Announcement

Collapse
No announcement yet.

Perur temple part33

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part33

    *சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(33)*
    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *கெளரி திருமணப் படலம்*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    பார்வதி தேவியைத் திருமணஞ் செய்யும்படி சிவபிரான் திருவுளங் கொண்டு, நாரத முனிவர் முகமாகச் சமஸ்த லோகத்தாருக்கும் அறிவித்தருளினார்.


    பின்பு திருப்பேரூரின் கண்ணே திருக்கல்யாண மண்டப முதலியவற்றைத் தாமே சங்கற்ப மாத்திரையால் நிருமித்தனர்.


    நாரத முனிவர் எவ்விடத்துஞ் சென்று, "திருப்பேரூரிலே பர்வதராஜன் பெற்ற பார்வதி தேவியாரைத் திருமணஞ் செய்யச் சிவபிரான் திருவுளம் பற்றினார். அங்கே அனைவரும் வரக் கடவீர்" என சொல்லி மீண்டனர்.


    பின்பு வயிரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள்,
    அரிகரபுத்திரர், கூர்மாண்டர், காலக்கினி ருத்திரர், ஆடகேசர், ஏகாதச ருத்திரர் ஆகிய எல்லோரும் அளவில்லாத சிவகணங்கள் சூழ்ந்து வரச் சென்றார்கள்.


    விட்டுணு மூர்த்தி, பிரமதேவர், அஷ்டதிக்குப்பாலர், ஆதித்தியர், உருத்திரர், வசுக்கள், மருத்துவரென்னும் முப்பத்து முக்கோடி தேவர், வித்தியாதரர், கருடர், காந்தருவர், உரகர், நாற்பத்தெண்ணாயிர முனிவர், ஆகிய அனைவரும் த்தம் பத்திகளுடன் சென்றனர்.


    பரிசனங்களும் வரிசைகளும் உடன்கொண்டு, மலைகள் பலவுஞ் சூழ்ந்து வர, மேனையாகிய பத்தினியுடன் பர்வதராஜன் சென்றான்.


    சப்த சாகரங்களும், கங்கையாதி தீர்த்தங்களும், காலங்களும், திக்குகளும், எட்டு யானைகளும், உடன் போயின.


    நால்வகைப் படைக்கடலும் புடையே நடக்கப் பூலோக வேந்தர்களுஞ் வந்து சேர்ந்தனர்.


    சார்ந்த சமஸ்தர்களும் பரமசிவனது பாதாரவிந்தங்களைப் பணிந்தனர்.


    பின்னர்ச் சிவபெருமானும், உமாதேவியாருந் திருமணக் கோலங் கொண்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க, அரம்பையர் ஆட, கின்னரர் பாட, நாரதர் முதலியோர் வீணாகானஞ் செய்ய, அமரர்கள் பூ மழை பெய்ய திருமால் இட்டபாதுகை மீது, சிவபெருமான் திருவடி சாத்தி, பக்கத்தே உமா தேவியர் வர, பாவாடை மீது சென்று, தேவ மகளிர் எட்டு மங்கங்கங்களையும் ஏந்தி வாழ்த்த, அவர்களுக்குத் திருவருணோக்கஞ் செய்து, வேத சிவாகமங்களில் விதித்த வண்ணம் பிரமதேவர் முளைப்பாலிகை முதலியவற்றை முன்னரே அமைத்துள்ள திருக்கலியாண மண்டபத்தில் உமா தேவியரோடும் ஆசனத்தில் வீற்றிருந்தருளினர்.


    அமரர்கள் அனைவரும் ஆனைப்படி ஆசனத்தில் இருந்தனர்.


    அப்பொழுது, பர்வராஜன் சமீபித்து, மேனை வணங்கிப் பசும்பால் வார்க்க, மெய்யன்பினால் சிவபெருமான் திருவடிகளை விளக்கித் தன் சிரமீது தெளித்து, உள்ளும் பருகி, உமாதேவியாராகிய புத்திரியாரைத் தத்தஞ் செய்தான்.


    உடனே தேவர்கள் பூமாரி பொழிய, தேவதேவர் திருக்கையில் ஏற்றருளி, பிரமதேவர் அக்கினி வளர்க்க, மங்கலசூத்திரத்தை உமாதேவியார் கழுத்திலே தாரணஞ்செய்து, ஆன்மகோடிகள் அனைத்தும் இன்பம் நுகர்ந்து உய்யும் வண்ணம் செய்யத்தக்க சடங்குகளெல்லாம் நடத்தியருளினர்.


    பின்பு மணமண்டபத்தினின்றுஞ் சிவபெருமான் இடபாரூடராய், உமாதேவியோடுந் திருவீதியில் எழுந்தருளி, திருக்காட்சி கொடுத்துத் திருக்கோயிலிற் புகுந்து சிங்காசனத்தில் வீற்றிருந்து, திருமணவாளக் கோலந் தரிசிக்க வந்தவர்கட்கெல்லாம் விரும்பிய வரங்களை அருளி, எல்லாவுயிரும் வாழும் வண்ணம் உமாதேவியாரோடுந் திருப்பேரூரில் வாழ்ந்திருந்தனர்.


    திருச்சிற்றம்பலம்.


    கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் இன்னும் வ(ள)ரும்.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X