ராமானுஜர் என்ற பெயருக்கு பொருள் தெரியுமா உங்களுக்கு! அவர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு வந்தால், இதை அறிந்து கொள்ளலாம். இங்கு தீபாவளி முதல் தை வரை இவருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படும். தீபாவளி நெருங்குவதை ஒட்டி இங்கு சென்று வரலாம்.
தல வரலாறு: கைலாயத்தில் உள்ள பூதகணங்கள், சிவனிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெற மகாவிஷ்ணுவை வேண்டின. சுவாமி, அனந்தன் என்னும் சர்ப்பத்தால் இங்கு தீர்த்தம் (அனந்தசரஸ் தீர்த்தம்) உண்டாக்கி, அதன் கரையில் காட்சி தந்து விமோசனம் கொடுத்தார். இதற்கு நன்றிக்கடனாக பூதகணங்கள் இங்கு சுவாமிக்கு கோயில் எழுப்பின. இதனால் பூதபுரி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் என மாறியது. சுவாமிக்கு ஆதிகேசவப்பெருமாள் என்பது திருநாமம்.
ராமானுஜர் பெயர் விளக்கம்: இங்கு வசித்த கேசவசோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு, 1017ல் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை லட்சுமணர் போல இருந்ததால், குழந்தையின் மாமா பெரிய திருமலை நம்பி,"இளையாழ்வார்' எனப்பெயர் சூட்டினார். ராமானுஜருக்கு யதிராஜர் என்ற பெயரும் உண்டு. "யதி' என்றால் "சந்நியாசி', "ராஜர்' என்பது தலைமைப்பண்பு உள்ளவர். இத்தலத்தில் தாயார், "யதிராஜநாதவல்லி' என்ற பெயரில் அருளுகிறாள். ராமானுஜரின் பெயரில் தாயார் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு. அனுஜன் என்றால் இளையவர் என பொருள். ராமனுக்கு அனுஜரான (இளையவர்) லட்சுமணரின் அம்சமாகப் பிறந்ததால் இவர் ராமானுஜர் (ராமன் அனுஜன்) என்றழைக்கப்பட்டார்.
சுவாமியுடன் ஆண்டாள்: ஆடிப்பூர விழாவின் முதல் நாளில் இருந்து ஆவணி பூரம் வரையில் ஆண்டாள், சுவாமி சந்நிதிக்குள் எழுந்தருளி சேர்த்தி காட்சி தருவாள். மார்கழி மாதத்திலும் இவ்வாறு தரிசிக்கலாம். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க சுவாமியுடன் கூடிய ஆண்டாளை வணங்குகின்றனர்.
சிறப்பம்சம்: ராமானுஜர் அவதரித்ததால் இந்தக்கோயில் நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அவ்வேளையில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை (சந்நிதிகதவு) திறப்பர்.
பூமகன் ஊர்வலம்: இக்கோயிலில் விழா இல்லாத நாட்களில், உற்சவர் செல்வர் (பெருமாள்) காலை, இரவில் புறப்பாடாவார். மாலையில் ஒரு பூ மாலையை, மேளதாளத்துடன் புறப்படச் செய்வர். சுவாமி இங்கு, பூ வடிவில் பவனி வருவதாக ஐதீகம்.
வெந்நீர் அபிஷேகம்: தீபாவளி துவங்கி தை மாத அஸ்தம் நட்சத்திரம் வரையில் ராமானுஜருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்கின்றனர். குளிர்காலம் என்பதால் இக்காலகட்டத்தில் ராமானுஜருக்கு கோட் அணிவித்து, கம்பளி போர்த்துகின்றனர். உடல் முழுவதும் போர்த்த வெல்வெட் அங்கி, உல்லன் சால்வை, தலை முதல் பாதம் வரை போர்த்த "குன்சம்" என்ற ஆடை ஆகியவை இங்குள்ளன. மாசி முதல் புரட்டாசி வரையில் கோடைகாலத்தில் இவரைக் குளிர்ச்சிப்படுத்த சந்தனக்காப்பிடுகின்றனர்.
செல்லப்பிள்ளை: மன்னன் ஒருவன் தன் மகளின் விருப்பத்திற்காக, கர்நாடகாவிலுள்ள திருநாராயணபுரத்தில் இருந்த பெருமாள் சிலையை டில்லிக்கு எடுத்துச் சென்றான். இதையறிந்த ராமானுஜர், சிலையை மீட்க டில்லி சென்றபோது, சுவாமி சிலை அவரது மடியில் வந்து அமர்ந்தது. "இதோ, என் செல்லப் பிள்ளை!' என ஆனந்தத்தில் கண்ணீர் விட்டார். இதன்பிறகு இந்தப் பெருமாளை செல்லப்பிள்ளை என்றே அழைத்தனர். பங்குனி பூசத்தன்று ராமானுஜர் மடியில் செல்லப்பிள்ளை அமர்ந்து வீதியுலா செல்லும் வைபவம் இங்கு நடக்கும்.
இருப்பிடம்: திருவள்ளூரில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் ஸ்ரீபெரும்புதூர். பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.
source; ஆன்மிக கட்டுரைகள்