Announcement

Collapse
No announcement yet.

Lingotbhava -Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Lingotbhava -Periyavaa

    Courtesy: http://amrithavarshini.proboards.com...#ixzz3V7BTjXWl
    தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்


    சிவராத்ரி


    அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சிலகோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்குமூர்த்திகளுக்குள் ஒன்று. விருஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர்,பிக்ஷாடனர், ஊர்த்வதாண்டவர், ஜலந்தராசுர சம்ஹாரர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு.அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி.


    அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுவது. அதில், லிங்கத்துக்குள் ஒரு திவ்விய மூர்த்தியிருக்கும். அதன்ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்தமூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.


    இந்த லிங்கோத்பவர் யார்?


    ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:


    ஆபாதால நப: ஸ்தலாந்த புவன
    ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்
    ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்
    பூர்ணேந்து வாந்தாம்ருதை:
    அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்
    ருத்ராநுவாகான் ஜபன்
    த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்
    விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||


    இந்த ஸ்லோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறது? பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப்பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.


    ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முட்யாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அதுபிரதிபலிக்கும். குண-தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதன்பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அதுநிர்விகாரமானது. பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும்என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அது எதையும் மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும்அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ்களங்கமாக இருக்கும். நிர்குணமான பரமாத்மா வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிறரூபமாக அது தெரியும்.


    மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. "பூர்ணேந்து" என்று சுலோகத்தில் வருவது, 'பூரண இந்து!'; இந்துஎன்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈசுவரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட"ஸகள" ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக்கொண்டு சந்திர மௌலியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா'நிஷ்கள' தத்வமாயிருக்கிற போது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடுஇல்லாமல், லிங்கமாக சகள - நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிருதமேகங்கை மாதிரி கொட்டுகிறது.


    யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச்சந்திர பிம்பத்திலிருந்து அமிருத்தம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர்லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகம் செய்வது.ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை எல்லாம் அறிவுறுத்துகிறது.


    ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம்தான். ஸ்ரீ ருத்ரத்தில் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கேட்டதுஎல்லாம் சிவா ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது.


    லிங்கம் ஏன் வட்டவடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை; ஆதியில்லை, அந்தமுமில்லை.மற்றவர்களுக்கு உண்டு. முக்கோணத்துக்கு சதுரத்திற்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.


    சரியான வட்டமான (circle) இல்லாமல், லிங்கம் நீள வட்டமாக (ellipse) இருக்கிறது. "பிரபஞ்சமே 'எல்லிப்டிக்'காகத்தான் இருக்கிறது. நம் சூரியமண்டலத்தை (Solar System) எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீளவட்டமாகத்தான் இருக்கிறது" என்று நவீன விஞ்ஞானத்தில்சொல்வதும், பிரம்மாண்டமும் "ஆவிஸ்புரத்" என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.


    யாராவது பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது; ஆனால் அவருடைய உறுவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம்பூரணமாகிறது. அவ்வாறே உறுவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்து பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிறநமக்கு உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உறுவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமானதோடுநில்லாமல், அந்த லிங்கத்துக்குளேயே திவ்வியரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும்,வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை, முடியும் இல்லை, அதாவது ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம் என்றுஉணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரித் தம் பாதம் அதற்குள் அடங்காமலும்இருப்பதாகக் காட்டுகிறார்.


    அடிமுடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்தஇரவே சிவராத்திரியாகும்.


    அப்படி ஜோதி ஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லும்ஸ்வபாவம் வராஹத்துக்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானவர். பட்சிக்குப் பறப்பதுஸ்வபாவம். பட்சியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம்வந்தது. 'நான் கண்டு விட்டேன்' எனப் பொய் சொல்லியது. அதனால்தான் பிரம்மாவுக்குப் பிரத்தியேகமாகப் பூஜை இல்லாமற் போய் விட்டது.பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டு. புராண ஐதிஹ்யத்தில் இப்படி இருக்கிறது.


    பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்தும் சிவ பெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும், விஷ்ணு வராஹ ரூபமாகப் போயும் பாதம்அகப்படவில்லை என்றும் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மர் ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்; சிருஷ்டி,பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாத வரையே, 'என்சாமர்த்தியத்தால் அறிய முடியும்' என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்குஅகப்பட்டுவிடுவார். அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு 'ஆசுதோஷி'என்று ஒரு பெயர் இருக்கிறது. 'ஆஷுடோஷ் முகர்ஜி' என்று ஒரு சீர்திருத்த (Reformist) முக்கியஸ்தரைச் சொல்வார்கள். ஆசுதோஷிதான்'ஆஷுடோஷ்' என்றாயிற்று. 'ஆசுகவி' என்றால் கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா? இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்துஅநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி.


    சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்துஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை.






    Sree Rama -Periyavaa
    Posted: 18 May 2015 10:10 PM PDT
    COURTESY-amrithavarshini




    தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)


    தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்


    ஸ்ரீ ராமன்


    'ராமன்' என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம்.

    எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே

    அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத்

    தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான்.


    சுக துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவது தான்

    யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி

    வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வது தான். சொந்த

    விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம்

    குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி

    மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.

    ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து

    காட்டுவதற்காக ஸ்ரீமந் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், 'இது என் அபிப்பிராயம்' என்று

    சொல்லவே மாட்டார். 'ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது' என்றே அடக்கமாகச் சொல்வார்.

    சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க

    கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக்

    கொண்டு வாழ்ந்தான்.


    "ராவணன் ஸீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில்

    விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?" என்று கேலி செய்து

    கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில்

    இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.


    ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட்

    ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ

    குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து 'இந்தக் குழந்தைகள் யார்?' என்று கேட்கிறார். ராமஸ்வாமி

    அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி

    செய்யலாமா? நாடக வால்மீகி, 'இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி

    அய்யங்கார்!' என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்? வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில்

    தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது,

    இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு

    வாழ்ந்தார்.


    வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின்

    குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான்

    சொல்லியிருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி

    காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக்

    கொடுத்தாள். 'ராகவா, நீ எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத்

    தர்மம் உன்னை ரக்ஷிக்கும்' என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.


    நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல்

    தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே

    பரிகசித்தான். 'அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும்

    வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர ஆனுமதி

    தா' என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே

    காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால்

    கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், 'ராமோ விக்ரஹவான் தர்ம:' என்றபடி தர்மத்தில்

    தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.


    சாக்ஷாத் ஸ்ரீ ராமனை லட்சியமாகக் கொண்டு "ராம ராம" என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த

    மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.
Working...
X