Announcement

Collapse
No announcement yet.

Sri Appayya Dikshitar charitram

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sri Appayya Dikshitar charitram

    courtesy:www.shaivam.org

    Part-2
    தீக்ஷிதேந்திரரின் வித்யாப்யாஸமும், உபநயனமும்
    ஸ்ரீரங்கராஜாத்வரி அவர்கள் தமது மூத்த குமாரரான அப்பய்யருக்குத் தாமே அக்ஷராப்யாஸம் செய்துவைத்து, காவ்யம்-நாடகம்-அலங்காரம்-ஸாஹித்யம் முதலானவற்றைக் கற்பிப்பதற்கு குருராமகவி என்ற கவிச்ரேஷ்டரை நியமித்தார். ஐந்து வயதிலேயே ஸ்ரீஅப்பய்யர் ஸகலவிதமான எழுத்து ஞானமும், ஸகல பாஷா ஞானமும், அழகான முறையில் ஸாஹித்யம் செய்யும் திறமையும் பெற்று விளங்குவதைக் கண்ட தந்தையாரும், குருராமகவியும் பரமானந்த நிலையை அடைந்தார்கள். ஸ்ரீரங்கராஜாத்வரியும் குருராமகவிக்குச் சிறந்த ஸன்மானங்கள் செய்து சிறப்பித்தார். கர்ப்பாஷ்டம வயதில் (அதாவது பிறந்த ஏழாவது வயதில்) அப்பய்யருக்கு நல்லதொரு நாளில் உபநயனம் செய்து வைத்தார். வேதாத்திய யனமும் செய்துவைத்தார். தனது கன்யாரத்னத்தை வாதூல கோத்திரத்தில் பிறந்த சிறந்ததொரு வரனுக்குக் கன்னிகாதானம் செய்தார். இங்ஙனம் தமது சந்ததிகளால் மிக்க பரமானந்த நிலையை ரங்கராஜாத்வரி அடைந்தார்.
    ஸ்ரீரங்கராஜாத்வரி சிவபதமடைதல்
    ரங்கராஜ தீக்ஷிதர் இங்ஙனம் எல்லா வகையிலும் தன் நிறைவு பெற்றவராக வேலூர் சின்னபொம்மராஜன் என்னுமரசனால் போற்றப்பட்டு வந்தார். அடையப்பலம் கிராமத்தில் சோமயாகம் முதலான பெரிய யாகங்களைச் செய்து முடித்தார். பிறகு ஒரு நாள் தனது புத்திரர்களான இருவரையும் அழைத்து, 'குழந்தைகளே! நீங்கள் வித்யா சம்பத்துடன் அஹங்காரமற்றவர்களாய் என்றும் சந்திரசேகரக் கடவுளைப் பூஜித்து வாருங்கள். அனவரதமும் நீங்கள் விபூதி ருத்ராக்ஷ தாரணம் செய்தும், விபூதி ருத்ராக்ஷதாரணம் செய்பவர்களை சிவபிரானாகவே எண்ணி அவர்களை வணங்குங்கள். யக்ஞபதியான பரமேச்வரனை யாகங்களால் ஆராதியுங்கள்" என்று உபதேசம் செய்து சிவசாயுஜ்யம் அடைந்தார். அந்த சமயம் ஸ்ரீஅப்பய்யருக்கு வயது பதினாறே ஆகியிருந்தது. தனது தந்தையின் பிரிவைப் பொறுக்கமாட்டாதவராய்த் துக்கப்பட்டாரேனும், ஒருவாறு தைரியத்தையடைந்து பித்ருகாரியங்களை நன்றாகச் செய்து முடித்தார். தந்தையாரின் கட்டளைப்படி நடந்து கொண்டு அடையப்பலத்தில் வசித்து வந்தார்.
