கணவனின் உடலில் புகுந்திருக்கும் என் பெயர் பாம்பாட்டி சித்தர். நீ மன்னனைப் பிரிந்த துயரத்தில் அழுதாய். இறப்பு சாதாரண மான ஒன்று. அது நிச்சயம் எனத் தெரிந்த பிறகும், இறந்தவர்களுக்காக அழக்கூடாது என்பதை உனக்கும், உலகுக்கும் அறிவிக்கவே இந்த விளையாடலைச் செய்தேன், என்றார்.சித்தரின் உண்மை மொழிகளால் ராணி மனம் தேறினாள்.பின்னர் மன்னனின் உடலில் இருந்து விடுபட்டார் சித்தர். மன் னனின் உடல் மீண்டும் சாய்ந்தது.இப்படி உலகுக்கு அளப்பரிய தத்துவத்தை தந்த பாம்பாட்டி சித்தர், மருதமலையில் சித்தியடைந்தார் என்றும், விருத்தாச்சலம் அருகிலுள்ள பழமலையில் என்று சிலரும், துவாரகையில் அவர் சித்தியடைந்ததாகவும் கூறுகிறார்கள். மூன்று தலங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.


    *நூல்:*
    ********


    பாம்பாட்டிச் சித்தர் பாடல்
    சித்தரா ரூடம்
    சில வைத்திய நூல்கள்


    *தியானச் செய்யுள்:*
    ***********************


    அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து! பின்
    உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
    கூடுவிட்டு கூடுபாய்ந்து ஞானமுத்து கொடுத்தவரே! குவலயத்தின் காவலரே!
    ஆதிசேஷனின் அருள் கண்டு
    ஆதிசிவன் மகன் வரம் கொண்டு
    ஜாதி மதங்கள் பேதம் இன்றி
    காக்கும் சித்தரே! காக்க! காக்க!


    *காலம்:* பாம்பாட்டி முனிவர் கார்த்திகை
    மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 123 ஆண்டுகள் 4 நாள் ஆகும்.
Working...
X