Announcement

Collapse
No announcement yet.

Perur temple part 21

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part 21

    **சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை. கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(21)*
    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *பள்ளுப் படலம்.*


    திருக்கைலாச மலையிலே சிவபெருமான் தனது திருவுருவைக் கண்ணாடியிற் பார்த்து அழைத்தலும், அதனின்று ஒருவர் சுந்தரர் என்னும் திருநாமத்தோடு தோன்றி, ஆலகால விஷத்தை அமுது செய்யும்படி அச் சிவபிரானுக்குத் திரட்டிக் கொடுத்தமையால் ஆலால சுந்தரர் என்னுந் திருநாமம் பெற்றுத் திருத் தொண்டுகள் செய்து வந்தனர்.


    வரும்போது, ஒருதினஞ் சிவபிரானுக்குத் திருப்பள்ளித் தாமங்கொய்யச் சென்றனர். அப்பொழுது, உமாதேவியாருக்கு மலர்கள் கொய்யும்படி, அநிந்திதை, கமலினி என்னும் இரண்டு மாதருந் திருநந்தவனஞ் சேர்ந்தனர்.


    அங்கே அவ்விருவர் அழகையும் ஒருவராகிய சுந்தரர் நோக்க, அவ்வொருவர் அழகை இரண்டு மகளிரும் பார்த்தனர். பின்பு மந்தகாசத்தோடு சுந்தரர் சிவபிரானிடத்தும், நெகிழ்ந்த மனத்தோடு இரு பெண்களும் உமாதேவியாரிடத்துஞ் சென்றனர்.


    சிவபிரான் சுந்தரரை நோக்கி மாநுடப் பிறவியிற் சேர்த்தனர். சுந்தரர், திருநாவலூர் ஆதி சைவ வேதியராகிய சடையனாரிடத்தே அவதரித்து ஆரூரனென்னும் திருப்பேர் பூண்டனர்.


    அவ்விரண்டு மாதருட் கமலினியார் திருவாரூரில், உருத்திரகணிகையர் மரபிலே அவதரித்துப் பரவையாரென்னும் பெயர் பெற்றனர்.


    அநிந்ததையார், ஞாயிறு என்னுந் தலத்திலே, வேளாளர் குலத்தில் அவதரித்து, சங்கிலியாரென்னும் நாமம் அடைந்தனர்.


    பின்னர்ச் சுந்தர மூர்த்தி வேத முதலிய கலைகளை ஓதியுணர்ந்து, திருமணப் பருவம் உற்றுப் பிதாவினாலே திருமணம் நிகழுமிடையில் சிவபெருமான் ஒரு அந்தண வடிவுகொண்டு, அம் மணப் பந்தரில் வந்து சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட் கொண்டு திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருட்டுறை யென்னும் ஆலயத்தை அடைந்தனர்.


    ஆலயம் அடைந்த சிவபிரானைச் சுந்தரமூர்த்தி நாயனார் தொடர்ந்து, *"பித்தா பிறைசூடி"* என்னும் திருப்பதிகம் பாடினார். பின்பு திருநாவலூரைத் தரிசித்துத் திருத்துறையூரில் தவநெறியைத் தரும்படி திருப்பதிகம் பாடி, இரவிலே திருவதிகையில் சிவபெருமான் திருவடி சூட்டப் பெற்று, திருமாணிகுழி, திருத்தினை நகர், திருத்தில்லை என்னுந் தலங்களிற் சென்று பாடிச் சீர்காழி அடைந்து, அங்கே திருக்கைலாச மலையிலுள்ள காட்சியைக் கண்டு திருக்கோலக்கா முதலாகிய தலங்களை வணங்கித் திருவாரூர் சென்று சிவபிரானுக்குத் தோழராகும்படி திருவருள் பெற்றனர்.


    பின்பு பரவையாரை மணந்து அத் திருக்கோலத்தோடு வன்மீக நாதரை வழிபட்டு வரும்நாளிலொருநாள், விறன்மிண்ட நாயனார் கோபங் கொண்டமையால், திருத்தொண்டத் தொகை பாடிப் பணிந்தார்.


    அதன்பின் குண்டையூர்க் கிழவர் தந்த நெல்மலையைப் பரவையார் வீட்டிற் சேர்க்கும்படி கோளிலியிற் சென்று பதிகம் பாடி, நாட்டியத்தான் குடியிற் சேர்ந்து, கோட்புலி நாயனார் தம் புத்திரிகளை மணந்து கொள்ளும் வண்ணம் வேண்ட, அவ்விருவரையுந் தம் புத்திரிகளாக வைத்துத் திருப்பதிகம் பாடி வலிவலஞ் சென்று, பின் திருப்புகலூரில் செங்கல் செழும் பொன்னாகப் பெற்றுத் திருப்பனையூரில் சிவபிரான் திருநடனக் காட்சியைத் தரிசித்து, மற்றுந் தலங்களைப் பணிந்து, திருப்பாச்சிலாச்சிரமத்தில் பொன்றருளும்படி பாடி, ஏனைய திருப்பதிகளைச் சார்ந்து வணங்கிக் கோவை திருப்பேரூரிற் சென்று காஞ்சிமா நதியிற் படிந்து ஆலயத்தை அடைந்தனர்.




    திருச்சிற்றம்பலம்.


    பள்ளுப்படலம் நாளையும் வரும்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X