    சின்னபொம்ம அரசனின் ஆதரவு
    இம்மாதிரி ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் அடையப்பலம் கிராமத்தில் வசித்து வந்த சமயம், கோடி கன்னிகாதானம் என்ற பிருதத்துடன் கூறிய பாஞ்சராத்ர மதத்தைப் பின்பற்றியவரான ஸ்ரீநிவாஸ குருதாதாசாரியார் என்ற வைஷ்ணவர் சின்னபொம்ம ராஜனை அடைந்து தன்னுடைய மதத்தை அவன் மனத்தில் ஊற வைத்துத் தன்னை அனுசரிக்கும்படிச் செய்தார். அங்ஙனமிருந்தாலும், அரசன் சின்ன பொம்மன் ஸ்ரீ ரங்கராஜாத்வரி இல்லாது தனது சபையின் சோபை குறைந்து விட்டதாக எண்ணி அடையப்பலத்தில் இருக்கும் அவரது இரண்டு குமாரர்களையும் தனது நகரத்துக்கு அழைத்து அவர்களுக்கு இடங்கொடுத்து தனது சபை வித்வான்களாகச் செய்தான். காலக்ரமத்தில் தாதாசாரியர் அரசனால் கெளரவிக்கப்பட்டு மந்திரி பதவியையும் அடைந்தார். சிவபக்தர்களை அவமதிப்பதில் பெரிதும் ஆர்வமுடையவராய், சிவாபராதம் செய்கின்றவராய் இருந்தார். ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தாதாசாரியர் செய்யும் காரியங்களைச் சகிக்கமாட்டாதவராய் சிவபெருமானின் முழுமுதல் தன்மையைப் பெரிதும் போற்றியும் சிவபக்தர்களைக் கொண்டாடியும் சாஸ்திர வாயிலாகச் சபையில் பிரகடனம் செய்தார். இவ்விஷயத்தை அறிந்த சிவபக்தர்கள் எல்லோரும் பதினாறே வயதான ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் பெருமையை உணர்ந்து புகழ்ந்தார்கள். தஞ்சாவூர், ஸ்ரீகாளஹஸ்தி, வேங்கடகிரி, கார்வேட்டி நகர் போன்ற இடங்களில் உள்ள அரசர்களும் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் சிவபக்திப் பெருமையைக் கேட்டுத் தத்தம் நகர்களுக்கு அழைத்து அவரைப் பெருமைப்படுத்தித் தக்க சன்மானங்கள், பிருதுக்கள் போன்றவைகளால் கெளரவித்தனர். இங்ஙனம் நமது தீக்ஷிதேந்திரர் பல இடங்களிலும் சிவபக்தர்களாலும் மஹாராஜாக்களாலும் போற்றப்படுவதையறிந்து பாரதமாதா சந்தோஷித்தாள் என்றால் மிகையாகாது.
    ரத்னகேட தீக்ஷிதரும் தீக்ஷிதேந்திரரின் திருமணமும்
    இங்ஙனம் இளமையிலேயே பெயரும் பெருமையும் பெற்று விளங்கிய நமது ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்களுக்குப் பால்யப்பருவம் போய் யெளவனப்பருவம் வந்து நல்லதொரு கிருஹஸ்ததர்மத்தைப் பின்பற்ற வேண்டிய சமயம் வந்தது. அக்காலத்தில் ரத்னகேட தீக்ஷிதர் என்பவர் ஸ்ரீ காமாக்ஷி தேவியின் திவ்ய கிருபாபலத்தினால் அம்ருத மயமான வாக்விபூதியுடன் மஹாவித்வானாக உலகத்தில் பிரகாசித்துக் கொண்டு சூரப்பநாயகன் என்ற அரசனால் கெளரவிக்கப்பட்டு அவனது ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவரது இயற்பெயர் ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் என்று இருந்த போதிலும் ரத்னகேட தீக்ஷிதர் என்ற பெயரையும் சேர்த்து ரத்னகேட ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் என்றே கூறி வந்தார்கள்.
    இவ்வாறு ரத்னகேடதீக்ஷிதர் கீர்த்தியுடன் விளங்கி வரும் சமயம், ஒரு சமயம் அவர் காஞ்சி மாநகரில் தனது கிருகத்தில் இருக்கும் பொழுது அவரை வாதத்தில் ஜயிக்க வேண்டுமென்று ஆசைகொண்டு காசியிலிருந்து பண்டிதர்கள் சிலர் ஒரு கூட்டமாக ரத்னகேட தீக்ஷிதர் வீட்டிற்கு விடியற்காலையில் வந்தார்கள். அச்சமயம் வாசலில் ஜலம் தெளித்துக் கொண்டிருந்த தீக்ஷிதரது தர்மபத்தினியைப் பார்த்து "ரத்னகேட தீக்ஷிதர் உள்ளே இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அவர்களது கருத்தினைத் தனது கூர்த்த மதியினால் உணர்ந்த அந்த அம்மையார் தாமும் ஸாஹித்யத்தில் வல்லவராதலால் அப்போது கோமய ஜலத்தினால் வாசல் தெளிக்க ஜலம் எடுக்கும் முறையை அனுசரித்து தாளபத்தமாய் 'பஞ்சசாமர விருத்தம்' என்ற விருத்தத்தில் ஜலம் தெளித்துக் கொண்டே அந்த பண்டிதர்களுக்கு சுலோகரூமாய் பதில் கூறினார்.
