Announcement

Collapse
No announcement yet.

Vruddha Lakshanam - periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vruddha Lakshanam - periyavaa

    Courtesy:Sri.GS.Dattatreyan
    தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 133
    வ்ருத்த' லக்ஷணம்
    நடுத்தர வயஸான முப்பத்தைந்திலிருந்தே ஸபை அங்கத்தினராகலாமாயினும் பொதுவாக சோழர் காலத்துக்கும் முன்னாலிருந்து ஐம்பது வயசுக்கு மேலே போய் 'வ்ருத்தர்' கள் என்று குறிப்பிடும்படியாக இருந்தவர்களின் யோசனைதான் அநுபவ கனம் வாய்ந்தது என்பதாக அதிகம் மதிக்கப்பட்டு வந்திருக்கிறது. 'Elders' என்று மேல் நாட்டில் கூட ஒரு தனி மதிப்பு தருகிறார்கள் அல்லவா? ஸபா லக்ஷணத்தைச் சொல்லும் ஒரு பழைய ச்லோகத்திலே வயஸான பெரியவர்களுக்குத்தான் விசேஷத் தகுதி கொடுத்திருக்கிறது:
    ந ஸா ஸபா யத்ர ந ஸந்தி வருத்தா:
    ந தே வருத்தா : யே நா வதந்தி தர்மம் |
    ந ஸ தர்மோ யத்ர ந ஸத்யம் அஸ்தி
    ந தத் ஸத்யம் யத்-சலேநாநுவித்தம் ||
    ஒரு ஸபையில் வ்ருத்தர்கள் இல்லாவிட்டால் அது ஸபையே ஆகாது. (ஸபையைப் பெண்பாலில் 'ஸா' என்று சொல்லியிருக்கிறது. தமிழில் அஃரிணையாகச் சொல்கிற அநேக ஸமாசாரங்களை ஸம்ஸ்க்ருதத்தில் ஆண்பால், பெண்பாலாகச் சொல்லியிருக்கும். நதியைப் பெண்ணாகச் சொல்லியிருப்பது, கங்கா, யமுனா, காவேரி முதலான பேர்களிலிருந்தே எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இதிலேயும்கூட ஒரு வித்தியாஸமுண்டு. கிழக்கு முகமாக ஓடுகிறவற்றுக்குத்தான் 'நதி' என்று பேர் கொடுத்துப் பெண்பாலாகச் சொல்வது. மேற்கு முகமாக ஓடுவது 'நதி' அல்ல; அது 'நதம்'. உதாரணமாக, நர்மதையும் நாம் பெண் தேவதா ரூபத்திலேயே சொன்னாலும் அது மேற்கு முகமாய் ஓடுவதால் ஆண்பாலான நகம்தான். இங்கிலீஷில் கூட பல அசேதன வஸ்துக்களை 'ந்யூடர் ஜென்டரா' க வைக்காமல் ஆண்பால், பெண்பால்களாகச் சொல்கிறார்கள். Ship-கப்பலை 'she' என்கிறார்கள். அந்த மாதிரி இங்கே ஸபை என்பதை ஸ்த்ரீலிங்கமாகச் சொல்லியிருக்கிறது. 'ஸபை என்றால் பேச்சுத்தானே முக்யம், அதனால்!' – என்று வேடிக்கையாய் வைத்துக்கொள்ளலாம்.) என்ன சொல்லியிருக்கிறதென்றால்,
    ந ஸா ஸபா யத்ர ந ஸந்தி வருத்தா:
    'எதிலே வயஸான பெரியவர்கள் இல்லையோ அது ஸபையே ஆகாது'- அதாவது, வயஸான பெரியவர்கள் அங்கம் வஹிப்பதே முறையான ஸபை. 'வ்ருத்தா:' என்பதை வயஸான பெரியவர்கள் என்று சொன்னேன். வயஸினாலே மட்டும் பெரியவர்களாக இருந்துவிட்டால் போதுமா? அவர்களை 'ஸபேயர்'களான வ்ருத்தர்கள் என்கலாமா ? கூடாது, கூடாது.
    ந தே வருத்தா: யே நா வதந்தி தர்மம்
    'எவர்கள் தர்மத்தை எடுத்துச் சொல்லவில்லையோ அவர்கள் வ்ருத்தர்களாக மாட்டார்கள்'. செங்கல்லையும் காரையையும் போட்டு மண்டபம் காட்டி அதிலே யுவர்களாயும், மத்யமா வயசுக்காரர்களாகவும் இருப்பவர்களை மெம்பர்களாகக் கொண்டு விவாதங்கள் நடத்திவிட்டால் அதனால் அது ஸபை ஆகிவிடாது. வ்ருத்தர்கள் இருந்தால்தான் அது ஸபையாகும். அதேபோல, வயஸு எழுபது ஆச்சு. பல்லுபோச்சு, தலை நரைத்துவிட்டது என்றால் மட்டும் ஒருத்தர் வ்ருத்தராகிவிட மாட்டார். இப்படிப்பட்ட ஒரு கிழவர் காரஸாரமாகப் பேசுகிறார், ரொம்ப விஷயம் தெரிந்து வைத்திருக்கிறாரென்றால்கூட ஸபைக்குத் தகுதியுடைய வ்ருத்தராக மாட்டார். எத்தனை விஷயம் தெரிந்தாலும் அதெல்லாம் முடிவாகக் கொண்டுசேர்க்கவேண்டிய தர்மம் தெரிந்தவரா? அப்படிப்பட்டவராயிருந்தால்தான் 'வ்ருத்தர்' என்ற பேருக்கு உண்மையில் உரியவராகி ஸபையில் அங்கம் வஹிக்க யோக்யதை பெறுவார்.
Working...
X