Announcement

Collapse
No announcement yet.

ஆண்டவனை பகைத்தாலும் அவன் அடியவர்களை பகை&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆண்டவனை பகைத்தாலும் அவன் அடியவர்களை பகை&



    இது 17 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். ‘சோழவளநாடு சோறுடைத்து’ என்று புகழ் பெற்றது. சோழவள நாட்டின் தலை நகர் தஞ்சை. 17 ஆம் நூற்றாண்டில் அந்நாட்டை நாயக்க மன்னர்கள் ஆண்டனர். அவர்களுள் கடைசியாக ஒரு சிற்றரசன் ஆண்டுவந்தான். அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன் அல்லன். கீழோர் நட்பைப் பெரிதும் கொண்டவன், ஆனால் தெய்வ பக்தி உடையவனாக இருந்தான்.
    அந்த அரசன் பெயர் மன்னார் நாயுடு என்பது அவன் பெயர். அவனிடம் சேஷாசல செட்டியார் என்ற வளைச் செட்டி வகுப்பைச் சேர்ந்த ஒரு பெரியார் ‘ஷராப்’ ஆக இருந்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன் அவன் பெயர் பெரியசாமி. பெரியசாமி சிறந்த அறிவாளியாகவும் தெய்வ பக்தி உள்ளவனாகவும் கல்வி கேள்விகளில் சிறந்தவனாகவும் விளங்கினான். உரிய வயது வந்ததும் தந்தை மகனை அரசாங்கச் சேவகத்தில் அமர்த்த விரும்பினார். ஆனால் மகனோ எவருக்கும் கைகட்டிச் சேவகம் செய்ய விரும்பவில்லை. ஆகவே குலத்தொழிலாகிய வளையல் வியாபாரத்தையேனும் செய் என்று நல்லதொரு நாளில் வளையல் கடை வைத்துக் கொடுத்தார் தந்தையார்.


    ஏற்கனவே தெய்வ பக்தியும் தரும சிந்தனையும் மிகுந்த பெரியசாமி கடையிலேயே உட்கார்ந்ததும் பகவத் தியானமும் நாம ஸ்மரணமும் செய்வதிலேயே ஈடுபட்டான். மேலும் நம் நாட்டிலே புஷ்பம், குங்குமம், மஞ்சள் , கண்ணாடி , சீப்பு, வளையல்கள், காது ஓலை இவைகளைத் தானம் செய்வது புண்ணியம் என்று கருதப்படுகிறது, ஆகவே கடைத் தெருவிற்கு வரும் ஏழை எளியவர்களை எல்லாம் அழைத்து பக்தி செய்வதே வாழ்கையின் குறிக்கோள் என்று போதித்து இலவசமாகவே தேவையான வளையல்களை எல்லாம் இட்டு அனுப்புவான் அவன். இப்படி செய்யவே கடையை மூட நேரிட்டது.
    மகனது தெய்வ பக்தியை புகழ்ந்த செட்டியார் கடமை தெரியாமல் பித்தனாக இருப்பது கண்டு மனம் நொந்தார். பிறகு சில பாகவதர்களை அழைத்து எப்பொழுதும் கோவிலிலேயே குடியிருக்கும் தனது மகனை வீட்டிற்கு வந்து கடமையை ஒழுங்காகச் செய்யும் படி புத்தி புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
    பாகவதர்களின் சொற்களைக் கேட்டுக் கடமையைப் பற்றிச் சிந்திக்கலானான் பெரியசாமி. வீட்டிற்கு வந்து தந்தையிடம் மன்னிப்பும் பெற்று அரசாங்கத்திலேயே தந்தை வகித்த அந்த ஷராப் உத்தியோகத்தையே தானும் வகித்தான். அந்நாளில் அப்பதவி வகிப்பவர்கள் குதிரை மீது தான் செல்வது வழாக்கம்.