    இந்த சுலோகத்தைக் கேட்ட காசி பண்டிதர்கள் ரத்னகேட தீக்ஷிதரின் மனைவியே இத்தகைய ஸாஹித்ய திறமையுடன் இருக்கும் போது, அவர் எத்தகைய திறமையுடன் இருப்பார். அவரைப்பார்த்தால் நாம் அவமானப்பட்டு விடுவோம் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போய்விட்டார்கள். இதனால் ரத்னகேட தீக்ஷிதருக்கு நிகரான பண்டிதரே இப்புவியில் இல்லை என்று சொல்லும் நிலைமை உண்டாயிற்று.
    ஒருசமயம் சந்திரசேகர பூபாலன் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் மகத்தான பாண்டித்தியத்தைக் கேட்டறிந்து தனது ஆஸ்தான வித்வானான ரத்னகேட தீக்ஷிதரைப் பார்த்து, "நீங்கள் அப்பய்ய தீக்ஷிதரின் பாண்டித்யத்தைப் பற்றீக் கேள்விப்பட்டதுண்டா' என்று கேட்டான். இதைக் கேட்ட ரத்னகேடதீக்ஷிதர் கொஞ்சம் கலவரமடைந்த முகத்துடன் "அரசே! நான் அப்பய்ய தீக்ஷிதரின் பால்யத்தில் அவரது அதிகூர்மையான புத்தியை அறிவேன். இப்பொழுது பதினான்கு ஆண்டுகள் ஆனதால் அவர் ஸகல வித்யைகளிலும் நிபுணராக ஆகியிருக்கலாம். சமயம் கிடைத்தால் அவருடன் வாதம் செய்யவும் ஆடையுடன் அந்த வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கின்றேன்' என்று பதில் கூறினார். மஹாராஜாவும் "நல்லது. அவருடன் வாதம் செய்து வாருங்கள்" என்று கூறி காஞ்சிபுரத்துக்கு அனுப்பினான். ரத்னகேட தீக்ஷிதர் காஞ்சீபுரத்தில் இருக்கும்போது நவராத்திரி வந்தது. காமகோடி ஜகன்மாதாவை சிறப்பாகப் பூஜித்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் பிரத்யக்ஷமாகி "குழந்தாய், ரத்னகேடா! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று அருளிச்செய்தாள். கண்களில் ஆனந்த பாஷ்யம் பெருக, தன்முன்னே பரமகருணையுடன் பிரத்யக்ஷமான தெய்வத்தை ரத்னகேட தீக்ஷிதர் பல முறை வணங்கினார். உள்ளம் உருக, நாத்தழதழக்க, உடல் புளகாங்கிதமாக தோத்திரங்கள் பல செய்து, "அன்னையே! அடைந்தவர்க்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் தெய்வமே! அப்பய்ய தீக்ஷிதர் என்றொருவர் ஸகல வித்தைகளிலும் சிறந்தவர் என்று கேள்விபடுகிறேன். எல்லா வித்யைகளும் அவரிடமே குடிகொண்டு அவரையே வணங்கி நிற்கின்றன என்றும் கேட்டறிகிறேன் தாயே! எனது கீர்த்தியும் உனதருளால் உலகம் அறியுமாதலால் அவரை நான் ஜயிக்கவேண்டும், எனக்கு நீ ஜயத்தை அளிக்க வேண்டும்" என்று வேண்டினார். இதைக் கேட்ட ஜகன் மாதா சிரித்தாள். சிரித்துக் கொண்டே ரத்னகேட தீக்ஷிதரை நோக்கி அருளிச்செய்தாள். "ரத்னகேடா! நீயும் அப்பய்ய தீக்ஷிதரும் வாதம் செய்வது முறையல்ல. நான் ஒரு வழி கூறுகிறேன். உனது பெண்ணான மங்களாம்பிகையை அந்த அப்பய்ய தீக்ஷிதர் என்ற மகானுக்கு கன்யாதானம் செய்து கொடுத்துவிடு. இம்முறையில் உனது மனோரதம் நிறைவேறும். உன்னுடைய பாண்டித்யத்தாலும், வயதாலும், எனது அனுக்கிரஹத்தாலும் அப்பய்ய தீக்ஷிதருக்குக் குருவாகவும், மாமனாராகவும் ஆவாய்" என்றருள் பாலித்து மறைந்தனள்.
