Announcement

Collapse
No announcement yet.

Chandas- metre - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Chandas- metre - Periyavaa

    Chandas- metre - Periyavaa
    Courtesy:Sri.GS.Dattatreyan
    தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 209
    இருவகைச் சந்தங்கள்
    'சுக்லாம்பரதரம்' ச்லோகத்தை எடுத்துக்கொண்டு அதில் (உயிரெழுத்து ரீதியில்) எத்தனை அக்ஷரம் இருக்கிறது என்று பார்த்தால் 32 அக்ஷரம் கணக்கு வருகிறது. இது
    சு-க்லாம்-ப-ர-த-ரம் வி-ஷ்ணும்
    ச-சி-வர்-ணம்-ச-துர்-பு-ஜம் |
    ப்ர-ஸன்-ன-வ-த-னம் த்யா-யேத்
    ஸர்-வ-வி-க்நோ-ப-சா-ந்த-யே ||
    என்று எட்டெட்டு எழுத்து கொண்ட நாலு பாதங்களாகப் பிரிந்திருக்கிறது. 'சுக்லாம்பரதரம் விஷ்ணும்' என்பது முதல் பாதம். 'சசிவர்ணம் சதுர்புஜம்' இரண்டாம் பாதம். 'ப்ரஸன்ன வதனம் த்யாயேத்' என்பது மூன்றாம் பாதம். 'ஸர்வ விக்நோபசாந்தயே' என்பது நாலாவது பாதம்.
    ஸரி, அப்படியானால் 'ஷட்-பதீ' என்கிற 'ஆறுகால் ஸ்தோத்ர'த்தில் ஒவ்வொரு ச்லோகத்திலும் இப்படி ஆறு அடிகள் இருக்கின்றனவா? இல்லை. ஒவ்வொரு ச்லோகத்திலும் நாலு பாதங்கள்தான் இருக்கின்றன. ஸாதாரணமாக அப்படி இருப்பதுதான் வழக்கம்.
    இந்த 'ஷட்பதீ' ஸ்தோத்ரத்திலே ஒரு ச்லோகத்தை எடுத்துக்கொண்டால் அதற்குள்ளே வருகிற பாதங்கள் 'சுக்லாம்பரதர'த்தில் இருக்கிற மாதிரி ஸமமான அக்ஷரம் கொண்டதாக இல்லை.
    'சந்தஸ் சாஸ்திரம்' என்பதாகக் கவிதா லக்ஷ்ணம் கூறும் ஸம்ஸ்க்ருத யாப்பிலக்கணத்திலேயே இந்த விதமான அக்ஷரக்கணக்கில் வராத சந்தங்களை ('மீட்டர்'களை)ப் பற்றியும் இருக்கிறது. மீட்டரில் இரண்டு தினுஸை அது சொல்கிறது. ஒன்றுதான் ஒரு உயிரெழுத்துக்கு ஒரு அக்ஷரம் என்ற கணக்குப்படி இருக்கும் மீட்டர். இதற்கு 'வ்ருத்தம்' என்று பேர். தமிழில் 'விருத்தம் பாடுவது' என்று சொல்வது இதன் தொடர்புடையதாகத்தான் வந்திருக்கவேண்டும். இன்னொன்று 'ஜாதி' எனப்படும்.
    ஜாதிக்கும், வ்ருத்தத்துக்கும் என்ன வித்யாஸமென்றால், வ்ருத்தத்தில் குறில், நெடில், கூட்டெழுத்து எல்லாவற்றுக்கும் ஒரே 'வால்யூ'தான். 'சுக்லாம்' என்பதில் 'சு' என்பது குறில்; 'க்லாம்' நெடில்; அதோடுகூட 'க்லாம்' என்பது க், ல், ம், என்ற மூன்று சப்தங்கள் கொண்ட கூட்டெழுத்தாக இருக்கிறது. இப்படியிருந்தாலும், நாம் எந்த அக்ஷரமானாலும் அதற்கு வால்யூ ஒன்று என்று வைத்து, 'சு' ஒரு அக்ஷரம், 'க்லாம்' – உம் ஒரு அக்ஷரம் என்றுதானே கணக்குப் பண்ணினோம்?
