Announcement

Collapse
No announcement yet.

Thiruvidaimaruthur Mahalingesvarar temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruvidaimaruthur Mahalingesvarar temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை. கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(தல தொடர்.48)*
    *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல......)
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    *திருவிடை மருதூர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *இறைவன்:*
    மகாலிங்கேவரர், மருதவாணர்.


    *இறைவி:*பிருகத்சுந்தர குஜாம்பிகை, பெருநலமுலையம்மை.


    *தீர்த்தம்:* காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்.


    *தலமரம்:* மருது(அர்ச்சுனம்.)


    சோழ நாட்டில் காவிரித் தென்கரையில் இருக்கும் 128 தலங்களுள், இத்தலம் முப்பதாவதாகப் போற்றப்படுகிறது.


    *இருப்பிடம்:*
    மயிலாடுதுறை-- கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ள நிலையம்.


    *பெயர்க்காரணம்:*
    இடைமருது-- மத்தியார்ச்சுனம் எனப் புகழப்படும் பதி.


    வடக்கே ஆந்திராவில் உள்ள சைலம்( மல்லிகார்ச்சுனம்) தலைமருது என்றும், தெற்கில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் (புடார்ச்சுனம்) கடைமருது என்றும், இவ்விரண்டுக்கும் இடையில் இஃது இடைமருதாயிற்று.


    (அர்ச்சுனம்- மருதமரம்) மருதவனம்,சண்பகாரண்யம், சத்திபுரம் என வேறு பெயர்களும் உண்டு.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    *சம்பந்தர்*1-ல் ஐந்து பதிகங்களும், 2-ல் ஒரு பதிகமும்.
    *அப்பர்* 4-ல் ஒரு பதிகமும், 5-ல் இரண்டு பதிகமும், 6-ல் இரண்டு பதிகமும்.
    *சுந்தரர்* 7-ல் ஒரு பதிகமும் ஆக மொத்தம் பன்னிரண்டு பதிகங்களாகும்.


    *கோவில் அமைப்பு:*
    பெரிய கோயில், நான்கு பிரகாரங்கள். வீதிப் பிராகாரத்தையும் சேர்த்தால் (அஸ்வமேத பிராகாரம்) ஐந்தாகும்.


    தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன.


    காவிரிக் கரையில் உள்ள ஆறு
    சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.


    திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன் நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது.


    மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா.


    தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.


    மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.


    இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.


    *அஸ்வமேதப் பிரகாரம்:*
    இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.


    *கொடுமுடிப் பிரகாரம்:*
    இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.


    *ப்ரணவப் பிரகாரம்:*
    இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்.


    *தலத்தின் சிறப்பு:*
    திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும்.


    ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான்.


    இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.


    அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.


    சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.


    மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார்.


    எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடை மருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது.


    சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.


    அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான்.


    வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன.


    அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று பிரம்மஹத்தி காத்திருந்தன.


    ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார்.


    அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இடைமருதீசருக்கு மன்னன் பல சேவைகள் பேறு பெற்றான்.


    இடைமருதீசரை வணங்கி விட்டு கருவறையை வலம் வந்த பின், வந்த வழியே வெளியேறக் கூடாது என்பதே இந்தக் கோயிலில் கடைபிடிக்கப்படும் முக்கிய மரபாகும்.


    இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.


    இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியானவர்.


    இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர்.


    மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.


    இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது.


    மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில் பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.


    *தீர்த்தச் சிறப்பு:*
    கோயில்கள் பலவற்றுள்ளும் இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது முப்பத்திரண்டு தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தியாகும்.


    இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது.


    தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர்.


    இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு. இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.


    பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.


    மேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது. பிரமஹத்தி தோஷம், நட்சத்திர தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனிதிசை, ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்து சனி இவற்றால் ஏற்படும் தோஷம் யாவும் தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் விளங்கிறது




    திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயிலில் சம்பந்தர், அப்பர், சுந்தரர்
    மூவரின் பாடல் பெற்ற தலம்.


    கருவூர்த் தேவர்,
    மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தை பாடியுள்ளனர்.


    *தல அருமை:*
    மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.


    *மூகாம்பிகை சன்னதி.*
    இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.


    வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் " பிரம்மஹத்தி " தோஷ நிவாரண தலம் இது.


    மகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர். இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை.


    27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர்.


    பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது.


    *சப்தஸ்தானம்.*
    திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய தலங்களாகும்.


    *காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள்.*
    காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும்.


    திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின்
    கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு.


    மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமானது.


    *பஞ்சகுரோசத்தலங்கள்.*
    திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்)
    ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன.


    கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்ல வேண்டும்.


    வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன.


    உமா தேவியார், விநாயகர், முருகன், திருமால், இலட்சுமி, காளி, சரஸ்வதி, வேதங்கள், வசிட்டர், உரோமச முனிவர், ஐராவணம், அகத்தியர், சிவவாக்கியர், கபிலர், வரகுண பாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலம்.


    இங்குள்ள நவக்கிரக விக்கிரகங்கள் பிற கோயிகளிலும் வேறுபட்டதாக இடம் மாறி அமைந்துள்ளது




    *பஞ்சரத தேரோட்டம்.*
    இக்கோயிலில் சுமார் 180 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சரத் தேரோட்டம் 23 ஜனவரி 2016இல் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் வடிய முருகன், மகாலிங்கசுவாமி, தேவி, சண்டிகேஸ்வரர் இந்த ஐந்து தேர்களில் எழுந்தருளினர்.