    இங்ஙனம் ஸ்ரீ ரத்னகேட தீக்ஷிதர் காஞ்சியில் இருக்கையில், கருணாமூர்த்தியான ஸ்ரீ ஏகாம்பரநாதர் அப்பய்ய தீக்ஷிதரின் கனவில் தோன்றினார். தோன்றி, "குழந்தாய் அப்பய்யா! ஸ்ரீகாஞ்சீபுரம் வந்து சேர்வாய். அங்கு காமாக்ஷீயுபாஸகரான ரத்னகேட தீக்ஷிதர் என்பவர் தனது பெண்ணை உனக்குக் கன்னிகாதானம் செய்து தருவார்" என்று அருளிச் செய்தார். இம்மாதிரி கனவில் அருள் பெற்ற ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் மிக்க மகிழச்சியுற்றவராய் உடனே புறப்பட்டுக் காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார். ஏகாம்பரநாதருடைய சந்நிதியில் தகுதியான ஒரிடத்தில் வசித்தார். ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் காஞ்சீபுரம் வந்து சேர்ந்த விவரத்தை அறிந்த ரத்னகேட தீக்ஷிதர் தனது பெண்ணையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் இருக்குமிடம் வந்தார். அவரைக் கண்டதும் அப்பய்ய தீக்ஷிதர் எழுந்து அவரை உபசரித்தார். நல்வரவு கூறி அவர் முன்னிலையில் வந்து நின்றார். அவரைப் பார்த்து மகிழ்ந்த ரத்னகேட தீக்ஷிதர். "ஹே குழந்தாய்! மங்கள மூர்த்தியே! இன்று பொழுது விடிந்தது ஒரு பாக்யம். காமாக்ஷியின் பதியான ஏகாம்பரநாதருடைய அனுக்கிரஹத்திற்குப் பாத்திரமான உனது தர்சனம் எனக்குப் பரம சந்தோஷத்தைக் கொடுத்தது. என்னுடைய மங்கள வசனத்தை உன் செவிகளில் ஏற்றுக் கொள்வாய்.
    வித்வன் முகாதனுபமாம் தவ கீர்த்திமாராத் ச்ருத்வா ப்ரஸாத பரிதஸ்ஸமுபாகதோ (அ )ஸ்மி | விக்ஞானதச்ச வயஸா தபஸா (அ )பிவ்ருத்தோஸ்மி அவ்யாஹதோத்ததவசா: ப்ரதிதப்ரபாவ: || யத்ராஸ்தே சாம்பவீ வித்யா தத்யாத்தஸ்மை சிரோ (அ )ம்புபி: | இதி ஜாநாஸி கிம் தன்மே வாணீமேகாம் ச்ருணுஸ்வயம் || கச்சித்விபச்சிதம்ருதாயிதமஸ்மதுக்தம் நோல்லங்கயேத்குசலவானதுநா (அ )ஸ்மி வித்வான் | தன்னஸ்ஸுதாம் ஜடிதி மங்கலநாயகீம் த்வம் உத்வாஹ்ய பூரி லபஸேஸுககீர்த்திசோபாம் ||
    குழந்தாய்! அப்பயா! பண்டிதர்களின் வாயிலாக உனது பாண்டித்தியத்தையும், கீர்த்தியையும் கேட்டு மிக்க மகிழ்ச்சியோடு உன்னைப் பார்க்கவே ஒடிவந்தேன். நான் விக்ஞானத்திலும், தவத்திலும், வயஸ்ஸிலும் கிழவனானதால் உன்னிலும் பெரியவனல்லவா? நான் அறிந்த உண்மையை உன்னிடம் கூறுகின்றேன். எந்த இடத்தில் சிவசம்பந்தமான வித்தையும், சிவபக்தியும் இருக்கின்றதோ அங்கே அவர்களைத் தலையாலே போற்ற வேண்டும் என்று நீயும் அறிவாய். அதனால், என் வார்த்தையைக் கவனமாகக் கேள். எனது வார்த்தை அம்ருதத்திற்குச் சமமானது. இதை யாரும் தட்டவும் கூடாது. எனது குமாரியான மங்களநாயகி என்ற அற்புதமான கன்னியாரத்தினத்தை நீ மணந்து கொண்டு மேலும் கீர்த்தியையும், ஸுகத்தையும் அடைந்து சோபையுடன் பிரகாசிக்க வேண்டுகின்றேன்" என்று கூறினார்.