    ஒரு நாள் பெரிய சாமி குதிரை மீது செல்லும் பொழுது வழியிலே சில சிறுவர் கோலி விளையாடிக் கொண்டு இருந்தனர். குதிரை குறுக்கே புகுந்ததில் கோலிகள் சில உடைந்தன. கோபம் கொண்ட சிறுவர் பெரியசாமியைக் கீழே தள்ளி அடித்தும் விட்டனர். அந்தச் சமயம் யதவரங்கன் என்பவன் வந்து இவனுக்கு உதவியாய் நின்று அந்தச் சிறுவர் கூட்டத்தை விரட்டினான். அவனுக்கு நன்றி சொல்லி அரசவை சென்றான் பெரியசாமி. ஏற்கனவே பற்றற்று இருந்த அவனுக்கு குதிரை முதலிய ஆடம்பரங்கள் கசந்தன. வேலையே ராஜினாமா செய்து விட்டுக் கோயிலே கதியாணன் மீண்டும். பெரியசாமி என்ற பெயரை விடுத்துப் பெரியதாசர் என்று மக்கள் அவரை அழைக்கலாயினர்.
    பெரியதாசரை மக்கள் பித்தன் என்றனர். ஆனால் அவரோ பக்திப் பிரசாரம் செய்வதே தமது நோக்கமாகக் கொண்டிருந்தார்.
    அரசனின் அழைப்பு
    ஒரு நாள் ராஜ சபையிலே அரசன் அங்கிருந்த புலவர்களை நோக்கி “இங்கிருந்து வைகுண்டம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?” என்று கேட்டான். அவர்கள் தங்களுக்குத் தெரியாதென்றும் பெரியதாசர் போன்ற மகான்களைக் கேட்டால் தெரியலாம் என்றும் சொன்னார்கள் உடனே பெரியதாசரை அழைத்து வர ஆள் அனுப்பினான் அரசன்.
    அவரோ ”நான் ரரசிம்மப் பெருமானையே வழிபடுபவன். அரச சபையில் எனக்கு என்ன வேலை?” என்று சொன்னார். ஏவலாளர் தாம் எப்படியேனும் அழைததுச் செல்ல உறுதி பூண்டவராய் பலவாறு வேண்டி அவரை சபைக்கு அழைத்துச் சென்றனர்.
    அரசன் தன பழைய கேள்வியைக் கேட்க பெரியதாசர் மனம் மகிழ்ந்தார். பிறகு அவனுக்கு இறைவனது பெருமையை எடுத்து சொல்லி “எனக்கும் வைகுண்டம் எங்கே இருக்கிறது என்று தெரியாது. நான் நம் ஊர்க் கோவிலை மட்டுமே அறிவேன். ஆனால் பல விஷயங்கள் நேர்முகமாகத் தெரியாவிட்டாலும் அனுமானத்தின் மூலம் நம்புகிறோம். அதுபோல பூவுலகிலிரூந்து கஜேந்திரன் ‘ஆதிமூலமே’ என்று கூப்பிட்ட பொழுது இறைவன் ஓடி வந்ததாகச் சரித்திரம் பேசுகிறது. ஆகவே ஸ்ரீ வைகுங்கம் கூப்பிடு தூரத்திலேயே இருக்கிறது என்றே தோன்றுகிறது” என்றார் பெரியார் தாசர்.
    இந்தப் பதிலைக் கேட்டு அரசன் திருப்தி அடைந்தான். இது மற்றவர்கள் மனதில் பொறாமையை உண்டாக்கியது. அரசனே சன்மானங்கள் தந்து சிவிகையில் ஏற்றி பெரியதாசரை அனுப்பி வைத்தான்.
    பெரியதாசன் தன்னைப் புகழ்ந்து பாட வேண்டும் என்ற ஆசை மன்னன் மனத்துள் எழுந்தது. அதைப் பற்றிக் கேட்க அவர் “இறைவனை அன்றி மனிதனைப் பாட மனம் ஒப்பாது!” என்றார்.