    'ஜாதி'யில் ஒரு உயிரெழுத்துக் கொண்ட அக்ஷரம் ஒவ்வொன்றுக்கும் ஒரே மதிப்பு (value) கொடுப்பதில்லை. 'வால்யூ' என்றும் 'மதிப்பு' என்றும் சொல்வதற்கு 'மாத்ரா' என்று பெயர். மாத்திரை என்று தமிழில் ஆகும். metre என்பதுகூட 'மாத்ரா' விலிருந்து வந்ததுதான். குறில், நெடில் என்று இரண்டு இருக்கின்றன அல்லவா? குட்டையான அ, இ, உ முதலானவை குறில். நெட்டையான ஆ, ஈ, ஊ முதலானவை நெடில். இவற்றை முறையே 'ஹ்ரஸ்வம்' என்றும் 'தீர்க்கம்' என்றும் சொல்வது வழக்கம். யாப்பிலக்கணத்திலே குறிலான ஹ்ரஸ்வத்தை 'லகு' என்றும், நெடிலான தீர்க்கத்தை 'குரு' என்றும் சொல்லியிருக்கிறது. (லகு என்றால் லேசானது; குரு என்றால் கனமானது.) ஜாதி எனப்படும் சந்த வகையில் லகுவான அக்ஷரத்துக்கு, அதாவது குறிலுக்கு, வால்யூ ஒன்று; குருவான நெடில் அக்ஷரத்துக்கு வால்யூ இரண்டு. இப்படிப் பொதுவாகக் குறிலுக்கு ஒரு மாத்திரை என்றாலும் சில எழுத்துக்களோடு சேர்ந்து ஒரு குறில் வரும்போது, அது இரண்டு மாத்திரையாகிவிடும். அம், கம், சம் என்பதுபோல ஒரு குறிலுடன் 'அநுஸ்வாரம்' என்கிற 'ம்' சேரும்போது அந்தக் குறிலுக்கு இரண்டு மாத்திரை ஏற்பட்டுவிடும். 'விஸர்கம்' என்பதாக 'ஹ' சப்தத்துடன் அநேக சொற்கள் முடியும். ":" என்று இரண்டு புள்ளி போட்டு விஸர்கத்தைக் குறிப்பிடுவார்கள். 'ராம:' என்பதை 'ராமஹ' என்று சொல்லவேண்டும். இப்படிப்பட்ட விஸர்கம் ஒரு குறிலை அடுத்து வந்தால் அப்போதும் குறிலுக்கு இரண்டு மாத்திரை. உதாரணமாக 'ராம:'வில் வரும் 'ம' இரட்டை மாத்திரை பெற்றுவிடுகிறது. ஒரு குறிலை அடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட மெய்யெழுத்துக்களின் கூட்டு வந்தாலும் அப்போது குறில் இரண்டு மாத்திரை பெற்றுவிடும். உதாரணமாக, 'விஷ்ணு' என்ற வார்த்தையில் 'ஷ்ணு' என்பது 'ஷ், ண், உ' என்பதாக இரண்டு மெய்யெழுத்துக்களும் ஒரு உயிரெழுத்தும் சேர்ந்த சப்தம். 'வி' என்ற குறிலை அடுத்து இங்கே ஷ், ண் என்ற இரண்டு மெய்யெழுத்துக்கள் வரும். அந்தக் குறில் இரண்டு மாத்திரை பெற்று வரும்.