    இதைக்கேட்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர், "ஓ பண்டித ரத்தினமே! தாங்கள் யோஜிக்காமல் சொன்ன ஒரு சொல்லுக்காக ஒரு இரவில் காஞ்சி ஜகன்மாதாவின் திருவருளால் உலகம் பூராவும் அமாவாஸை பெளர்ணமி ஆனதை நானறிவேன். எனவே தங்களுடைய மஹிமையையும் அறிந்து, பரமேச்வரனுடைய ஆக்ஞையையும் உணர்ந்து தங்கள் புதல்வியை மணக்க சம்மதத்துடன் வந்துள்ளேன்.
    ஸம்பந்த: கலு ஸாதூநாமுபயோரேவ ஸம்மத: | சந்த்ரசூடநிதேசேன ஸஜ்ஜா மே பந்துதா (அ )துநா ||
    "நமது சம்பந்தமானது சந்திரசூடனான பரமேச்வரனுடைய ஆக்ஞையின் பேரில் ஏற்படுவதால் இருவருக்கும் சம்மதமே ஆகும். நான் ஸன்னத்தமாக இருக்கின்றேன். நல்லதொரு முஹூர்த்தத்தில் தங்களது புதல்வியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள்" என்று கூறினார்.
    ரத்னகேட தீக்ஷிதர் பெருமகிழ்ச்சி அடைந்தார். திருமணச் செய்தியை பந்துக்கள் அனைவருக்கும் அனுப்பி அனைவரையும் வரவழைத்தார். கல்யாணமண்டபத்தை நிர்மாணம் செய்து வாழைமரங்கள் கட்டி, தோரணங்களால் அலங்கரித்தார். நல்லதொரு முஹூர்த்தத்தில் கன்னிகையும் கனக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஸர்வாலங்கார பூஷிதையாகவும் ஸர்வ மங்கள சோபிதையாயும் திகழும் மங்களநாயகியை மணவறையில் வைத்து, ஸாக்ஷாத் பரமேச்வரனாகவே வரனை பாவித்து, வரவேற்று, வரபூஜை செய்து மங்களநாயகியை ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதருக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்தார். ஸ்ரீமத் தீக்ஷிதரும், மங்களநாயகியை பாணிக்கிரஹணம் செய்து கொண்டு, மாங்கல்யதாரணம் செய்து, அக்னி ப்ரதக்ஷிணாதிகள் செய்து, விதிப்படி அழகாக விவாஹத்தை நடத்தினார். பின்னர் சிறந்த உணவளித்து பிராமணர்களுக்கு அபரிதமான ஸ்வர்ண தக்ஷிணையும் தீக்ஷிதேந்திரர் பெரு மகிழ்ச்சியுடன் வழங்கினார். இந்த சமயம் ஒரு மஹாகவி ஒரு ச்லோகம் கூறினார்.
    அப்பய்யயஜ்வன்யவநீஸுராணாம் அன்னம் ஸுவர்ணம் ஸரஸம் ததானே | அபர்ணமாஸீத்கதலீதரூணாம் ந கேவலம் ப்ருந்தமபி த்விஜானம் ||
    ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரரின் திருமணத்தில் பிராமணோத்தமர்கட்கு அன்னமும் தங்கமும் கொடுக்கும் பொழுது இப்புவியிலுள்ள வாழைமரங்கள் எல்லாம் இலை இல்லாமல் ஆயின. (அதை வடமொழியில் அபர்ணம் என்ற பதத்தால் கூறி), வாழை மரங்கள் மட்டுமா இலை இல்லாமல் போயின? ஏழை பிராமணர்களுடைய ஸமுதாயத்திற்கும் அபர்ணமாயிற்று. இங்கு அபர்ணம் என்ற பதத்திற்குக் "கடன் ஒழிந்தது" என்ற பொருள்பட கவி கூறினார். இத்தகைய பெருமையுடன் திருமணம் நடந்தேறியது.
