Announcement

Collapse
No announcement yet.

Five types of Bath

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Five types of Bath


    சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது.


    ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான். இதற்கு அப்பறம் வருவதுதான், ‘கௌண’மாக கழுத்து வரை குளிப்பது, இடுப்பு வரை குளிப்பது போன்றவையெல்லாம்! ஆனால் இந்த கௌண ஸ்நானங்கள் எல்லாம், ஜலத்தால்/நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

    இல்லங்களில் சளி/ஜுரத்தில் இருக்கும்போது விபூதி ஸ்நானம் செய்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை/சாம்பலை ஜலம் விட்டுக் குழைக்காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்கிறோம்.

    பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது எழும் குளம்படி மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணனே இந்தப் பசுக்களின் குளம்படித் தூள், சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி ‘கோதூளீ தூஸரிதனாக’ இருந்தானாம். இவ்வாறான ‘கோதூளி’ நம்மீது படும்படியாக நின்று அந்த மண்துகள்கள் நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம். இதன் பெயர் ‘வாயவ்யம்’. இது வாயுவுடன் சம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம்.

    அபூர்வமாக சில தருணங்களில் வெய்யில் அடிக்கும்போதே மழையும் பொழிகிறதல்லவா.? இவ்வாறான மழைஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது ‘திவ்யஸ்நானம்’. இதுவே நான்காம் வகை ஸ்நானம்.

    புண்யாக வாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம் மீது தெளிப்பார். சந்தியாவந்தனத்தில் ‘ஆபோஹிஷ்டா’ சொல்லி நீரைத் தெளித்துக் கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்து தெளித்துக் கொள்ளுவது ஐந்தாம் முறை. இதன் பெயர் ‘ப்ராஹ்மம்’. ‘ப்ரம்மம்’ என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப்படுத்தப்பட்ட தீர்த்தப் புரோக்ஷணத்துக்கு,‘ப்ராஹ்ம ஸ்நானம்’ என்று பெயர்.

    பார்க்கப் போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான். எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈச்வர ஸ்மரணையுடன், ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகவே அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

    Sumi.



Working...
X