Information
ஆசார்யாளும் சரி, அவருக்கு முந்தி க்ருஷ்ண பரமாத்மாவும் சரி, கர்மயோக அதிகாரிகள், ஞானயோக அதிகாரிகள் என்று இரண்டே பிரிவுகளை மட்டும் பண்ணினார்கள்?, மூன்றாவதாக பக்தியோக அதிகாரிகள் என்ற பிரிவினை ஏன் பண்ணவில்லை?. ஏனென்றால் கர்மயோகி, ஞான யோகி ஆகிய இருவருக்குமே பக்தி அத்யாவச்யம் என்பதால் அதனை தனியாகப் பிரித்துச் சொல்லாது இரண்டு வழிகளுக்கும், இரு பிரிவுகளுக்கும் ஒரு முக்யமான அங்கமாக பக்தி பண்ண வேண்டியிருப்பதால் அதனைத் தனியாகச் சொல்லவில்லை. கர்மயோகியும் ஒரு லெவலில் பக்தி பண்ண வேண்டும், ஞான வழிச் செல்பவனும் ஒரு லெவலில் பக்தி பண்ணதான் வேண்டும். ச்ரத்தையில் கீழ் மட்டத்தில் ஒன்று, மேல் மட்டத்தில் ஒன்று என இரண்டு லெவல் சொன்னது போல பக்தி-சிரத்தை என்று சேர்த்துச் சொல்வதற்கு ஏற்றபடி இரண்டு லெவல்.
டைப்ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட் கோர்ஸ்களில் லோயர்-ஹயர் என்ற இரண்டு இருப்பது போல கீழ் லெவல் கர்மாக்காரன் நம் கர்மாவை எல்லாம் பார்த்துக் கொண்டு, தவறானால் தண்டிக்க ஈச்வரன் இருக்கிறான். என்ற ஞாபகம் இருப்பதற்காக பக்தி பண்ண வேண்டும். அந்த லெவலில் இருந்து கொஞ்சம் முன்னேறி, சிதறி ஓடிக்கொண்டிருக்கும் மனசை ப்ரேமையினால் ஒருமுகப்படுத்துவதற்காக பக்தி பண்ண வேண்டும். இன்னும் கொஞ்சம் முன்னேறி-ஆனாலும் லோயர் தான்; ஹயருக்குப் போகவில்லை - பண்ணும் பக்தி, கார்யமெல்லாம் அவனுக்கே என்று 'பல த்யாகம்' பண்ணுவதால பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்புறம் 'ஹையர்' என்று சொல்வதான் ஞானயோகம் பண்ணுவது. தான் எந்த ஆத்மாவை - ப்ரம்மத்தை -அனுபவிக்க சாதனை பண்ணுகிறோமோ அதுவேதான் ஸகுணத்தில் ஈச்வரனாக இருப்பது, தனக்கு அத்வைத வாசனையைக் கொடுத்து இந்த வழியில் போகப் பண்ணியிருப்பவன் இந்த ஈச்வரந்தான், முடிவாக ஸித்தியும் அவன் அனுக்ரஹத்தால் தான் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தி பண்ண வேண்டும்.
நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 6; பக்கம் 278-279