    திருவிடைமருதூர் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.


    சோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவிடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப்படுத்தப்படுகிறார். காவிரியின் தென்கரையில் மருத மரங்கள் நிறைந்த வனத்தில் இந்தத் திருக்கோவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. ஏழு கோபுரங்களையும்,ஏழு பிரகாரங்களையும் கொண்டு ஓங்கி உயர்ந்தும், பரந்து விரிந்தும் காணப்படுகிறது.


    இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.


    இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். முன்பெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவர்களை இவ்வூரில் ஒரு மண்டலம், அல்லது அரை மண்டலம் தங்க வைத்து கிழக்கே உள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடச் செய்து, சுவாமி முன் நிறுத்தி காலை, மாலை இருவேளையும் வழிபடச் செய்வார்கள்.


    தற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தமாட வைத்து, சுவாமி சன்னிதியில் தெற்கு உட் பிரகாரத்தில் இருக்கும் ஆண்ட விநாயகரை மும்முறை சுற்றிவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூலவர் மகாலிங்கப்பெருமான் முன் நின்று இறைவனின் அருட்பார்வை கிடைக்குமாறு அர்ச்சித்து, பிரகாரம் வலம் வந்து வழிபட வேண்டும்.


    தொடர்ந்து பெருநலமுலையம்மை சன்னிதி வந்து பிரார்த்தித்து விட்டு, அடுத்ததாக மூகாம்பிகை சன்னிதி வந்து, மூகாசுரனை அழித்து சர்வ சக்தி வடிவாக வீற்றிருக்கும் அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். பின்னர் பிரகாரத்தில் உள்ள மகாமேருவை தரிசித்து, அசுவமேதயாகப் பிரகாரம் என்னும் வெளி சுற்றில் சிவமந்திரத்தை உச்சரித்தவாறு வலம் வர வேண்டும்.


    தொடர்ந்து ஆடவல்லான் மண்டபத்தில் 27 லிங்கங்களில், அவரவர்க்குரிய நட்சத்திர லிங்கத்துக்கு அர்ச்சனை செய் கிறார்கள். எப்படி இருப்பினும் மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும்.


    திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன. மோட்ச தீபம் ஏற்றி வைத்து, முக்கண்ணனின் பேரருளைப் பெறுவோரும் உண்டு.


    கிழக்கு கோபுரத்திலிருந்து உள் நுழையும் போது படித்துறை விநாயகர், காவிரியை நினைவு கூறுகிறார். அதை அடுத்து சுதையால் ஆன மிகப் பெரிய வெள்ளை நிற தேவேந்திர நந்தி அமர்ந்த நிலையில் இருக்கிறது. வலது புறமுள்ள ஆடவல்லான் மண்டபத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் உரிய சிவலிங்கங்கள் இருக்கின்றன. இங்கு நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், தங்கள் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரம் செய்கிறார்கள்.


    தெற்கில் உள்ள சித்திரப் பிரகாரம் என்பது சுதைச் சிற்பங்களாலும், ஓவிய வடிவங்களாலும் நிறைந்து நம் கண்கள் மகிழ கலைக் கூடமாகக் காட்சி தருகிறது.


    வடக்கில் உள்ள பிரணவப் பரிகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார்.


    எதிரே வேல் மண்டபமும், பிறகு காசிபரும், அவர் விரும்பியபடி கண்ணனாகக் காட்சி தரும் சிவனும் தலவிருட்சமான மருத மர நிழலில் இளைப்பாறுகிறார்கள்.


    அங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது.


    *திருவிழாக்கள்:*
    வைகாசி வசந்த விழா, அறுபத்து மூவர் விழா, நவராத்திரி விழா, மார்கழித் திருவாதிரை ழிழா, தைப்பூசத் திருவிழாவின் போது சுவாமி காவிரிக்கு எழுந்து அருளி ஐராவணத் துறையில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பானது.


    *தலத்தின் தனிசிறப்பு:*
    திருவலஞ்சுழி- விநாயகர், சுவாமிமலை- முருகன், சேய்ஞலூர்- சண்டேசுவரர், சூரியனார் கோயில்- சூரியன் முதலான நவக்கோள்கள், சிதம்பரம்- நடராஜர், சீர்காழி- பைரவர், திருவாவடுதுறை- நந்தி ஆகிய பரிவாரத் தலங்களுடன் நடுவில் மூல மூர்த்தியாக திருமகாலிங்கப் பெருமான் விளங்குவது சிறப்பு.


    *பூஜை:*
    காமீகாகம முறையில் நான்கு கால பூசை.


    காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,
    மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு, மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்,
    திருவிடைமருதூர் அஞ்சல்- 612 104,
    திருவிடைமருதூர் வட்டம்,
    தஞ்சை மாவட்டம்.


    *தொடர்புக்கு:*
    திருவாவடுதுறை ஆதீனம்.
    தொலைபேசி. 0435--2460660


    திருச்சிற்றம்பலம்.


    *நாளைய தலம்..........தென் குரங்காடுதுறை.*


    *ஒரு முறை திருவிடைமருதூர் வாருங்கள்!*


    *மகாலிங்கேஸ்வரர் மனவருள் பெறுங்கள்!!*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X