Announcement

Collapse
No announcement yet.

Thirunallaar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirunallaar

    courtesy:Sri.GS.Dattatreyan
    நளமகாராஜன் தன்னுடைய நிடதநாட்டிற்குச் செல்லத் தீர்மானித்தான். வீமராஜன் வீரர்களை உடன் அனுப்பினான். வீரர்கள் அணிவகுத்து முன்னால் சென்றனர். சிற்றரசர்கள் அவர்களைத் தொடர்ந்து சென்றனர். நளன், தமயந்தி மற்றும் குழந்தைகளுடன் தேரில் ஏறிச் சென்று மாவிந்த நகரத்தை அடைந்தான்.
    மாவிந்த நகரத்தைச் சார்ந்த ஒரு சோலையில் அரசர்க்கு உரிய முறையில் முகாமிட்டிருந்தான். அவன் தங்கிய சோலையைப் புகழேந்திப் புலவர், "பூவிந்தை வாழும் பொழில்!" என்று புகழ்ந்தார். வெற்றியை அருளும் கொற்றவை விந்திய மலையில் வாழ்பவள். எனவே, அவளை, 'விந்தை' என்று அழைப்பர். நளனுக்கு வெற்றி மற்றும் இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அருள, கொற்றவை அச்சோலையில் காத்திருந்தாள் என்ற நயம் தோன்ற, "பூவிந்தைப் பொழில்" என்றார்.
    வென்றானை வென்றான் வேந்து
    நளன் தன்னுடன் வந்திருந்த வீரர்களில் ஒருவரைப் புஷ்கரனிடம் தூதுவனாக அனுப்பினான். நளன் பணயப் பொருளுடன் மறுசூது ஆட வந்துள்ள செய்தியைத் தூதுவன் புஷ்கரனிடம் கூறினான். புஷ்கரன் புறப்பட்டு வந்தான். நளன் தன்னுடைய மனைவி தமயந்தியுடனும், பெரிய சேனையுடனும் வந்து, சோலையில் முகாமிட்டிருப்பதைக் கண்டு வியந்தான்! அதிர்ச்சியும் அடைந்தான்!
    அரசியல் நாகரிகத்துடன் நளனை நலம் விசாரித்தான் புஷ்கரன். "கொடைவேந்தே! உன் காதல் மனைவியும், மக்களும் தீதின்றி வாழ்கின்றனரா?" என்றான் புஷ்கரன். மறுசூதிற்கு ஆயத்தமாய் வந்திருந்த புஷ்கரன், "உன்னிடம் பணயப் பொருளாக வைக்க யாது உளது?" என்று நளனிடம் வினவினான்.
    நளன் மோதிரத்தைப் பணயமாக வைப்பதாகதக் கூறினான். அனைத்தையும் இழந்தவனிடம் மோதிரம் எப்படி வந்தது? நளன் கைவிரலில் அணிந்திருந்த மோதிரம் அவனுக்கு வீமராஜன் திருமணத்தின் போது அணிவித்தது. திருமணத்தில் மாமனார் கொடுத்த சீதனமான மோதிரத்தை நளன் இழக்காமல் பத்திரமாக வைத்திருந்தான்.
    சூதாட்டம் தொடங்கியது. அருகில் இருந்தோர் ஆவலுடன் ஆட்டத்தைப் பார்த்தனர். அதிசயித்தும் பார்த்தனர்! ஏனெனில், ஒரே சுற்றில் நளன் நாடு, நகரம், படைகள், செல்வங்கள் அனைத்தையும் வென்றான். சனிபகவானின் துணையுடன் முன்பு வென்ற புஷ்கரனை வென்றான் நளன்.
