Announcement

Collapse
No announcement yet.

பக்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பக்தி

    பக்தி


    பக்தி நம் கஷ்டத்தை ஈசுவரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக, ஆகிறது. இந்தக் கஷ்டத்தைப் போக்கு; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று என்கிறபோது நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்றும் ஆகிறது. அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோம். இப்படி ஞான சமுத்திரமாக, கிருபா சமுத்திரமாக இருக்கிற ஈசுவரனுடைய ஞானம், கிருபை இரண்டுக்கும் தோஷம் கற்பிக்கிற பிரார்த்தனை உண்மையான பக்தி இல்லை.

    ஆனால், நாமாகவே எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற அகங்காரத்தைவிட்டு ஈசுவரனிடம் யாசிக்கிற அளவுக்கு எளிமை பெறுகிறோமே, அதுவும் நல்லதுதான். அவனும், நாம் அவனுடைய ஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்கூடப் பொருட்படுத்தாமல், நம் கர்மாவையும் மீறிப் பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம். ஆனாலும், ஒரு கஷ்டம் போனாலும் இன்னொரு கஷ்டம் என்று லோக வாழ்க்கையில் வந்து கொண்டேதான் இருக்கும். ஆகையால் லௌகிகமான கஷ்ட நிவிருத்திக்காக பிரார்த்தனை பண்ணுவதற்கு முடிவே இராது.


    பக்தியால் படிப்படியாக லௌகிக கஷ்டங்களைப் போக்கடித்துக் கொள்ளலாம்; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்தாத நிலைக்கு மனோபாவத்தை உயர்த்திக் கொள்ளலாம்; மனத்தின் அழுக்கைப் போக்கிக் கொள்ளலாம்; அலைகிற மனசை ஒருமுகப்படுத்தலாம்;


    ஈசுவரனின் கல்யாண குணங்களை நாமும் பெறலாம்; என்றும் அழிவில்லாத சாசுவதமான அன்பைப் பெற்று ஆனந்திக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கர்ம பலனைத் தருகிறவனைத் தஞ்சம் புகுந்தால்தான் அவன் கர்மகதிக்குக் கட்டுப்பட்ட ஸம்ஸாரத்திலிருந்து நம்மை விடுவித்து முடிவில் முக்தி தருவான்.


    அதாவது அவனேதான் நாமாகியிருப்பது, எல்லாமுமாகி இருப்பது என்று அநுபவத்தில் அறிந்து கொண்டு அப்படியே இருக்கச் செய்வான். இந்த அத்வைத ஞானத்தையும் முக்தியையும் அவன் கிருபையாலேயே பெறலாம். பக்தி செலுத்துவதற்கு இத்தனை காரணம் இருக்கிறது.


    - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

    Source:harikrishnamurthy

  • #2
    Re: பக்தி

    ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்தது திருநீறுபர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான்.ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது.
    இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கடந்தோடியது. தவத்தை முடித்து கொண்டு சிவவழிபாட்டை தொடங்கினான். ஒருநாள் தர்பைபுல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது.
    ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. குழந்தைக்கு ஆபத்தென்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன்தான்.


    சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி, பர்னாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்…. ரத்தம் சொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான். “ரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்ட செய்த தாங்கள் நான் வணங்கம் சர்வேஸ்வரன் என்பதை அறிவேன். இந்த அடியேனுக்கு தங்கள் சுயஉருவத்தை காணும் பாக்கியம் இல்லையா?“ என்று வேண்டினான் பர்னாதன். ஈசன் தன் சுயரூபத்தில் காட்சி கொடுத்தார்.“உனக்காகவே இந்த சாம்பலை உருவாக்கினேன். அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படட்டும். உன் நல்தவத்தால் விபூதி உருவானது. அக்னியை எதுவும் நெருங்க முடியாததை போல விபூதியை பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்டசக்திகள் நெருங்காது. விபூதி என் ரூபம். அதற்கு நீயும் துணையாக இருந்த வா“ என்று ஆசி வழங்கினார் சிவபெருமான்.
    விபூதியை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் சேர்த்தெடுத்து மோதிர விரலால் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் கட்டை விரலும் நடுவிரலும் சேர்ந்து விபூதியை எடுக்கக்கூடாது. கட்டைவிரலாலும் நெற்றியில் விபூதியை வைக்க கூடாது என்கிறது சிவபுராணம்.
    விபூதியால் என்ன நன்மை? என்று ஸ்ரீ ராமர், அகத்திய முனிவரிடம் கேட்டார். “பகை, தீராத வியாதி, மனநல பாதிப்பு, செய்வினை பாதிப்பு இப்படி எது இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால் அந்த பிரச்சனைகள் விலகும்“ என்று அகத்திய முனிவர் ஸ்ரீ ராமருக்கு உபதேசம் செய்தார். ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்ததும் விபூதி. அதனை விரும்பி விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள். திரு என்றால் மகாலஷ்மி. அதனால்தான் விபூதியை திருநீறு என அழைக்கிறோம்.
    “மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
    ……….
    வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
    காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
    தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே“



    Comment

    Working...
    X