Announcement

Collapse
No announcement yet.

Perur temple part32

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part32

    *சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.


    ■■■■■■■■■■■■■■■■■■
    ■■■■■■■
    *( 32)*
    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *கெளரி தவம்புரி படலம்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    பிரமாவின் புத்திரனாகிய தக்கன் பரமசிவனைப் பணிந்து திரிலோகாபதியாய் வாழ்ந்து வந்தான்.


    தவத்தினாலே உமாதேவியாரைப் புத்திரியாகப் பெற்றுச் சதிதேவி என்னும் நாமகரணமிட்டுச் சிவபிரானுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.


    பின்பு வேள்வி புரிய விரும்பித் தன்னுடைய மருகராகிய சிவபெருமானுக்கும் புத்திரியாகிய உமாதேவிக்குந் தெரிவிக்கும் பொருட்டுத் திருக்கைலாச மலையை அடைந்தான்.


    அப்போது சிவபெருமான் ஒருத்தரமும் அருளாதிருந்தமை நோக்கித் தக்கன் அந் நிருமல மூர்த்தியை இகழ்ந்து கொண்டு திரும்பி *"சுடுகாட்டாடிக்கு விவாகஞ் செய்து கொடுத்தவன்றே புத்திரியை இழந்தோம். இனி அவனுக்கு யாகத்திற்கு கொடுக்கும் அவிர்பாகத்தை விலக்கி, ஏனையோர்க்கு ஈந்து, அவ்விரந்துண்பவனுக்குக் கொடுக்கும் பாகத்தையுங் காத்தற் கடவுளாகிய விட்டுணு மூர்த்திக்கு கொடுப்பேன்"* என்று சொல்லி வேள்வியைத் தொடங்கினான்.


    அப்போது உமாதேவியார் சிவபிரானின் தடையையுங் கடந்து தக்கன் யாகத்திற்குச் சென்ற பொழுது அத் தக்கனும் அவன் மனைவியும் மக்களும் ஒன்றும் பேசாதிருந்தனர்.


    பின்பு தக்கன் சிவபெருமானுக்குக் கொடுக்கும் அவிர்பாகத்தை விட்டுணுவுக்குக் கொடுத்தான்.


    இதைக் கண்ட உமாதேவியார் *"தாட்சாயணி யென்னும் நாமத்தைத் தள்ளுவதே முறை"* என்று அக்கினியில் மூழ்கினார்.


    அப்போது தேவர்கள் முனிவர்களோடு தக்கனும் வருந்தினான்.


    உமாதேவி அழலின்கண் முழுகியதை யுணர்ந்த சிவபிரான் கோபித்து ஒரு சடையை பூமியில் வீசினார்.


    அச்சடையினிலிருந்து வீரபத்திரக் கடவுள் தோன்றி வணங்கினார். அவரை சிவபிரான் நோக்கித் தக்கன் யாகத்தை அழித்து, அங்குள்ளாரையுந் தண்டித்து வரும்படி ஆஞ்ஞாபித்தார்.


    உடனே வீரபத்திரக் கடவுள் சென்று, தக்கன் முடியையும், எச்சன் முடியையும் வெட்டி வேள்விக் குண்டத்தில் இட்டு, வேள்வியையும் அழித்தொழித்து, மற்றவர்களையும் தக்கபடி தண்டித்து, வேள்விச் சாலையில் அக்கினியை வைத்து, எதிர்த்த திருமாலின் சக்கரப் படையின் வலிமையைப் போக்கிப் புறங்கண்டு திரும்பினார்.


    அக்கினியில் மூழ்கித் தாட்சாயணி யென்னும் பெயரை மாற்றிய உமாதேவியார் இம்மலையரையன் புத்திரியாராய்ச் சிவபெருமான் தம்மைத் திருமணம் செய்யும் வண்ணம் கருதித் தவம் புரியத் தொடங்கினார்.


    அப்போது நாரத முனிவர் சமீபித்துத் *"திருப்பேரூரிலே தவஞ் செய்தால் விரைவிலே சிவபிரான் எழுந்தருளி மணந்தருளுவார் என விண்ணப்பஞ் செய்ய, அங்ஙனமே திருப்பேரூர் சார்ந்து உமாதேவியார் தவஞ் செய்தருளினார்.


    அக்காலையில் சிவபெருமான் வயோதிகப் பிராமணராய் வந்தருளினார்.அவரை உமாதேவியார் அடியவரில் ஒருவராகக் கொண்டு வணங்க, வேற்றுருவங் கொண்ட சிவபிரானும் பற்பல விநோதமாக வினவ, அதற்கு உமாதேவியாரும் விடை கொடுத்து, இரந்துண்டல் முதலியவாகச் சிவபிரானை இகழ்ந்து கூறியவைகளின் பொருட்டு உத்தாஞ் சொல்லத் தொடங்கினார்.


    *"கர்மமே கர்த்தாவென்னுந் தேவதாரு வனத்து முனிவரை ஆளுதற்பொருட்டு, பிச்ஷாடரானதேயன்றி, வயிரவ அம்சத்தானும் இழந்த பிரமன் சிரத்தைக் கிள்ளி, மாயோன் முதலிய தேவர் முனிவர் மட்டும், தருக்கழியும்படி உதிரப் பிச்சை ஏற்றனர்.


    பாவக் கடலினின்றும் உயிரை அருட்கரை ஏற்றுதலால் உருத்திர நாமம் உற்றனர்.


    அடைக்கலமாக வைத்த பொருளைக் கொடாமைபற்றி அமரர் வருந்தினமையால், அக்கினிதேவன் அழுது உருத்திரப் பெயரும் அடைந்தான்.


    உயிர்களின் பருவபேதம் பற்றி சிவபிரான் பலவுருக் கொண்டருளினார்.


    தேவதாருவனத்து முனிவர் வேள்வியினின்றும் வந்த புலியின் தோலையுடுத்து மற்ற மான், மழு, பாம்பு, தீ, நகுதலை இவைகளைத் தரித்து, முயலகனை மிதித்து நடித்து, பூதங்களைப் படைகளாக்கினார்.


    அண்டங்களை வயிற்றில் அடக்கத் தொடங்கிய பகாசுரனைக் கொன்று, இறகினை அணிந்தனர்.


    பகீரதன் பொருட்டுக் கொடுத்த கங்கை உலகத்தை அழிக்கச் சென்ற தருக்கை அடக்கி முடியிற்றரித்தனர்.


    சாபந் தீரும்படி சரணடைந்த சந்திரனைச் சடையில் முடித்து வைத்தனர்.


    அரி பிரமேந்திராதி தேவரை நெற்றிக் கண்ணால் நீற்றி அப்பொடியையும், எம்பு முதலியவற்றையுந் தாம் நித்தியரென்பது தோன்ற திருமேனியிற் றரித்தலாதிகளைப் புரிந்தனர்.


    இத்துணைப் பெருமையுடையார் *பேரழகரல்லரோ* என்று உமாதேவியார் விடையளித்தபோது, விருத்த வேதிய வுருவை மறைத்து, இடபாரூடராய்ச் சிவபிரான் எதிர் நின்றனர்.


    உமாதேவியாரும் வணங்கி நின்றார்.


    தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.


    பின்பு சிவபெருமான் உமாதேவியார் திருக்கரத்தைப் பற்றி தம்மிடம் செல்ல அணைவரும் வணங்க எழுந்தருளியிருந்தார்.



    திருச்சிற்றம்பலம்.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X