    அரசனுக்கு அவர் மீது கோபம் உண்டாயிற்று. இதற்குத் தூபம் இடுவது போல் சில பொறாமைக்காரர்கள் “அரசே ஆழ்வார்கள்எ திருவுடை மன்னரைக் கானில் திருமாலைக் கண்டேனே என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த கர்வங் கொண்டவன் நரசிம்மனைப் பாடும் வாயால் நரனைப் பாடுவேநோ என்கிறானே இவனைக் கொஞ்சம் கண்டிக்க வேண்டியது தான்” என்றனர்
    அவ்வளவு தான் தண்டனைக்கு உத்தரவுகள் பிறந்தன. வீரர்களின் ஆயுதங்கள் அவர் மீது பாய்ந்து கூர் மழுங்கி விழுந்தன. அவரோ ஒரு நிலைப்பட்ட மனதோடு நரசிம்மனையோ தியானம் செய்து கொண்டு இருந்தார். ஆயுதங்கள் வலியிழந்த செய்தி கேட்ட அரசன் வெகுண்டான். புலிக் கூட்டிலே தள்ளுங்கள் என்றான். புலியோ அவரை வணங்கியது.
    அரசனது ஆத்திரம் பொங்கி எழுந்தது சூட்டுக்க் கோலால் மாடுகளைச் சூடு இடுவது போல இடுங்கள். என்னைப் பாடுகிறேன் என்று சொன்னால் நிறுத்தி விடுங்கள் என்றான்
    முன்பு சீதா பிராட்டி அக்னி பகவானை நோக்கி சீதொபவ ஹனுமதே என்று சொன்னது போல இப்பொழுதும் பிராட்டியார் சொன்னாரோ என்று என்ணும்படி சூட்டுக் கோல்கள் குளிர்ந்து போயின பிறகு நஞ்சும் இட்டாரகள். அடியவர்க்கு நஞ்சு அமுதம் ஆவதும் அற்புதமோ? என்று சொல்லியபடி நஞ்சே அமுதாகிவிட்டது. யானையை இடறும்படி ஏவினர். அந்த யானையோ இவரையே சிம்ம வடிவாகக் கண்டு பயந்து வீழ்ந்து இறந்து போயிற்று.
    அரசனது பிடிவாதம் அதிகமாயிற்று. கல்லிலே கட்டிக் குளத்திலே இடு என்றான் இவன் மந்திரவாதி இவன் இருப்பதே ஊருக்குத் தீங்கு என்று சொல்லி கழுவில் ஏற்றும்படிக் கட்டளை இட்டான்.
    வீரர்கள் புடை சூழ வீதியிலே நடந்து செல்லும் பெரியதாசரைக் கண்டு மக்கள் கண்ணீர் சொரிந்தனர் . இந்த அரசனுக்குக் கேடு காலம் கிட்டி விட்டதென்று பழித்தனர். இவரோ நரசிம்மப் பெருமாளையே துதித்து நின்றார்.
    தனக்கு எந்த ஊறு செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் இறைவன், தனது அடியவர்களுக்கு ஊறு செய்தால் பொறுப்பானா?
    சபையிலே அரசன் மிகுந்த பெருமிதத்துடன் கொலு வீற்றிருந்தான்.
    “திசை திறந்து அண்டங் கீறிச் சிரித்தது செங்கண் சீயம்” என்று கம்பர் பெருமான் இரணியவதை படலத்திலே சொன்னது போல் இடியோசை போல ஒரு கர்ஜனை கேட்டது. மறு வினாடி கம்பீரமாக அரசன் முன் தோன்றினார் நரசிம்ம மூர்த்தி. பயத்தினால் நடுங்கிய அரசன் அப்படியே குப்புற விழுந்து விட்டான். நரசிம்மரின் கையிலே இருந்த சாட்டையினால் சுளீர் சுளீர் என்று அவன் முதுகிலே அடிகள் விழுந்தன. ஐயோ அப்பப்பா என்று அலறினான் அவன். நரசிம்மர், “பெரியதாசனை அடித்தாயே, அவன் என்ன குற்றம் செய்தான்? சொல், சொல்!” என்று மேலும் இருமுறை சாட்டையை வீச அவன் துடி துடித்துப் போனான். “போ ஓடு, அவர் காலிலே விழுந்து மன்னிப்பு கேள், ஓடு ஓடு” என்று மேலும் ஓர் அடி அடித்து மறந்து போனார் நரசிம்மர்.
