Announcement

Collapse
No announcement yet.

Tiruvarur temple part1

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvarur temple part1

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    கோவை.கு.கருப்பசாமி.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    ( 1 )
    திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி போற்றி!


    "ஆழித்தேர் வித்தகனை யான்கண்ட ஆரூரே"


    என திருநாவுக்கரசரால் சிறப்பிக்கப் பெற்றது.


    பெரிய கோயில் என்று சைவ சமய மரபில் இக்கோயிலைக் குறிப்பிடுவார்கள்.


    பூங்கோயில் என்றும் வழங்கப் பெற்ற பெயருமுண்டு.


    தேவாசிரியம் எனும் திருக்காவணத்தில், [ஆயிரம்கால் மண்டபத்தில்] இங்கு சைவ சமய சான்றோர்கள் ஒன்றுகூடி முடிவெடுப்பார்கள்.


    அப்படி இங்கு எடுக்கப்படும் முடிவுக்கு, உலகெங்கிலுமுள்ள சைவ சமயத்தினர்கள் கட்டுப்பட்டு வருவார்கள்.


    ஆகவே, சைவசமயத்தின் தலைமைப் பீடமாகத் திகழ்கிறது.


    இங்குள்ள மூலவர் 'வன்மீகநாதர் என வடமொழி யாலும், புற்றிடங்கொண்ட பெருமான் என செந்தமிழ் மொழியாலும் அழைக்கப்பட்டு வருகிறோம்.


    இத்திருத்தலம் சைவத்தலங்களில் முதன்மையானது. சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலமாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி தலமாகவும் (பூமி) விளங்கிறது.


    இத்திருக்கோயிலின் மூலவராகியவர் எப்பொழுது தோன்றியருளினார் என்பது காலக்கணக்கிற்குள் அகப்படாதே இருந்தன. இதனால்தான் திருநாவுக்கரசு சுவாமிகள் இம்மூலவரைப் பார்த்து......


    திருவினாள் ஓர்பாகம் சேர்வதற்கு முன்னோ, பின்னோ!
    தில்லை அம்பலத்தாடுவான் புகுவதற்கு முன்னோ, பின்னோ!
    திசை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ, பின்னோ!
    திருவாரூர்க் கோயிலாக கொண்ட நாளே!

    என வியப்புற்று ஆழ்ந்து வியந்து பாடினார் திருநாவுக்கரசு சுவாமிகள்.


    தமிழகத்து திருக்கோயில்களிலே தலையாயதாகப் போற்றப் பெறும் பெருமை திருவாரூர் திருக்கோயிலுக்குச் சாரும்.


    மகேந்திர பல்லவன் காலம் தொடங்கி சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர்கள், மற்றும் மராட்டியர் காலம் வரைக்கும் மலர்ந்த கலைச் செல்வங்களையும், இலக்கியங்களையும், வரலாற்றுச் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டு திகழும் திருவாரூர்க் கோயிலின் தொன்மை போற்றுதற்குரியது.


    மகேந்திர பல்லவனின் காலத்தில் வாழ்ந்த சமயக் குரவரான நாவுக்கரசர், தாம் யாத்த தேவாரபதிகத்தில் "அம்பலத்தே மன்னிக்கூத்தை ஆடுவான் புகுவதற்கு முன்னோ, பின்னோ அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே!
    "கோலம் நீ கொள்வதற்கு முன்னோ, பின்னோ குனிதாடும் கோயிலாக் கொண்ட நாளே"!
    வேதத்தை விரிப்பதற்கு முன்னோ, பின்னோ விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே!"---என வினவிய வினாக்களால் கி.பி. ஆறாம் நூற்றாண்டுகளுக்கும் முன்பே ஆரூர் திருக்கோயில் திகழ்ந்தை நோக்க வேண்டும்.


    மார்கழி ஆதிரை விழா.
    பங்குனி உத்திரப் பெருநாள்.
    வீதிவிடங்கனின் திருவீதிபவனி.------- போன்றவற்றைக் கண்குளிரக் கண்ட நாவுக்கரசர.......
    "எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே" என போற்றப்பட்டத் திறத்தால், ஆரூர் தொன்மைப் பெருமையோடு விழாவின் பெருமையையும் அறிய முடிகிறது.


    பல்லவர்கள் காலத்தில், ஆரூர் திரு மூலட்டானம் எனும் புற்றிடங்கொண்ட திருக்கோயிலும், அரநெறியாம் திருக்கோயிலும் ஆரூரின் திருக்கோயில்களாகத் திகழ்ந்தன.


    அதன்பின்பு, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இவை தவிர சுந்தரரால் போற்றப்படும் பரவையுண்மண்டளியும் சிறப்பு பெற்றன.


    சோழப்பெருமன்னர்கள் காலத்தில்
    பெரிய தளி
    (திருமூலட்டானம் எனும் பூங்கோயில்)
    அரநெறி,
    திருமண்டளி,
    உலகீச்சரம்,
    பிரம்மீச்சரம்,
    அருமொழி ஈச்சரம் என்ற திருக்கோயில்கள் திகழ்ந்ததைத் தஞ்சைப் பெருங்கோயிலுள்ள கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் அறிய முடிகிறது.


    பின்பு விஜயநகர நாயக்கர்கள், மராட்டியர்கள் காலத்தில்
    வன்மீகேசம்,.
    (திருமூலட்டானம்)
    அசலேசம்,(அரநெறி)
    ஆடகேசம்,
    ஆனந்தேசம்,
    விஸ்வகர் மேசம்,
    தியாகேசம் --என்ற பெயர்களில் ஆரூர் திருக்கோயில்கள் குறிக்கப் படுகிறது.


    இவற்றுள், திருமண்டளி எனும் திருக்கோயில் தவிர மற்ற அனைத்தும் தற்போது அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் என்று அழைக்கபடும் வரும் பெருந்திருக்கோயில் வளாகத்திற்குள்ளாகவே அமைந்துள்ள பழம்பெரும் கோயிலாகும்.


    எண்ணில்லாப் பழமைபெருமைகளோடு, ஏற்றமிகு சிற்பக் களஞ்சியத்தாலும், வளமை மிகு இலக்கிய வளத்தாலும், கவின்மிகு கட்டிடக் கலைச் சிறப்பாலும், காவியங்கள் மொழி பேசிடும் ஓவியங்களாலும், பண்ணும் பரதமும் பாங்குடன் வளர்த்ததாலும், எங்கும் காண இயலாத ஏழிசைக் கருவிகளோடும், கடிதினில் காலம் காட்டும் கல்வெட்டுச் செய்திகளாலும், செல்வச் செழுமையைக் காட்டும் செப்பேட்டுக் குறிப்புகளாலும், கலை வியப்போங்கும் செந்செப்புத் திருமேனிகளாலும், அகன்ட ஆழித்தேரின்அழகுடைப் பாங்காலும் மகுடமெனத் திகழும் ஆரூர் திருக்கோயில், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகால தமிழனின் சமயப் பெருமையாகும்.


    கவின் கலைகளின் திறமை மற்றும் தமிழகக் கலாசார பண்பாட்டுக் கூறுகளின் தனித்தன்மையைக் காட்டும் பொக்கிஷப் பெட்டகம் எனலாம்.


    திருச்சிற்றம்பலம்.
Working...
X