    அக்ஷரங்களை வைத்து 'வ்ருத்தம்' என்ற மீட்டர் முறை இருக்கிறாற்போலவே மாத்திரைகளை இப்படிக் கணக்குப் பண்ணி 'ஜாதி' என்ற 'மீட்டர்' முறையும் இருக்கிறது. இப்படி 'ஜாதி'யில் பல சந்தஸ்கள் (சந்தங்கள்) இருக்கின்றன. ஒரு ச்லோகத்தைப் பாதங்கள் என்ற நான்கு பகுதிகளாக (வ்ருத்தத்தில் போலவே) இதிலும் பிரித்து, ஒவ்வொரு பாதத்துக்கும் இத்தனை மாத்திரைகள் இருக்கவேண்டுமென்று இந்த முறையில் வைத்திருக்கிறது. ஆனால், 'ஜாதி'யில் ஒரு சுலோகத்தின் எல்லாப் பாதத்துக்கும் ஸமமான மாத்திரையாயில்லாமல், ஒவ்வொரு பாதத்துக்கும் வெவ்வேறாக இத்தனையித்தனை மாத்திரை என்று வைத்திருக்கும்.
    'சுக்லாம் பரதரம்' ச்லோகத்தில் 'சு'வும் ஒரு அக்ஷரம், 'க்லாமு'ம் ஒரு அக்ஷரம் என்று வ்ருத்த முறையில் கணக்குப் பண்ணினோமல்லவா? இதையே ஜாதி முறைப்படி செய்தால் இந்த இடத்தில் அந்த அக்ஷரம் ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரையாகிவிடும். 'சு' என்பது குறிலானதால் பொதுவாக அதற்கு ஒரு மாத்திரைதானென்றாலும், இங்கே அடுத்து 'க்லாமி'ல் க், ல் என்ற இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தாற்போல் வந்துவிடுகின்றனவல்லவா? அதனால் இங்கே குறிலான 'சு'வுக்கே இரண்டு மாத்திரை. 'க்லாம்' என்பதில் 'ஆ' என்கிற நெடில் (க்,ல்,ம் என்பவற்றோடு) வருவதால், அதற்கும் இரண்டு மாத்திரை.
    பொதுவாக, ஜாதி என்பதையும் வ்ருத்தம் என்றே சொல்லிவிடுகிறார்கள். மீட்டரில் இருப்பதெல்லாம் வ்ருத்தம் என்ற அபிப்ராயத்தில் இப்படிச் சொல்வதாயிருக்கிறது. அதனால்தான் 'ஜாதி' வகையைச் சேர்ந்த 'ஆர்யா' முதலான மீட்டர்களைக்கூட 'ஆர்யா வ்ருத்தம்' என்று சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது.
    காமாக்ஷி அம்பாளைப் பற்றிய ப்ரஸித்த ஸ்தோத்ரமான 'மூக பஞ்ச சதீ'யில் முதல் நூறு ச்லோகங்கள் ஆர்யா என்ற ஜாதியைச் சேர்ந்தவையே. அந்தப் பகுதிக்கு 'ஆர்யா சதகம்' என்றே பெயர். பரம உயர்வு பொருந்தியவள் என்பதால் அம்பாளுக்கே 'ஆர்யா' என்று பெயருண்டு. ஆசார்யாளுடைய அம்மாவின் பெயர் ஆர்யாம்பாள் என்பதுதான். பாடப்படும் அம்பாள், பாடல் அமைந்த மீட்டர் இரண்டுக்கும் பொருந்தும்படி 'ஆர்யா சதகம்' என்று ச்லேஷையாகத் தலைப்புக் கொடுத்திருக்கிறது.
    சற்றுமுன் சொன்னாற்போல் ஜாதி சந்தஸ்களில் இன்னொரு விசேஷம், நாலு பாதங்களில் ஒவ்வொன்றும் ஒரே எண்ணிக்கையுள்ள மாத்திரைகள் கொண்டதாக இருப்பதில்லை.
