Announcement

Collapse
No announcement yet.

Perur temple part 13

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part 13

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை. கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *( 13 )*
    *திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
    *நிருத்தப் படலம்*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *குறிப்பு*
    *(நேற்றைய தினம் 12- வது நாளாக வந்த திருப்பேரூர் திருக்கோயில் தொடரின் தலைப்பில் உள்ள வட கைலாயப் படலம் என்றிருப்பதை *" நிருத்தப் படலம்"* *என தலைப்பிட்டு வாசிக்குமாறு அடியார் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தவறுக்கு மன்னிக்கவும்)*
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    நேற்றைய நிருத்தப் படலத் தொடர்ச்சி.
    அகத்தயர் முனிவர் மற்றும் முனிவர்கள் இசையெழுப்ப, தொண்டர்கள் அரகர வென முழக்க காணமிட, தனது திருமேனியின் ஒரு பாகத்திலே உமா தேவியார் அமர்ந்திருக்கவும், ஒரு கையில் உடுக்கை ஒலிக்க, மற்றொரு கையில் அக்கினி விளங்க, வேறொரு கை வரதமாக, பிறிதொரு கை அபயமாக, திரோதனத் திருவடியை முயலகன் முதுகிற் பதித்து, அருட்டிருவடியைக் குஞ்சிதமுற வீசி, திருக்கண்களாற் காளி தேவியின் முகத்தை நோக்கி ஞான நடராஜர் வெள்ளியம்பலத்திலே *திருநிருத்தஞ்* செய்தருளினார்.
    செய்தருளியுந் திருவடிக் கண்ணதாகிய மறைச் சிலம்பொலியும், வாத்தியங்களின் ஒலியுஞ் செவிப் புலப்பட்டனவன்றி, திருநடனக் காட்சி கண்ணுக்குப் புலப்படாமையால், அங்கு நின்ற அனைவரும் ஏங்கி இரந்து துதித்தனர்.
    துதித்த மாத்திரத்தில், ஊன நடனஞ் செய்து எவ்வகையுயிர்க்கும் ஆணவமல வலியை மாற்றி ஞான நடனஞ் செய்தருளும் நணராஜர் ஞான நோக்கத்தைத் தந்தருளலும், அஞ்ஞான நீங்கி, மூன்று முனிவரர் முதலிய யாவருந் தாண்டவத்தின் ஆனந்தத்தைக் கண்களாற் கண்டு, மொண்டு மொண்டு உண்டு, கழி பேருவகையுற்று ஆனந்தக் கூத்தாடினார்கள்.
    சிவபெருமான் செய்தருளிய நாடக வேகத்தினால், ஆபரணமாக அணிந்த பாம்புகள் விடத்தை உமிழ, அது புலித்தோல் போர்த்தாற்போலத் திருமேனி முழுவதும் வரிவரியாக ஒழுகியது.
    அவ் வடத்தின் வெப்பத்தினால், தேவர்கள் முதலிய யாவரும் அஞ்சி பசியோடு தாக சோகங்கள் அடைந்தனர்.
    உமாதேவியார் அன்னபூரணியை உண்டாக்கிப் பசியைத் தணித்தனர்.
    முருகக் கடவுள் நீர் வேட்கையை ஒழித்தனர்.
    விநாயகக் கடவுள் உடம்பிலுற்ற வெப்பத்தைத் துதிக் கையினால் நீர் துளிக்கும் வண்ணங் காற்றினை வீசித் தை வந்து ஆற்றியருளினார்.
    பின்பு கூத்தப்பிரான் கருணை கூர்ந்து காலவ முனிவருக்கு அன்னார் விரும்பிய வண்ணம் விதேக முத்தியை யளித்தனர்.
    பிரமாவை நோக்கி, " நீ பழைய வடிவொடு படைப்பினைச் செய்து பட்டிமுனி யம்சத்தால் நமது நிருத்தத்தைத் தரிசிப்பாயாக" என்றும், விட்டுணுவை நோக்கி, "நீயும் பண்டையுருக்கொடு பாற் கடலிற் பள்ளிகொண்டு காத்தற் றொழில் செய்து கோமுனி யம்சத்தால், நிருத்த தரிசனஞ் செய்வாயாக" என்றும், மற்றோயோரை நோக்கி, *"இத் திருப்பேரூரிலே வசிப்போர்க்கும், இத்தலத்தைத் தரிசித்தோர்க்கும், நமது திருக்கூத்தைக் கண்டோர்க்கும் அறம் பொருள் இன்பம் வீடென்னும் நால்வகை உறுதிப் பொருள்களுஞ் சிந்திக்கக் கடவன"* என்றுந் திருவாய் மலர்ந்தருளினார்.
    பின்பு வெள்ளியங்கிரிமீதுள்ள வெள்ளியம்பலத்திலும், உமா தேவியார் வேணவாவோடு காணும் வண்ணம் சிவபெருமான் திருநடனஞ் செய்தருளினார்.
    *(நாளை வட கைலாயப் படலம்)*
    திருச்சிற்றம்பலம்.
    திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X