Part-4
4) சிவநிர்மால்ய விசாரம்:
விஷ தீர்த்தத்தினாலும் தீக்ஷிதரை ஒன்றும் செய்ய முடியவொல்லையே என்று கலங்கிய தாதாசாரியர் சின்னபொம்ம ராஜனிடத்தில் சிவநிர்மால்யம் சாப்பிடக் கூடாது என்றும், சிவநிர்மால்யம் சாப்பிடுபவர்கள் அசுத்தர்கள் என்றூம் அரசனின் மனதைக் கலைத்தார். அரசன் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரை அழைத்து சிவநிர்மால்யம் சாப்பிடக் கூடாது என்று சாஸ்திரம் இருக்கிறதா? என்று கேட்டான். அதற்கு ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர்,
சிவஸ்ய நிர்மால்யமசாம்பவானாமபோஜ்யமர்ஹம் விமலாந்தராணாம் | ஸத்ப்ராஹ்மணோச்சிஷ்டமபோஜ்யமங்க்ரிஜாதைர்ஹி போதாயன தர்மஸூத்ரம் || ஸர்வெளஷதீனாம் பதிரஸ்ய புஷ்பம் கங்காதிதீர்த்தம் து கபர்த்த ஜாதம் | கிம் வஸ்து நிர்மால்யவிஹீனமாஸ்தே விசார்யமாணே சிவ ஏவ ஸர்வம் ||
சிவபெருமானுடைய நிர்மால்யம் சிவபக்தர்களைத் தவிர வேறு யாரும் சாப்பிடக் கூடாது. பரிசுத்தமான மனம் படைத்த சாதுக்களான சிவபக்தர்களால் தான் சாப்பிடத் தகுதி உடையது. ஸத்ப்ராம்மணர்கள் சாப்பிட்ட மிச்சமானது பலரும் சாப்பிடக் கூடாது என்று போதாயன தர்மஸூத்திரத்தில் கூறியிருக்கிறபடியால் சிவநிர்மால்யத்தைப் பரிசுத்தமான சிவபக்தர்கள் சாப்பிடுவதில் எவ்விதக் குற்றமும் இல்லை. கங்காஜலமே சிவநிர்மால்யம் தான். எல்லா ஒளஷதிகளும் சிவபெருமானைச் சார்ந்ததே. வ்ருக்ஷாணாம் பதயே என்று வேதம் சொல்லியிருப்பதால் எல்லாமே சிவத்தைச் சார்ந்தது தான். எனவே எல்லோரும் சிவபக்தி செய்து எல்லோதும் சிவநிர்மால்யத்தை சாப்பிடலாம் எனக் கூறியருளினார். இதைக்கேட்ட அரசன் தனது ஸந்தேஹகத்தைப் போக்கிக் கொண்டான்.
5) விஷபானம்:
மேலும் மேலும் தோல்வியே அடைந்த தாதாசாரியார் தீக்ஷிதருக்குத் துன்பம் விளைவிக்கத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தார். ஒரு சமயம் அறிஞர்கள் நிறைந்த சபையிலே நீலகண்டன் என்ற சொல்லின் பொருள் பற்றிய விசாரம் ஏற்பட்டது. காலகூட விஷத்திற்குப் பயந்த தேவர்கள் ஸதாசிவனான பரமசிவனைச் சரணடைந்த அவரது பெருமையை பாகவத ச்லோகத்தின் மூலம் தீக்ஷிதர் நிரூபித்தார். மற்றும் மும்மூர்த்திகளுக்கும் மேலாய் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட சிவம் என்ற பெயருடைய பரப்ரம்ம ஸ்வரூபமான கைலாசவாசியான ஸ்ரீகண்டருத்ரனின் பெருமையை ப்ரஜாபதி செய்த ஸ்தோத்திரத்தில் காலகூட ஸம்ஹரணம் பிரம்மாதி தேவர்களுக்கு அசாத்தியமானது. தங்களையே சரணாக நாங்கள் வந்துள்ளோம் என்று கூறியிருப்பதையும் ஞாபகப்படுத்தினார். அப்பொழுது தாதாசாரியார் பரிஹாஸமாக ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரைப் பார்த்து ஓ! நீலகண்ட உபாஸகரான அப்பய்ய தீக்ஷிதரே! காலகூட பக்ஷணத்தினால் சிவன் ஸகல தேவதைகளுக்கும் தலைவன் என்பதை நிரூபிக்கும் வகையில் நீங்களும் விஷபானம் பண்ணமுடியுமா? எனக் கேட்டார். முன்னர் ரகசியமாக தீர்த்தப் பிரஸாதத்தில் கலந்த விஷம் செயல்படவில்லை என்று அறிந்திருந்தும், பயங்கரமான விஷத்தை அரச சபையில் காட்டி இதைச் சாப்பிடமுடியுமா என்று பரிஹஸித்தார். அந்தப் பரிஹாஸ வார்த்தையினையும் மதித்து ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் இதில் என்ன சந்தேஹம்? என்று உடனே பதிலளித்து அந்த க்ஷணமே சிறிதும் தயக்கமின்றி 'நமோ நீலக்ரீவாயச சிதிகண்டாய ச' என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே அந்த விஷத்தை, அரசன் எவ்வளவோ தடுத்தும், ஒரு சிறு பாலகன் கற்கண்டுக் கட்டியை விழங்குவது போல அநாயாஸமாக உட்கொண்டு எவ்விதமான குறையுமில்லாமல் பரம ஆரோக்யத்துடன் இருந்தார்.
