Information
வியாஸரை விட நமக்கு/ஹிந்துக்களுக்கு பரம் உபகாரம் செய்தவர் இன்னொருவர் இல்லை. வேதங்களை விபாகம் செய்து, 5ஆம் வேதம் என்னும்படியான மஹாபாரதத்தை அளித்து, அவரவர் இஷ்ட தேவதையை முழுமுதல் தெய்வமாக ஆராதிக்க வசதியாக 18 புராணங்களை செய்திருக்கிறார். இவ்வளவு செய்ததுடன் பரம சத்யமான பிரம்ம தத்வத்தை ரத்தின சுருக்கமாகச் சொல்கிற பிரம்ம ஸூத்திரத்தையும் அனுக்கிரஹித்தவர் ஸ்ரீ வியாஸர். பிரம்ம ஸூத்திரத்திற்கு சங்கரர், ராமானுஜர், மாத்வர், ஸ்ரீ கண்டாசாரியர் (சைவ சித்தாந்தம்),வல்லபாசாரியார் (கிருஷ்ண பக்தி மார்க்கம்) ஆகியோர் தத்தம் சித்தாந்தப்படி பாஷ்யம் எழுதியிருக்கிறார்கள்.
Notice
ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிற நாம் அனைவரும் மேலே சொன்ன சித்தாந்தப் பிரிவுகளில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவராக இருக்கிறோம். மரத்தின் கிளைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் வளர்ந்து வருகிறது. அதனால் அவை ஒன்றில்லைஎன்றாகிவிடுமா?. அடிமரமும், வேரும் எல்லாக் கிளைகளுக்கும் ஒன்றுதானே?. அப்படித்தான் நாம் இத்தனை பேருக்கும், இத்தனை பிரிவுகளுக்கும் அடிமரமாக, வேராக இருக்கிறார் வேத வியாஸ மஹரிஷி.
ஹிந்து என்ற பெயரில் உள்ள நாம் எல்லோரின் நமஸ்காரங்களுகும் பாத்திரராக இருக்கிறவர் வேத வியாஸர். வைதிக தர்மத்துக்குப் பல விதங்களில் உறுதி தந்து ஆதார ஸ்தம்பம் போல் நிற்கிற ஸ்ரீ வேத வியாஸ மஹரிஷி ஒருத்தர் இல்லாவிட்டால் நம் மதமே இல்லை. அந்த மகா புருஷரை ஹிந்துவாக இருக்கும் ஒவ்வொருவரும் ஸ்மரிக்க வேண்டும். நமக்கு சாஸ்வத செளக்கியத்துக்கான வழியைக் காட்டிக் கொடுத்திருக்கிற வேத வியாஸருக்கு நாம் நன்றியைக் காட்டக் கடமைப்பட்டிருக்க்றோம்.
நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 1; பக்கம் 588-589