    ரத்னகேட தீக்ஷிதரும் காமாக்ஷியின் க்ருபையால் மனம் சந்தோஷம் அடைந்தார். அப்பய்ய தீக்ஷிதரிடம் வாதம் செய்வதற்காகத் தன்னை வாதத்திற்கு அனுப்பின சந்திரசேகர பூபாலனிடம் நடந்த விருத்தாந்தத்தைக் கூறி அவர் மனமும் சந்தோஷமடையத் செய்தார்.
    ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரின் பெருமை
    ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரும் திருமணமானதும், தன் மனைவியுடன் பிரம்மவாஸ்து என்ற இடத்தில் வசித்து ச்ரெளத, ஸ்மார்த்த கர்மாக்களை அனுஷ்டானம் செய்து கொண்டு பல தேசங்களிலிருந்து வரும் சிஷ்யர்களுக்குப் பாடங்களைப் போதித்துக்கொண்டும், சிவபெருமானைக் கொண்டாடும் சிவபாரம்யமான கிரந்தங்களைச் செய்து கொண்டும், அளவுகடந்த சிவபக்தி செய்து கொண்டும், சிவார்ச்சனை செய்து கொண்டும் திக்கெட்டிலும் அவரது கீர்த்தி பரவும்படி தகழ்ந்தார். பிறகு காஞ்சீபுரம் சென்று அங்கே சிலகாலம் வசிக்கும்போது பல தேசங்களிலிருந்தும் சாஸ்த்ராப்யாசம் செய்ய சிஷ்யர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சாஸ்த்ர ப்ரவசனங்கள் செய்து கொண்டும் பரமசிவ பாரம்யத்தை உலகத்தில் நிலைநாட்ட வேண்டி சிவார்ச்சனம் செய்ய வேண்டிய வழிகளையும் கிருஹஸ்தர்களுக்கு உபதேசித்து சிவபக்தியை உலகத்தில் பரப்பியும் சிறந்து விளங்கினார்.
    தீக்ஷிதேந்திரருக்கு வயது இருபது ஆயிற்று. இவருடைய கீர்த்தி நன்கு பரவி உலகம் இவரை நன்றாக அறிந்து பாராட்டியது. ஒரு சமயம் இவர் அடையப்பலம் கிராமத்தில் தங்கியிருந்தபொழுது காசியிலிருந்து க்ஷேத்திர யாத்திரையாக வந்த மஹாபண்டிதர்கள் சிலர் அங்கு வந்தார்கள். தீக்ஷிதருடைய பெருமையைக் கேட்டு அவரைச் சென்று பார்த்தார்கள். பார்த்து "தீக்ஷிதர் அவர்களே! உமக்கு எந்த சாஸ்திரத்தில் பரிச்சயம்?" என்று கேட்டார்கள்.
    நாஹமதீதி வேதே ந ச படிதீ யத்ர குத்ரசிச்சாஸ்த்ரே | கிந்து தரேந்துவதம்ஸினி புரஹம்ஸினி பும்ஸி பூயஸீ பக்தி: ||
    நான் வேதம் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை. ஓரிடத்திலும் சாஸ்திரம் படிக்கவில்லை. அர்த்தசந்திரனைத் தலையில் வைத்திருக்கும் திரிபுரஸம்ஹார மூர்த்தியான பரமசிவனிடத்தில் பக்தியானது எனக்கு நிரம்ப உள்ளது என்ற கருத்து உடைய இந்த ஸ்லோகத்தில் வ்யாகரணமானது மிகவும் சாமர்த்தியமாய்ப் பிரயோகம் பண்ணப்பட்டிருந்ததால் அந்த பண்டிதர்கள் மிக்க சந்தோஷமடைந்தார்கள். பிறகு அவர்கள் இராமேசுவர யாத்திரையை முடித்துக் கொண்டு காசிக்குச் சென்று தாங்கள் செல்லுமிடமெல்லாம் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரரின் பெருமையைப் பிரகடனப்படுத்தினார்கள். இவ்வாறு தீக்ஷிதேந்திரர் அவர்களின் பெருமை உலகெங்கும் பரவத் தொடங்கியது.

    Continued in part 3
    Last edited by soundararajan50; 17-06-15, 11:54.
Working...
X