Announcement

Collapse
No announcement yet.

Aacharyaal means Adishankara - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Aacharyaal means Adishankara - Periyavaa

    Aacharyaal means Adishankara - Periyavaa
    courtesy; http://amrithavarshini.proboards.com/board/66/

    ஆசாரிய: சங்கராசார்ய:

    ஸந்து மே ஜன்ம ஜன்மனி

    'எல்லாப் பிறவிகளிலும் ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களே என் ஆசிரியராக இருக்க வேண்டும்' - என்று இதற்கு அர்த்தம்.

    சுலோகம் முழுவதையும் சொல்கிறேன்:

    சாஸ்த்ரம் சாரீர மீமாம்ஸா
    தேவஸ்து பரமேச்வர:|
    ஆசார்ய: சங்கராசார்ய:
    ஸந்து மே ஜன்ம ஜன்மனி ||

    'சாரீர மீமாம்ஸா' என்றால் சரீரத்துக்குள் இருக்கப்பட்ட உயிரைப்பற்றிச் சொல்கிற வேதாந்த சாஸ்திரம் என்று அர்த்தம். 'இந்த வேதாந்தமே எந்நாளும் எனக்கு சமய சாஸ்திரமாக இருக்கட்டும்'. அதாவது, 'நான் வேத மதத்திலேயே பிறக்கவேண்டும்' என்று சுலோகத்தின் முதல் வரி சொல்லுகிறது. அடுத்த வரி, 'பரமேச்வரனே எனக்கு எந்நாளும் தெய்வமாக இருக்கட்டும்' என்கிறது. பிறகு 'ஜன்ம ஜன்மத்திலும் எனக்கு சங்கரரே ஆசாரியராக இருக்கட்டும்', என்று சுலோகம் முடிகிறது.
    புனர் ஜன்மம் இல்லாமல் பரமாத்மாவில் கலந்துவிட வேண்டும் என்பதே பொதுவாகப் பிரார்த்திக்கப்படுவது. ஆனால் ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் ஒவ்வொரு ஜன்மாவிலும் ஆசாரியராக அமைவார் என்றால், எத்தனை பிறவியும் எடுக்கலாம் என்று இந்த சுலோகம் சொல்வது போலிருக்கிறது. நடராஜாவைப் பார்த்துக் கொண்டேயிருப்பதற்காக 'மனதப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்னது போலிருக்கிறது!

    ஸ்ரீசங்கரரும் இதே ரீதியில் 'சிவானந்த லஹரி'யில் ஒரு சுலோகத்தில் பிரார்த்திக்கிறார்:

    நரத்வம் தேவத்வம் நகவன ம்ருகத்வம் மசகதா
    பசுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி ஜனனம் |
    ஸதா த்வத் பாதாப்ஜ ஸ்மரண பரமாநந்த லஹரீ
    விஹாராஸக்தம் சேத் ஹ்ருதயமிஹ கிம்தேன வபுஷா ||

    'பரமேஷசுவரனின் பாதாரவிந்தத்தை ஸ்மரித்து, அந்த ஆனந்த வெள்ளத்தில் முழுகியிருப்பதற்குத் தடையில்லை எனில், நான் எந்தப் பிறவியும் எடுக்கத் தயார். மனிதனாகவோ, தேவனாகவோ, கல்லாகவோ, மரமாகவோ, விலங்காகவோ, கொசுவாகவோ, மாடாகவோ, கிருமியாகவோ, பட்சியாகவோ எந்தப் பிறவி வாய்த்தாலும் சரி, இருதயத்தில் ஈசுவர ஸ்மரணாநந்தம் வெள்ளமாய்ப் பாய்ந்தால் சரீரம் எதுவாக இருந்தால் என்ன?' என்கிறார் இந்த சுலோகத்தில் ஸ்ரீ ஆசார்யாள்.

