Announcement

Collapse
No announcement yet.

Perur temple part24

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part24

    *சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *( 24 )*
    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *தீர்த்தப் படலம்.*
    திருப்பேரூர் எல்லை பட்டீச்சுரத்தைச் சூழ மூன்று யோசனை அளவினையுடையது. அவ்வெல்லையில், தேவர், அசுரர், முனிவர் முதலாயினோர் தாபித்த சிவலிங்கங்களுக்கும், தீர்த்தங்களுக்கும் அளவில்லை.


    பூருவ பரார்த்தத்திலே, பிரமதேவர் சிருட்டித் தொழிலைக் குறித்துச் சிவபிரானை நோக்கித் தவஞ் செய்தனர்.


    அப்பொழுது, முன்னர் அதிகாரஞ் செய்த பிரமர்கள், நாரணர்கள், இருடிகள், யோகிகள், தேவர்கள் அனைவருங்கூடி வீடுபேற்றை நாடிப் பலழகைத் தவங்களைப் புரிந்தனர்.


    அவர்களுக்குத் திருவருள் செய்யக் கருதிச் சிவபெருமான் உமாதேவியார் காண அத் திருப்பேரூர் வெள்ளியங்கிரியிலே திருநடனஞ் செய்தருளினார்.


    அந்நிருத்தத்தை அனைவருந் தரிசித்து, ஆனந்தத்தில் மூழ்கியிருக்கும் போது, எம்பெருமான் திருவுருவிலே தரித்த சர்ப்பங்கள் ஆடல் வேகத்தைச் சகிக்க மாட்டாமல் விஷத்தை உமிழ, அவ்வெம்மை தாக்க, எல்லாருங் காத்தருள வேண்டுமென்று முறையிட்டு வருந்தினர்.


    அதற்குத் திருநடராசர் இரக்கமுற்று, கங்கையை நோக்கி, விஷவெம்மை தணியும் வண்ணம் நதியாக ஒழுகும்படி ஆஞ்ஞாபித்தவளவில், அவ்விரசத கிரியின் செவியடி யுரோமமான வன்னிமர மூலத்தினின்றுங் கங்கையானது பெருவெள்ளமாக எழுந்து சென்றது.


    அனைவரும் விட வெப்பத்தாலாகிய தாகசோகங்கள் நீங்கும்படி அந் நீரையுண்டு, அதில் மூழ்கி, முக்தியுஞ் சிந்திக்கப் பெற்றார்கள்.


    அந் நதிக்குச் சிவநதி, அமிர்தவுந்தி, தட்சிணகங்கை, ஆதிகங்கை, ஞானதோயை, பிப்பிலநதி, பிறவாநெறி, கலிகன்மநாசினி, விருத்தகங்கை, பிரயாகை காஞ்சிநதி என்று பல காரணப் பெயர்களுண்டு.


    அத்தீர்த்தத்தைத் தீண்டிய கீழானவருஞ் சிவசரியை முதலியவைகளாற் சிந்திக்குஞ் சிவசாலோகாதி முத்திகளைப் பெறுவர்.


    அதிபாதக மகாபாதக உபபாதங்களின்று நீங்குவர். அந் நதிதீரத்தில் தபஞ் செபந் தியானம் யோகம் வேள்வி முதலியவற்றைச் செய்தால் ஒன்று அனந்தமாய்ப் பெருகும்.


    வடகைலாசத்திலுள்ள பிரம தீர்த்தத்தில் ஒரு மண்டலம் மூழ்கி அதனைப் பருகினோர்க்கு மலடுகளும், பேய் முதலியவும் நோய்களும் நீங்கும்.


    வேண்டிய காரியங்கள் எளிதில் கைகூடும். இறுதியிற் பிரமபதங் கிடைக்கும். அப் பிரம தீர்த்தத்திற்குக் கிழக்கேயுள்ள காலவதீர்த்தத்தில் மூழ்கினாற் பிறவி நீங்கும்.


    பட்டிநாயகருக்குக் கீழைத் திசையிலுள்ள சூரிய தீர்த்தம் கண்ணொளிதந்து, இறுதியில் ஆதித்திய வுலகிற் சேர்க்கும். இந்திர தீர்த்தம் இட்ட காமியங்களை ஈந்து, முடிவில் இந்திர லோகத்தில் இருத்தும்.


    பட்டீச்சுரத்துக்கு ஈசான திக்கிலுள்ள கந்த தீர்த்தத்தின் மூழ்கினோர் பேய் பூத முதலியவை நீங்கிச் செல்வம், வீரம், ஞானம், முத்தி என்பவைகளை எய்துவர்.


    அகத்திய மகாமுனிவர் மலைக்கு கீழ்பாலுள்ள அகத்திய தீர்த்தம், யோகி தீர்த்தம், சித்த தீர்த்தம் என்பவை வேண்டியவைகளைக் கூட்டுவிக்கும்.


    பட்டீச்சுரத்தின் உத்திர திக்கிலுள்ள நச்சுப் பொய்கை நீரை அருந்தினோர் இறந்து முத்தி சேர்வர். சித்தர்கள் கைப்படில், தாமிர முதலியவற்றைப் பொன்னாக்கி அற்புதங்கள் செய்வர்


    காஞ்சிமா நதியின் வடகரையிலுள்ள வசிட்ட தீர்த்தம், வாமதேவ தீர்த்தம், பார்க்கவதீர்த்தம், வியாழ தீர்த்தம் நான்கும் பெரும் பயனைத் தரும்.


    வயிரவக் கடவுள் திருமுன்பு சிருங்கக்கிணறாகிய சிருங்க தீர்த்தமும், உமாதேவி சந்நிதியில் துர்க்கைத் தீர்த்தமும், ஷேத்திரபால தீர்த்தமும்,அமுதலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குத் தென்றிசையில் காளி தீர்த்தமும், சக்கர தீர்த்தமும், தென்கிழக்கு எல்லையில் குலசேகர தீர்த்தமும், நந்தி தீர்த்தமும்,அக்கினி தீர்த்தமும், எம தீர்த்தமும், இயக்க தீர்த்தமும், சண்டேசர் ஆலயத்திற்கு வாயு திசையில் சண்டேசுர தீர்த்தமும், சோம தீர்த்தமும், மரகத வல்லியம்மை ஆலயத்திற்கு வாயுதிக்கில் பிரமதகண தீர்த்தமும், பட்டீசுரத்திற்கு வாயு திசையில் சப்த மாதர்கள் தீர்த்தமும் விளங் கும்.


    மேற்கண்ட பால தீர்த்தங்களில் மூழ்கினால், நரை, திரை, மூப்புகள் அகலும். முசுகுந்த தீர்த்தமும், அங்கிர தீர்த்தமும், இந்திர தீர்த்தமும், சோழ தீர்த்தமும், காமதேனு தீர்த்தமும், கன்னிகை தீர்த்தமும், காஞ்சிமா நதியின் மேற்றிசை முதற் கீழ்த்திசை யளவும் உள்ளன.


    இத்தீர்த்தங்களில் மூழ்கியெழுவோர் மண்ணுலகிற் செல்வமும், விண்ணுலகில் போகமும், பின்பு வீடுங் கூடுவர்.


    திருச்சிற்றம்பலம்.


    கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் இன்னும் வ(ள)ரும்.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X