    புஷ்கரன் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொண்டு அனைத்தையும் நளனிடம் கொடுத்துவிட்டுத் தன்னுடைய நகரத்திற்குச் சென்றான். புஷ்கரன் நிடதநாட்டிற்கு உட்பட்ட சிற்றரசனாக ஆண்டு வந்தவன். நளன் தன் பெருந்தன்மையால் புஷ்கரனைத் தண்டிக்காமல் விடுத்தான். அவனுடைய நகரத்தில் சிற்றரசனாக தொடர்ந்து அரசாளப் புஷ்கரனை அனுமதித்தான்.
    மக்கள் விரும்பிய மாமன்னன்
    மக்கள் விரும்பிப் போற்றிய மாமன்னனாகிய நளன் மற்ற அரசர்கள் வாழ்த்தொலி எழுப்ப, பொன்னகரமாகிய அமராவதியில் இந்திரன் செல்வதைப் போல் தன்னகராகிய மாவிந்த நகரத்திற்குள் சென்றான். அப்போது மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
    கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
    நீர்பெற்று உயர்ந்த நிறைபுலமோ-பார்பெற்று
    மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்(கு)
    ஏதோ உரைப்பன் எதிர்.
    தன்னுடைய நாட்டை மீண்டும் பெற்று, தமயந்தியுடன் நகரத்தில் நளன் வருவதைக் கண்ட மக்களின் மகிழ்ச்சிக்கு உவமையாக எதனைக் கூற இயலும்? என்று புகழேந்திப் புலவர் வினவுகிறார்.
    மேகத்தைக் கண்டு மயில்கள் ஆனந்தக் கூத்தாடும். ஆகவே,மேகத்தைக் கண்ட மயில் போல் மக்கள் மகிழ்ந்தார்கள் என்று கூறலாமா?
    கண்ணில்லாத ஒருவர் கண்ணைப் பெற்றால் எப்படி மகிழ்வார்? கண்ணொளி பெற்ற முகத்தைப் போல் அவர்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தார்கள் என்று கூறலாமா?
    விளைநிலத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடிய காலத்தில் நீர் வந்து நிறைந்தால் ஏற்படும் மகிழ்ச்சியை மாவிந்தநகர மக்கள் அடைந்தார்கள் என்று கூறலாமா?
    ஆம்! மக்கள் விரும்பிய நல்லாட்சியை அளித்த மன்னனான நளமகாராஜனைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். நளனும் தொடர்ந்து செங்கோல் செலுத்தி, மனைவி மக்களுடன் இனிதே வாழ்ந்திருந்தான்!
    நளன் வழிபட்ட நள்ளாறு
    நள்ளாறு-பெயர்க்காரணம்
    'மெஸ்பாட்' என்றால் இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலம் என்பது பொருள். யூப்ரிடீஸ், டைகிரிஸ் என்ற இரண்டு ஆறுகளுக்கும் இடையில் இருக்கும் நாடு 'மெஸபடோமியா' என்று அழைக்கப்பட்டது. அதே போல் பொருள் தருவதுதான், 'நள்ளாறு' என்ற சொல்லும். அரசலாறு, வாஞ்சாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கும் இடையே இருக்கும் ஊரே திருநள்ளாறு என்று அழைக்கப் படுகிறது. நடு இரவை நள்ளிரவு என்பது போல், ஆறுகளின் நடுவில் இருக்கும் பகுதி, நள்ளாறு என்று வழங்கிவருகிறது.
    திருத்தருமபுரம் என்னும் தலத்தை வணங்கி, திருநள்ளாறு வந்த ஞானசம்பந்தர் "போகம் ஆர்த்த பூண்முலையாள்" என்று தொடங்கும் பதிகத்தைப் பாடியருளினார், பின்னர், திருஞானசம்பந்தர் மதுரையில் அனல் வாதம் புரிந்த பொழுது, அப்பதிகத்தையே தீயிலிட, அது வேகாமல் பச்சையாய் நின்று வென்றது. எனவே, அப்பதிகம் 'பச்சைப் பதிகம்' என்று போற்றப்படுகிறது. மதுரை மற்றும் திருநள்ளாறு இரண்டையும் இணைத்து, ஒரு பதிகம் பாடினார். அப்பதிகத்தையும் சம்பந்தர், 'பாடக மெல்லடி' என்று அம்பிகையைப் பற்றிய குறிப்புடனேயே தொடங்கினார்.