    'ஆசார்யாள்' என்று சொன்னாலே இந்தத் தேசத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியர்களைத்தான் குறிப்பிடுகிறது. இதிலிருந்தே அவரது மகிமை தெரிகிறது. பீஷ்மாச்சாரியார், துரோணாசாரியார், வியாஸாசாரியார், ஸாயணாசாரியார் இன்னும் எத்தனையோ ஆசாரியார்கள் இருந்தாலும், ஒரு பெயரையும் சேர்க்காமல் 'ஆசாரியாள்' என்று மட்டும் சொன்னால் அது நம் பகவத்பாதாள் என்றே அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். 'சாஸ்திர அர்த்தங்களை எடுத்துச் சொல்லி, பிறரை ஆசாரத்தில் நிலை நிறுத்துவதோடு எவனொருவன் தானே அந்த ஆசாரங்களை அநுஷ்டித்துக் காட்டுகின்றானோ அவனே ஆசாரியன் என்பதுதான் ஆசார்ய பதத்துக்கு லக்ஷணம் (definition).
    ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் அத்வைதத்தைப் பரம தத்துவமாக ஸ்தாபித்தார். நாமும் "எல்லாம் ஒன்று, பேதமேயில்லை" என்று பிரமாதமாக வேதாந்தம் பேசுகிறோம். ஆனால் யதார்த்தத்தில் இந்த ஏகமான ஸத்வஸ்துவின் ஞானம் நமக்கு கொஞ்சம்கூட வரவில்லை. ஆசாரியாளோ அதுவாகவே இருந்தவர். எத்தனை காரியங்கள் செய்தாலும் காரியமற்ற பரப் பிரம்மத்திலேயே இருந்து கொண்டிருந்தவர். அதன் நிறைந்த ஆனந்தத்தாலேதான் வெற்றி தோல்விகளால் துளிக்கூடப் பாதிக்கப்படாமல், ஓயாமல் காரியம் பண்ணி லோக க்ஷேமத்தைப் செய்து விட்டார். ஞானத்தை நிலைநாட்டினார். பக்தி மார்கத்தையும் நிலைநிறுத்தினார். க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகச்சென்று ஸ்தோத்திரம் செய்தார். நாமும் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவிருத்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிருத்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டு விடுவோம். ஆகாவிட்டாலோ ஸ்வாமியையே திட்டுவோம். நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வருவதற்கு வழி என்ன?
    இதற்கெல்லாம் அடிப்படையாக ஆசாரியாள் கர்மாநுஷ்டானத்தையே விதித்தார். அதை விட்டுவிட்டு நாம் செய்கிற பக்தி ஞானம் எதுவுமே நிலைத்து நிற்கக் காணோம். அவரவரும் உரிய கர்மத்தை ஆசாரங்களோடு பின்பற்றினால்தான் மனஸில் ஒழுக்கம், கட்டுப்பாடு, சித்த சுத்தி எல்லாம் உண்டாகி, அப்புறம்தான் உண்மையான பக்தியும் ஞானமும் சித்திக்கும். பகவத்பாதர்கள் அத்வைத ஞானம், ஸகுண உபாஸனை இவற்றைச் சொன்னதோடு, வைதிக கர்மாநுஷ்டானத்தை விதித்து, தாமும் யதி தர்மங்களைப் பூரணமாகப் பின்பற்றிக் காட்டியதால்தான் 'ஆசாரியாள்' என்பதன் பூரண லக்ஷணத்தையும் பெற்றிருக்கிறார்.

    'ஆசாரியாள்' என்ற மாத்திரத்தில் ஸ்ரீ சங்கராசாரியர்கள் என்று நாம் அர்த்தம் செய்துகொள்வதுபோலவே, வெளிநாடுகளில் எல்லாம் 'வேதாந்தம்' என்ற மாத்திரத்திலேயே ஆசாரியாளின் அத்தைவத மார்க்கம் என்றே அர்த்தம் செய்து கொள்கிறார்கள். வேதாந்தமாகிய உபநிஷதங்களை அடிப்படையாகக்கொண்டு த்வைதம், விசிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தம் ஆகிய பல சித்தாத்தங்கள் இருந்த போதிலும், ஆசாரியர்கள் அவலம்பித்த அத்வைதத்துக்கே இந்தப் பெருமை ஏற்பட்டிருக்கிறது. "வேதாந்த சிம்மம் கர்ஜனை செய்யட்டும்" (Let the lion of Vedanta roar) என்று சொல்லிக்கொண்டு விவேகாநந்தர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அத்வைதத்தை பிரசாரம் செய்ததிலிருந்து நம் ஆசாரியர்களின் மதம் சர்வ சம்மதமாகிவிட்டது! ஆனால் இது தாம் புதிதாகச் செய்த மதமல்ல, உபநிஷத தாத்பரியமே என்று ஆசாரியாள் விளக்கியிருக்கிறார்.
    அத்வைத மதத்தோடு, ஷண்மதங்களையும் ஸ்தாபித்தது ஆசாரியாளின் இன்னொரு பெருமை. தெய்வ பேதம் என்பதே இல்லாமல் ஈசுவரன், அம்பாள், மகாவிஷ்ணு, விக்னேசுவரர், சுப்ரமணியர், சூரியன் ஆகிய ஆறு தெய்வங்களின் உபாஸனையையும் ஒழுங்குபடுத்தித் தந்து ஷண்மதாசாரியார் ஆனார்.

    ஆசாரியாளின் தனிப்பெருமை இன்னொன்றும் உண்டு. இன்று நம் தேசத்தில் இருக்கிற விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம் முதலிய சித்தாந்தங்களை ஸ்திரப்படுத்திய ஸ்ரீ ராமாநுஜர், ஸ்ரீ மத்வர், ஸ்ரீ மெய்கண்டார் முதலியவர்கள் நம் ஆசாரியர்களுக்குப் பிற்பாடு தோன்றியவர்களே. ஆனால் நம் ஆசாரியர்களுக்கு முன்னால் தோன்றிய கபிலர், ஜைமினி, கணாதர், கௌதமர் ஆகியோர் ஸ்தாபித்த சாங்கியம், மீமாம்ஸை, வைசேஷிகம், நியாயம் முதலிய மதங்கள் ஸ்ரீ சங்கர பகவத் பாதாளுக்குப் பின் இருந்த இடம் தெரியாமலே போய்விட்டன. ஆசாரியாள் அவற்றை அடியோடு நிராகரணம் செய்துவிட்டார். அவருக்கு முன் தோன்றியிருந்த புத்த, ஜைன மதங்களையும் வென்று வைதிக தர்மத்தை நிலைநாட்டினார். முப்பத்திரண்டு வயசுக்குள் இத்தனை காரியங்களைச் செய்த ஆச்சாரியாள் பரமேசுவர அவதாரமே என்பதில் சந்தேகமில்லை.
Working...
X