Announcement

Collapse
No announcement yet.

BHAVANI-Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHAVANI-Periyavaa

    Courtesy:Sri.Anand Vasudevan


    தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
    தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்
    பவானித்வம்
    அம்பாளிடம் நாம் இன்னின்ன வேண்டும் என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லை. "உனக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ஆனாலும் மலயத்வஜ பாண்டியனின் புத்திரியான ஹே மீனாக்ஷி! மனஸில் உள்ள குறையை வாய்விட்டுச் சொல்லாவிட்டால், அது உள்ளுக்குள்ளே உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதனால்தான் இப்படிப் பிரார்த்தனைப் பண்ணுகிறேன். உனக்குத் தெரியாததைத் தெரியப்படுத்துவதற்காக அல்ல; எனக்கு உள்ளே கருணைக்கிழங்கு மாதிரி அரிப்பதைக் கொஞ்சம், சமனப்படுத்திக் கொள்ளவே பிரார்த்தனை பண்ணுகிறேன்" என்று நீலகண்ட தீக்ஷிதர் 'ஆனந்த ஸாகர ஸ்தவம்' என்கிற ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்.
    நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல எண்ணங்களை உண்டாகின்றன. நல்லதைச் செய்வதற்கான வழி புத்தியிலே பளீரென்று பிரகாசிக்கிறது. லோக க்ஷேமத்தைச் செய்வதற்கான திரவிய பலமும் தானே கிடைக்கிறது. எல்லோரிடத்திலும் சமமான அன்பு உண்டாகிறது. மனஸில் இந்த அன்பு ஊறாமலே வாய்ப்பேச்சில் இன்று 'சகோதர சகோதரிகளே' என்று பிரசங்கம் பண்ணி சமத்துவத்தைப் பற்றி நிறையப் பேசுகிறோம். அம்பாளிடம் பக்தி பண்ணாத வரையில் இது அநுபவத்தில் வராத வாய்ச் சவடால்தான்; புரளிதான். சாக்ஷாத் ஜகன்மாதாவைத் தெரிந்துகொண்டாலே, 'உண்மையாக அவள் ஒருத்திதான் இத்தனை பேருக்கும் அம்மா; லோகத்தில் உள்ள பசு, பட்சி உட்பட நாம் இத்தனை பேரும் அவள் குழந்தைகள்தான்; அதனால் நாம் எல்லோரும் வாஸ்தவமாகவே சகோதர சகோதரிகள்" என்ற உண்மையான அன்பு உணர்ச்சி உண்டாகிறது. அவளைத் தெரிந்துகொண்டால் அதன்பின் நமக்குள் வெறுப்பு, துவேஷம் வரவே வராது. தப்புக் கண்டுபிடிக்க வராது. தப்பு நடக்கிறபோதுகூட அதைப் பரிவோடு திருத்துகிற மனப்பான்மை வருமே தவிர, தப்பைத் பிரகடனம் பண்ணிச் சண்டையில் இயங்கத் தோன்றாது. அம்பாளை உபதேசிப்பதால் லோகம் முழுக்க ஒரே குடும்பம் என்ற அன்பு உணர்ச்சி உண்டாகிறது. சந்துரு, சிநேகிதன் என்கிற வித்தியாசமே காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு இராது என்கிறார் மூகர்.
    எல்லாம் சமமாகத் தெரிகிற ஞானநிலையின் உச்சிக்கே அம்பாளின் அநுக்கிரஹம் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. 'அவள் அம்மா; அவளுடைய குழந்தைகளே நாம் எல்லோரும்' என்பதற்கு மேலே ஒரு படி போய் - அம்மா, குழந்தை என்கிற வித்தியாசம்கூடப் போய் - எல்லாமே அவள்தான் என்று தெரிகிறது. 'ஒரு சக்திதான் இத்தனை ஆகியிருக்கிறது; ரூபங்களில்தான் பேதம், உள்ளே இருக்கிறது ஒன்றுதான்' என்கிற பரம அத்வைத ஞானம் சித்திக்கிறது. இதைத்தான் மூகர் சொல்கிறார் - "சிவ சிவ பச்யந்து ஸமம்" என்கிற சுலோகத்தில், காமாக்ஷியின் கருணா கடாக்ஷ வீக்ஷண்யம் பெற்றவவனுக்குக் காடும் வீடும் சமமாகத் தெரிகின்றன; சத்துருவும் மித்ரரும் சமமாகத் தெரிகின்றனர் என்கிறார்.
    அம்பாளைத் தாயாராகவும் நம்மைக் குழந்தையாகவும் வைத்துக்கொண்டு உபாஸிக்க ஆரம்பித்தாலும் அவளே காலக்கிரமத்தில் இந்த இரண்டும்கூட ஒன்றேதான் என்கிற பரம ஞானத்தை அநுக்கிரஹம் செய்கிறாள். இதை ஆச்சாரியாள் ஒரு ச்லேஷை (சிலேடை) மூலம் 'ஸெளந்தரிய லஹரி'யில் சொல்கிறார்.
    "பவானி, உன்னுடைய அடிமை நான்" என்று பக்தன் துதிக்க ஆரம்பிக்கிறானாம். 'பவாநி த்வம் -', "பவானி உன்னுடைய", ('த்வம்' என்றால் 'உன்') என்று இவன் சொல்லுகிறபோதே, அம்பாள் இவனுக்கு 'பாவானித்வம்' என்கிற நிலையை அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சிலேடை பண்ணுகிறார். முதலில் இவன் பிரார்த்திக்கிறபோது 'பவானி' என்றால் அம்பாள். பரமசிவனுக்கு முக்கியமான எட்டுப் பெயர்களில் ஒன்று பவன் என்பது. பவனின் பத்தினி பவானி. மறுபடி, பவானித்துவம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை இவன் சொன்ன மாத்திரத்தில், அம்பாள் 'பவானித்துவம்' என்ற நிலையை அநுக்கிரஹம் செய்வாள் என்னும்போது, 'பவானி என்றால் ஆகிவிடுகிறேன்' என்று அர்த்தம். 'தீர்க்க சுமங்கலி பவ' என்கிறோமே, இங்கே 'பவ' என்றால் ஆவாய் என்று அர்த்தம். 'பவானி' என்றால் 'ஆகிறேன்'. 'பவானித்வம்' என்றால் 'நீயாவே நான் ஆகிவிடுகிறேன்'; எல்லாம் பிரம்மம் என்ற அத்வைத ஞானம் உண்டாகி இப்படிச் சொல்கிறான் பக்தன். தாஸனாக இருக்கப் பிராத்தித்தவனைத் தானாகவே ஆக்கிக்கொண்டு விடுகிறாள் அம்பிகை. "பவானி, உன் தாஸனாக என்னைத் துளி கடாக்ஷியம்மா" என்று பிரார்த்திக்க ஆரம்பித்த பக்தன் மூன்றாவது வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல், "பவானி உன்" (பவானித்வம்) என்று அவன் சொல்லும்போதே அம்பாள் இடைமறித்து, "ஆமாமப்பா பவானித்வம்தான்; அதாவது நானும் நீயும் ஒன்றேதானப்பா" என்கிற பரம ஞானத்தை வழங்கி விடுகிறாள். 'பவானித்வம்' என்றால் 'பவானியின் தன்மை' என்றும் அர்த்தம். பக்தனே பவானித்வம் பெற்று பராசக்தியோடு தன்மயமாகி விடுகிறான்.
Working...
X