    தர்பாரண்யேஸ்வரர்
    போகம் ஆர்த்த பூண்முலையாளுடன் திருநள்ளாற்றில் எழுந்தருளியுள்ள ஈசன் நள்ளாறனை வடமொழியில், 'தர்பாரண்யேஸ்வரர்' என்று அழைப்பர். தருப்பைக் காடாக விளங்கிய இத்தலம், 'தர்பாரண்யம்' எனப் பெயர் பெற்றுள்ளது. நள்ளாறு திருத்தலத்தின் தலவிருட்சம் தருப்பையே ஆகும். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தலத்தைப் பாடிப் பரவியுள்ளனர்.
    நிடதநாட்டு மன்னன் நளன் சனிபகவானின் கொடுமையால், நாட்டை இழந்தான். மனைவி, மக்களைப் பிரிந்தான். உருவம் மாறி, சொல்லொணாத துன்பம் எய்தினான். நளன் சனிபகவானின் கொடுமைகளிலிருந்து விடுபட, பல தலங்களையும் தரிசித்து வந்தான். வழியில் விருத்தாசலத்தில் பரத்வாஜ முனிவரைக் கண்டான். அவர், "நீ திருநள்ளாறு சென்று இறைவனை வழிபடு. ஆலயத்தை அடுத்துள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடு. உடனே நீ சனிபகவானின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்." என்று கூறினார்.
    அதன்படி, நளன் திருநள்ளாறு வந்து, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, திருநள்ளாறனைத் தரிசிக்கத் திருக்கோயிலுள் நுழைந்தான். நளனை, தான் இனித் தொடர முடியாது என்று உணர்ந்த சனிபகவான் அக்கணமே அவனை விட்டு அகன்றான். தர்பாரண்யேஸ்வரரும் காட்சி தந்து, வேண்டும் வரங்களை அருளுவதாகச் சொன்னார்.
    நளதீர்த்தம்
    நளன் திருநள்ளாற்றில் சிறிதுகாலம் தங்கி வழிபட்டான். அங்கு ஒரு தீர்த்தத்தையும் ஏற்படுத்தியிருந்தான். அது நளதீர்த்தம் என்று பெயர் பெற்றது.
    நளதீர்த்தத்தில் மூழ்கி, தர்பாரண்யேஸ்வரரை வழிபடுவோரை, சனிபகவானின் கொடுமைகளிலிருந்து விலக்கிக் காப்பதாக ஈசன், நளனுக்கு வரம் கொடுத்தான். தான் அடைந்த துன்பங்களை வேறு எவரும் அடையக்கூடாது என்பது நளனின் எண்ணம். அனுபவம் அவனை விவேகியாக்கியது.
    அருள் பொழியும் அனுக்ரகமூர்த்தி
    அன்று வரை நளனைத் தொடர்ந்து வந்த சனிபகவான் மகிழ்ந்து, அவனை விட்டகன்றான். "என் வரலாற்றைக் கேட்பவர்களையும், படிப்பவர்களையும், இனி நீங்கள் துன்புறுத்தாமல் இருக்கும் வரத்தை அருளவேண்டும்." என்று சனிபகவானிடம் நளன் வரம் கேட்டான். சனிபகவானும் அவ்வாறே வரம் கொடுத்தார். அத்துடன், திருள்ளாற்றில் அருள் பொழியும் அனுக்கிரக மூர்த்தியாக இருக்கப்போவதாகவும் உறுதியளித்தார். இவ்வாறு திருநள்ளாறு தலபுராணம் உரைக்கிறது.