    வ்ருத்தம் என்று உயிரெழுத்துக்களைக் கொண்டு கணக்கு பண்ணுவதிலுங்கூட பாதத்துக்குப் பாதம் அக்ஷர வித்யாஸமுள்ளதாயும் சில மீட்டர்கள் உண்டுதான். எல்லாப் பாதமும் ஒரே அளவான அக்ஷரம் கொண்டது ஸம வ்ருத்தம். இப்படியில்லாமல் முதல் பாதத்திலும் மூன்றாம் பாதத்திலும் ஒரே அளவு அக்ஷரங்களும், அதற்கு வித்யாஸமாக இரண்டாம் பாதத்திலும் நாலாம் பாதத்திலும் ஒரே அளவான அக்ஷரங்களும் கொண்ட மீட்டர்களும் உண்டு. இவற்றை அர்த்த ஸமவ்ருத்தம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு பாதமுமே வேறு வேறு எண்ணிக்கையில் அக்ஷரங்கள் கொண்ட மீட்டர்கள்கூட இருக்கின்றன. இவை 'விஷம வ்ருத்தம்' எனப்படும். 'அதென்ன விஷமம்?' என்றால், வி-ஸமம் என்பதே விஷமம். 'ஸம'த்துக்கு எதிரானது 'வி-ஸமம்'. எல்லாப் பாதமும் ஸமமான அக்ஷரம் கொண்டதாயில்லாமல் இருப்பதால் 'விஷம வ்ருத்தம்' என்று பெயர். யாரைப் பற்றியோ விஷமமாகப் பாடுவது என்று அர்த்தமில்லை!
    விஷமம் என்ற வார்த்தை 'மிஸ்சீஃப்' என்று அர்த்தம் கொடுப்பதற்குக் காரணம்கூட, அது ஸமநிலையில் அதாவது நடுநிலையில் இருந்துகொண்டு – உள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் வெளியிலே ஒரு அர்த்தமும் உள்ளுக்குள்ளே திரிசமனாக இன்னொரு அர்த்தமும் கொடுக்கும்படியாகப் பேசுவது அல்லது கார்யம் செய்வதாக இருப்பதுதான். 'திரிசமன்' என்கிறபோதும் அது ஸமமாக இருப்பதைத் திரிப்பது என்று பொருள்படுவதாகவே தோன்றுகிறது.
    இரண்டால் வகுத்து ஸம பாதிகளாக ஈவு கொடுக்காத ஒற்றைப்படை எண்களையெல்லாம் 'விஷமம்' என்பார்கள். ஐந்து, மூன்று ஆகியவை ஒற்றைப்படை எண்கள்தானே? ஆகையால் ஐந்து புஷ்ப பாணங்களை உடைய மன்மதனை 'விஷமசரன்' என்றும், முக்கண்ணான பரமேச்வரனை 'விஷமநேத்ரன்' என்றும் சொல்வதுண்டு.
    இங்கிலீஷில் odd, even என்கிறபோதும் even என்பது இரட்டைப் படையை மட்டுமில்லாமல், even – minded என்பதில் ஸமநிலையான மனஸைக் குறிப்பிடுகிறது. ஒற்றைப் படையைக் குறிக்கும் odd என்பது விஷமம் (மிஸ்சீஃப்) என்று அர்த்தம் தராவிட்டாலும், அதற்குக் கிட்டே உள்ள 'விசித்ரமான', 'fanciful' என்ற அர்த்தங்களையும் தருகிறது – 'ஆட் பிஹேவியர்', 'ஆட் எக்ஸ்ப்ளனேஷன்' என்று சொல்லும்போது!
    வ்ருத்தங்கள் பெரும்பாலும் ஸமமாயிருப்பவைதான். அர்த்த ஸம, விஷம வ்ருத்தங்கள் அபூர்வமே. ஆனால், ஜாதிகளிலோ வரிக்கு வரி (பாதத்துக்கு பாதம்) மாத்ரைகளின் எண்ணிக்கை வித்யாஸமாயிருப்பதே பொது வழக்கமாயிருக்கிறது. உதாரணமாக 'ஆர்யா'வில் முதல் பாதம், மூன்றாம் பாதம் ஆகிய இரண்டில் தலைக்குப் பன்னிரண்டு மாத்ரைகள் இருக்கவேண்டும். இரண்டாம் பாதத்தில் பதினெட்டு மாத்ரை இருக்கணும். கடைசியான நாலாவதில் பதினைந்து.
