Announcement

Collapse
No announcement yet.

Dvaita,Boudham,Advaitam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Dvaita,Boudham,Advaitam

    Courtesy: Sri.Ramesh Natarajan

    தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)


    அத்வைதம்


    த்வைதம் / பௌத்தம் = அத்வைதம்


    பிரம்மம் பூரணமானது. உலகமும் பூரணமானது. பிரம்மம் என்ற பூரண வஸ்துவில் உலகம் என்ற பூரணம் உதயமாயிற்று. இந்த உலகம் என்ற பூரணத்தைப் பிரம்மம் பூரணத்திலிருந்து எடுத்துவிட்ட போதிலும் பிரம்மம் பூரணமாகவே இருக்கிறது என்று ஒர் உபநிஷத மந்திரம் சொல்லுகிறது. பூரணம் என்றால் எல்லாம்


    என்று அர்த்தம். எப்படி இரண்டு வஸ்து எல்லாமாக முடியும். பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் எப்படிப் பூரணம் மிஞ்ச முடியும் என்ற கேள்வி எழுகிறது.


    இந்த மந்திரத்தின் வாஸ்தவமான தாத்பரியம் என்ன?. உலகம் உண்மையில் பிரம்மத்திலிருந்து வேறாகப் பிரிந்து வெளியே வந்துவிட்ட வஸ்து அல்ல. பிரம்மமேதான் உலகமாகத் தோன்றுகிறது. பிரம்மம் வேறேதோ பொருள்களைக் கொண்டு உலகை சிருஷ்டிக்க (Create) வில்லை. பிரம்மம் உலகமாக மாறிவிடவும் (Transform) இல்லை. பிரம்மம் உலகமாகத் தோன்றுகிறது. (Appearance) . அவ்வளவுதான். இருட்டிலே ஒரு மாலையைப் பார்த்துவிட்டு பாம்பு என்று நினைக்கிறோம். இப்போது மாலையே பாம்பாகத் தோன்றுகிறது. மாலை பாம்பாக மாறவில்லை. மாலை என்று தெரிந்து கொண்டால் பூரணமாக மாலையாகவே இருக்கிறது. மாலை என்ற பூரணத்தில் பாம்பு என்ற பூரணம் உதயமானாற்போல், பிரம்ம பூரணத்தில் உலக பூரணம் தோன்றுகிறது. அதாவது ஒரு நிலையில் மாலையே பூரணம். இன்னோரு நிலையில் பாம்பே பூரணம். ஆக, இரண்டு பூரணமில்லை. ஒரே பூரணம் இரண்டு சமயங்களில் இரு விதங்களில் பூரணமாகத் தெரிகிறது. மாலையில் பாம்பு என்ற தோற்றம் ஏற்பட்டதால் அப்போது அதன் எடை கூடிற்றா என்ன.? இல்லை. பாம்பு என்ற தோற்றம் அழிந்து, இது மாலைதான் என்ற தெளிவு ஏற்பட்டபோது மாலையின் எடை குறைந்ததா?. அதுவும் இல்லை. அப்படியே பிரம்மத்தில் உலகத்தைக் கூட்டினாலும் குறைத்தாலும் அது மறாமல் பூரணமாகவே இருக்கிறது. மாலையில் தோன்றும் மாயப்பாம்பாக, அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவாக இருப்பதே உலகம் என்றார் கம்பர். அரவை (பாம்பை) அலங்கலிலிருந்து (மாலையிலிருந்து) கழித்த பின்னும் அது பூரண அலங்கலாகவே இருக்கிறது. இதுதான் உபநிஷத் சொன்னபடி பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் பூரணம் eF இருப்பது.


    மாலை ஏன் பாம்பாகத் தெரிந்தது?. இருட்டினால் அப்படித் தெரிந்தது. மாயை என்கிற இருட்டில்தான் பிரம்மம் உலகமாகத் தெரிகிறது. மாயா என்றால் எது இல்லையோ அது என்று அர்த்தம். இல்லாத வஸ்துவான மாயைதான் இருக்கிற ஒரே வஸ்துவான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பெருக்கிக் காட்டுகிறது. இல்லாத வஸ்துவால் இப்படிச் செய்ய முடியுமா என்று கேட்பீர்கள். கணித சாஸ்திரப்படி பதில் சொல்கிறேன்.


    பிரம்மத்தின் விஷயத்தில் கூட்டல், கழித்தல், கணித நியதி மேலே பார்த்தோம். கூட்டினாலும் ஜாஸ்தி ஆகாது. கழித்தாலும் பூரணமாகவே இருக்கும் என்ற விசித்திரத்தைப் பார்த்தோம். இப்போது பெருக்கல், வகுத்தல் கணக்கு ஒன்றும் சொல்கிறேன்.


    ஒர் எண்ணை இன்னோர் எண்ணால் வகுக்கிறோம். வகுத்திற எண் சிறியதாக சிறியதாக ஈவு அதிகமாகிக் கொண்டே போதும். பதினாறைப் பதினாறால் வகுத்தால் ஈவு ஒன்று. எட்டால் வகுத்தால் ஈவு இரண்டு. நாலால் வகுத்தால் நான்கு. ஒன்றால் வகுத்தால் ஈவு பதினாறு. வகுக்கிற எண் சிறியதானால் ஈவு அதிகமாகிறது. வகுக்கிற எண் மிக மிகச் சிறியதாகி பூஜ்யமே (0) ஆகிவிட்டால் அப்போது ஈவு மிகப் பெரியதான, எண்ணிக்கையிலேயே அடங்காத அனந்தமாகிறது. (Infinity)


    பூஜ்யத்தால் எந்த எண்ணை வகுத்தாலும் கிடைக்கிற ஈவு அனந்தம்.


