குழந்தை ஸ்வாமியான விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தி உத்ஸவம். ‘மஹா பெரியவாள்’ எனப்படுபவர் சிறு குழந்தையாகித் தமக்கு முன் வைக்கப்பட்டுள்ள மஹா கணபதியின் களிமண் வடிவைப் பார்த்துப் பார்த்துக் களி கூர்கிறார். மஹா கணபதி ‘மெகா’ கணபதியாகவே இருப்பதில் பெரியவாளுடைய குழந்தைக் குதூஹலமும் கோலாஹலமும் கூடுதலாகின்றன. கொழு கொழு மெகா கணேசனுக்கேற்ற மெகா கொழுக்கட்டை படைக்க வேண்டுமென்ற ஆசை பிறக்கிறது. ‘இவ்ளோ பெடிஸ்ஸு’ என்று குழந்தைகள் கைகளை விரித்துக் காட்டுமே.. அப்படி நமது நித்யபாலர் இரு கரங்களையும் அகலக்காட்டி, அருகேயிருந்த சிஷ்யர்களிடம், ‘இவ்ளோ பெரிய ஸ்வாமிக்கு இவ்ளோ பெரிசா ஒரு கொழக்கட்டை பண்ணி வெப்பேளா?” என்று கேட்கிறார்.
“ஆஹா” என்று அவர்கள் பதில் சொல்கின்றனர். அந்த ஸந்தர்ப்பத்தில், ஸந்நிதானத்தில் அந்த பதிலன்றி இன்னொன்று வர முடியாது!
அப்புறம் என்ன? முக்குறுணியரிசிப் பிள்ளையாருக்குப் படைப்பது போன்ற ஒரு மெகா மோதகம் நமது ஸ்ரீசரணர்களின் காஞ்சி – தேனம்பாக்க முகாமில் அன்று தயாராயிற்று.
திருவாரூர் ஸ்ரீ வேங்கடராமையர் தலைமையில் ஆளை முழுக்கும் ஓர் அண்டாவுக்குள் தயாரான மெகா மோதகத்தை நாலு பேராக்கும் தூக்கி வந்து பிள்ளையாரப்பனின் முன் வைத்து நிவேதித்தனர்!
மோதகத்தைப் பார்த்துப் பெரியவாளின் முகத்திலும் அகத்திலும் மோதம் (ஆனந்தம்) அலை மோதியது!
“யாரும் இத்தனாம் பெரிய மோதகம் பாத்திருக்க முடியாது. நீ பாத்திருக்கியோ, நீ பாத்திருக்கியோ?” என்று அடியார்களைக் கேட்டுக் கேட்டு ஆனந்தித்தார்.
மெகா மோதக ‘ஐடியா’ பெரியாவாளுக்குத் தோன்றி, அப்புறம் சரக்குகள் சேகரம் செய்து, ஐடியாவை யதார்த்தத்தில் பதார்த்தமாக்கி, அப்புறம் பூஜை செய்து நிவேதித்து முடித்தபோது மாலை சுமார் ஐந்து மணியாகி விட்டது.
அப்புறந்தான் எல்லோருக்கும் உணவு. விந்தையாக, மெகா மோதகம் அவர்களுக்குப் பிரஸாதமாகப் புட்டுப் படைக்கப்படவில்லை. வழக்கம் போல் தயாரித்த சிறிய மோதகங்களும், இதர நிவேதனங்களுமே அடியார்களுக்குப் பரிமாறப்பட்டது. மெகா மோதகத்தை, “அது இருக்கட்டும்” என்று பெரியவாள் சொல்லி விநியோகிக்க விடாததாலேயே இப்படி. அதை அவர் என்ன செய்ய உத்தேசித்திருந்தாரோ தெரியவில்லை!
இரவு எட்டு மணி இருக்கும். தமக்கென இன்றி அனைத்தையும் பிறர்க்குரிமையாக்கும் பெருமான் பணியாளர்களிடம் வாய் திறந்தார்.
“பக்கத்துல, ஏழைக் கொழந்தைகள் ஸதா வெளயாடிண்டிருக்கற எடத்துல பிள்ளையார் கோவில் இருக்கே! அங்கே இப்ப யாரும் இருக்க மாட்டா. ஊர் பூராப் பிள்ளையார் பொறப்பாடு மயமா இருக்குமானதால எல்லாரும் ஏதாவது பிள்ளையார் பின்னோட போயிருப்பா. அதனால் நீங்க சட்னு போய் இந்த மோதகத்தைக் கோவில் வாசல்ல வெச்சுட்டு ஓசைப்படாமத் திரும்பி வந்துடுங்கோ. அப்பறமா அவா பாத்துட்டு ஆச்சர்யப்பட்டுண்டு ஆனந்தமாப் பிள்ளையார் ப்ரஸாதம் சாப்டட்டும்” என்றார்.
பிள்ளையாரப்பனுடனேயே ஊரின் ஏழைப் பிள்ளைகளையும், எண்ணிப் பார்த்து அதிசய மோதகத்தை விநியோகம் செய்த அந்த அருமை நெஞ்சும் ப்ரேம ‘பூர்ணம்’ நிரம்பிய ஒரு மோதகந்தான்!
தாம் செய்ததாகத் தெரியாமல் அதை ரஹஸ்யமாக வைத்து வரச் சொன்னதில் ஒரு பக்கம் ‘ஸ்வயம்’ அற்றுப்போன துறவறம். இன்னொரு பக்கம் இப்படித் திருட்டுத்தனம் (எடுப்பதாக இன்றிக் கொடுப்பதாக உள்ள திருட்டுத்தனம்!) செய்வதில் குழந்தை போலக் கபடத்திலேயே ஒரு வெள்ளைத்தனம்.
அப்படியே மெகா மோதகம் ‘இன் ஆப்ஸென்ஷியா’ தேனம்பாக்கம் ஏழைக் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டது.
அப்புறம் சிறிது போதில் அது கண்டுகொள்ளப்பட்ட பின் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் அது நாள் வரை அவர்கள் அறிந்திராத சுவையோடு தயாரான மஹா மோதகத்தை ஆவலாக உண்டு மகிழ்ந்தனர். அது மட்டுந்தானா? திடீரென்று அங்கு முளைத்த அந்த அதிசயப் பிரஸாதத்தைப் பற்றிக் கதை கதையாக ஸ்ருஷ்டிக்கப்பட்டு நம் கதாநாதரின் காதுக்கும் வந்தது.
அந்தப் பொல்லாத நல்லவரும் ரஸித்துக் கேட்டுக் கொண்டார்!
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
Comment