    நம்முடைய ஷட்பதீ ஸ்தோத்ரத்தின் ச்லோகங்கள் ஆர்யா ஜாதியில் அமைந்தவைதான்.
    அதன் முதல் ச்லோகத்தை எடுத்துக்கொண்டால் முதல் பாதம் அல்லது வரி: 'அவிநய மபநய விஷ்ணோ.'
    மாத்திரைக் கணக்குப் பண்ணினால் 'அ-வி-ந-ய-ம-ப-ந-ய' என்ற எட்டும் அநுஸ்வாரம், விஸர்கம், அடுத்தாற்போல் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்யெழுத்து என்கப்பட்ட எதுவுமில்லாமல் சுத்தமான குறில்களாக இருக்கின்றன. அதனால் இந்த எட்டுக்கும் எட்டு மாத்திரை. அப்புறம் 'விஷ்ணோ' என்று வருவதிலுள்ள 'வி' மட்டும், அது குறிலாக உள்ள போதிலும், அதன் பின்னால் ஷ், ண் என்ற இரண்டு மெய்யெழுத்து வருவதால், நெடிலைப் போல இரண்டு மாத்திரை பெற்றுவிடுகிறது. முதலில் சொன்ன எட்டு மாத்திரை ப்ளஸ் இரண்டு. அதாவது பத்து, 'ஷ்ணோ' என்பதில் 'ஓ' என்ற நெடில் வருகிறது. அதற்கு இரண்டு மாத்திரை. மொத்தம், முதல் வரியில் பத்து ப்ளஸ் இரண்டு, அதாவது பன்னிரண்டு மாத்திரை.
    இரண்டாவது வரி, 'தமய மந: சமய விஷயம்ருக த்ருஷ்ணாம்.'
    த-ம-ய-ம (என்ற) ஒவ்வொன்றுக்கும் ஒரு மாத்திரை வீதம் மொத்தம் நாலு. அப்புறம் 'ந:' என்று குறியான 'ந'க்குப் பின்னால் விஸர்கம் வருவதால் இரண்டு மாத்திரை. நாலு ப்ளஸ் இரண்டு, அதாவது ஆறு. அப்புறம், ச-ம-ய-வி-ஷ-ய-ம்ரு-க என்ற எட்டும் சுத்தமான குறில்கள். 'ம்ரு' என்பதுகூட, 'உ'காரத்தைத் தாழ்த்திச் சொல்லும் குற்றியலுகர வர்க்கத்தைச் சேர்ந்ததால் ஸம்ஸ்க்ருதத்தில் ஒற்றை மெய்யெழுத்துக் குறில்தான். அதை ம், ர், உ என்பதாக இரட்டை மெய்யெழுத்துடன் சேர்ந்த உயிரெழுத்தாகக் கொள்ளக் கூடாது. இதோடு இரண்டாம் வரியில் ஆறு ப்ளஸ் எட்டு, அதாவது, பதினான்கு மாத்திரை. அப்புறம் 'த்ருஷ்ணாம்' என்பதில் வரும் 'த்ரு'வும் சற்று முன் சொன்ன 'ம்ரு' மாதிரிக் குற்றியலுகரமானதால் அதற்கும் ஒற்றை மாத்திரைதானென்றாலும், அதை அடுத்துவரும் 'ஷ்ணாம்' என்பதில் 'ஷ், ண்' என்ற இரட்டை மெய்யெழுத்துக்கள் வருவதால் இங்கே 'த்ரு'வுக்கு இரண்டு மாத்திரை. பதினான்கு ப்ளஸ் இரண்டு. முடிவில் வரும் ' (ஷ்)ணா(ம்) ' நெடிலானதால் அதற்கும் இரண்டு மாத்திரை. ஆக மொத்தம், இரண்டாம் பாதத்தில் பதினெட்டு மாத்திரை.
