தடைகளைப் போக்கி செயல்வெற்றியை வரமாகத் தரும் தும்பிக்கை விநாயகர் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலிலும், கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலிலும் வீற்றிருக்கின்றார்.
தல வரலாறு: திருமாலின் தலைமையில் தேவர்கள் கயிலாயம் சென்று சிவபார்வதியைச் சரணடைந்து, ""அசுரர்கள் செய்யும் செயல்கள் தடை இல்லாமல் நடக்கின்றன. ஆனால், தேவர்களாகிய நாங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகின்றன. அவற்றைப் போக்கி நன்மை உண்டாக வேண்டும்,'' என வேண்டினர். சிவன் தேவர்களுக்கு அருள்புரிய, மூலாதார மூர்த்தியான விநாயகரைத் தோற்றுவித்தார்.
விநாயகர் பல திருவிளையாடல்களை புரிந்தார். ஒருநாள், திருமால் வீற்றிருக்கும் பாற்கடலுக்குச் சென்று, தும்பிக்கையால் பாற்கடல் நீரை முகர்ந்த போது, திருமால், ஆதிசேஷன், லட்சுமி, பிரம்மா என அனைவரும் தும்பிக்கைக்குள் அடங்கினர். தான் அடக்கிய நீரை பாற்கடலிலேயே மீண்டும் உமிழ, அனைவரும் வெளிப்பட்டனர். அப்போது திருமாலின் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு காணாமல் போனது. அந்தச் சங்கு, விநாயகரின் வாயில் இருப்பதைக் கண்டார். அதை பெற்றுத் தரும்படி சிவனிடம் திருமால் முறையிட்டார்.
சிவன் திருமாலிடம், ""காஞ்சிபுரம் அத்திகிரி சென்று விநாயகரை வழிபட்டால் சங்கு கிடைக்கும்,'' என வழிகாட்டினார். அதன்படி, திருமாலும் வழிபடத் தொடங்கினார். மகிழ்ந்த விநாயகர் கோரிக்கையை ஏற்று, திருமாலிடம் சங்கை அளித்தார். திருமால், ""கணபதியே! என்னோடு சேர்ந்து இத்தலத்தில் எழுந்தருளி வழிபடும் யாவருக்கும் வேண்டும் வரங்களைத் தந்தருள வேண்டும்,'' என்று கேட்டார். அதன்படி, அத்திகிரி வரதராஜப் பெருமாள் கோயில் உட்பிரகாரத்தில் விநாயகருக்கு சந்நிதி உள்ளது. இந்த வரலாறை படித்தவர், கேட்டவர், சொன்னவர் அனைவருக்கும் செயல் தடை நீங்கும். இவரைத் தரிசித்தவருக்கு திருமண யோகம், மழலைச்செல்வம், வளமான வாழ்வு, நீண்டஆயுள் உண்டாகும் என்பது நம்பிக்கை.
தும்பிக்கை ஆழ்வார்: இங்குள்ள விநாயகர் திருநீறுக்கு பதிலாக திருமண் (நாமம்) அணிந்து காட்சி தருகிறார். இவர் தும்பிக்கை ஆழ்வார் என்றும், வலம்புரி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சங்கடஹர சதுர்த்தி பூஜையை துவக்கி வைத்தவர் காஞ்சிப்பெரியவர். இவரைப் போலவே, திருவிடந்தைநித்யகல்யாண பெருமாள் கோயிலிலும், திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலிலும் தும்பிக்கையாழ்வாருக்கு சந்நிதி இருக்கிறது.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2.5 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6-மதியம்12, மாலை 4- இரவு8.
ஆன்மிக கட்டுரைகள்