Announcement

Collapse
No announcement yet.

நல்லதை நினைத்து

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நல்லதை நினைத்து

    நல்லதை நினைத்து

    'முயற்சி உடையான், இகழ்ச்சி அடையான்' என்பது சான்றோர் வாக்கு; ஒரு செயலில் வெற்றி அடைவதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மனிதர்களுக்கு, அவர்கள் செய்யும் காரியங்களுக்கு கடவுளே துணை நிற்பார்.
    மன்னர் ஒருவர், சிவ ஆலயத்திற்கு சென்றிருந்தார்! அக்கோவிலுக்கு உண்டான நடராஜப் பெருமானின் தியான ஸ்லோகம், அவர் மனதை கவர்ந்தது. உடனே அவர், திறமையான சிற்பிகளை அழைத்து, தியான ஸ்லோகத்தை சொல்லி, 'இந்த ஸ்லோகத்தில் உள்ளபடி, நடராஜப் பெருமானின் திருவுருவத்தை பஞ்சலோகத்தால் வார்க்க வேண்டும்...' என, வேண்டுகோள் விடுத்தார்.
    அதற்கு சிற்பிகள், 'மன்னா... இத்திரு உருவத்தில் குறுக்கும், நெடுக்குமாக, மேலும், கீழுமாக திருக்கரங்கள், திருவடிகள் முதலானவை கூறப்பட்டிருப்பதால், அந்த இடங்களில் உருக்குநீர் பாயாது. ஆகவே, நீங்கள் சொன்ன திருவுருவை பஞ்சலோகத்தில் வார்க்க இயலாது...' என்றனர்.
    ஒரு சிற்பி மட்டும், 'மன்னா... இந்த எண்ணத்தை இறைவன் உங்கள் உள்ளத்தில் தோற்றுவித்திருக்கிறார் என்பதால், முயற்சி செய்தால் முடியும். ஓர் ஆண்டு காலம் இக்கோவிலில் விசேஷ பூஜைகள், ஜப, தர்ப்பண ஹோமங்கள், வேத, உபநிடதப் பாராயணங்கள், வேத விற்பன்னர்களுக்கு போஜனம் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள். இறைவன் திருவருளால், நான் விக்கிரகத்தை வார்க்கிறேன்...' என்றார்.
    அரசர் பூரிப்படைந்து, அச்சிற்பியின் எண்ணப் படியே, ஓர் ஆண்டு காலம் ஜப, ஹோமங்கள் என, அனைத்தையும் செய்தார். ஓர் ஆண்டு காலம் முடிந்தது. அச்சிற்பி பஞ்சலோக குழம்பை வார்த்து, விக்கிரகத்தை உருவாக்க முயன்றார்; முடியவில்லை. ஆனாலும், அரசரும், சிற்பியும் மனம் தளராமல், ஆகம நியதிகளை கடைபிடித்து, ஓராண்டுக்கு பின்னர் மறுபடியும் முயன்றனர். அப்போதும் தோல்வி தான் மிஞ்சியது.
    சிற்பி மனம் கலங்கினார். தியானத்திலும், தவத்திலும் அதிக நேரத்தை கழித்தார். ஒருநாள் சிற்பியின் கனவில் சூலமேந்திய பைரவ வடிவில் சிவபெருமான் காட்சியளித்து, 'இம்முறை முயற்சி செய்; உன் எண்ணம் பலிக்கும்...' என்றார்.
    கனவு கலைந்தது; பழையபடியே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜய வருடம் வசந்த (காலம்) ருது - ஆருத்ரா நட்சத்திரத்தன்று, சிற்பி பல விதமான முன்னெச்சரிக்கைகளுடன், விக்ரகம் வார்க்கத் துவங்கினார்.
    பஞ்சலோகம் உருக்கும் இடத்திற்கும், வார்ப்படம் வார்க்கும் இடத்திற்கும் நடுவில், சிலர் வரிசையாக நின்று, பதம் தவறாமல் பஞ்சலோக குழம்பை மாற்றி மாற்றி தர, சிற்பி வாங்கி, பக்குவமாக வார்ப்படத்தில் ஊற்றி வந்தார்.
    அப்போது திடீரென ஒரு முதியவர் வந்து, பணியாளர்கள் கையில் இருந்த பஞ்சலோக குழம்பை வாங்கிக் குடித்தார். அதைப்பார்த்த பணியாளர்கள் மயங்கி விழுந்தனர். சிற்பியும், அரசரும் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். வழிபாட்டை முடித்து, வார்ப்படத்தை திறந்து பார்த்தனர். அதில், இறைவனின் திருவுருவம் முழுமையாக ஜொலித்தது.
    இறைவனே உருவாக்கிய அபூர்வமான, அதிசயமான அந்தத் திருவுருவம், 'ஊர்த்துவ தாண்டவ ரத்தின சபாபதி' எனும் திருநாமத்தில், திருவாலங்காட்டில் தரிசனம் அளிக்கிறது. முயற்சி செய்ய வேண்டியது நம் கடமை; அது எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், இறைவன் அதற்கு துணை நின்று முடித்துக் கொடுப்பார் என்பதை, விளக்கும் புராண நிகழ்வு இது.

    பி.என்.பரசுராமன்

    விதுர நீதி!: நாம் யாரையும் ஏசவோ, அவமதிக்கவோ, கூடாது; நீசர்களை சார்ந்து வாழவோ, நண்பர்களுக்கு துரோகம் செய்யவோ கூடாது; திமிர் பிடித்து அலையவோ, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடவோ, கடுமையான புண்படுத்துகிற சொற்களையோ, பேசவும் கூடாது.
    என்.ஸ்ரீதரன்.
Working...
X