    போகம்ஆர்த்த பூண்முலையாள் சந்நிதி முகப்புக்கு அருகிலேயே சனிபகவான் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். இங்கு, தன் சொந்த வீடான மகர, கும்ப இராசியில் இருப்பதால் இனியவே செய்யும் இயல்புடையவராகத் திகழ்கிறார். சாந்தஸ்வரூபியான இவருடைய முகத்தில் அமைதியும் அருளும் பொழிவதைக் காணலாம்.
    சனிப்பெயர்ச்சி நாள்களில் இங்கு இலட்சக் கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். திலான்னம்(எள்சாதம்) நிவேதித்தல், நல்லெண்ணெய் விளக்கேற்றுதல் முதலிய சனீஸ்வரப் பிரீதியான வழிபாடுகள் மூலம் பெரும் பயன் அடைகின்றனர்.
    வண்ணஓவியமாக நளசரித்திரம்
    தர்பாரண்யேஸ்வரர் சந்நிதி வெளிப்பிராகாரச் சுவரில் நளசரித்திரம் வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தோடு தொடர்புடைய பிற வரலாறுகளும், அவ்வாறே ஓவியங்களாகக் காட்சியளிக்கின்றன.
    சப்தவிடங்கத் தலம்
    திருநள்ளாறு சப்தவிடங்கத் தலங்களில் நாகவிடங்கத் தலமாகும். 'டங்கம்' என்றால் உளி என்று பொருள். உளிகொண்டு செதுக்காமல் உருவான லிங்கம் தான் இங்கே உள்ள லிங்கம்.
    தங்கக் காக்கை வாகனம்
    இத்தலத்தில் இருக்கும் மரகதலிங்கமும், தங்கக் காக்கை வாகனமும் அவசியம் தரிசிக்க வேண்டியவையாகும். சனிப்பெயர்ச்சி நாள்களில் சனிபகவான் தங்கக் காக்கை வாகனத்தில் பவனி வருவார்.
    தர்பாரண்யேஸ்வரருக்கு ஆறு கால பூஜையும், சனிபகவானுக்கு ஐந்து கால பூஜையும் நடைபெறுகிறது. தருமையாதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட இத்திருக்கோவிலும் தூய்மையுடனும், சிறப்புடனும் திகழ்கிறது.
    திருநள்ளாறு புதுவை மாநிலத்தில், காரைக்காலிலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. குடந்தை, மயிலாடுதுறை, திருவாரூர், நன்னிலம், பேரளம் ஆகிய நகரங்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. நெரிசல் இல்லாத சாதாரண நாள்களில் செல்வோர், அம்பகரத்தூர் பத்ரகாளி அம்மன், திருத்தருமபுரம் யாழ்மூரி நாதர், காரைக்கால் அம்மையார் ஆகியவர்களின் திருக் கோவில்களுக்கும் சென்று தரிசிக்கலாம்.
    சிறப்பு வழிபாடுகள்
    இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி நாள்களில் கோடி அர்ச்சனை அல்லது இலட்சார்ச்சனை போன்ற சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தருமையாதீனம் குருமகாசந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் திருக்கோவில் நிருவாகம் விரிவான, பாதுகாப்பான, சிறப்பான ஏற்பாடுகளைச் செய்கிறது.
    நளசரித்திர பாராயணம்-நள்ளாறு தரிசனம்
    நளசரித்திரத்தைப் பாராயணம் செய்து திருநள்ளாறு சென்று தரிசனம் செய்வோர் அருள்பொழியும் சனிபகவானின் திருவருளை அடைவார்கள். திருநள்ளாறு செல்ல இயலாதவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் சனிபகவான் சந்நிதிக்குச் சென்று வழிபட்டும் அதே பயனை எய்தலாம்.
    வேயுறுதோளி பங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்
    உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
    சனிபாம்பு இரண்டுமுடனே
    ஆசறு நல்லநல்ல அவைநல்லநல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.
    Thanks...டாக்டர் கே.சந்தானராமன்.
Working...
X