அந்தணனின் அன்றாடம்
Notice
"இத்தனை ஸம்ஸ்காரங்களை இந்தக் கால பிராமணர் செய்ய முடியுமா? செய்ய முடியாததைச் சொல்லி என்ன பிரயோஜனம்?"என்றால், முடியும்-முடியாது என்று நானே பிரித்துக் கொடுத்து விட்டால், அவர்கள் முடியாது லிஸ்ட்டைத் தாங்களும் நீட்டிக் கொண்டு போய் எதுவும் செய்யாததாகி விடுமே!"என்று நான் யோஜிக்கிறேன்.
அதனால் இப்போது முடியுமோ முடியாதோ, பிராம்மணர்கள் ரிடையர் ஆன பிறகாவது, அப்புறமும் எக்ஸெடென்ஷன், வேறு உத்தியோகம் என்று பறக்காமல் அவர்களுக்கான எல்லா அநுஷ்டானங்களையும் செய்யப் பிரயத்தனம் செய்ய வேண்டும் என்ற அபிப்ராயத்தில் சொல்கிறேன். சாஸ்திரம் பிராம்மணனுக்குப் போட்டுத் தந்திருக்கிற தினசர்யை (daily routine :அன்றாட அலுவல்) என்னவென்று சொல்கிறேன். ரொம்பவும் கடுமையான ருடீன் தான்.
ஸ¨ர்யோதயத்திற்கு ஐந்து நாழிரை (இரண்டு மணி) முன்னதாகவே, அதாவது நாலு மணிக்கே எழுந்து விட வேண்டும். 'பஞ்ச பஞ்ச உஷத்காலே'என்பார்கள். 'ஐந்து *ஐந்து'அதாவது இருபத்தைந்தாவது நாழிகையில் என்று அர்த்தம். முதல்நாள் ஸ¨ர்யாஸ்தமனத்திலிருந்து மறுநாள் உதயம் வரையுள்ள முப்பது நாழிகையில் இருபத்தைந்து நாழிகையானபின் என்று அர்த்தம். இதிலிருந்து ஸ¨ர்யோதயம் வரை பிராம்ம முஹ¨ர்த்தம். இப்படி விழித்துக் கொண்டு பல் துலக்கி, பச்சை ஜலத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டும். இது தேவ யக்ஞம். அப்புறம் பிரம்ம யக்ஞம். அதாவது வேத அத்யயனம் பண்ணுவது;இதில் சில தர்ப்பணங்களும் பண்ண வேண்டும். (சில ஸ¨த்ரக்காரர்கள் இதைப் பிற்பாடு செய்கிறார்கள்) ஒரு பகல் பொழுதை - அதாவது காலம்பற 4 மணியிலிருந்து ராத்ர 8 மணி வரையுள்ள 16 மணியை - எட்டுப் பங்காக்கினால் இதோடு ஒரு பங்கு முடிந்திருக்கும். இரண்டாம் பாகத்தில் அத்யாபனம் என்பதாக வேதத்தை சிஷ்யனுக்கு ஒதுவதில் ஆரம்பிக்க வேண்டும். அப்புறம் பூஜைக்கான புஷ்பங்களைத் தானே பறித்து வர வேண்டும். பிறகு இவனுக்குச் சம்பளம் எனறு இல்லாததால், மூலதனமாகப் போதிய மானியம் இல்லாவிடில், வாழ்க்கைச் செலவுக்காகவும், யஜ்ஞ செலவுக்காகவும் பொருள் ஆர்ஜிதம் செய்யத் தக்க ஸத்பாத்திரங்களிடம் போய் திரவியம் வாங்கி வரவேண்டும். இப்படி தானம் வாங்க (அளவோடு அத்யாவசியத்துக்கே வாங்க) பிராம்மணனுக்கு உரிமை உண்டு. தானம் வாங்கினதில் கணிசமான பகுதியை இவன் யஜ்ஞத்தில் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையாக தானம் கொடுத்து விடுகிறான் என்பதை கவனிக்க வேண்டும்.
பிராம்மணனுக்குரிய ஆறு தொழில்களில் 'ப்ரதிக்ரஹம்'என்பது தனக்கு வாங்கிக் கொள்வது;'தானம்'என்பது இவன் பிறருக்குக் கொடுக்க வேண்டியது. 'பிராம்மணனுக்கு மட்டும் தானம் வாங்க ரைட்டா?என்கிறவர்கள், அவன் தானம் கொடுக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருக்கிறதென்பதையும் முக்கியமாக இப்படிக் கொடுக்கவேதான் அவன் வாங்கினான் என்பதையும் கவனிக்க வேண்டும். அது தவிர இனி சொல்லப் போகிற ஆதித்ய. பூத யஜ்ஞங்களாலும் இவன் தாதாவாக இருக்கிறான்.