குலிசம் குஸுமதி தஹனஸ்துஹிநதி வாராம் நிதி: ஸ்தலதி | சத்ருர்மித்ரதி விஷமப்யமருததி சிவ சிவேதி ப்ரலபதோ பக்த்யா ||
சிவ சிவ என்று பக்தியுடன் கதறும் பொழுது இந்திரனின் வஜ்ராயுதமும் மலராகிறது, நெருப்பு பனிக்கட்டியாகின்றது, கடலும் நிலமாகின்றது, பகைவனும் நண்பனாகின்றான், கொடிய விஷமும் அம்ருதமாகின்றது என்ற கருத்துடைய இந்த ச்லோகம் இங்கே கவனத்திற்குரியது.
சைவசமயாசாரியரில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு சமணர்கள் நஞ்சினை பாலில் கலந்து கொடுத்தனர். திருநாவுக்கரசர் இந்த நஞ்சினை உண்ட வரலாற்றை சேக்கிழார் என்ற தெய்வப்புலவர் பாடியுள்ள இரண்டு பாடல்கள் இங்கு ஒப்புநோக்குதற்குரியது.
எங்கள் நாதனான பரமேச்வரனின் அடியார்க்கு விஷமும் அம்ருதமாகும் என்ற உறுதியுடன் வஞ்சனை மிகுந்த சமணர்களின் தீச்செயலை நன்கறிந்தே அவர்களிட்ட இந்த விஷங்கலந்த பாற்சோற்றை உண்டு ஊனமின்றி இருந்தார் என்பது இப்பாடலின் கருத்தாகும்.
பொடியார்க்குந் திருமேனிப் புனிதற்குப் புவனங்கள் முடிவாக்குந் துயர்நீங்க முன்னைவிடம் அமுதானால் படியார்க்கு மறிவரிய பசுபதியார் தம்முடைய அடியார்க்கு நஞ்சமுத மாவதுதான் அற்புதமோ?
திருநீறு விளங்கும் திருமேனியினையுடைய புனிதராகிய இறைவருக்கு, உலகங்களையெல்லாம் அழிக்கவல்ல துன்பம் நீங்கும்படி முன்னைவிஷமானது அமுதமாகுமாகில், யாவர்க்கும் அறிவரிய தன்மையராகிய பசுபதியாருடைய அடியார்க்கு நஞ்சு அமுதமாவதும் ஒரு அற்புதமோ?
மேற்கூறியவைகளால் தீக்ஷிதேந்திரர் சிவனருளால் விஷபானம் செய்தது வியப்பன்று என்று புலனாகின்றது.
6) தனது வலது கையில் தீக்ஷிதர் அக்னியைக் காண்பித்தல்:
சின்னபொம்மராஜன் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரிடம் அதிக பக்தியுடன் இருந்தது தாதாசாரியருக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. எப்படியும் அரசனுக்கு அவர் மீது உள்ள மதிப்பைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணங் கொண்ட தாதாசாரியார் தீக்ஷிதர் மீது ஒரு குற்றம் சாட்டினார். ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அரசனை ஆசீர்வதிக்கும் போது எப்பொழுதும் இடது கையில் ஆசிர்வதிப்பார். இதையே அரசனிடம் குற்றமாகக் கூறி அப்பய்ய தீக்ஷிதர் உங்களை இடது கையினால் ஆசீர்வதிப்பது அவரது செருக்கினைக் காட்டுகிறது என்று கூறி அவனது மனதைக் கலைக்க முயன்றார். அரசனும் இதை தீக்ஷிதரிடமே கேட்டு விட்டான். மறுநாள் சபையில் இதைப் பற்றிய விசாரம் வரும் போது மற்றைய பண்டிதர்கள் அனைவரும் மெளனமாக இருந்தார்கள். தீக்ஷிதேந்திரர் உடனே எழுந்து சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வண்ணம் உண்மையான ஒரு பிராமணனின் வலதுகையில் அக்னி இருப்பதால் அந்த பிராமணன் தனது இடதுகையினால் தான் ஆசீர்வதிக்க வேண்டும். எந்த வஸ்துவை நோக்கி அந்த பிராமணனின் கை தூக்கப்படுகிறதோ அது அவனது கையின் அக்னியால் எரிந்து விடும் என்று கூறினார். இந்த விளக்கத்தை ஏற்க மற்றையோர் தயக்கம் காட்டினர். அத்தகைய அக்னி தீக்ஷிதரின் வலது கரத்தில் இருக்கிறதா என்று அறிய விரும்பினர். ஸ்ரீதீக்ஷிதர் உடனே அரசனைப் போன்று ஒரு படம் ஒன்றை ஒரு வஸ்திரத்தில் எழுதி வரச் சொன்னார். அங்ஙனமே ஒரு வஸ்திரத்தில் அரசனின் படம் எழுதி சபைக்குக் கொண்டு வரப்பட்டது. தீக்ஷிதர் அந்த உருவத்தினை நோக்கித தனது வலது கரத்தினைக் காட்டினார். உடனே அந்த வஸ்திரம் எரிந்து சாம்பலாயிற்று. நெருப்பின் வேகத்தைத் தாங்க முடியவில்லை. உடனே அரசன் தீக்ஷிதரை வணங்கி அக்னியை அடக்கிக் கொள்ளும்படிச் செய்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அரசனுக்கு தீக்ஷிதரிடம் பக்தி மிகவும் அதிகமாகியது.
இங்ஙனம் தீக்ஷிதருக்குத் தாம் இழைக்கும் ஒவ்வொரு இன்னலும் அவருக்குப் பெருமையையே உண்டாக்குவதை அறிந்த தாதாசாரியார் மனம் புழுங்கினார். பாவம், தாதாசாரியர்! இவரது லீலைகளைப் பின்னரும் கூறுவோம்.
...
Comment