    வாரிச் சுருட்டி கொண்டு எழுந்து ஓடி “பெரியதாசர் கழுவேற்றுவதை நிறுத்து, நிறுத்து” என்று கூவியவனேத் தானும் கழுமேட்டைத் நோக்கி ஓடலானான்.

    அங்கே கழுமரத்தின் மேடையைச் சுற்றி மக்கள் கூட்டமாய் கூடி நின்றனர். பெரியதாசர் அப்பொழுதும் பரம சாந்தமாக நின்றிருந்தார், கோபுர வாயில்களிலே திருக்கார்த்திகை உற்சவத்திலே எரியவிடும் சொக்கப்பானை போல் கழு மரம் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது
    விஷயம் விளங்காத மக்கள் இன்னது செய்வதென்று விளங்காமல் கூச்சலிட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு ஓடி வந்த அரசன் பெரியதாசரின் பாதங்களிலே வீழ்ந்தான் தான் செய்தய மாபெரும் தவறுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லி மன்னிக்கும்படி கதறினான்.
    அமைதி குலையாத பெரியதாசர் அவனை வாரி எடுத்து நிறுத்தி தானும் அவன் திருவடிகளிலே பணிந்து “அரசே நீர் பாக்கியசாலி எனக்கு காட்சி தராத நரசிம்ம மூர்த்தி உனக்கு காட்சி தந்தாரே நீயே பாக்யவான்!” என்று மீண்டும் வணங்க இப்படிக் கொலை களமாயிருந்த இடம் கோயில் போல் ஆகிக் காட்சி தந்தது அரசனுக்கு ஞானோதயம் உண்டாயிற்று
    பெரியதாசர் கோவிலுக்குத் திரும்பினார் ஊரெங்கும் அவர் புகழும் இறைவன் திருவருளுமே பேச்சாயின. இதன் பின் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளே அந்தணனாக வந்து ஸ்ரீ ரங்கம் வரும்படி அழைக்க இருவரும் பூலோகம் வைகுண்டம் என்னும் ஸ்ரீரங்கத்தை அடைந்தனர்.
    தமிழிலும் தெய்வ வழிபாட்டிலேயும் சிறந்த பெரியதாசர் ஆழ்வார்கள் ரங்கநாதப் பெருமாளைப் பாடிய பாடல்களை எல்லாம் இறைவன் திரு முன்னே படிப் பாடி பரவசமாவர்.
    ”நாடி நாடி நரசிங்கா” என்று குறித்தபடி எப்பொழுதும் அவனது பாத சேவையிலே ஈடு பட்டு மெய் மறந்திருக்க ஓர் இரவிலே எம்பெருமான் நரசிம்ம ரூபமாகவே வந்து பெரியதாசரைத் தம் திருவடிகளில் சேர்த்துக் கொண்டார் அவரது உறுதி மிக்க தளராத நெஞ்சம் இறைவன் அடியார்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக நின்றது.
    - (திருமால் அடியவர்களின் திவ்ய சரித்திரங்களை கூறும் ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் வரும் அற்புதமான சம்பவம் இது!)
    நூலை வாங்க : http://www.lifcobooks.com/booktitles/details/138/6/devotional/sri-mahabaktha-vijayam.html
    - See more at: http://rightmantra.com/?p=12770#sthash.w57sXSQS.dpuf

    -
Working...
X