    மூன்றாவது பாதம்: 'பூத தயாம் விஸ்தாரய.'
    'பூ' நெடிலானதால் இரண்டு மாத்திரை. 'த-த'வுக்கு ஒவ்வொரு மாத்திரை. 'யாம்' நெடில்; இரண்டு மாத்திரை. 'வி'க்குச் சேர்ந்தாற்போல் 'ஸ், த்' என்று இரண்டு மெய்யெழுத்து வருவதால் இரட்டை மாத்திரை. 'தா' நெடிலானதால் இரண்டு. 'ர-ய' ஒவ்வொன்றும் ஒன்று. மொத்தம் மூன்றாம் வரியில், முதல் வரி போலவே, பன்னிரண்டு மாத்திரைகள்.
    இந்த முதல் ச்லோகத்தின் கடைசி வரி: 'தாரய ஸம்ஸார ஸாகரத:' 'தா' இரண்டு மாத்திரை. 'ர-ய' – தலைக்கு ஒவ்வொரு மாத்திரை. 'ஸம்' என்பதில் 'ம்' என்கிற அநுஸ்வாரம் வருவதால் இரட்டை மாத்திரை. 'ஸா' இரண்டு மாத்திரை. 'ர'- ஒன்று. மறுபடியும் ஸா-இரண்டு. 'க-ர' தலைக்கு ஒவ்வொரு மாத்திரை. 'த:' என்று முடிவதில் விஸர்கம் வருவதால் இரண்டு. மொத்தம் கடைசிப் பாதத்தில் பதினைந்து மாத்திரை.
    'ஆர்யா' மீட்டரிலேயே 'கீதி' என்றும் சற்று வித்யாஸமாக ஒன்று உண்டு. அதிலேயும் முதல், மூன்றாம் பாதங்களுக்குப் பன்னிரண்டு மாத்திரைதான். ஆனால், இரண்டு, நான்கு ஆகிய இரு பாதங்களுக்கும் இதிலே பதினெட்டு மாத்திரைகள். இரண்டு பாதங்கள் 12 மாத்திரையும், இரண்டு பாதங்கள் 18 மாத்திரையும் கொண்ட இது அர்த்த ஸம மாத்ரா ஜாதியைச் சேர்ந்ததாகும். 'மூக பஞ்ச சதீ'யின் 'ஆர்யா சதக' ச்லோகங்கள் இந்த ஜாதியில் அமைந்தவைதான். முதல் ச்லோகம்:
    காரண பர சித்ரூபா
    காஞ்சீபுர ஸீம்நி காம பீடகதா |
    காசந விஹரதி கருணா
    காச்மீர ஸ்தபக கோமளாங்கலதா ||
    முதல் பாதம் : கா(2) ர(3) ண(4) ப(5) ர(6) சி(8) [அடுத்து 'த்ரூ'வில் இரட்டை மெய்யெழுத்து வருவதால்] த்ரூ (10) [நெடிலானதால்] பா(12) – மொத்தம் 12 மாத்திரை.
    இரண்டாம் பாதம் : கா(2) ஞ்சீ(4) பு(5) ர(6) ஸீ(8) ம்நி(9) கா(11) ம(12) பீ(14) ட(15) க(16) தா(18) – மொத்தம் 18 மாத்திரை.
    மூன்றாம் பாதம் : கா(2) ச(3) ந(4) வி(5) ஹ(6) ர(7) தி(8) க(9) ரு(10) ணா(12) – மொத்தம் 12 மாத்திரை.
    நான்காம் பாதம் : கா(2) ச்மீ(4) ர(6) [அடுத்தாற்போல் 'ஸ், த்' என்ற இரண்டு மெய்யெழுத்து வருவதால்] ஸ்த(7) ப(8) க(9) கோ(11) ம(12) ளா(14) ங்க(15) ல(16) தா(18) – மொத்தம் பதினெட்டு மாத்திரை.
Working...
X