    1/0 =அனந்தம்; 2/0 =அனந்தம்; 3/0 =அனந்தம்; கோடியைப் பூஜ்யத்தால் வகுத்தாலும் இதே அனந்தம்தான் ஈவு.


    வகுக்கிற எண்ணால் ஈவைப் பெருக்கினால் வகுக்கப்படும் எண் கிடைக்கவேண்டும் என்பது நியதி. 16/2 = 8;அதாவது8ஜ்2 = 16 இந்த நியதிப்படி.


    அனந்தம் x 0 = 1


    அனந்தம் x 0 = 2


    அனந்தம் x 0 = 3


    இப்படி முடிவே இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. ஒரே அனந்தமானது பூஜ்யத்தால் தன்னை ஒன்று, இரண்டு, மூன்று, கோடி, பத்துகோடி, என்று முடிவில்லாமல் பெருக்கிக் கொண்டே போகிறது.


    இந்த ஒரே அனந்தம்தான் பிரம்மம். இல்லாத வஸ்துவான மாயைதான் பூஜ்யம். எது இல்லையோ அதுதானே ஸைஃபர். மாயை என்றாலே அந்தச் சொல்லுக்கு எது இல்லையோ அது என்றுதான் அர்த்தம். அனந்தம் பூஜ்யத்தால் தன்னைப் பெருக்கிக் கொண்டு பலவாகக் காட்டிக் கொள்வதுபோல், பிரம்மம் மாயை சக்தியால் தன்னை எல்லையில்லாத பல வஸ்துக்களாகத் தோன்றுகிற இந்தப் பிரபஞ்சமாகக் காட்டிக் கொள்கிறது. வகுக்கப்படும் பிரபஞ்சத்துக்கு என்ன எண்ணிக்கை வேண்டுமானாலும் தரலாம். எந்த எண்ணிக்கை தந்தாலும் அதை வகுப்பது பூஜ்யமான மாயையாகையால் மாறாது. அனந்தப் பிரம்மமே ஈவு ஆகிறது. பிரபஞ்சம் என்பது இவ்விதம் எந்த எண்ணிக்கை வேண்டுமானாலும் பெறலாம் என்கிற முறையில் எல்லையற்றிருப்பதால் அதுவும் அனந்தமாகிறது. சிருஷ்டியில் எத்தனை தினுசு. நம் மனசும் எத்தனை தினுசுகளில் ஒடுகிறது. இவற்றுக்கு முடிவே இல்லை. அனந்தம் தான். முதலில் சொன்ன உபநிஷத் மந்த்ரங்களில் பிரம்மத்தைப் பூரணம் என்று சொன்னபோது, அது மாறாத அனந்தம் என்றும், பிரபஞ்சத்தைப் பூரணம் என்கிறபோது அது மாறிக் கொண்டிருப்பதில் அனந்தம் என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.


    மாறிக் கொண்டேயிருக்கிற வஸ்து சத்தியமாக இருக்கமுடியாதது. ஒன்று, இரண்டு, மூன்று, கோடி, பத்துகோடி என்று அதற்கு நாம் மதிப்புத் தந்தாலும், உண்மையில் அது அசத்தியம்தான் - இல்லாத வஸ்துதான் - அதாவது பூஜ்யம்தான். எந்த எண்ணைப் பூஜ்யத்தால் பெருக்கினாலும் வருகிற விடை பூஜ்யம்தான் என்ற கணிய நியதியை இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். அனந்தம் (பிரம்மம்) x மாயை (0) = 1.2.3 என்றேல்லாம் மேலே உபச்சாரமாகச் சொன்னாலும், உண்மையில் அனந்தத்தை மாயையால் பெருக்கிக் கிடைக்கிற பிரபஞ்சமும் மாயா மயமான பூஜ்யம்தான் எனலாம்.


    அனந்தமாக இருக்கிற பிரம்மம் ஒன்றே சத்தியம் என்கிறகு அத்வைதம். அனந்தமாகத் தெரிகிற பிரபஞ்சமும் சத்தியம் என்கிறது துவைதம். பிரம்மம், பிரபஞ்சம் என்ற பேதமில்லாமல் எல்லாமே சூனியம், பூஜ்யம், மாயை என்கிறது பௌத்தம். அதாவது, பிரம்மம் என்பது சத்தியம் என்று சொல்வது அத்வைதம். எல்லாம் மாயை என்பதோடு நிற்கிறது பௌத்தம். பிரபஞ்சத்தை சத்தியமாகச் சொல்கிறது த்வைதம்.


    பிரம்மம் X மாயை = பிரபஞ்சம் என்று நாம் மேலேகண்ட equation சூத்திரத்தை,


    அத்வைதம் X பௌத்தம் = துவைதம் என்று சொல்லலாம். அல்லது, துவைதம்/பௌத்தம் = அத்வைதம் எனலாம்.
Working...
X