Announcement

Collapse
No announcement yet.

தெய்வத்தின் குரல் -13

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வத்தின் குரல் -13

    ஈஸ்வரன்தான் கர்மாவுக்குப் பலன் தருபவன், கர்மா தானாகவே பலனைத் தருவதில்லை என்பதுதான் அத்வைதிகளின் கொள்கை. 'கர்மாவே பலனைத் தருகிறது; ஈஸ்வரன் என்று ஒருத்தனைக் கொண்டுவர வேண்டாம்' என்று அபிப்ராயம் கொண்ட பூர்வ மீமாம்ஸகர்களை ஆசார்யார் முதலான அத்வைதிகள் நன்றாகக் கண்டித்து, ஸகலத்துக்கும் பலதாதா, லோக வ்யாபாரத்தையெல்லாம் நடத்தும் ஈஸ்வரந்தான் என்று கூறியிருக்கிறார்கள்.
    ஆனாலும் மாயைக்கு உட்பட்ட கர்ம லோகத்தில்தான் அவனைப் பலதாதாவாகச் சொல்லியிருக்கிறார்களே தவிர மாயையிலிருந்து விடுபடும் ஞான சாதனையிலும், அதன் ஒவ்வொரு ஸ்டேஜிலும் வரும் பலன்கள தருகிறவன் ஈஸ்வரன் என்று அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுவதில்லை. 'கர்ம யோகத்தால் சித்த சுத்திஏற்படுகிறது;சித்தம் சுத்தமானபின் ஞான விசாரம் பண்ண ஜீவன் பக்வமாகிறான்' என்று சொல்வார்களே தவிர, 'கர்மயோகத்துக்ப் பலனாக ஈஸ்வரன் சித்த சுத்தி அநுக்ரஹித்து ஞான நிஷ்டைக்கு ஒரு ஜீவனைப் பக்குவப்படுத்துகிறான்' என்று சொல்வதில்லை. ஆனால் பகவத்பாதர் இவ்விஷயத்தை ஸ்பஷ்டமாகவே தெரிவிக்கிறார். கர்மத்திலிருந்து ஞானத்துக்குப் போக ஈஸ்வர க்ருபை வேண்டுமென்பதைக் கர்மா எல்லாம் போய் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதையே முக்யமாக விவரிக்கும் கீதையின் கடைசி அத்யாயத்தில்ஆசார்யாள் தனது பாஷ்யத்தில் சொல்கிறார்.
    கீதையின் இரண்டாம் அத்யாயத்தில் முதலில் ரொம்பவும் ஞானவேதாந்த தத்வங்களைச் சொல்லிவிட்டு, இதுவரை ஸாங்கியம் சொன்னேன், இனிமேல் யோகம் சொல்கிறேன் என்ற்கு கர்ம யோகத்தைப் பற்றி பகவான் சொல்ல ஆரம்பிக்கிறார் (கீதை அத்யாயம் 2, ச்லோகம் 39).ஸாதாரணமாக ஸாங்கிய என்றால் கபிலரது ஸாங்கிய யோகத்தையும், யோகம் என்றால் பதஞ்சலியின் ராஜயோகத்தையும் நினைப்போம். இங்கே பகவான் சொல்வது ஞான யோகத்தை ஸாங்கியமாகவும், கர்ம மார்க்கத்தை யோகமென்றும் சொல்கிறார். இது கர்மா செய்கிற யோகமானாலும், இதுவேதான் கர்ம பந்தத்தை அறுக்கிறது என்று கூறுகிறார். ஆசையின் மேல், பலனை உத்தேசித்து கர்மா பண்ணினால் அத்ய் ஸம்ஸார பந்தத்தை உண்டுசெய்கிறது. ஆசையை விட்டு, பலனை உத்தேசிக்காது, லோக க்ஷேமத்துக்காகவும்,சித்த சுத்திக்காகவும் சாஸ்த்ரீய கர்மாவைச் செய்தால் அது பந்தத்தை அறுக்கிறது. 'கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி' - 'கர்மக் கட்டை அறுத்துப் போடுவாய்' என்கிறார். இந்த இடத்தில் ஆசார்யார் தமது பாஷ்யத்தில் 'ஈச்வராநுக்ரஹத்தைக் காரணமாகக் கொண்டு ஞானத்தை அடைந்துதர்ம-அதர்மங்கள் எனப்படுகிற கட்டான கர்மக்கட்டை அறுப்பாய்' என்று விளக்கியிருக்கிறார். 'ஈச்வர ப்ரஸாத நிமித்த ஞான ப்ராப்தே' என்று பாஷ்யத்தில் இருக்கிறது. கர்மா போவதைவிட ஞானம் வருவது முக்யம், ஞானத்தை அடைவதற்கு வழியாகவே ஒருவன் கர்மாவைப் போக்கிக் கொள்வதற்கு ஈச்வரன் அநுக்ரஹிக்கிறான் என்ற அபிப்ராயத்தை ஆசார்யார் நிஸ்ஸந்தேகமாக வெளியிட்டிருக்கிறார்.

    நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 4; பக்கம் 726-728
Working...
X